"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, August 15, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 15

லா சூ பள்ளத் தாக்கில் திபெத்திய யாத்திரீகர்கள் எங்களைப்போல் பாதயாத்திரையாக வந்தாலும் தொடர்ச்சியாக நடக்கவில்லை.திருக்கைலை மலையை நாம் சிவமாக பார்த்தால், அவர்கள் மலை அமைந்த அந்த பீடபூமி பகுதி முழுவதையும் சிவமாகவே பார்க்கிறார்கள்!.

அதோடு, அத்தகைய தன்மையில் திருக்கைலை மலை இருக்கும்போது தாங்கள் நடந்து போவதை பொறுத்துக்கொள்ளும்படியோ என்னவோ கீழே விழுந்து வணங்கி, பின் எழுந்து மீண்டும் விழுந்து வணங்கி, நமஸ்காரம் செய்து கொண்டே செல்கின்றனர். இப்படித்தான் இவர்களது முழுப்பயணமும் இருக்கிறது.!!


இவர்களைப் பார்த்தபோது, நடந்து சென்றதில் எனக்கு இருந்த தற்பெருமை கரையத் தொடங்கியது:) பாத யாத்திரையில் இன்னும் தொடர்ந்து நடக்க, நடக்க மெதுவாக, உடலில் களைப்பு ஏற்பட்டது., மனமும் களைக்க ஆரம்பித்தது. இது சரியல்லவே., உடல் வலுவைக்காட்டிலும் மனவலிமை முக்கியமாயிற்றே., மனதின் வலுவைக்கூட்ட, மனதை பஞ்சாட்சர மந்திரத்தை திரும்பதிரும்ப உச்சரித்துக்கொண்டே இருக்கச் செய்தேன். நடையை இன்னும் எட்டிப்போடத் துவங்கினேன். ஒய்வை குறைத்து நடையை அதிகப்படுத்தியது நான் செய்த தவறுகளில் ஒன்று. நிகழ்காலத்தில் இருத்தல் என்பதை விட்டு போய்சேர வேண்டிய இடத்தில் மனதை வைத்தது இரண்டாம் தவறு.

ஆனால் நடப்பதில் மனம் லயிக்கவில்லை என்றபோது, உடலும் மனமும் மெள்ள இசைவு குறையக்குறைய என் உடல்,மன ஆற்றல்கள் அதிகம் விரயம் ஆகத் தொடங்கியது. மனமும் மந்திரந்தை உச்சரிக்க மாட்டேன் என அடம்பிடித்து 'சிரமமாக இருக்கிறது' என புலம்ப ஆரம்பித்தது.

புறப்பட்டதில் இருந்து சுமார் 6 மணி நேரம் நடந்தாயிற்று. ஆயாசத்துடன் அண்ணாந்து பார்க்க தூரத்தில் எங்களின் வழிகாட்டி நின்று கொண்டு எங்களை வரவேற்று கையை அசைத்தார்.! தங்குமிடமான ’திராபுக்’ வந்துவிட்டது என தூரரரரத்தில் இருந்த கட்டிடத்தை காட்டினார். அங்கு எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையை அடைந்தேன். உடல்முழுவதும் வியர்த்து இருந்தது. உள்ளே அணிந்திருந்த பேண்ட்,பனியன் நனைந்திருந்தன. அவற்றை முதலில் கழட்டி விட்டு மாற்று உடைகளை அணிந்து கொண்டேன்.

அதன் பின் இரண்டு மணிநேர இடைவெளியில் சகயாத்திரீகர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். மிக ஆர்வமாக தாங்களே சுமைகளைத் தூக்கி வந்தவர்களும், மற்ற அனைவருமே களைத்து, ஆயாசத்துடனே வந்து சேர்ந்தனர்.!!

முதல் நாள் மாலை தங்கியிருந்த திராபுக் என்ற இடத்திலிருந்து கைலையின் வடக்குமுக தரிசனம்...


திராபுக் தங்குமிடமும்., வடக்கு முக தரிசனமும்


கொஞ்ச நேரம் கழித்து இன்னும் கிட்டே இருந்து...


திராபுக் தங்குமிடத்தில் அறையினுள் படுக்கை வசதிகள் மட்டும்..

இரவு நெருங்க நெருங்க மேகமும், பனியும் சேர்ந்து புகைபோல் கைலைநாதரைச் சூழ்ந்து கொள்ள.. அவரைப்போலவே எங்கள் மனமும் குளிர்ந்தது.. மேலே குளுமையான தரிசனம்.....

யாத்திரை தொடரும்
நிகழ்காலத்தில் சிவா


4 comments:

  1. நிழல்படக்காட்சிகள் அருமை...

    ReplyDelete
  2. நிறைய நிழல்படங்கள் எடுத்தேன். அவற்றில் தேர்ந்தெடுத்தே பகிர்ந்து வருகிறேன்..

    மகிழ்ச்சி :)

    ReplyDelete
  3. படங்களை பார்க்கும் போதே குளிருது, தங்களை நல்லபடியாக அழைத்து சென்றவர் அந்த பரம் பொருள் தான், தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!!!

    ReplyDelete
  4. கைலை நாதன் தரிசனம் அற்புதம்.. ஹரஹர மஹாதேவா போற்றி...

    பகிர்வுக்கு நன்றி...


    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)