"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, April 15, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 1

ஆன்மீகம் என்பது என்ன? என்ற கேள்வி நமக்குள் எழாதவரை மனதிற்கு குழப்பம் ஏதும் இல்லை. நிம்மதியாக கோவிலுக்கு போனோமா, சாமி கும்பிட்டமான்னு பொழப்ப ஓட்டிவிடலாம். எந்த ஆராய்ச்சியும் எனக்கு வேண்டாம் என நிம்மதியாக காலந்தள்ளிவிடலாம்:)



ஆனால் வளர்ப்பில், கற்றலில், சமுதாயத் தொடர்பில், கேள்வி அறிவில், நம் மனதில் பலசெய்திகள் ஆன்மீகம் பற்றி விரும்பியோ, விரும்பாமலோ போதிக்கப்படுகின்றது. இவைகளில் எது சரி, எது தவறு என்று எப்படி ஆராய்வது? இதற்கு இவைகளை சற்று ஆராயத்தான் வேண்டும். இதற்கு இவற்றை எப்படி அணுக வேண்டும் என்பதில்தான் குழப்பமே ஆரம்பிக்கிறது.

இந்தக் குழப்பம் வரவேற்கத்தக்கதா அல்லது தேவையற்றதா என்பது உங்களின் ஆர்வத்தைப் பொறுத்தது. அவனவனுக்கு சோத்துக்கே வழியக் காணோம், இதுல இந்த ஆன்மீகம் வேறயா என்பவர்களுக்கு தேவையற்றதுதான்.

சோத்துக்கே இல்லை ஆனாலும் கடவுள் சிந்தனை எனக்கு தீவிரமாக இருக்கிறது என்பவர்களுக்கு வரவேற்கத் தகுந்த குழப்பம் இது. இந்த உலகில் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், புலனின்பம் என இதைத்தேடித் தேடி ஓய்ந்து, நம் வாழ்வை மிருகங்களைப் போல் முடித்துக்கொள்கிறோம் என்பது போக, இன்னும் நாம் உடலாலும் மனதாலும் ஏற்கனவே இருக்கின்ற புது உலகை அனுபவத்தில் பெறுதல் என்பதற்காக ஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

சரி.ஆன்மீகம் என்றால் குழப்பமா என்றால் இல்லை. மிக எளிமையானதுதான். ஆனால் குழப்பமாகத் தெரியும். எப்படி? டீத்தூள், சர்க்கரை, பால் அல்லது வெந்நீர் இவ்வளவுதான் தேவை தேநீர் தயாரிக்க, ஆனால் இதைக் கலக்கும் விதத்தில், எத்தனை எத்தனை விதங்கள்!!.

சர்க்கரை இல்லாத டீ, பால் இல்லாத கட்டங்காப்பி, இதிலும் ஆற்றி, ஆற்றாமல், சூடாக சூடு இல்லாமல் என மனிதருள் எத்தனை விதம் உண்டோ அத்தனை விதம் தேநீரிலும் உண்டு.

சர்க்கரை மிகவும் பிடிக்கும் எனக்கு, சர்க்கரை இல்லாத தேநீர் பெருந்துன்பம். இதுதான் தேநீர் என்றால் வாழ்நாளில் தேநீர் குடிப்பதையே விட்டுவிடுவேன், தேநீர் என்பதே கொடுமை என எதிர்வாத பிரச்சாரத்துக்கே கிளம்பிவிடுவேன். உண்மை என்ன? இருப்பதை வைத்து எனக்கு பிடித்ததை தயார் செய்யும் திறன் எனக்கு இல்லை. சரியான புரிதலும் பொறுமையும் இன்றி நான் இருப்பதை நான் உணராமல் இருக்கிறேன் என்பதே உண்மை:)

ஆக ஆன்மீகம் பேசுவதும் நாத்திகம் பேசுவதும் எந்தவிதத்திலும் தவறு அல்ல. ”எந்தவிதமான கேள்வி கேட்பதிலும் தவறு என்பதே இல்லை. காரணம் கேட்பவர் தன் அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப மனதில் எழும் கேள்வியை கேட்கிறார். பதிலளிப்பவர்தாம் கேட்பவரது ம்னோநிலையை உணர்ந்தும், தன் நிலையையும் உணர்ந்து பொருத்தமான பதிலை அளிக்க வேண்டும்” என்பார் ஞானியர்.

