"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, August 7, 2009

விதி - முயற்சி இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்

விதியும் முயற்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். எனவே இரண்டையும் தனித்தனியாய்ப் பிரிக்க முடியாது. விதி எதிர்மின்வாய்-Negative(-) என்றால் முயற்சி என்பது நேர்மின்வாய்–Positive(+)

இயல்பாய் இருப்பவை, நிகழ்பவை எல்லாம் விதி; நாமாக மாற்றுபவை எல்லாம் முயற்சி.

இருள், தானாக வரும்; எனவே அது விதி. வெளிச்சம், தானாக வராது. ஒரு நட்சத்திரம், சூரியன், நிலவு, விளக்கு இருந்தால்தான் வரும். எனவே அது முயற்சி.



ஓர் இடம் குப்பையாக மாறுவதும் ஒழுங்கின்றி இருப்பதும் தானாக நிகழ்பவை. எனவே அது விதி. ஓர் இடம் தூய்மையாக இருப்பதும், ஒழுங்குடன் திகழ்வதும் தானாக நிகழாது. நாமாக மாற்ற வேண்டும்; எனவே அது முயற்சி.

அறியாமை, பிறப்பிலிருந்தே இயல்பாய் நம்மிடம் இருப்பது. எனவே அது விதி. ஆனால் அறிவு என்பது கல்வி, உயர்ந்தோர் எனப் பல்வேறு வழிகளில் நாமாகத் தேடிப் பெறுவது; எனவே அது முயற்சி.

வெறுப்புணர்ச்சி என்பது இயல்பாக நம்மிடம் இருப்பது. எனவே அது விதி.
அன்பு என்பது படிப்படியாய் அம்மாவிடம் தொடங்கி உறவினர், நண்பர்,பிற உயிர்கள் என வளர்த்துக்கொள்ள வேண்டிய உணர்வு. எனவே அது முயற்சி. (வெறுப்புணர்வை அகற் முயற்சி செய்தால் அன்பு தானாய் மலரும்)

பிறரிடமிருந்து எதையும் வாங்குவது என்பது குழந்தைப்பருவம் முதலே நம்மிடம் இருக்கும் இயல்பான குணம். எனவே அது விதி; பிறருக்கு கொடுத்து மகிழும் ஈகை என்பது நாமாக வளர்த்துக் கொள்ள வேண்டிய குணம். எனவே அது முயற்சி.

இது போல் பொறாமை என்பது விதி; பொறுமை என்பது முயற்சி.
சுயநல உணர்வு என்பது விதி;பொதுநல உணர்வு என்பது முயற்சி.
பொய்யை நம்புவது விதி; உண்மையை உணர்வதும் நம்புவதும் முயற்சி

நம் முன்னோர் அறியாமல் செய்த தவறுகளும், நாம் செய்த தவறுகளும் நம்மை வருத்த வருவது விதி.அதை முன் கூட்டியே அறிவால் உணர்ந்து நம்மை இறையருளால் பலப்படுத்திக் கொண்டு நம்மைத் தற்காத்துக் கொள்வது என்பது முயற்சி.

இன்னும் இதுபோல் சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.


நன்றி: கவனகர் முழக்கம்

நண்பர்களே விதி என்ற வார்த்தைக்கு விளக்கங்களைப் பார்த்தீர்களா. இன்னும் வேறு விதமாகவும் சமயம் வாய்க்கும்போது பார்ப்போம்.

9 comments:

  1. முயற்சி கூட விதியினுள் இருப்பவைதான் !
    :)

    நீங்க முயற்சி செய்விங்க என்பது விதியானால் அதற்கு என்ன பெயர்.

    ReplyDelete
  2. \\முயற்சி கூட விதியினுள் இருப்பவைதான் !
    :)

    நீங்க முயற்சி செய்விங்க என்பது விதியானால் அதற்கு என்ன பெயர்.\\


    :)))தலைவிதி

    ReplyDelete
  3. இந்த பதிவை போட்டது விதியா? உங்கள் முயற்சியா?

    ஒன்னும் புரியலை போங்க..

    ReplyDelete
  4. //நண்பர்களே விதி என்ற வார்த்தைக்கு விளக்கங்களைப் பார்த்தீர்களா. இன்னும் வேறு விதமாகவும் சமயம் வாய்க்கும்போது பார்ப்போம். //

    விதி இருந்தால் பார்ப்போம்னு சொல்லி இருக்கனும் !

    ReplyDelete
  5. \\விதி இருந்தால் பார்ப்போம்னு சொல்லி இருக்கனும் !\\


    விதியை உருவாக்குவோம் என்கிற விதி எனக்கு இருக்கிறது:))

    பார்ப்போம் என்பதற்கு இங்கு இடமில்லை (தற்சமயம்)

    ReplyDelete
  6. \\ஸ்வாமி ஓம்கார் said...

    இந்த பதிவை போட்டது விதியா? உங்கள் முயற்சியா?

    ஒன்னும் புரியலை போங்க..\\

    இடுகை போடனுங்கிறது விதி, இப்படி போடனுங்கிறது முயற்சி,:)

    ReplyDelete
  7. நல்ல,உண்மையான கருத்துக்கள்,சிவா.
    பயன் பெறுவோர் பெறுவார்களாக.

    ReplyDelete
  8. \\ஷண்முகப்ரியன் said...

    நல்ல,உண்மையான கருத்துக்கள்,சிவா.
    பயன் பெறுவோர் பெறுவார்களாக.\\

    வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  9. நற்கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள்..அனைத்தும் அறிவை உயர்த்துவதாக உள்ளன. நன்றிகள் பல...

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)