"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, July 15, 2013

பொதிகை மலை பயணத்தொடர் பகுதி 6


விடிந்தும், மழை பெய்கிற சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. குளிரில் எழுந்திருக்க மனமில்லாமல் படுத்திருந்தோம்.  அருகில் பாத்ரூம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அங்கே செல்ல அன்பர்களின் குடையைப் பயன்படுத்திக் கொண்டு, கடமைகளை முடித்துக்கொண்டு, உணவகத்திற்கு காலை 7.45 க்கு வந்து உணவருந்தினோம். தொடர்மழை  அகத்தியரைத் தரிசிக்க, மழை காரணமாக யாத்திரீகர்கள்,  மேலே செல்லத் தயக்கம் காட்டினார்கள்.

உடன் வந்த நான்கு நண்பர்களிடம் கலந்து பேசியபோது வந்தது வந்துட்டோம். ரிஸ்க் எடுப்போம். அதுதான் நமக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி ஆச்சே....என்று உற்சாகத்தோடு அனைவரும் சொல்ல.. அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிட்டு,  கொண்டுவந்த பைகளை அங்கேயே வைத்துவிட்டு கிளம்பினோம். எங்களுக்கு முன்னதாக  ஐந்தாறு பேர் ஒருகுழுவாக மேலே கிளம்பிச் சென்று கொண்டிருக்கின்றனர் என்ற தகவலும் உற்சாகத்தைத் தர ஏறத் துவங்கினோம்.

கூட வந்த நண்பர்கள் இருவர்  மழைகோட் எதுவும் எடுத்துவரவே இல்லை. அவர்களும் நனைந்து கொண்டே ஏற காமிராவை நனையாமல் எடுத்துச் செல்வதே சிரமம் ஆகிவிட்டது.  போட்டோக்கள் எதுவும் எடுக்கவில்லை. ஒருமணிநேரம் மலைகளின் ஊடாக பயணம். பின்னர் புல்வெளிகளின் ஊடான பாதை...பாறைக்கற்கள் என பயணம் தொடர்ந்தது.

மேலே செல்லச் செல்ல ஒற்றையடிப்பாதையாக மாறியதோடு மழைநீர் வழிந்தோடி வரும் பாதையாகவும் மாறியது..எங்களின் கால்தடங்கள் மழைநீரினுள்..எங்கே கால் வைக்கிறோம் என்பது தெரியாது. நிதானமாக நடக்கத் துவங்கினோம்.   எதிரே நான்கு நபர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

மேலே செல்லமுடியாது.. மழைநீரின் அளவு கூடிவிட்டது.  திரும்புகிறோம். நீங்களும் திரும்புவது நல்லது என்றார்கள். சரி.. உங்களின் அறிவுரைகள கவனத்தில் கொள்கிறோம். கவனமாகச் செல்கிறோம். முடியவில்லை எனில் திரும்பிவிடுகிறோம் என்ற உறுதியைக் கொடுத்து  தொடர்ந்தோம்.

செங்குத்தான சில இடங்களில் மழைநீர் அருவிபோல் சுமார் மூன்று அல்லது நான்கு அடி உயரத்தில் இருந்து கொட்ட...நெஞ்சு முகம் எல்லாம் அருவிநீர் கொட்ட... சுமார் 100 அடி தூரத்திற்கு கால்வைப்பதற்கு எந்தப்பிடிப்பும் இல்லாத சரிவில் ஏறினோம். இந்த இடத்தில் பயந்துதான் எதிரே வந்தவர்கள் திரும்பியது புரிந்தது. துணிச்சலோடு ஒவ்வொருவராக கைகொடுத்து மேலே ஏறிச்சென்றோம். காலடித்தடமும் தெரியாத நிலை.... சுற்றிலும் மழைத்தூவல் பனிப்படர்ந்தாற்போல் பார்வையை மறைத்தது.  அகத்திய மலை எந்தத் திசையில் இருக்கிறது எப்படி போகவேண்டும் என்றும் தெரியாது. மிக முக்கியமாக பாதை பிரிகிறது என்று சந்தேகிக்கும் இடங்களில் மஞ்சள் பெயிண்ட் மார்க் பண்ணி இருந்தனர். ஆனால் மழைநீர் வரத்தில் அந்த பெயிண்ட் அடையாளம் முழுமையாகவே தெரியவில்லை.

