"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, April 27, 2010

விதியை வெல்ல வேண்டுமா ???

விதியும் மதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.  அவற்றைப் பிரிக்க முடியாது. மேலோட்டமாய்ப் பார்த்தால் எதிர் எதிர் அம்சங்கள் போல் தெரியும். ஆனால் உண்மையில் அப்படி அல்ல.
 மண்ணுக்குள் செடி முளைக்கும் முன், அதன் விதை அழிந்தால்தான் செடி:).

அழிவில்லாத ஆக்கம் என்பதாக எதுவும் இல்லை. அழிவது விதி, ஆக்குவது முயற்சி. அழியும்போது ஏற்படுத்தும் வருத்தம், ஆக்கமாக அது மாறும்போது மகிழ்ச்சியாக  மாறும். விதி அழிந்தால் முயற்சி, முயற்சி அழிந்தால் விதி:)

மேட்டிலிருந்து பள்ளத்திற்கு பாய்வது தண்ணீரின் விதி., விடிய விடிய தியானம் செய்வதாலோ, வேள்விகள் செய்வதாலோ அந்த விதியை மாற்ற முடியாது :)

அறிவையும் முயற்சியையும் பயன்படுத்தி மின்சாரத்தை கண்டுபிடித்து, அதில் இயங்கும் மோட்டாரையும் கண்டுபிடித்தனர். அதை முறைப்படி இணைத்து இயக்கினால், பள்ளத்திற்கு பாயவேண்டிய தண்ணீர், அதைவிட பலமடங்கு வேகமாக மேட்டிற்கு பாயும். உயரத்தில் இருக்கும் தொட்டியில் போய் நிரம்பும்.
அதற்காக தண்ணீருக்குரிய இயற்கைவிதி மாறாது. மோட்டார் ஓடும்வரை தண்ணீர் மேல்நோக்கிப் பாயும். முயற்சி வெற்றி பெறும். மோட்டார் ஓடுவது நின்றவுடன் மீண்டும் விதி வெற்றிபெறும் தண்ணீர் வழக்கம் போக் கீழ்நோக்கி பாயும். 

அதாவது விதி என்பது அதன்போக்கில் மாற்றமுடியாதது. தொடர்ந்த முயற்சியால் விதியை ஒட்டி இயங்கி பலன் பெறலாம்.

மனிதனாய் பிறந்துவிட்டாலே விதியை வெல்லும் வல்லமையுடன் பிறந்துவிட்டதாய் அர்த்தம். பிறந்தவுடன் மல்லாக்கக் கிடப்பது விதி என்றால் குப்புறத் திரும்பிப் படுப்பது முயற்சி. அதன்பின் குப்புறப்படுப்பது விதி என்றால் முழங்காலிட்டு தவழ்வது முயற்சி. தவழ்வது விதி என்றாகும்போது கால்களைப் பயன்படுத்தி எழுவதும், நிற்பதும், நடப்பதும் முயற்சி

இப்படியே விதி என்பதே முயற்சியாக பரிணாம வளர்ச்சி பெறுவதும், பிறகு முயற்சியே விதியாக மாறித் தேங்குவதுமாக வாழ்க்கைப் பயணம் தொடரும் :)) இதுவே இயற்கை நியதி...

பூனை என்றால் எலியைப்பிடிக்க வேண்டும். மனிதன் என்றால் விதியை வெல்ல வேண்டும். என்கிற அடிப்படைவிதியை புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அதற்குரிய நுட்பங்கள் மனத்திற்குள்ளிருந்து ஊற்றெடுக்கத் தொடங்கும்.

அறிவு, திறமை, ஊக்கம், முயற்சி என்பதெல்லாம் விதியை வெல்ல வேண்டி மனிதனுக்குள் வடிவமைக்கப்பெற்ற ஆயுதங்கள். இதை நாம் தெளிவாக உணர்ந்தாலே வாழ்வில் பாதிவெற்றி அடைந்துவிட்டோம் என்று பொருள்.
விதியை கண்டு கலக்கம் அடையாமல், மதியால் முயற்சி செய்து வெற்றி பெறுவோம்.
Post a Comment