"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, September 12, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 22

நடக்கவே சாத்தியம் இல்லை என்ற நிலையில் சில அடிகள் நடப்பது, பல நிமிடங்கள் ஓய்வெடுப்பது என மீண்டும் தொடர்ந்தேன். இந்த நிலை நீடிக்க நீடிக்க,  கொஞ்சம் கொஞ்சமாக மனமும் "முடியல முடியல" எனச் சொல்லிக்கொண்டு வந்தது போய் ”முடியல” எனச் சொல்லவும் சக்தியற்று அமைதியாகத் தொடங்கியது. உயரம் செல்லச் செல்ல குளிர்காற்று இன்னும் அதிகமாகி உடலைத் துளைத்தது. .


உடலில் சக்தி இழப்பு என்பது என்னால் நன்கு உணரப்பட்ட அதேவேளையில் உடல் பாதிப்புகள் எதுவும் இல்லை. டோல்மாலா பாஸ் அமைந்த இடம் சுமார் 1200 அடி தூரத்தில் கண்ணில் தெரிந்துகொண்டே தான் இருந்தது.:) ஒரிரு குதிரைகள் எதிரே யாத்திரிகர்கள் இன்றி வந்தன. இனி நடப்பதை விட குதிரையில்  தொடர்ந்தால் என்ன எனத் தோன்றியதால் விசாரித்தேன். அவர்கள் முழுத்தொகையான 1350 யுவான் கேட்டனர். பாதிக்கும் மேல் கடந்துவிட்ட நிலையில் இந்த தொகை அதிகம், அதுவுமில்லாமல் கையில் அந்த அளவு பணமும் இல்லை என்பதால் அந்த எண்ணத்தையும் கைவிட்டுவிட்டு மீண்டும் நடந்தேன். மனமோ கடைசி வாய்ப்பாக குதிரை கிடைக்கும் என எண்ணி ஆர்வத்தோடு இருந்தது. அதுவும் நடக்காமல் போக, ”என்னமோ பண்ணு போ” என்றபடி அடங்கிவிட்டது.

நடக்க நடக்க தூரம் குறையத் துவங்குவதற்கு பதிலாக அதிகமாவது போல் கண்ணுக்குத் தெரிந்தது. இனி ஒரு அடி கூட எடுத்துவைப்பது சாத்தியமில்லை என்பது தெரியவர, கண்ணை மூடிக்கொண்டு கீழே உட்கார்ந்து விட்டேன். கண்ணை மூடி இருந்தாலும் அருகில் யாத்திரிகர்கள் தொய்வின்றி நடந்து போவதை லேசாக உணர முடிந்தது.

அப்படி சிலநிமிட நேரம் அமர்ந்திருந்தேன்.. சட்டென கண்ணை விழித்துப்பார் என ஏதோ உள்ளிருந்து ஏதோ சொல்ல, கண்விழித்தேன். அதே இடம், அதே தூரம், அதே நபர்கள் ஆனால் எல்லாமும் புதிதாய்த் தோன்றியது. மனம் உற்சாகமாய் பிறந்து இருந்தது.. அதுவரை  இருந்த உடலின் களைப்பு இப்போது  ஒரு துளிகூட இல்லை.

கண் மீண்டும் தானாக மூடிக்கொள்ள, உடலை என்னால் உள்புறமாக காலி இடமாக உற்றுப்பார்க்க முடிந்தது. காலியான மைதானத்தில் வீசப்பட்டு ஓடும் பந்தைப்போல் மனம் உடலினுள் சுற்றிச்சுற்றி வந்தது. அப்படி சுற்றி வருகையில் தொடர்ந்து ஆனந்தமும் உற்சாகமும்  பீறிட்டுக்  கொண்டே வந்தது. உள்ளும் புறமும் வெளியிலும் ஒருசேர நான் இருப்பதை உணர்ந்தேன்.

மிகுந்த உற்சாகமாய்  எழுந்து நடக்க ஆரம்பித்தேன். அப்படி நடந்தபோதும்  மனம் உடலோடு ஒட்டவே இல்லை. என் உடல் நடப்பதை நானே உள்ளிருந்தும் வெளியிலிருந்து கொண்டும் ரசிக்கத் தொடங்கினேன். டோல்மாலா பாஸ் இடத்தை அடைய இருந்த தூரம் மளமளவென குறையத் துவங்கியது. உடலின் எடையற்ற நிலை, நடப்பது குறித்த உணர்வை மிக எளிதாக்கியது.

மனதில் எப்போதுமே ஓடிக்கொண்டு இருக்கும் தேவையற்ற எண்ணங்கள்/கவலைகள் எல்லாம் கழுவி விடப்பட்டு பளிங்கு போல் இருந்தது. இதை என்னால் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நானாக வலுக்கட்டாயமாக  நினைந்த போதும் எந்த எண்ணங்களும் வரவே இல்லை.!!

