"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, August 17, 2010

படித்ததில் பிடித்தது -- 17/08/2010

காசிக்குப் போவதற்கு முன்பு ஹரித்துவார், ரிஷிகேஷ் இரண்டிற்கும் போயிருந்தேன். கும்பமேளா நேரம். ஹரித்துவார் வண்ண விளக்குகளால் ஜொலித்துக்கொண்டு இருந்தது. இளம்பெண்ணைப் போல புரண்டு ஓடும் கங்கை நதியை ஆசைதீர பார்த்துக்கொண்டு இருந்தேன்.ஏழு மணி ஆன பிறகு அங்கங்கே மேடைபோட்டு, பெரிய அடுக்கு தீபத்தில் நெய்திரி ஏற்றி, கங்கை கரை பண்டாக்கள் கங்கை நதிக்கு ஆரத்தி காட்டுகிறார்கள். அந்நேரம் கரையில் அமர்ந்திருக்கிற ஜனங்கள் இலையில் அகல்விளக்கு வைத்து, அதில் நெய்தீபம் ஏற்றி, சுற்றி மலர்கள் வைத்து கங்கையில் மிதக்க விடுகிறார்கள்.

இரண்டாயிரம் விளக்குகள் மிதந்துபோக, அடுக்கு தீபத்தில் ஆரத்தி காட்ட கங்கை என்ற நதிக்கு ஹரித்துவார் என்கிற அந்த நகரம் செய்கின்ற பூஜை கண்கொள்ளாக்காட்சியாக இருக்கிறது.

கங்கை நதியை அந்த ஊர்மக்கள் மிகப்பெரிய மரியாதையுடன் நடத்துகிறார்கள். கங்கையை பானி எனச் சொல்ல்க்கூடாதாம், கங்கை நீரை ஜலம் என்று சொல்ல வேண்டுமாம். கங்கையில் செருப்புக்காலோடு இறங்கவே கூடாதாம். அது மிகப்பெரிய பாவமாம். கங்கையை உயிருள்ள விசயமாக நினைத்து, அங்குள்ளவர்கள் கொண்டாடுவதும், மற்றவர்களை கொண்டாடவைப்பதும் கண்ணுக்கு இனிய காட்சியாக, நெஞ்சில் நிறைந்த நிகழ்ச்சியாக இருந்தது.

ஒரு நதியை இப்படித்தான் கொண்டாட வேண்டுமென்ற எண்ணம் வலுப்பெற்றது. நமது தமிழ்நாட்டில் ஒரு நதியையும் ஏன் இப்படி கொண்டாடவில்லை....
என்ற கேள்வி எழுந்தது.

நதியிருந்தால் தானே கொண்டாட.. என்று இன்னொரு கேள்வியும் எனக்குள் வர, நதி பொங்கி வருகிற பொழுது, அந்த நதியை வரவேற்றால், ஒருவேளை தொடர்ந்து அந்த நதி வரக்கூடும்.

காவிரிக்கு அப்படி வலையலும், மஞ்சளும், குங்குமமும் காதோலையும் கருகமணியும் கொடுத்து வரவேற்பது உண்டு. ஆனால் ஆடிப்பெருக்கு என்ற ஒருநாள் மட்டும் இது நடைபெறுகிறது. தினம் தினம் ஹரித்துவாரில் செய்வது போல, காவிரி பொங்கி வரும்போது அந்த காவிரிக்கு அடுக்குத்தீபம் காட்டினால் என்ன? வருக வருக வருகதாயே என்று கைகூப்பி வணங்கினால் என்ன? ஆண்டு முழுவதும் வரவேண்டும் என்று வரவேற்றால் என்ன? என்று தோன்றியது.

வற்றாத நதி, ஜீவநதி என்று தாமிரபரணியை இப்படிக் கொண்டாடுகிறோமா... என்ற கேள்வியும் எழுந்தது. இப்படி எல்லாம் தாமிரபரணியும் கொண்டாடப்படுவதில்லை. எங்க நதிநீரில் கோதுமை அல்வா பண்ணினா ரொம்ப ருசி’ என்று சொல்லிகொள்கிறோமே தவிர காசியில், ஹரித்துவாரில் கங்கை நதியைக் கொண்டாடுவதைப்போல் நாம் நதிகளைக் கொண்டாடுவதே இல்லை.

நாம் வறட்சியாக இருப்பதற்கு, நமது வணக்கமின்மை காரணமோ என்ற எண்ணம் என் மனதில் எழுகிறது. நீங்களும் இது பற்றி யோசியுங்களேன்.

ஒரு நதியைக் கொண்டாடுவது பற்றி சிந்தனை செய்யுங்களேன். அதுசரி என்றுபட்டால் மற்றவர்களை எதிர்பார்க்காமல் நீங்கள் ஓடுகின்ற நதிக்கு,

அகல்விளக்கு ஏற்றி, மதித்து வணக்க்ம் சொல்லுங்களேன்.

நன்றி; பாலகுமாரனின் கிருஷ்ணாவதாரம், பல்சுவைநாவல் கேள்விபதில் பகுதி
Post a Comment