"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, September 28, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 24

கெளரிகுந்த் குளத்தைத் தாண்டி இறங்கி அதன்பின் இரண்டு குன்றுகளைத் தாண்டி வந்தபோது கண்முன்னே விரிந்தது கிட்டத்தட்ட குதிரை லாட வடிவிலான பள்ளத்தாக்கு. சுற்றிலும் மலைகள் ஓங்கி உயர்ந்து நின்றன.


பள்ளத்தாக்கில் பனி ஆறு நீண்டு கிடந்தது. அதில் நடந்த அனுபவம் மனம் குழந்தைபோல் துள்ளச் செய்தது. கிட்டத்தட்ட பல இடங்களில் கையில் ஸ்டிக் இல்லாமல் நடக்க இயலவில்லை. வழுக்கவும், சறுக்கவும் செய்தது.
சுற்றிலும் சூழ்ந்திருந்த மலைகளை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நடந்தோம். கால்கள் பனியில் புதைய புதைய இங்கும் கவனமாக முன்னர் யாத்திரீகர்கள் சென்ற பாதையில் மட்டுமே கவனமாகச் சென்றோம்.


கீழே இருக்கும் படத்தில் கொடி பறப்பது போன்ற தோற்றம் தெரிகிறதா? மிகப்பெரிய பாறையின் மேல் அமைந்த சிறு பாறை வடிவம் த்வஜஸ்தம்பம் போல:)

இந்த பனி மிகுந்த பகுதியைத் தாண்டி முடிவில் குன்றின் மறுபுறத்தில் செங்குத்தாக கீழே இறங்கத் தொடங்கினோம். கீழே கண்ணுக்கு எதோ ஒரு கூடாரம் மாதிரி தெரிய மெள்ள மெள்ள இறங்கிச் சேர்ந்தோம். அங்கு கூடாரத்தில் சீன பாக்கெட் உணவு வகைகள் இருந்தன.தங்குமிடமாக இருக்கும் என நினைத்த எனக்கு,சற்று ஏமாற்றமாகவே இருந்தது. எதுவும் வாங்கவோ, அருந்தவோ பிடிக்காமல தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன்.

இனி இது போன்ற இரு புறமும் மலைகள் தொடர்ந்து வர நடுவில் பரந்த பள்ளத்தாக்கு சமவெளியில் சுமார் நான்கு மணிநேரம் நடந்தோம்.  இதுவரை வந்த இடங்கள் வாகனங்கள் அணுக முடியாத மலைகள். இப்போது வந்திருப்பதோ யாத்திரை நிறைவு பெறும்  இடத்திலிருந்து வாகனத்தில் அணுக முடியும். அப்படி ஒரு சமவெளிதான்:) வழி நெடுக சூரிய ஒளி மின்சாரம் பெரிய அளவில் தயாரிப்பதற்கு உரிய மின்சக்தி நிலையங்கள் இருந்தன. அதைப்பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டே வந்தேன். மாலை சுமார் 4.30 மணி அளவில் இரண்டாம் நாள் தங்குமிடமான திராபுக் வந்தடைந்தோம். இங்கும் படுக்கை மட்டும் கிடைத்தது. இரவு உணவு ஆப்பிள் மற்றும் பாக்கெட் ஜீஸ்:)   உடல் அசதியினால் தூக்கம் வரவேண்டும். ஆனாலும் சுமாராக தூங்கி காலையில் எழுந்தேன்.,.

யாத்திரை தொடரும்
நிகழ்காலத்தில் சிவா
Post a Comment