"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, April 19, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 2

எதிர்ப்பின்மை என்பது என்ன. இது மனதளவில் முதலில் மனம் எதனோடும் முரண்படாதிருத்தல் என புரிந்து கொள்வோம். அதெப்படி? என்று உங்கள் மனம் கேட்கும்:)  இதுதான் எதிர்ப்பு என்பது. அதாவது உடனடியாக மனம் எதற்கும் எதிர்வினையாற்றும். அளவு கடந்த வேகத்துடன் அது இயங்கும்.

இது ஏதோ என் கட்டுரையை, கருத்தை உங்கள் மனதில் திணிப்பதற்காக சொல்வது என்று அருள்கூர்ந்து  நினைத்துவிட வேண்டாம். எதெற்கெடுத்தாலும் உடனடியாக பொறுமையின்றி மனம் ஆற்றும் எதிர்வினைக்கு, எதிர்ப்புக்கு,  நாம் நமக்குத் தெரியாமலேயே துணை போய்க்கொண்டுதான் இருக்கிறோம். இதை நீங்கள் தெரிந்து கொண்டாலே மனம் உங்களிடம் கைகட்டி நிற்க தயாராகி விடும்:)

இது அனுபவத்தில் எளிதாக உங்களுக்கு பிடிபடும். நீங்கள் செய்ய வேண்டியது சில விநாடிகளேனும் உங்கள் மனதை உள்ளே உற்று கவனித்தல் மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது.

இப்படி மனதளவில் உடனடியாக எதிர்வினை ஆற்றவதை, உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் பொறுமை உங்களுக்கு வந்து விட்டது எனபதை உறுதி செய்து கொள்ளலாம். இதற்குப் பெயர் மனதை கவனித்தல் என வைத்துக் கொள்ளுங்களேன்.

மனக்கட்டுப்பாடு என்பது இறுதி நிலை என்றால் கவனித்தல் என்பது ஆரம்பநிலை. (மனதை கட்டுப்படுத்துவது சாத்தியமே இல்லை என்று இந்நேரம் மனம் சொல்லியிருக்குமே:))

இன்னும் விவரமாக சொல்ல வேண்டும் என்றால் சட்டென கோபம் வரும் எனக்கு மனதை கவனிக்கத் தொடங்கியபின் கோபம் சற்று தாமதித்து வருகிறது. கோபத்தில் வார்த்தைகள் வந்து விழுவது சற்றே தேக்கமடைந்து பின்னர் வருகிறது. அதன் வீரியம் குறைந்து விட்டது, கோபத்தில் வரும் வார்த்தைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது எனச் சொல்லலாம்.

இங்கு இன்னும் ஒரு விசயம் கூட.. எதிராளியின் பலத்தை கண்டு, அதனால் நமக்கு வரும் விளைவினை கணக்கில் கொண்டு, சட்டென நமது கோபம் குறைந்து பேசுவது பயத்தினால்.. ஆக பயத்தினால் மனம் வழிதெரியாமல் அடங்குவது  வேறு, நாம் கவனித்தலால் மனம் அமைதியடைந்து அடங்குவது வேறு .


இதுவும் ஆன்மீகம்தான் என தொடர்வோம்.Post a Comment