"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, July 31, 2010

இதுதான் திருப்பூர்.....1

பனியன் கம்பெனிகளில் பெரிய நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள் என பலவகையாக இருக்கின்றன. அவற்றுள் பல ஏற்றுமதி நிறுவனங்கள் வரவேற்பறை, பாதுகாவலர் எனத் தனித்தனியாக பலவகையான வசதிகளுடன் இயங்கும் பெரிய கம்பெனிகள். அதேசமயம் ஏற்றுமதி நிறுவனத்திற்கு உதவும் வகையில் பல்வேறு சிறு சிறுகம்பெனிகளும் இங்கு நிறைய இயங்குகின்றன.அந்த மாதிரியான கம்பெனிகளில் நிர்வாகத்தரப்பிலான பணியாளர் சொற்பமே. பெட்டிக்கடை மாதிரி :)காரணம் கட்டுபடியாகாது. நூல்மில் மாதிரி தொடர்ச்சியாக இயக்க முடியாது. வேலை கிடைத்தால் செய்ய வேண்டியதுதான். இல்லாவிட்டால் காத்து வாங்கிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். :)

A என்கிற பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை குறைவு, அடுத்த நாள் வேலைக்காக B என்கிற நிறுவனத்தில் இருந்து அவர்களின் அவசரத்தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான ஆயத்த ஆடைகளை வாங்கி தயாரிக்க வேண்டிய சூழ்நிலை A க்கு வாய்த்தது.

A சிறிய நிறுவனமானதால் இருக்கின்ற மேனேஜ்மெண்ட் மற்றும் தயாரிப்பு நிர்வாகிகள் நேரில் B க்குச் சென்றனர். காரணம் பனியன் தொழிலில் தவறுகள் நேர்வதற்கான வாய்ப்பே தகவல்தொடர்பில் வருகின்ற இடைவெளியே. அதிலும் குறிப்பாக தொழிலாளர்களிடையே தரம் குறித்தான நம் தேவை என்ன தெளிவாக புரியச் செய்ய வேண்டும். இல்லை என்றால் பண இழப்போடு நேர இழப்பும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

அவர்கள் அந்த நிறுவனத்திற்கு சென்ற சமயம், A நிறுவனத்திற்கு C என்கிற வேறு ஒரு கம்பெனியில் இருந்து பணியாளர் ஒருவர் வந்திருந்தார். அவருடைய தேவை A கம்பெனியில் இருந்து C ச் சொந்தமான, முந்தய ஆர்டருக்குச் சேர்ந்ததில் கொஞ்சம் துணி பெற்றுச் செல்ல வேண்டும். அவ்வளவே.

வந்தவுடன் முதலாளி இருக்கிறாரா? எனக் கேட்க இல்லை என பதில் A கம்பெனியின் சிலவருட வேலைஅனுபவம் கொண்ட நபர் கொடுக்க, சரி மேனேஜர் எங்கே? என அடுத்த கேள்வி அவர் கேட்க அவரும் வெளியே சென்று இருக்கிறார் என பதில் அவருக்குக் கிடைத்திருக்கிறது:).

அவர் பொறுமையாக அரைமணி நேரம் காத்திருந்து விட்டு தன்னுடைய (C) முதலாளிக்கு போன் செய்து தான் இங்கு காத்திருப்பதைச் சொல்ல அங்கிருந்து A கம்பெனி முதலாளிக்கு போன் வந்தது. ”கம்பெனியில் ஒருத்தரும் இல்லையாமா கொஞ்சம் என்னன்னு பாருங்க எங்க ஆள் ரொம்ப நேரமா காத்திருக்கிறார்!!”

A முதலாளி தன் கம்பெனிக்கு போன் செய்து, சிலவருடம் வேலைபார்த்த நபரிடம் ”யார் வந்தார்கள்? எவ்வளவு நேரம் ஆயிற்று?” என கேட்டதற்கு ”ஒருத்தரு வந்து அரை மணி நேரம் ஆயிற்று” எனச் சொல்லி இருக்கிறார்.

