"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, December 31, 2018

பயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் ?

மனதை விலகி நின்று கவனிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து கவனிக்க முடியாமல் போகும். அப்போது குற்ற உணர்ச்சி ஏதுமின்றி மீண்டும் மீண்டும் தொடர வேண்டும்.  இதுதான் கடந்த இடுகைகளின்  சாரம்.

மனதை கவனித்தலில் உள்ள சூட்சமமே, புலன்களால் அறியப்படுகிற எதனையும், எதனோடும் இணைத்துப் பார்த்துக் கொண்டு, மனம் தொடர்ந்து சலிப்பின்றி இயங்கும்.. உங்களை அறியாமலே இது நடக்கும்.

கவனித்தல் கைவரப்பெற்றால் மனம் இந்த வேலையைச் செய்யாமல் அனுபவத்துடன் மட்டுமே ஒன்றி இருக்கும்.

இந்த வார்த்தைகளைப் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இதில் உள்ளடங்கிய செய்திகளை அப்படியே மனம் வாங்கிக்கொண்டு இருந்தால் கவனித்தலில் முன்னேற்றம்.. மாறாக இப்படி செய்தால் அப்படி நடக்காதா? என்ற கேள்வி, இந்தமாதிரி எத்தனை படிச்சிருக்கேன். செஞ்சும் பார்த்தாச்சு, பலன் இல்லை என்றோ மனம், எதனோடாவது கொக்கி போட்டால் ’நழுவுகிறது’ என்றுதான் பொருள்.:)

எனக்கு ஒரு பனியனைப் பார்த்தால் துணி என்ன ஃபைனா? இண்டர்லாக்கா? சிங்கிள் ரிப்பா? லூப்நிட்டா? டர்க்கியா? லைக்ரா பைனா? என்று பார்த்த மாத்திரத்தில் மனம் தன்னிச்சையாக விடையினை உணர்ந்துகொள்ளும் . இதற்கு விநாடிக்கும் மிகக்குறைவான நேரமே போதும். இது வெளியே குவியும் மனம்.

ஆனால் கவனித்தல் எனக்கு வசப்படும்போது துணியை துணியாக மட்டுமே பார்ப்பேன். பார்க்கிறேன் என்ற உணர்வு இருக்கும். துணி என்ன வகைன்னு சொல்லு என மனதிற்கு கட்டளை என்னுள் உருவகம் பெற்று, மனதிற்கு தரப்பட்டபின்/தரப்பட்டால் மட்டுமே அதே விநாடியில் இந்த துணி இன்ன வகை என்று மனம் எனக்குச் சொல்லிவிட்டு அமைதியாக வேண்டும். இது போல் எல்லா கணங்களிலும் விழிப்புணர்வு கைவரப்பெற்ற நிலை. ஒவ்வொரு கணமும் நிகழ வேண்டும். அவ்வப்போது மட்டுமே இது எனக்கு நிகழ்கிறது. இதில் நிலைத்த தன்மை வேண்டும் என்ற முயற்சிதான் எனது இந்த எழுத்துகள்.:)

சரி வாகனம் ஓட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள். அப்போது எதிரே வரும் லாரியினை பார்த்து, இப்படி வருகின்றதே ஒதுங்க வேண்டுமே மனதின் உத்தரவிற்கு காத்திருப்பதா என்றெல்லாம் குழம்ப வேண்டாம். எப்பொழுது வாகனத்தில் ஏறி அமர்ந்து ஓட்டத் துவங்கி விட்டீர்களோ அப்போதே மனம் இயங்கத் தொடங்கிவிடும்...மிகக்குறைந்த அளவில், வாகனத்தை இயக்கும் அளவிற்கு மனம் இயங்கித்தான் ஆக வேண்டும். ஓட்டும்போது தன்னிச்சையாக கையும் காலும் இயங்க, மனம் எங்கோ நழுவத் துவங்கும். இதையே எப்படி வீடு வந்து சேர்ந்தேன் என்றே தெரியவில்லை என்று சாதரணமாகச் சிலர் சொல்வார்கள். இந்த விழிப்புணர்வற்ற நிலைதான் தவிர்க்கப் படவேண்டும்.

மனதை இப்படிக் கவனித்துப் பழக்க, சாத்தியக்கூறான வழிகளில் ஒன்று மந்திரம்.. , அலைகிற மனதை கட்டுக்குள் கொண்டுவர மந்திரங்கள் பெரும்பாலும் உதவும். ஆனால் அவைகளைக் கையாளும்போது மட்டுமே பலனளிக்கும். அதன் பின் மனம் மீண்டும் குரங்காகிவிடும். இது மனதின் தன்மை :)

இதைக் கட்டுக்குள் கொண்டு வர நமது மனதை நமது உடலோடு பிணைக்க வேண்டும்/ ஏற்கனவே அப்படித்தானே இருக்குது என்கிறீர்களா? மனதின் பிறப்பிடம் நமக்குள்ளே.  ஆனால் அது விளையாடிக் கொண்டு இருக்குமிடம் நமக்கு வெளியே, ஊர் உலகம் அரசியல் என்று எங்கு வேண்டுமானாலும் :)

மனதைக் கவனிக்க, அதை நம் கண் பார்வையிலேயே (ஙே..) வைத்திருக்க வேண்டும். அந்தப் பக்கமோ, இந்தப்பக்கமோ ஓடவிடக் கூடாது. அதற்குச் சிறந்த வழி, சரியான வழி, உடலை கவனிக்கச் செய்தல். இது மனதை பழக்குவதற்கான ஆரம்பநிலைப்பாடம். உடலின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கச் செய்வதுதான். முயற்சித்துப்பாருங்கள். ரோபோட் மாதிரி அசைவதா என்கிற குழப்பம் வருகிறதா?  இயல்பான செயல்களில் உங்களின் அசைவுகளோடு மனதை ஒட்டவையுங்கள்.  அது  அப்படியே அசைவுகளுடன் பொருந்திக்கொள்வதை அனுபவமாக அடைவீர்கள்.

வெற்றி உண்டாகட்டும்.


No comments:

Post a Comment

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)