துள்ளலாக குதித்து நடக்க நடக்க , எனக்கு நானே விசித்திரமாகப் பட்டேன். உடல் முழுவதும் ஆடைகளினால் போர்த்தப்பட்டு இருக்க வெளியே தெரிந்தது முகம் மட்டும்தான். அந்த குளிர் காற்றில் முகம் இறுகி,உணர்வற்று போயிருக்க வேண்டும் ஆனால் எனக்கோ முகத்தில் உள்ள ஒவ்வொரு மயிர்க்கால்களும் அதிரத் துவங்கின. அந்த அதிர்வுகள், ஆனந்த துள்ளலாக தொடர்ந்து  இருந்து கொண்டே வந்தது. கையுறையைக் கழட்டிவிட்டு முகம் முழுவதும் தடவிப்பார்க்க, முகம் வெப்பத்துடனும் குழந்தையின் முகம்போல் மிருதுவாகவும் இருந்தது.

அதே சமயம் முகம் முழுவதுமான துள்ளல் குறையவோ அடங்கவோ இல்லை. கால் மணிநேரத்திற்கும் மேலாக இந்நிலை நீடிக்க, இதை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டே  நடந்தேன். மெள்ள அதிர்வுகள் குறையத் துவங்கவும் டோல்மாலாபாஸ் இடத்தை அடையவும் சரியாக இருந்தது.

உள்ளும் புறமுமாக இயங்கிக்கொண்டிருந்த மனம் மெதுவாக அடங்கி எனக்குள் நிலையானது. ஆழ்ந்த அமைதி எனக்குள் குடிகொள்ள செய்வதறியாமல் அங்கே தெண்டனிட்டேன்.......

எனக்கு எது வேண்டுமோ அது கொடுக்கப்பட்டது..
என்னிடமிருந்து எது எடுக்கப்பட வேண்டுமோ அது எடுத்துக்கொள்ளப்பட்டது.

இறைரூபமான திருக்கையிலையை சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினேன்.

யாத்திரை தொடரும்
நிகழ்காலத்தில் சிவா

12 comments:

 1. மிக சிறப்பான அனுபவங்கள்... பகிர்வுக்கு நன்றி...

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. அருமையான பதிவு. மெய் சிலிர்த்தது

  ReplyDelete
 3. எனக்கு எது வேண்டுமோ அது கொடுக்கப்பட்டது..
  என்னிடமிருந்து எது எடுக்கப்பட வேண்டுமோ அது எடுத்துக்கொள்ளப்பட்டது.

  அருமையான பதிவு.
  உங்களுடன் நாங்களும் தரிசனம் செய்கிறோம்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. நம்மை நடத்திச் செல்பவன் அவன், நம்மால் ஒன்றும் ஆகாது. நம்மை அழைத்து யாத்திரையை முடித்துக்கொதுப்பவரும் சிவசக்தியே. அருமையாக வ்ழுதுகின்றீர்கள் தொடருங்கள்.

  ReplyDelete
 5. தொடருங்கள் .............. உடன் வருகிறேன்,,,,,,,,,,,,,, உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்..........

  ReplyDelete
 6. எனக்கு எது வேண்டுமோ அது கொடுக்கப்பட்டது..
  என்னிடமிருந்து எது எடுக்கப்பட வேண்டுமோ அது எடுத்துக்கொள்ளப்பட்டது./

  நிறைவாக உணர்கிறோம்.!

  ReplyDelete
 7. அருமையான பதிவு...
  அற்புதமான உணர்வுநிலை
  வாழ்க வளமுடன்.
  அன்போடு
  www.vnthangamani.blogspot.com
  www.indians-meditation.blogspot.com

  ReplyDelete
 8. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
  அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
  நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

  ReplyDelete
 9. 'நான்'அழிவது என்பது இதுதானோ. ஆன்மீகத்தின் புனித பூமியில் இதுபோன்ற அனுபவங்கள் கிட்டும் என்பது உறுதி. இறைவனின் அருள் கிட்டிய அனுபவம் ஆயிரத்தில் ஒரு பங்காக மட்டுமே விவரிக்க முடிந்துள்ளதும். அது ஆன்மீகத்தேனின் ஒரு துளியாக மனதை நிறைக்கிறது.

  ReplyDelete
 10. அதனை வார்த்தைகளும்
  செப்பனிடபட்டிருகிறது.
  எளிதாக புரியும் வண்ணம் உள்ளது
  ஒவ்வொரு அனுபவத்திலும் நாங்களும்
  இணைந்தது போல் இருந்தது...
  நன்றி சகோ...

  ReplyDelete
 11. நல்ல அனுபவம் வெட்கப்படாமல் பகிர்ந்தமைக்கு பாராட்டுகள்

  ReplyDelete
 12. @ Sankar Gurusamy
  @ போத்தி
  @ Rathnavel
  @ Kailashi ஆமாம் அதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்..
  @ ஸ்பார்க் ஆர்ட்ஸ்
  @ இராஜராஜேஸ்வரி
  @ V.N.Thangamani
  @ சின்னதூரல்
  @ சாகம்பரி என் விவரிப்பை மிகச் சரியாக புரிந்து கொண்டீர்கள்...\
  @ கோவி.கண்ணன் வெட்கம் விடத்தானே அங்கே செல்கிறோம்:)

  நண்பர்களின் தொடர் வருகைக்கும், எழுத எனக்கு தொடர்ந்து ஊக்கம் தந்து கொண்டே இருப்பதற்கும் நன்றியும் மகிழ்ச்சியும்..

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)