"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, October 13, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..8


ரிஷிகேஷ்லிருந்து கங்கை நதிக்கு செல்லும் வழி, மற்றும் ஊருக்குள் எனக்குத்தெரிந்தவரை இறைச்சி விற்கும் கடைகள் எங்குமே இல்லை. மதுபானக் கடைகளும் இல்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

தமிழ்நாட்டில் அரசே மதுக்கடைகளை அக்கறையோடு நடத்துவதும், இறைச்சிக்கூடங்கள் அமைத்திருப்பதையும் நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. மக்கள் சரியாக இருந்தால் அரசைக் குறை சொல்ல வேண்டியதில்லை:).மேலும் ஆட்டோவில் வரும்போதும், போகும்போதும் வழிநெடுக திரளாக பக்தர்கள் நடந்துவந்தாலும், இருசக்கர வாகனங்களில் வந்தாலும் சரி ரோட்டின் ஓரத்திலேயே பயணித்தனர். போக்குவரத்தில் ஒரு சுய ஒழுங்கு இருந்தது. அங்கு இருந்த அளவில்லாத கூட்டத்திற்கு ஒரு சிறு விபத்தைக்கூட பார்க்கமுடியவில்லை.:)

குழுவாக சேர்ந்தவுடன் குறும்பு செய்யும் நம்மவர்களின் குணம் அங்கு இல்லை. நம்ம ஊரில் ஒரு சின்ன கோவில் திருவிழா என்றாலும் முழுபோக்குவரத்தையே தடை செய்யும் கலாச்சாரத்தைப் பார்த்த எனக்கு இதுவும் புதுமையாகவே தெரிந்தது.

06.08.2010 காலையில் திருக்கோவிலூர் மடத்திலிருந்து ஐந்து பேருந்துகளில் கங்கோத்ரி நோக்கி கிளம்பினோம். கங்கோத்ரி செல்லும் போது,சுமார் 150 கிமீ தூரத்தில் உள்ள முக்கிய  இடமான உத்தர்காசியில் இரவு தங்குவதாக பயணத்திட்டம். தொடர்ந்த இரவுநேரப் பயணம் இமயமலையைப் பொறுத்தவரை அவ்வளவு உகந்ததல்ல. மலைச்சரிவு, வாகனம் பழுது, அவசர மருத்துவ உதவிகள் எதுவாயினும் பகலில்தான் கிடைக்கும். இரவில் மிகமிகச் சிரமம். கிடைக்காது. குறிப்பிட்ட இடங்களில் செக்போஸ்டிலேயே இரவு எட்டுமணிக்குமேல் போக முடியாது என தடை செய்துவிடுகிறார்கள்.

பேருந்து மலைமீது பயணிக்க மலைத்தொடர் ஆரம்பித்தது. இமயமலை என்றாலே பனிபடர்ந்த மலைகள் என்கிற மிதப்பில் இருந்த எனக்கு ஊட்டி மலை கூட பரவாயில்லை என்கிற அளவில் மலைகளைப் பார்த்த போது மனதில் பொசுக்கென்று இருந்தது.

இமயமலையின் தொடக்கம் இப்படித்தான். இதன் பரப்பளவிலும், உயரத்திலும் மேலே செல்ல செல்ல மலைகளின் தன்மையே மாறுபடுகிறது. மலைகளின் ஊடாக பேருந்து செல்லும்போது கீழே கங்கை ஓடுவது கண்ணுக்குள்ளேயே இருந்தது.வழியில் மண்சரிவுகள், ஏற்கனவே நிகழ்ந்ததன் அடையாளங்கள் மிச்சம் மீதி இருந்தன..

வழியில் தென்பட்ட நீர்த்தேக்கத்தின் சில படங்கள். தெஹ்ரி அணை என நினைக்கிறேன். மருந்துக்குக்கூட எங்குமே ஆங்கில பெயர்பலகைகள் இருப்பதில்லை. பெரிய ஊர்களில் மட்டுமே இருக்கும்.


மதிய உணவுக்கு பேருந்துகளை நிறுத்தினோம். உணவு பரிமாற சிறு நீர்ஊற்றும், கடையும் இருந்த இடத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட, அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது


அந்த இடத்தில் இருந்த மலைகளில் பாறைகள் இருந்த விதத்தைப் பார்த்தபோது நான் வழியில் கண்ட மண்சரிவு மிகக் குறைவு என மனதில் பட்டது.

இதோ பாருங்கள். சோன்பப்டி கேக் சாப்பிட்ட அனுபவம் அனைவருக்குமே இருக்கும். அதேதான் இந்தப் பாறைகள். ஒரு மலையைச் சாய்க்க வேண்டுமானால் எதுவுமே வேண்டியதில்லை. நம் கைகளே போதும் தட்டினால் அல்லது இழுத்தால் போதும் பாறைகள் மண்குவியலாக மாறி விடும். இந்த தன்மைதான் மண்சரிவுக்கும் முக்கிய காரணமாக அமைகிறது.

எல்லோரும் உணவை ரவுண்டு கட்டி அடித்தனர். குறையாகச் சொல்லவில்லை:). மலைப்பிரதேசம் தொடர்ச்சியான குலுங்க வைக்கும் பயணம். நான் மிகக்குறைந்த அளவு உணவு மட்டும் எடுத்துக்கொண்டேன்.