இதில் அந்தக்கேள்வி உண்மையிலேயே அறிவுக்கு தெளிவு வேண்டி கேட்கப்படுகிறதா அல்லது உன்னைவிட எனக்கு அதிகம் தெரியும், நீ சொல்வது தவறு என மட்டந்தட்டும் தொனியில் கேட்கப்படுகிறதா என்பது மட்டுமே இங்கு கவனிக்க வேண்டியது.!  இதற்குத் தகுந்தாற்போல் பதில் சொல்ல வேண்டியதுதான்:)

 ஆன்மீகமும் இதுபோலத்தான், உங்கள் மனதின் விருப்பத்திற்கு பொருத்தமான விளக்கங்கள் கிடைத்தால் அது ஆன்மீகத்தை ஏற்றுக்கொள்ளூம். இல்லாவிட்டால் புறந்தள்ளும். நாத்திகனாக மாற்றும். பொருத்தமான விளக்கங்கள் கிடைத்தபின் அதைப்பிடித்தக்கொண்டே மெள்ள மெள்ள வேறுவிதமான நேரெதிரான விளக்கங்களையும் ஒத்துக்கொள்ள ஆரம்பிக்கும் நம் மனம்.

அதற்கு நாம் செய்ய வேண்டியது பொறுமையும் எதிர்ப்பின்மையும்..

(குழப்பம் தொடரும்)



8 comments:

  1. அருமையாக விளக்கம் வைத்து விட்டு, குழப்பம் தொடரும் என்று போட்டுவிட்டீர்கள்.

    ReplyDelete
  2. எனக்கு இது நீண்ட நாள் சந்தேகம், அவசியம் நீங்கள் தீர்த்து வைக்கத் தான் வேண்டும், ஒரு உயிரை கொன்று தின்றால் அதன் பாவம் உனக்கு வரும் என்றோ அல்லது நீ ஒரு மிருகத்தை கொன்றால் அடுத்த பிறவியில் நீ அதுவாய் பிறந்து வெட்டப்படுவாய் என்று பௌத்தத்தில் உள்ளது. இந்து மதத்தில் இது ஏன் வலியுறுத்திக் கூறப்படவில்லை?

    ReplyDelete
  3. குழப்பினால் தானே தெளிவு கிடைக்கும்!

    ReplyDelete
  4. //தமிழ் உதயம் said...

    அருமையாக விளக்கம் வைத்து விட்டு, குழப்பம் தொடரும் என்று போட்டுவிட்டீர்கள்.//

    :), இந்த இடுகையின் உள்ளடக்கத்தை திட்ட பிறருக்கு வாய்ப்பளித்து விடக்கூடாது என்கிற எண்ணம்தான் காரணம்:)..

    வரவுக்கும் ஆதரவுக்கும் நன்றி திரு.தமிழ் உதயம்

    ReplyDelete
  5. //jagadeesh

    எனக்கு இது நீண்ட நாள் சந்தேகம், அவசியம் நீங்கள் தீர்த்து வைக்கத் தான் வேண்டும், ஒரு உயிரை கொன்று தின்றால் அதன் பாவம் உனக்கு வரும் என்றோ அல்லது நீ ஒரு மிருகத்தை கொன்றால் அடுத்த பிறவியில் நீ அதுவாய் பிறந்து வெட்டப்படுவாய் என்று பௌத்தத்தில் உள்ளது. இந்து மதத்தில் இது ஏன் வலியுறுத்திக் கூறப்படவில்லை?//

    மதம் என்ன சொல்லி இருக்கிறது என பார்ப்பதைவிட மனம் என்ன சொல்கிறது எனப்பார்ப்பது சிறப்பு ஜெகதீஷ்..

    எந்த உயிரைக்கொன்றாலும் அதன் பாவம் நமக்கு வராது.. வேண்டுமானால் உயிரைக்கொன்ற பாவம் மட்டும் நமக்கு புதிதாக ஏற்படும்...

    மிருகத்தைக்கொன்றால் அடுத்த பிறவியில் நீ அதுவாய் பிறந்து வெட்டப்படுவாய் என்பதில் உள்ள உண்மைத்தன்மை நம் உணர்வுக்கு உணர முடியாதது. ஆகவே இதை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ செய்யாமல் இந்தப்பிறவியில் செய்ய வேண்டியதை மட்டும் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

    இதன் தொடர்பாக வாய்ப்பு அமையும்போது எழுதுகிறேன் ஜெகதீஷ்

    ReplyDelete
  6. //இராஜராஜேஸ்வரி said...

    குழப்பினால் தானே தெளிவு கிடைக்கும்!//

    மனம் குழம்பாமல் தெளிவடையாது என நன்றாகச் சொன்னீர்கள். அப்படி தெளிவடைந்ததாக சொல்லிக்கொள்பவர்கள் கடைசியில் குழம்பிவிடுவார்கள். நாம் முன்னெச்சரிக்கையாக முதலிலேயே ஆரம்பித்துவிட்டோம்.

    ReplyDelete
  7. தொடக்கமே அருமை!இது குழப்பமென்றால்,மேலும் குழம்பத் தயார்.தொடருங்கள்!
    என் ஆன்மீகப் பதிவு “http:// shravanan.blogspot.com(முக்கியமாகத் திருமந்திரம்)

    ReplyDelete
  8. கம்பி மேல நடப்பது போல உள்ள டாபிக்..... அதில் சரளமாக உங்கள் கருத்துக்களும் எழுத்து நடையும் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)