”சரி அவர் எதற்கு வந்தார் என கேட்டீங்களா?”
”இல்லீங்”
”ஏஏன்?”
”(அமைதி)”
”எதற்கு வந்தீங்கன்னு கேட்டா என்ன? முதலாளி என்ன கள்ளக்கடத்தல் பிசினசா பண்றாரு. கம்பெனிக்குள்ள யார் வேணுனாலும் வர்லாம். ஆனா ஏன்ணு நீங்க கேட்க மாட்டீங்களா?”
“(மீண்டும் அமைதி)”

”சரி சரி அந்த C கம்பெனி நபரிடம் போனைக்கொடுங்க...”

C கம்பெனி நபர் “ஹலோ சொல்லுங்க சார்”

”தம்பி நீங்க வந்து எவ்வளவு நேரம் ஆச்சு?”
”அரை மணி நேரம் ஆச்சுங்க சார்...”
”சரி ஏன் காத்திருக்கறீங்க?”
”நீங்க வரட்டுமுன்னுதானுங்”
”நாங்க வர லேட்டானா என்ன பண்ணுவீங்க, சரி சரி எங்க ஆளுககிட்ட துணிவேணுமின்னு கேட்டிருக்கலாமில்ல..”
”(அமைதி)”
”அதுதான் வேண்டாம், முதலாளி, மேனேசர் நேரில் இல்லைன்னா, போனிலாவது கூப்பிட்டிருக்கலாமில்ல..”

”எனக்கு போன் நெம்பரு தெரியாதுங்..”
”அட எங் கம்பெனிக்குள்ளதான இருக்கறீங்க, யாரவது ஒருத்தர்கிட்ட சொன்ன அவங்க கூப்பிட்டுத் தருவாங்கல்ல..”

”(அமைதி)”
”செரிசெரி துணி இருக்குது எடுத்துக்கிட்டுப் போங்க நான் சொல்லிர்ரேன்.”

இப்படித்தான் உரையாடல் நடந்தது.

இந்த நிகழ்வு ஏதோ தொழிலாளியாக இருப்பவரை குற்றம் சாட்டுவது அல்ல.

ஏன் இன்னும் தொழிலாளி தொழிலாளியாகவே இருக்கிறான், தனக்குரிய தொழில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு செயல்பட்டால் அவனும் ஒரு முதலாளியாகலாம் அல்லவா.:) என்கிற ஆதங்கமே இந்தப் பகிர்வு.  இந்த கம்பெனியில் உள்ளவராவது யார்? என்ன வேண்டும்? எனக் கேட்டிருக்கலாம். அல்லது வந்தவராவது ஆர்வமாக கேட்டிருக்கலாம். வந்தவரின் பொன்னான நேரம் வீண், இரு கம்பெனி முதலாளிகளின் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலைமை, அந்த ஆர்டர் டெலிவரி ஆக வேண்டிய நேரம் கூடுதலாக வீணாகுதல். இது எல்லாம் எப்போ மாறுமோ:(

இந்த சிந்தனை வந்திருந்தால் தமிழன் என்றைக்கோ உருப்பட்டு இருப்பானே:))

அதே சமயம் விரல்விட்டு எண்ணக்கூடியவகையில் ஆர்வமானவர்களும் இருக்கிறார்கள்

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா

9 comments:

 1. என்ன தலைவரே

  இன்ப அதிர்ச்சிய கொடுத்துட்டீங்க?

  நூறு சதவிகிதம் உண்மை.

  மாடு மாதிரி உழைக்க தயாராய் இருப்பவர்கள் மனிதன் மாதிரி யோசிக்க மாட்டேன் என்கிறார்கள்?

  உங்களைப் போலவே ஒரு குட்டிக்கதை

  ஒரு நாய்க்குட்டி பேய்க்குட்டியிடம் ஒப்பந்தம் கேட்டு அலைந்தது. இங்கே வராதேன்னு பேய்க்குட்டி ரொம்பவே பிகு செய்ய விடாது துரத்திய கருப்பு போல பேய் கேட்ட அத்தனை சான்றிதழ்களையும் கொடுத்து முதல் ஒப்பந்தத்தையும் எடுத்து விட்டது.

