"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, October 27, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..9

இயற்கை வைத்தியம் குறித்து எங்களுடன் வந்த டாக்டர் திரு.சுப்ரமணியம் அவர்கள் உரை நிகழ்த்த அனைவரும் ஆர்வமாக கேட்டுக்கொண்டு இருந்தோம்.சூரியன் மெல்ல மறையத் தொடங்க, நேரம் மாலை 6.45 க்கு மேல் ஆகிவிட்டது. மலைப்பிரதேசத்தில் சூரியன் மறைய நேரம் ஆவதுபோல் உணர முடிந்தது.

சரி இனி பேருந்திலேயே தங்க வேண்டியதுதான் என சிந்தனை செய்து கொண்டே சாலையைத் தாண்டி பேருந்துக்கு வந்தேன், ரோடில் வேன் ஒன்று வந்தது.அருகில் உள்ள ஊரிலிருந்து அதுபோல் அடிக்கடி வாகனங்கள் வந்து கொண்டே இருந்தன. சற்று நம்பிக்கையுடன் உயரே பார்க்க வரிசையாக வாகனங்கள் மலைமீது இருந்து இறங்கி வர ஆரம்பித்தது தெரிந்தது.

எனக்கு சற்று நிம்மதி வந்தது. அனைவரையும் அழைத்து பேருந்தில் உடனடியாக ஏறி அமர்ந்தோம். மேலிருந்து அந்த வண்டிகள் அனைத்தும் வந்தவுடன் இங்கிருந்தும் பேருந்துகள் மேலே செல்ல செக்போஸ்ட் அதிகாரிகள் அனுமதி அளித்தனர். ஏனெனில் காத்திருந்த வண்டிகள் சுமார் 40க்கும் மேல் இருக்கும். தங்குமிடம் உணவு இரண்டையும் அவற்றில் வந்தவர்களுக்கு அங்கு ஏற்பாடு செய்வது சாத்தியமில்லை என்பதை கருத்தில் கொண்டு அனுமதித்தனர்.

நல்ல இருட்டு, வாகனங்கள் ஒளியை உமிழ்ந்து கொண்டே சென்றது. 7 கிமீக்கு மேல் பயணித்தோம். அதன் பின் சரிந்த கிடந்த மண், பாறைகள் மேற்கொண்டும் பயணிக்க யோசிக்க வைத்தது. முதன்முறையாக வரும் யாரையும் கலவரப்படுத்ததும்.இடது புறம் பாறைகள். வலதுபுறம் எந்தவிதத் தடுப்பும் இல்லாத ஆழமான சரிவுகள். விழுந்தால் எதுவும் மிஞ்சாது. மீட்கவும் முடியாது.

இந்த நிலையிலான பாதை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு இப்படித்தான். எதிரே வரும் வாகனங்கள் தூரத்திலேயே நின்று ஓட்டுநர்களில் ஒளிசமிக்ஞைகளை பெற்று வந்தன. இந்த பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு இது மிகவும் பழகி விட்டது போல:) எந்தவித சலனமும் இல்லாமல் எதிரே வரும் வாகனங்களுடன் ஒத்துழைத்து இயங்கினர். மிகப்பொறுமையாக, எந்தவித முகச்சுழிப்பும் இன்றி பாதுகாப்பு ஒன்றையே முக்கியமாக மனதில் கொண்டு
பேருந்துகளை கவனமுடன் இயக்கினர்.

பயணத்தின் இடையே  மலைப்பாதை உயரத் தொடங்கியதையும், இதுவரை பார்த்துவந்த துகள்பாறைகள் தன்மை மாறி, கெட்டியான பெரிய பாறைகள் தெரிய ஆரம்பித்தது. இமயமலையின் உண்மையான தன்மையும், உணர்வும் நெருக்கமும் மனதில் ஏற்பட்டது.

மெதுவாக உத்தர்காசி வந்தடைந்தபோது இரவு  10.45 இருக்கும். ஏற்கனவே ரிஷிகேசில் இருந்து புறப்படும்போதே போனில் முன்பதிவு  செய்யப்பட்ட ஓட்டலின் அறைகளில் தங்கினோம்.  இங்கும் எல்லா வசதிகளும் இருந்தன.ஓட்டலின் உள்ளே சென்றுவிட்டால் நகரத்தின் ஓட்டலில் இருப்பது போலத்தான்.

ஒரு சில அறைகளில் ஹீட்டர் வேலை செய்யவில்லை என்கிற குறையைத்தவிர பெரும்பாலான அறைகள் நன்றாகவே இருந்தன. அவைகள் இரண்டு படுக்கை, மூன்று படுக்கை என விதம்விதமாகவும் கிடைத்தன. கூட வந்தவர்களில் வயதான நண்பர் ஒருவர் இரவு வந்துவிட்டால் உற்சாகபானம் சாப்பிடுபவர். ஏற்கனவே வந்து பயண அனுபவம் அவருக்கு இருந்ததால் டில்லியிலேயே தேவையானவற்றை வாங்கி வைத்துக் கொண்டார். அவர் வேலையை ஆரம்பிக்க, பழக்கத்திற்கு மனிதன் அடிமையாக இருப்பதன் சாட்சியாக அவர் எனக்குத் தெரிந்தார். மற்றபடி இது சரியா,தவறா என்ற ஆராய்ச்சிக்கு என் மனம் போகவில்லை.:)

சமையல் தயாராக பெரும்பான்மையான நண்பர்கள் சாப்பிட்டுவிட்டே தூங்கப்போனார்கள். நான் ஒரு ஆப்பிளை சாப்பிட்டுவிட்டு, செல்போன், கேமரா என அனைத்தையும் சார்ஜ் போட்டு விட்டு தூங்கப்போனேன். மீண்டும் காலை ஆறுமணிக்கு கிளம்புவதாக திட்டம். அப்போதுதான் கங்கோத்ரி சென்று இரவுக்குள் திரும்ப முடியும்.