எதிரே எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் மழைநீரை..சிறு வெள்ளத்தை எதிர்கொண்டேதான் போகவேண்டி இருந்தது.கரணம் தப்பினால் எதுவும் நடக்கும் என்ற நிலை.... எதிரே வந்தவர்களின் எச்சரிக்கை புரிய ,கூடுதல் கவனத்துடன் சென்றோம். மழைநீரின் கலங்கல் ஏதுமின்றி பளிங்கு போல் நுரைத்து வந்து கொண்டிருக்க..அதைச் சுட்டிக்காட்டி கண்டிப்பாக இது வழக்கமான பாதையில் வரக்கூடிய நீர் வரத்துதான்... வெள்ளமோ, எதிர்பாரத நீர்வரத்தோ இல்லை என நண்பர்களிடம் சொல்லிக் கொண்டே ..சென்றோம்....கிட்டத்தட்ட அரைமணிநேர பயணம் இப்படித்தான் இருந்தது.

இந்த அனுபவம் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாத பயமும் எதிர்பார்ப்பும் நிறைந்த மனநிலை....இயற்கையோடு ஒன்றிய அனுபவம் நான் இதுவரை அனுபவித்திராத ஒன்று..தீம்பார்க்குகளில் நீர்விளையாட்டுகள் எத்தனை ஈடுபட்டாலும் இயற்கை அன்னையின் மடியில் விளையாடுகிற இன்பம் வார்த்தைகளினால் விளக்க இயலாததாக இருந்தது. மேலும் மேலும் உற்சாகம் உந்தித்தள்ள தொடர்ந்து முன்னேறினோம்.

                                                படம் ...தினமணிதளத்திலிருந்து


இடையில் பரந்த அகன்ற நீர்ப்பரப்பு ஒன்றினை கடக்க வேண்டியதாக இருந்தது. மேலிருந்து அருவிகள் வந்து இங்கே ஒன்று சேர்ந்து தேங்கி பின் அருவியாய் கீழே கொட்டிக்கொண்டு இருந்தது. இதைத் தாண்டியவுடன் அகத்தியர் மலை பாறைப்பகுதிகள் வந்தன.. மூன்று இடங்களில் இரும்புக்கயிறு கட்டி இருந்தனர். இவைகள் நான் கற்பனை செய்து வைத்திருந்தபடி செங்குத்தாக இல்லை... 45 டிகிரி கோணத்தில் பெரிய பரந்த பாறைப்பகுதி, அதைக்கடக்க கயிறு இல்லையெனில் சிரமம்தான்..

                                          படம் தினமணி இணைப்பிலிருந்து
எங்களுக்கு மேலாக சிலர் நடுங்கிக்கொண்டே நின்றிருக்க.. அகத்தியர் திரு உருவச் சிலை அமைந்த இடத்திற்கு வந்து விட்டதை உணர்ந்தோம். மலை உச்சி என்பதால் காற்று தங்கு தடையின்றிவீச...தூறல்கள் ஊசிபோல் உடலில் விழ.. எங்களுக்கு முன்னதாக சென்ற அன்பர்கள், அகத்தியர் திருமேனிக்கு அபிசேகங்கள் செய்யத் தயாராயினர்.

தினமணியின் இணைப்பிலிருந்து மேலும் சில படங்கள்


தினமலர் இணைப்பிலிருந்து சில படங்கள்


 சின்ன இடைவேளைக்குப் பின் தொடர்வோம்

நிகழ்காலத்தில் சிவா
3 comments:

  1. இயற்கையை நன்கு அனுபவித்துள்ளீர்கள்.

    ReplyDelete
  2. சாகச பயணம் என்பது இது தானோ...? சிலிர்க்க வைக்கும் அனுபவம்....!

    ReplyDelete
  3. வெற்றி ! வெற்றி வாழ்த்துகள். திகிலான பயணம்தான்.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)