  ஏற்கனவே நாய் நிர்வாகம் கடன் பிரச்சனையில் நாறிக்கொண்டுருந்தது. வங்கி மேலாதிகாரி ராஜபாளையம் நாய்ங்றதால கொஞ்சம் பம்மிக்கிட்டு இருந்தாரு.

  பேய் ஒப்பந்தம் உள்ளே வந்தது முதல் துணி மட்டும் தான் ஓட்டி முடித்தார்கள். ஒரு லட்சம் ஆடையில் 17 லட்சம் காலி.

  இப்போ நாயும் பேயும் எதிர் எதிர் திசையில்.

  படித்த முதலாளி. தினந்தோறும் யாகம் வளர்த்து செல்வத்தை வளர்க்க உள்ளே பணிபுரிபவர்கள் ஒவ்வொருவராக ஓட்டம் பிடித்துக் கொண்டுருக்கிறார்கள்.

  ReplyDelete
 2. முதலாளிகளில் குறிப்பிட்ட சதவீதம் நீங்கள் சொன்னபடிதான் :(

  நல்ல தொழிலாளிகள், மோசமான முதலாளி,

  சுமாரான தொழிலாளிகள், திறமையான முதலாளி

  இது காலத்தின் கட்டாயம், :))

  நன்றி

  ReplyDelete
 3. நல்ல தொழிலாளிகள், மோசமான முதலாளி,

  சுமாரான தொழிலாளிகள், திறமையான முதலாளி

  நான் எழுதிய திருப்பூர் சார்ந்த அத்தனை பதிவுகளையும் அத்துடன் என்னுடைய கடந்த கால அனுபவங்களையும் இந்த இரண்டு வரிகள் நச் என்று உணர்த்தி விட்டது.

  ReplyDelete
 4. இப்படி பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அதனால்தானோ என்னவோ, சில நல்ல தொழிலாளிகளும் மதிக்கப்படாமல் போய்விடுகிறார்கள்!

  பகிர்தலுக்கு நன்றி... என்ன,, கொஞ்சம் சிரமப்பட்டு படிக்கவேண்டியீருந்தது.. ஏதோ கணிணி ஈக்வேஷன் படித்ததுபோன்று

  ReplyDelete
 5. //இந்த சிந்தனை வந்திருந்தால் தமிழன் என்றைக்கோ உருப்பட்டு இருப்பானே:))//

  சிந்தனை குருடர்கள் என்று கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒருத்தர் திட்டினாரே. அது இவர்களைத்தானோ?

  ReplyDelete
 6. A/B/C கம்பெனிக்கு பதிலா மூணு அணிகள்னு வச்சிக்கலாம். எங்கே? ஒரு மென்பொருள் நிறுவனத்தில். இங்கே எல்லா அணிகளும் இணைந்து வேலை செய்து மென்பொருள் வழுக்களை விரைந்து களைய வேண்டும். படித்தவர்கள் ஆனாலும் இங்கும் அதே மனப் போக்குதான்.

  இக்கரைக்கு அக்கரை பச்சை!

  ReplyDelete
 7. //என்ன,, கொஞ்சம் சிரமப்பட்டு படிக்கவேண்டியீருந்தது.. ஏதோ கணிணி ஈக்வேஷன் படித்ததுபோன்று //

  :) நிறுவனங்களின் பெயரை போட வேண்டும் என்றுதான் ஆதவா..

  வாழ்த்துகள்

  ReplyDelete
 8. Indian said...

  பனியன் தொழிலும் கணினித் துறையும் நிச்சயம் வேறு வேறு.:))

  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 9. அன்பின் சிவா

  அருமை அருமை - இயல்பான நிகழ்வு - நம்து தொழிளாளர்களை நாம் தான் தயார் படுத்த வேண்டும் - அனைத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் - இது சிறு நிறுவனங்களீல் மட்டுமல்ல - பெரிய பெரிய அலுவலகங்கள் - நிறுவனங்களிலும் இதே நிலை தான் - வரவேற்பாளர் இல்லை எனில் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டிய நிலை - சென்றவனும் கேட்க மாட்டான் - இருப்பவனும் சொல்ல மாட்டான். என்ன செய்வது ....நல்வாழ்த்துகள் சிவா
  நட்புடன் சீனா

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)