"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, November 23, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..11

குளித்துவிட்டு அந்த இடத்தைவிட்டு மெதுவாக வெளியேறி புகைப்படங்கள் எடுத்துவிட்டு பேருந்துகளைப் பார்த்தேன். மூன்று பேருந்துகளே கண்ணில்பட்டன. பார்க்கிங் வசதியெல்லாம் கிடையாது. எனவே தள்ளி மற்ற இரு பேருந்துகளை நிறுத்தி இருப்பார்கள் என நினைத்தேன். அப்போதுதான் நான்காவது பேருந்து வந்து சேர்ந்தது. அதில் இருந்து 50 பேர் இறங்கினர். இருமடங்கு நண்பர்கள் அதில்வர பின்னே வந்த வண்டி வழியில்
பாறைச்சரிவுக்கு அப்பால் மாட்டிக்கொண்டதாகவும் நான்காவது வந்த பேருந்தின் பின்புறம் சுமார் 5 அல்லது 6 தூர வித்தியாசத்தில் பெரிய பாறை விழுந்தது எனச் சொல்ல அதிர்ச்சியாக இருநதது. அதன் உண்மைத்தன்மை மனதில் சுர்ர்ரென உரைத்தது.


ஓரிரு விநாடிகள் தாமதமாக பேருந்து வந்திருந்தால், பின்பகுதியில் பெரும்பாறை விழுந்து உயிரிழப்புகள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.வினைவிளைவுத்தத்துவம், இறையாற்றல், நமது எதிர்மறை எண்ணங்கள் குறித்தான பல்வேறு விதிகளும் மூளையில் முட்டி மோதியது.பாறை விழுந்ததைப் பார்த்த அந்தப்பேருந்தில் வந்த மலேசிய நண்பர்கள் இருவர் அங்கிருந்து விட்டால் போதும் என திரும்பிச் சென்றுவிட்டனர்:) நல்லபடியாக அனைவரும் வந்து சேர்ந்ததில் மகிழ்ச்சியோடு மனதைத் தேற்றிக்கொண்டு அனைவரும் வெந்நீர் ஊற்றுக்கு சென்றனர்.

அவர்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள வெந்நீர் ஊற்று மிகவும் உதவியாக இருந்தது. பின்னர் சமையல் வாகனமான டிராக்ஸ் ஜீப் முன்னதாக வந்திருந்ததால் உணவு தயாரானது.அனைவரும் உணவருந்திவிட்டு கிளம்ப ஆயத்தம் ஆனோம்.

அப்போது லேசாக மழைதூறிக்கொண்டேதான் இருந்தது. ஜெர்கின் கொண்டு போயிருந்தால் நனையாமல் நடமாட முடிந்தது. இல்லாவிட்டால் அங்கு நனையத்தான் வேண்டும். ஒருமுறை உபயோகப்படுத்தும் தரம் குறைந்த பாலீதீன் தற்காலிக மழைக்கோட்டுகள் அங்கே கிடைக்கும். பிளாஸ்டிக் தவிர்ப்போம் என்பதை நகரவாழ்க்கையில் பின்பற்ற முடியாவிட்டாலும் அங்காவது பின்பற்றலாம். ஆகவே ஜெர்கின் மறக்காமல் எடுத்துச் செல்லவும்.


உணவு அருந்திய பின் கங்கோத்ரியை நோக்கி கிளம்பினோம். 5 பேருந்தில் வந்த அன்பர்கள் நான்கு பேருந்தில் வந்து ஏறிக்கொண்டு கிளம்பினோம். உணவு வண்டி அங்கேயே இருந்து மதிய உணவை தயார் செய்து கொண்டு முடிந்தால் கடைசி வண்டியை கூட்டிக்கொண்டு வருவதாகத் திட்டம். இந்த வீடியோவைப் பாருங்கள்.. அதில் மலைகளின் தன்மை சமதளத்தில் ஒரு ஆறு ஓடிக்கொண்டு இருந்து அது வற்றிவிட்டதுபோல், அது திடீரென மேலெழுந்தது போல் உருண்டைப்பாறைகள்....... இது எப்படி இவ்வளவு உயரத்தில் வந்தது?:)))சுற்றிலும் மேக மூட்டம்.மனதில் ரம்மியமான இனம்புரியாத பரவசத்தைக் கிளப்பியது. திசை தெரியாத சுற்றுலும் மலைகள் சூழ்ந்த குளிர் அடங்கிய அந்த சூழ்நிலை கங்கோத்ரியை விட ரம்யமானது. இந்தப்பாறைகள் அமைப்பு பக்கவாட்டில் செங்குத்தாக பூமியிலிருந்து மேலெழும்பி நிற்பதைப் பார்க்க முடியும். கண்டத்திட்டுகள் உரசலால் இமயமலை தோன்றியதாக படித்த ஞாபகம் மனதில் ஓடியது.... கீ்ழே உள்ள படம் கங்கை நதி ஓடி வரும்போது கிடைமட்டமாக வருவதால் ஆங்காங்கே தேங்கி நிற்கும் வெண்மையான பாறை மண்..


