"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, September 9, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 21

ஆப்பிள் சாப்பிட்டுவிட்டு மீண்டும் மெள்ள மெள்ள நடக்க ஆரம்பித்தோம். இதுவரை நடப்பதற்கான பாதையேனும் ஓரளவிற்கு தெரிந்தது. இப்போது முழுக்க முழுக்க பாறைக்கற்கள் மேல் நடக்க வேண்டி இருந்தது. இடைஇடையே பனிக்குவியல் கிடந்தது. அந்த இடங்களையும் தாண்டிச் சென்றோம். அந்த பனிக்குவியல்களில் ஏற்கனவே யாத்திரீகர்கள் முன்னர் நடந்து சென்ற கால் தடங்களின் மீதே நாங்களும் நடந்து சென்றோம். பனிக்குவியலில் கால்கள் அரை இன்ஞ் முதல் ஒரு இன்ஞ் வரை புதைய ஆரம்பித்தது. இதைத் தவிர்கக இயலாது. கால் தடங்களைத் தவிர்த்து, விலகி,அருகில் கிடந்த பனியின் மீது நடக்க முயற்சிப்பது ஆபத்தே..

அதாவது அந்த பனிக்குவியலின் கீழ் பாறைக்கற்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கால்கள் புதைய வாய்ப்புகள் உண்டு. சுமார் ஒரு அரை அடிமுதல் ஒன்றரை அடிவரை புதையலாம். யாக் எனப்படும் எருமைகள் கூட கவனமாக ஏற்கனவே சென்ற அடையாளத்தை பின்பற்றியே சென்றன,. விலகினால் அவற்றின் கால்கள் புதைந்து, சமாளிக்க முடியாமல் கீழே விழுவதும் உண்டாம்.

கூட வந்த யாத்திரிக நண்பர்களில் ஒருவர் நாம் இந்த பரிக்ரமாவை முடிப்பதற்கு அடையாளமாக நமக்குப்பிடித்தமான ஒன்றை விட்டுவிடுவதாக உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். தனக்கு மிகவும் பிடித்தமான பூரியை விட்டு விடுவதாகவும் சொன்னார்.

எனக்கு இதில் ஆர்வமில்லை. சிவம் இங்க நாம் வந்து, பூரி சாப்பிடும் வழக்கத்தை தரவேண்டும் என்றுதான் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது என நான் நம்பவில்லை. மேலும் எனக்கு பிடித்தது இனிப்புதான். அதை எப்படி விடமுடியும்:)) சிவமா..இனிப்பா என்றால் நான் இனிப்பு என்பதைத்தான் தேர்ந்தெடுப்பேன்.:) ஆனாலும் இனிப்புக்கு நான் அடிமை அல்ல:)

ஏற்கனவே முதல் நாள் பரிக்ரமாவில் நடந்த களைப்பு,தொடர்ந்த பல இரவுகளாக மிகக்குறைவான தூக்கம், இரண்டாவது நாளிலும் அதிகாலையிலேயே பயணம் கிளம்பியது எனத் தொடர்ந்து உடலில் ஆற்றல்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே வந்ததால், உடல் மீண்டும் கெஞ்ச ஆரம்பித்துவிட்டது. ”என்னை விட்டுடு ரெஸ்ட் வேணும், இனி என்னால் நடக்க இயலாது” எனத் திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்துவிட்டது.

முதல்நாளில் மனம் உற்சாகமாய் இருந்ததால் களைப்பு அவ்வளவாகத் தெரியவில்லை. ஆனால் இன்றோ மனமும் அசதியடையத் துவங்கியது. உடலினால் முடியவில்லை, அதிகபட்ச முயற்சியால் இருப்பில் இருந்த சக்தி அனைத்தும் செலவாகிவிட்டது. உண்மையிலேயே உடல் நீண்ட ஓய்வு இல்லையெனில் இயங்காத அளவிற்கு சக்தி இழந்துவிட்டது. ”நான் இனி ஒண்ணும் பண்ண முடியாது” என மனமும் குப்புறப்படுத்துக்கொண்டது.

”சிவத்தை இறுகப்பற்றிக்கொள் மனமே” எனச் சொன்னாலும் ’அதற்கும் என்னால முடியல” என்று மனம் சொல்ல.. இருப்பினும் இருக்கின்ற சக்தியைத் திரட்டி நடந்தேன்.

எனக்கு முன்னதாகச் சென்ற எங்கள் குழுவினர் சற்று முன்னதாகச் சென்று கொண்டிருந்தாலும் அவர்களுக்கும் எனக்குமான இடைவெளி அதிகமாகத் தொடங்கியது. என்னைச் சுற்றி உள்ள சூழ்நிலையின் நிதர்சனம்,உண்மைத்தன்மை என்னவென்றால் இனி திரும்பவும் முடியாது. திரும்பினாலும் 5மணிநேர பயணம், அதற்கான உடல்வலு சாத்தியமில்லை.

நடக்கவே சாத்தியம் இல்லை என்ற நிலையில் சில அடிகள் நடப்பது, பல நிமிடங்கள் ஓய்வெடுப்பது என மீண்டும் தொடர்ந்தேன். இந்த நிலை கிட்டத்தட்ட சுமார் முக்கால்மணி நேரம் நீடித்தது. இடையில் கொஞ்சம் கொஞ்சமாக மனமும் முடியல முடியல எனச் சொல்லிக்கொண்டு வந்தது போய் ”முடியல” எனச் சொலலவும் சக்தியற்று அமைதியாகத் தொடங்கியது. உய்ரம் செல்லச் செல்ல குளிர் காற்று அதிகமாகி உடலைத் துளைக்கத் தொடங்கியது....




டோல்மாலா பாஸ் அமைந்திருக்கும் மலைப்பகுதியிலிருந்து வலது இடதுபுறக் காட்சிகள்..

யாத்திரை தொடரும்.
நிகழ்காலத்தில் சிவா

4 comments:

  1. உண்மைதான்... உடல்வலுவாக இருக்கும்போதுதான் நம் அறிவு வேலைசெய்யும்..

    உடல் வலுவை இழந்து மன வலுவையும் இழந்து நிற்கும்போதுதான் தெய்வம் கண்ணுக்கு தெரியும்..

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. சரியான வயதில் அமைந்த சாகச பயணம். இதுவும் ஒரு கொடுப்பினை தான்.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)