"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, May 11, 2010

அவலாஞ்சி - பயண அனுபவம்..

திரு.லதானந்த் அவர்களின் ‘ஊட்டிக்கு வாங்க’ வேண்டுகோளுக்கு இணங்கி, மனைவி மற்றும் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சனி காலை ஊட்டி  கிளம்பினோம், வழியிலேயே லதானந்த், வலைச்சரம் சீனா தம்பதியர் எங்களுக்காக காத்திருந்து இணைந்து கொண்டனர்.


ஊட்டி சென்றவுடன், திரு.தமிழ்மணம் காசி , மற்றும் தோகமலை ஆரம்ப சுகாதாரமையம் வேங்கடசுப்ரமணியன் என பதிவர்கள் குடும்பத்துடன் வந்து சேர்ந்தனர். மழை ஆரம்பிக்க அனைவரின் அறிமுகப்படலம்  ஆரம்பித்து முடிந்தது. மழை நிற்கும் அறிகுறி தெரியவில்லை. நேரத்தின் அருமையை கருத்தில் கொண்டு டீ மியூசியத்திற்கு சென்றோம்.  அங்கு தேயிலை எப்படி டீத்தூளாக மாற்றம் பெறுகிறது என்பதையும், அதன் இயந்திரங்கள், மற்றும் அவற்றின் வரலாறு காணொளியாக என, தயாரிக்கும் முறை பற்றி விவரமாக அறிந்து கொள்ள முடிந்தது.

பின்னர் அரசு கலைக்கல்லூரியில் நடந்த நாய்கண்காட்சியை பார்வையிட சென்றோம். நேரமாகிவிட்டதால் வெளியே வந்த கன்னுக்குட்டி சைஸ் நாய்களை பார்த்து மகிழ்ந்தோம்.

அதன்பின்னர் தனியாரின் முயற்சியால் இயங்கும் மெழுகு மியூசியம்,  அற்புதமாக இருந்தது. பின்னர் இரவு உணவுக்கு பின் தங்குமிடம் திரும்பினோம்.

தமிழ்மணம் காசி அவர்கள் கொண்டு வந்திருந்த எல்சிடி ப்ரொஜக்டர் மூலம்  நம்ம ஆப்பீசர் லதானந்த் வனஉயிரிகள் குறித்தான பவர்பாயிண்ட் ஷோ நடத்தினார் . மரங்களின் வகைகள், உயிரினங்கள், பறவைகள், பாம்புகள் குறித்தான பல்வேறு வகையான விளக்கங்கள் பதிவர்களின் குழந்தைகளின் (ஹிஹி நமக்கும்தான்.... ) பொது அறிவை வளர்க்கும் வண்ணம் இருந்தது. தேர்ந்தெடுத்த படங்களும் விளக்கங்களும் நேரம் போனதே தெரியவில்லை. விவரங்களும் ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. இரவு கொல்லானும் வந்து சேர்ந்தார்.

திரு.லதானந்த் அவர்களின் இந்த பயண ஏற்பாட்டின் நோக்கம், வன உயிரினம் குறித்தான ஆர்வத்தை பதிவர்களிடையேயும், அவர்கள் குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதே.

இந்த உன்னத நோக்கம், ஆர்வம் தகவல் என்ற அடிப்படையில் அப்போதே நிறைவேறி விட்டதாக உணர்ந்தேன்.பதிவர் குடும்ப குழந்தைகளான, பள்ளி, கல்லூரி செல்லும் பலதரப்பட்ட இருபாலரும் உற்சாகமாக விடையளித்துக்கொண்டே வந்தனர்.

காசி அவர்கள் லதானந்த் சாரிடம் எங்களுக்கு கூடுதல்தகவல் கிடைக்கும் வண்ணம் கேள்விகளை கேட்டுக்கொண்டே வந்தார். கிட்டதட்ட வன உயிர்கள் குறித்தான பயிற்சி பட்டறை போல மனநிறைவு எல்லோருக்கும் வர இரவு ஓய்வு.

காலை அங்கேயே தயாரிக்கப்பட்ட உணவுகள் எடுத்துக்கொண்டு அவலாஞ்சி பயணம் துவங்கியது. அதற்கு முன்னதாக ரோஸ் கார்டன் கண்காட்சி கண்டு களித்தோம். பயணம் செய்த வேனில் குழந்தைகளின் பாட்டுக்கச்சேரி தொடங்கியது. ஒருவர் பாட அவரின் பாடல் முடியும் அல்லது நடுவர் முடிக்கச்சொன்ன எழுத்தில் புதிய பாட்டு என கொண்டாட்டம்  சூடுபிடித்தது. பயணம் செய்த தூரமோ, நேரமோ தெரியாத அளவுக்கு உற்சாகமாக, தொடர்ந்தது. இதில்பெரும்பங்கு காசி அண்ணாரின் குழந்தைகள் பெரும்பங்கு வகித்தனர்.


பாதையும் இடமும் நெருங்க நெருங்க பயணம் திரைப்படத்தில் வருவதுபோல் திகில் மிகுந்த பயணம் தொடங்கியது. வழியில் காணப்பட்ட ஒவ்வொரு மரவகைகள் பற்றியும், அது எந்த குடும்பத்தைச் சேர்ந்தது, அதன் காரணப்பெயர் என்ன, அதன் அடுத்தகட்ட பரிணாமம் எந்த வகைஇனம் என அக்கறையுடன் சந்தேகத்திற்கு இடமின்றி சுருக்கமாக விளக்கிக்கொண்டே வந்தார் நம் ஆப்பீசர். இந்த பயணம் இரவு பார்த்த காட்சிகளின் செயல்முறை விளக்கம் போல இருந்தது,

வனத்துறையின் சிறப்பு அனுமதியின் பேரில் லதானந்த் அவர்கள் உதவியால் அந்த பயணத்தின் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.  இறுதியாக நாங்கள் கண்ட காட்சி இதோ..
ஊட்டியில் காக்கையை பார்க்க முடியாது என்பவர்களுக்காக...ஆள் நடமாட்டமே இல்லாத இடத்திலும் பிறகு அனைவரும் விரும்பியவண்ணம் உலவி வர மதிய உணவு அருநதினோம்.பின்னர் ஓய்வு, ஓய்வு என்றால் உடலுக்குத்தான். மனதிற்கு க்விஸ் போட்டி, அதன்பின்னர் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வண்ணம் ஒரு போட்டி, அதுவும் பொது அறிவு, மற்றும் சிறப்பு திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. லதானந்த் சாருக்கு வந்த பேப்பரில் இருந்தது. ஆணி புடுங்கவும் ;)
மாலை தங்குமிடம் திரும்பிய பின் ஆப்பீசரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு நாங்கள் அனைவரும் ஊட்டி வந்ததற்கு அவர் நன்றிகூற , ஆச்சரியப்பட்டேன்.

தன் சொந்தப்பொறுப்பில் தங்குமிடம், உணவு ஏற்பாடு, மற்றும் சுற்றுலா ஊர்தி வேன் ஏற்பாடு என பெரும்பான்மையான செலவுகளையும் செய்துவிட்டு நமக்கே நன்றியும் சொல்கிறாரே என வியந்தேன். ஆப்பீசரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும்  நிறைய இருக்குதுங்கோ…

இது பதிவுலகிற்கு நான் வந்ததன் பலன் என மிகவும் மகிழ்ந்தேன்.
Post a Comment