இதை விட ஆச்சரியம் தமிழகத்தில் பாதயாத்திரையாக பக்தர்கள் போகும்போது கூட்டமாகவும், ஓய்வெடுக்க, உணவு தயாரிக்க என பின் தொடர்ந்து நான்கு சக்கர வாகனங்கள் அணிவகுத்து தொடர்ந்து செல்லும்.
ஆனால் இமயத்திலோ ஓய்வெடுக்க சுமார் இருபது கிலோமீட்டர்தூரத்திற்கு எந்த தங்குமிட வசதிகளோ, ஓட்டல் வசதிகளோ இல்லாத நிலையில் மழைக்கு ஒதுங்கக்கூடாத வழியில்லாத நிலையிலும் இது பற்றிய சிந்தனைகளே இல்லாத நிலையில் பக்தர்கள் நடைபயணம்.  கிட்டத்தட்ட இவர்கள் பயண தூரம் ஒருவழிப்பாதையாக சுமார் நூறு கிலோ மீட்டர் இருக்கலாம். வழியில்  நீர் மின் உற்பத்திக்கான சுரங்கம் வெட்டிக்கொண்டு இருந்தார்கள். ஏறத்தாழ சமவெளியாக இருந்தது அந்த இடம்.

சுமார் பதினைந்து கிலோ மீட்டர்தான் சென்றிருப்போம். பேருந்துகள் நிறுத்தப்பட்டன. மறுபுறம் பாறை விழுந்ததால் பாதை துண்டிக்கப்பட்டு இருக்கிறது. என்றார்கள். சரி இனி என்ன செய்வது திரும்பிப்போவதா அல்லது வேறு ஏற்பாடுகள் ஏதேனும் செய்ய முடியுமா எனப்பார்க்க நடந்து அந்த இடத்தை அடைந்தோம்.பயணம் தொடரும்...

நிகழ்காலத்தில் சிவா

5 comments:

 1. பாதைகலைப் பார்த்தாலே பயங்கரமா இருக்கு.

  நல்ல மனோதிடம் வேணும் இந்தமாதிரிப் பயணங்களுக்கு.

  தொடர்ந்து வருகிறேன்.

  ReplyDelete
 2. பயணமே மிகச் சாகஸம் போல் தெரிகிறது.சாலை பிளந்து,எப்போது சரியுமோ எனப்பயந்தே செல்லவேண்டும்போல் உள்ளது.

  சிலிர்க்க வைக்கும் பயண அனுபவங்களைச் சுவை குன்றாமல் அளித்துள்ளீர்கள்..

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. பேசும் கருத்துக்கள் மட்டுமல்ல இது போன்ற பயணங்களும் நம்மை செதுக்க மாற்ற உதவும். ஒவ்வொரு முறையும் துளசிகோபால் டாண்ணு எப்படி வந்து விடுகிறார்?

  ReplyDelete
 4. கொடுத்து வைத்தவர் நீங்கள்! :))

  ஜோதிஜி சொன்னதையே நானும் சொல்லிக்கொள்கிறேன். பயணம் நல்ல ஒரு ஆசான்.

  //ஒவ்வொரு முறையும் துளசிகோபால் டாண்ணு எப்படி வந்து விடுகிறார்?//

  பயணத்தின் கால் பயணமறியும்:))

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)