உத்தர்காசியில் பாகீரதி நதிக்கரையில் விஸ்வநாதர் கோவில் இருக்கிறது. பார்க்க வேண்டிய கோவில்தான். நாங்கள் கங்கோத்ரி, கேதார்நாத் மட்டுமே முக்கிய தரிசன இடங்களாக திட்டமிட்டு வந்ததால் நேரம் ஒதுக்க முடியவில்லை.

காலையில் எழுந்து குளித்து பயணத்திற்கு தயாராக வந்தோம். வெளியே வந்து பார்த்தால் ரம்மியமான் காட்சி, நெருக்கமான மலைத்தொடர்களும், அவற்றின் மீது குழந்தையைப்போல் தவழ்ந்து கொண்டிருந்த மேகக்கூட்டங்களும், கண் நிறைந்த பசுமையும்முந்தைய நாள் பட்ட மன உளைச்சல்களுக்கு மருந்தாக இருந்தது.

சலசலத்து ஓடிக்கொண்டிருந்த பனிபடர்ந்த கங்கையின் (பாகீரதி என்ற பெயரில்)ஓட்டம்

மலையின் நடுவில் தூரமாக சில வீடுகள். பாதை ஏதேனும் தட்டுப்படுமா என பார்த்தேன். நடைபாதை மட்டுமே இருக்கும் போல. வாகனங்கள் செல்லக்கூடிய அறிகுறியே இல்லை.
 .

ஒரு வழியாக காலை 6.45க்கு பயணம் தொடங்கியது. பேருந்து செல்லச் செல்ல  மலைகளின் தன்மை என் மனதில் பல மாற்றங்களை உணர்த்தியது. என மனதில் எந்த எண்ண ஓட்டமும் வரவில்லை. அவைகளை இரசித்துக்கொண்டே வந்தேன் என்றால் அது தவறு.

அவைகளின் உயரம், தன்மை, அமைதி, சற்றும் அசைவில்லாத நிசப்த நிலை அவைகள் எனக்குள் எதோ நிசப்தமாய் உணர்த்திக்கொண்டே வந்தது. நண்பர்களுடன் பேசக்கூடத் தோன்றாமல் பார்த்துக்கொண்டே வந்தேன். மணி காலை 8.00 நெருங்க எல்லோரும் ஏக மனதாக வழியில் தென்பட்ட ஒரேஒரு டீக்கடையில் பேருந்துகளை நிறுத்தினோம்.

வெளியே இறங்கி வந்தால் குளிர் கம்பளி ஆடைகளைத்தாண்டி ஜில்லென தீண்டியது. டீ போடச் சொல்லிவிட்டு காத்திருந்தபோது மேலிருந்து கீழே இறங்கிவந்த வாகனத்தில் உள்ளவர்கள் ’இனிமேலேபோகமுடியாது’ என தகவ்ல் சொல்லிவிட்டுப் போனார்கள்.

பஸ்கள் காத்திருந்த இடம்.அரை மணிநேரம் கழித்து வந்த இன்னொரு வாகனம் போகலாம் என தகவல் கொடுக்க அந்த இடத்தை நன்கு உணர்ந்து அனுபவிக்க கிடைத்த வாய்ப்பாக அந்த அரைமணி நேரத்தை பயன்படுத்தினேன்.






தொடர்ந்து பயணிக்க காலை 9.00க்கு கங்னானி என்ற இடத்தை அடைந்தோம்...

பயணம் தொடரும்..
நிகழ்காலத்தில் சிவா

4 comments:

  1. இனிய பயணம் -

    சுவாரசியமா எழுதியுள்ளீர்கள்

    ReplyDelete
  2. நல்ல அனுபவம்
    கண்டிப்பா ஒருநட போயிட்டு வரனும்ங்க
    புகைபடங்கள் நல்லா அழகா எடுத்திருக்கீங்க
    தொடருங்க :-))

    ReplyDelete
  3. உண்மையாகவே வார்த்தைகளை செதுக்க கற்றுக் கொண்டுருப்பது புரிகிறது. தெளிவான நடையில் நேர்த்தியான படங்கள்.

    ReplyDelete
  4. பொறாமையாய் இருக்கிறது, எப்போது கிடைக்கப் போகிறது இந்த வாய்ப்பு எனக்கும்? சதுரகிரி போய் வந்ததே பெரிய சாதனையாய் தெரிகிறது எனக்கு. உங்கள் அனுபவங்களை கேட்டாவது புண்ணியம் தேடிக் கொள்கிறேன்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)