"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, April 16, 2010

அருளியலும்.. பொருளியலும்...

நாம் இப்புவியில் வாழ இன்றைய தினம் அடிப்படைதேவை பணம் என்றால் மிகையொன்றுமில்லை எனக் கருதுகிறேன். அன்றாட வாழ்வில் நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, பண்டமாற்றுமுறை மறைந்து உழைப்பின் குறியீடாக, மதிப்பாக உள்ள அந்த பணத்தை/பொருளைச் சம்பாதிக்கும் முயற்சியே,  நமது அன்றாட வாழ்க்கை/நடவடிக்கைகள், பணிகள்.


 இதன் நிமித்தமாக அன்றாடம் சகமனிதர்களுடன் உறவாட வேண்டியதாக இருக்கிறது. அந்த முயற்சியில் தெரிந்தோ, தெரியாமலோ நம்மால் அவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.

இது தவிர்க்கப்படவேண்டியதா, இல்லை ஏற்றுக்கொள்ளவேண்டியதுதானா என சிந்தனை நமக்கு வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்கொள்ளும் துன்பம், பிரச்சினைகளுக்கு காரணம் என்ன?, நம்மால் பிறருக்கு துன்பம் எனில் பிறரால் நமக்கு துன்பம் என்பதும் சரிதானே:) அப்போதுதான் இது என்ன எப்படி என்பதை கணிக்க முடியும். வெளிவரவும் முடியும், அதே சமயம் பிற உயிர்களுக்கு ஏற்படும் துன்பத்தை நீக்க நம் பங்கு என சிந்தித்து செயல்படமுடியும்.

இந்த சூழ்நிலை நமக்கு பின்னர் தெரியவரும்போது என்ன செய்வது, தொழிலில், வணிக நடவடிக்கைகளில் இது சாதரணம் என எடுத்துக்கொள்வதா? , இல்லை நான் மிகவும் உணர்வுபூர்வமானவன். பணம் எனக்கு முக்கியமில்லை, மனிதமே முக்கியம் என பொருளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்துக்கொள்வதா? பொருளியலா அல்லது அருளியலா ?

இவ்வுலகில் இனிது வாழ மனிதனுக்கு அருளியலும் வேண்டும், பொருளியலும் வேண்டும்

பொருள் மட்டும் இருந்தால்/சம்பாதிக்க வேண்டி இருந்தால் அவன் தனக்காகவும், தனக்கு கிடைக்கும் வசதிகளுக்காகவும் மட்டுமே வாழ்வை நடத்துவான். இது விலங்குநிலை வாழ்வு. அமைதியற்ற வாழ்வு. பொருளே பிரதானம் என்று வரும்பொழுது மனித தன்மை குறைந்துவிடும். அறிவு மட்டுமே அரசாளும். இதுவே இன்றைய உலகவாழ்வு. இது தன்னளவில் உகந்ததாக இருந்தாலும், நம்மை வளர்த்த சமுதாயத்திற்கு நன்றியானது அல்ல.

அருள் மட்டும் இருந்தால் அவன் உலகியலில், பொருளாதார வாழ்வில் தோற்றுவிடுவான். பொருள் அற்ற வாழ்க்கை பொருளற்ற வாழ்வாகிவிடும். அங்கேயும் அமைதி இழப்பு வரும். தன்னளவில் நிச்சயம் பாதிப்பு வரும். இது சமுதாயத்தை பாதிக்கும். இது நம் அனைவருக்கும் பொதுவானது. விதிவிலக்கானவர்கள் சிலர் இருக்கலாம்.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு  (374)


எனவேதான் உலகியலில் அதிகமாக ஈடுபட்டவர்கள் அருளியலை இழக்கிறார்கள். அருளியலில் ஈடுபட்டவர்கள் உலகியலை இழக்கிறார்கள். இதுவே இன்றைய நிலை. போலித்தனமான அருளியலில் இருப்பவர்கள் ’எல்லாவற்றையும்’ அனுபவிக்கிறார்கள்:)

 எது எப்படி இருப்பினும் இரண்டும் இணைந்த வாழ்வே வெற்றியான வாழ்வு, சீரான வாழ்வு.

சரி, நமக்கு வேண்டியது என்ன?

அருளியலையும், பொருளியலையும் இணைக்கும் வாழ்வை தியானம் கொண்டுவரும். வாழ்வில் தியானம் செய்வதை விடவும், வாழ்வையே தியான வாழ்க்கையாக மேற்கொள்வது சிறந்தது. அது வேறென்ன.. விழிப்புணர்வுதான், ஒவ்வொரு நொடியிலும்..!!!!!

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா

4 comments:

  1. அதென்னவோ அருளும் பொருளும் எதிரெதிர் துருவங்களாகவே பெரும்பாலானோருக்கு எட்டாததாகவும், இன்றைய சூழ்நிலை இருக்கிறது.

    ஆசைகளின் பின்னால் ஓடுவதை நிறுத்தப் பழகும் போதுதான், தேடிக் கொண்டிருப்பது தேடிவருவதாகவும் ஆகிறது!

    ReplyDelete
  2. \\ஆசைகளின் பின்னால் ஓடுவதை நிறுத்தப் பழகும் போதுதான்\\

    இத்தகைய மன உறுதி வரவேண்டுமெனில் மனம் பக்குவப்பட வேண்டும்.

    அதற்கு முதலில் அமைதியான சிந்திக்கும் மனோநிலை வாய்க்க வேண்டும்.

    இதற்கு உதவுவதே தியானம்..

    தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  3. பொருள் மட்டும் இருந்தால்/சம்பாதிக்க வேண்டி இருந்தால் அவன் தனக்காகவும், தனக்கு கிடைக்கும் வசதிகளுக்காகவும் மட்டுமே வாழ்வை நடத்துவான். இது விலங்குநிலை வாழ்வு. அமைதியற்ற வாழ்வு. பொருளே பிரதானம் என்று வரும்பொழுது மனித தன்மை குறைந்துவிடும். அறிவு மட்டுமே அரசாளும். இதுவே இன்றைய உலகவாழ்வு. இது தன்னளவில் உகந்ததாக இருந்தாலும், நம்மை வளர்த்த சமுதாயத்திற்கு நன்றியானது அல்ல.


    ..... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. நிறைவு என்ற எண்ணம் வந்தவுடன் வேகம் குறைந்து விடுகின்றது.

    ஆசையில்லை என்ற நோக்கம் வந்தவுடன் ஆழமான விருப்பங்களும் மாறி விடுகிறது.

    போட்டிகளும், பொறாமைகளுக்கும் இடையே வாழ்ந்து ஆக வேண்டும் என்று பார்க்கும் போதே ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றையும் விட்டுக்கொடுக்க வேண்டியதாய் உள்ளது.

    ஆசையினால் அமைதி போவதென்பது உண்மை என்பது போல ஆசையில்லாத மனதினால் வாழ வேண்டிய வாழ்க்கை கூட சுவாரஸ்யம் இல்லாமல் ஆகி விடுகின்றது.

    ஆசையினால் தேடுதல்.
    கொண்டுள்ள அறிவால் அமைதி.
    அருளும் பொருளும் கிடைக்கிறதோ இல்லையே அன்றைய தினப்பொழுது அமைதியாய் இருக்கிறது சிவா.

    நல்ல கருத்தை தெளிவாக படைப்பாக்கியதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)