மீண்டும் பயணம் தொடங்கினோம். கிளம்பிய ஒரு மணி நேரத்தில்(மதியம்2.30) சற்று சமதளத்துடன் கூடிய பிரதேசம் வர அங்கே செக்போஸ்ட் அருகே வாகனங்கள் வரிசையாக நின்றன. நாங்கள் நின்ற இடம் சரியாக விவசாய அபிவிருத்திப்பண்ணை.(பண்ணையின் பின்புறத் தோற்றம்)என்ன ஆயிற்று என விசாரிக்க, இங்கிருந்து 5 கி.மி தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் இப்போதைக்கு பயணம் தொடர முடியாது, எனத் தகவல் வந்தது. சரி என இறங்கி எதிரே இருந்த பண்ணையில் அனைவ்ரும் ஓய்வெடுத்தோம். ஓய்வென்றால் உறக்கமல்ல. பேருந்தில் இருந்து பேட்டரியில் இயங்கும் மெகாபோனை எடுத்துக்கொண்டு பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மற்றும் அவரவருக்கு பிடித்த பாடல்கள் என ஆரம்பித்தோம்.

(உணவு வண்டி பின்னே நின்ன தைரியந்தான், வேறென்ன:))))

எங்களுக்கு முன்னதாக நின்ற வேறு பேருந்துகளில் இருந்த சுற்றுலாப் பயணிகள் முகத்தில் ஈயாடவில்லை. அடுத்தவேளை உணவுக்கோ வழி இல்லை என்கிற சூழ்நிலை. நேரம் 5 மணியை நெருங்கியது, இனி இரவு தங்க இடம் வேண்டும் பெண்கள் அதிகம். எனவே அமைப்பாளர்கள் முன்னதாக வந்தவழியில் திரும்பிச் சென்று அருகில் உள்ள ஊரில் பார்த்தால் மிகவும் தரம் குறைந்த ஓட்டல் அறைகளே இருந்ததால் வேண்டாம் என முடிவு செய்து அவர்கள் போன் செய்தனர்.

பாறை விழுந்த இடத்தை நோக்கி இருவர் இருசக்கரவாகனத்தை வாடகைக்கு(?) எடுத்து நேரில் சென்று பார்த்தனர்.அங்கு புல்டோசர்கள் வந்து சரி செய்து கொண்டு இருப்பதை நேரில் பார்த்து உறுதி செய்தனர். சுமாராக இன்னும் நேரம் பிடிக்கும் எனத் தகவல் கிடைத்தது. மீட்புப் பணியில் சரிசெய்ய சரிசெய்ய மேலும் மேலும் மண் விழுவதால் எவ்வளவு நேரம் ஆகும் என உறுதியாக சொல்ல முடியாத நிலை.

ஆறுமணிக்கு மேல் செக்போஸ்டில் வாகனங்களை அனுமதிப்பதும் சந்தேகமே!......


இனி என்ன செய்ய .. எப்படி ஆகுமோ என மெலிதான கவலை சூழ்ந்ததை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.  எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள மனமும் உடலும் தயாராகவே இருந்தது.பயணம் தொடரும்...


வாழ்த்துகளுடன்,

நிகழ்காலத்தில் சிவா

7 comments:

 1. பயணம் நல்லாப் போகுது, எழுத்துப் பயிற்சிக்கு பயணக்கட்டுரைகளே ஏற்றவை என்பதை உங்கள் கட்டுரையும் சொல்லுது. பாராட்டுகள் சிவா

  ReplyDelete
 2. எழுத்துப் பயிற்சிக்கு பயணக்கட்டுரைகளே ஏற்றவை என்பதை உங்கள் கட்டுரையும் சொல்லுது.

  பலித்து விட்டது பார்த்தீர்களா?

  ReplyDelete
 3. பயணங்கள் எப்பவும் விதவிதமான அனுபவங்கள்.. மலைப்பயணங்களோ இன்னும் விசித்திரம்..
  புகைப்படங்கள் அருமை..
  பகிர்வுக்கு நன்றி..தொடருங்கள்..

  ReplyDelete
 4. பஸ்ஸில் பாத்துதான் இங்க வந்தேன், அதுக்குள்ளே இத்தன பகுதி வந்திருக்கு, தெரியாமலே போச்சே.

  ரிசிகேஷில் கங்கை கரையில் சும்மா அமர்ந்திருப்பதே தவம்தான்...

  அதையும் தாண்டி மூன்று முறை அங்கு சென்றிருந்தாலும் கங்கோத்ரி , யமுநோதிரி மட்டும் நான் போனது இல்லை -:(((

  உங்கள் பயண பதிவு எனது நினைவுகளை மீட்டெடுத்து என் கட்டுரையை முடிக்க உதவுமென்று நினைக்கிறேன் -:)))

  முடிந்தால் என்னுடைய கட்டுரையை (ரிஷிகேஷ் & கேதார்நாத் ) மீண்டும் படித்து பாருங்கள் இப்பொழுது நிறைய புரியும் -:)))

  நன்றி !!!

  ReplyDelete
 5. அழகழகான படங்கள்! நேரில் சென்று தரிசிக்க முடியாவிட்டாலும் இங்கே கண்டதில் மகிழ்ச்சி!

  ReplyDelete
 6. //வழியில் தென்பட்ட நீர்த்தேக்கத்தின் சில படங்கள். தெஹ்ரி அணை என நினைக்கிறேன்.//

  ஆம் ஐயா தெஹ்ரி அணைதான் அது, இந்த வருடம் அடியேனும் கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. வரும் பதிவுகளையும் வந்து படிக்கின்றேன்.

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)