"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, April 28, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 5

முதலில் தியானம் தவம் ஆகியவைகள் ஏன் நமக்கு சட்டென பிடிபடுவதில்லை என்பதற்கான காரணங்கள் என்ன?

சிலவிசயங்களை மேலோட்டமாகவே தருகிறேன். இவைகள் உங்கள் சிந்தனையைத் தூண்ட மட்டுமே. ஏனெனில் இவை மிக முக்கியமான அம்சங்கள். உங்கள் சிந்தனைக்கு இந்த கருத்துகள் எடுத்துக்கொள்ளப்பட்டால் மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கும் விளைவு கிடைக்கும்.

1.நோய். மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும் என உறவுகளுக்கு இடையே சண்டை ஏற்படும்போது சொல்வதுண்டு. இதுதான் யதார்த்தம். ஆனால் மூக்கு என்று இருந்தால் சளியே இருக்கக்கூடாது. உடல் கழிவுகள் வெளியேற்றம் மிக இயல்பானதாக இருக்க வேண்டும். வள்ளலார் சளியும், மலத்தையும் எந்த உபாயத்தை பின்பற்றியாவது வெளியேற்ற வேண்டும் என்பார்.

ஆன்மீகத்திற்கும் நோய்க்கும் என்ன சம்பந்தம்? நோய் எப்ப தீர்வது தியானமும் தவமும் எப்போது கைகூடுவது? என்றால் நிச்சயம் உடலில் நோய் என்பது இல்லாது இருந்தால் மட்டுமே ஆன்மீகம் சார்ந்த உணர்வுகளை நம்மால் முழுமையாக புரிந்து கொண்டு இயங்க முடியும். மாறாக தன் உடலில் நோயை வைத்துக்கொண்டு தவமுறைகளை,சொல்லிக் கொடுத்தவர்களை மோசம் சொல்வதுதான் நடைமுறையில் இருக்கிறது. அதாவது  உடலில் நோய் இருந்தால் தவமுறைகளில் எனக்கு முன்னேற்றம் இல்லை என்ற கவலை இல்லாது உங்களது அன்றாட பயிற்சிகளைத் தொடருங்கள். கூடவே உடல் நோயினை தீர்க்க எல்லாவித முயற்சிகளையும் எடுங்கள்.

பாவப்பதிவுகளின் அடையாளம் உடலிலே நோய், உள்ளத்திலே களங்கம் என்பார் வேதாத்திரி மகான். ஆகவே எந்த மருத்துவமுறையை ஆவது பின்பற்றி உடல் நோய்களை தீர்க்க முயலுங்கள். எல்லா மருத்துவமுறைகளுமே சில சிறப்பம்சங்களுடன் இருந்தாலும் சரியான மருத்துவரை முடிந்தவரை கண்டறிந்து ஆலோசனை பெறுவது நல்லது. நமது அன்றாட  நடவடிக்கைகளில் ஒழுங்கு இல்லாது உணவு, உழைப்பு, உறக்கம்,உடலுறவு, இவற்றில் நமது உடலுக்கு ஏற்ப மிகையோ, குறையோ இன்றி இருக்கிறோமா என சரி பார்த்து செயல்படுவது மிகவும் முக்கியம். இதில் குறைபாடு இருந்தால் எந்த மருத்துவ முறையுமே முழுபலனைத் தராது:)

மாற்று மருத்துவ நண்பர் ஒருவரின் உரையை நேரம் ஒதுக்கி கேளுங்கள் நோய்கள் குறித்த உங்கள் அபிப்ராயம் மாறுபடும்!!


2.மனச்சோர்வு- ஆன்மீகத்தில் மனச்சோர்வுக்கு இடம் கொடுக்கவே கூடாது. செய்கிற பயிற்சியில் பல்வேறு காரணங்களினால் மனம் அடங்காமல் இருக்கலாம். உடலினில், மனதில் மாற்றமோ, மேம்பாடோ தெரியாமல் இருக்கலாம். முடிந்தால் என்ன காரணம் பயிற்சியோ, தியானமோ சொல்லிக்கொடுக்கப்பட்ட விதத்தில் செய்கிறோமா என்பதை சரிபார்க்கலாம். மாறாக செய்து செய்து என்ன ஆச்சு? என சோர்வடைந்து விடுதல்,மன உறுதி இழத்தல் ஆன்மீகத்தில் நம் முன்னேற்றத்திற்கான தடைக்கற்களில் இரண்டாவது ஆகும்.


3.சந்தேகம். செய்கிற பயிற்சியில் விளைவு வருமா என்கிற சந்தேகம், செய்யும் முன்னரே நமது மனம் தனக்குத் தெரிந்தவாறு கணக்குப்போட்டுப்பார்த்து இதிலெல்லாம் பலன் கிடைக்காது:) எனச் சொல்லும். இதையும் மீறி நீங்கள் எந்த ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் பலன் பூஜ்யமே. ஆகவே முதலில் எந்த பயிற்சியில் இருந்தாலும் முதலில் அதில் நம்பிக்கை கொள்ளுங்கள். இதற்குத்தான் மன எதிர்ப்பின்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முதலில் இருந்து வலியுறுத்தி வருகிறேன்.

தொடரும்
Post a Comment