"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, May 27, 2010

மனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி நான்கு

நம் மனதிற்குப் பிடிக்காத உறவினர்கள், நண்பர்கள், பகைவர்கள் உள்ளிட்டவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் நினைத்து ஆத்திரப்படுதல் சநதிப்பவர்களிடமெல்லாம் அவர்களைப்பற்றி பேசிக் கோபத்தை கொட்டித்தீர்த்தல் என்பது தவிர்க்க வேண்டியதில் நான்காவது ஆகும்.

'நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
'   குறள்-108

என குறள் ஆசான் சொன்னதை நினைவில் கொள்வோம்.

அதோடு மட்டுமில்லாமல்

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று
’.      குறள் 152

'ஏதோ ஒரு தீயகுணம் அதிகப்பட்டதன் காரணமாக, (அல்லது நமது கர்மவினை காரணமாக) பிறர் நமக்குச் செய்யும் துன்பங்களைப் பொறுத்துக்கொள்வது உயர்ந்த பண்பு.  உடனுக்குடன் அந்த துன்பத்தையும் அதைச் செய்த மனிதரையும் நம் நினைவில் இருந்து அகற்றி விடுவது அதைவிட உயர்ந்த பண்பு'.என்றும் சொல்லி இருக்கிறார்.

பிறரை எச்சரிக்கை செய்யும் பாணியில் சொல்வது என்பது சரிதான், அதுவே நம் மனதைத் தாக்கக்கூடாது என்பதே இதில் முக்கியம்.துன்பங்களைப் பொறுத்துக்கொள்வது என்பதே நம் மனதின் சமநிலை பாதிக்காமல் இருக்கத்தான்.

பிடிக்காத மனிதர்களை நினைக்கும் நேரம் எல்லாம் வீணான நேரம். அவர்களைப் பற்றிப் பேச செலவிடும் ஆற்றல் வீணான ஆற்றல்.  திரும்பத்திரும்ப அவர்களை நினைப்பதால் அவர்களைப் பற்றி பேசுவதால் நமக்கு ஏற்படும் மனப்பதிவு,  நமக்கு மன உளைச்சலையும் உடல் உபாதைகளையும் உண்டாக்கும் ஆதலால் இதைத் தவிர்ப்போம் மனதை உற்சாகமாய் வைத்துக்கொள்வோம்.


”நமை தூற்றிப் பொறாமையினால் பிறர் பழித்தால்
நம் வினையே வெளிப்படுதலாக எண்ணி
சுமை மனதில் கொள்ளாது அமைதி கொள்வோம்
சொற்சூடு அளிப்பவர்க்கு வாழ்த்து சொல்வோம்
இமை கண்ணைக் காப்பது போல் இறை எவர்க்கும்
எத்துன்பத்துக்குள்ளும் காவலாக
அமை(ந்த) நியதி எப்போதும் மறத்தல் கூடா
அச்சமில்லை அச்சமில்லை அருட்சுடர் நாம்.”

- வேதாத்திரி மகரிஷி ஞானக்களஞ்சியம் பாடல் 602

4 comments:

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)