"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, May 14, 2009

‘டத்து வசவரு டா !’

கோவில்பட்டி நகரின் நூலக வாரவிழா நிகழ்வில் நடந்த நிகழ்ச்சி இது. திருக்குறள் பெ.இராமையா அவர்களின் எண்கவனக சிறப்பு நிகழ்ச்சி. அதில் கொடுக்கப்பட்ட ஈற்றடி என்ன தெரியுமா?

‘டத்து வசவரு டா !’

ஈற்றடியின் பொருள் புரியாமல் அரங்கம் முழுவதும் குழப்பத்தில் அமைதியாய் இருந்தது. ஆனால் திருக்குறள்.இராமையா அவர்கள் தெளிவான புன்னகையுடன். ”ஈற்றடி கொடுத்தவரின் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?” என்று வினவினார்.

”பெரும்புலவர் அங்கப்ப பிள்ளை !” என கூட்டத்திலிருந்து பதில் வந்தது.

”அதானே பார்த்தேன். ஈற்றடியைப் பார்த்தால் சாதரணமாகத் தெரியவில்லையே.. இந்தக் கோவில்பட்டி மண்ணில் இப்படி ஈற்றடி கொடுப்பதற்கும் ஆள் இருக்கிறதா என்று சி்ந்தித்தேன்..! என்றார்.

உடனே அங்கப்பபிள்ளை, “பாடுவதற்குச் சிரமமாய் இருந்தால் வேறு ஈற்றடி தருகிறேன்” என்கிறார்.

திருக்குறளார் சிரித்துக்கொண்டே”ஈற்றடிக்கு மாற்றடி தேவையில்லை. பாடல் சைவக் கடவுளுக்குப் பொருத்தமாய் வேண்டுமா அல்லது வைணவக் கடவுளுக்குப் பொருத்தமாய் வேண்டுமா? என்பதை மட்டும் தெரிவித்தால் போதும் !” என்றார்

இப்போது அங்கப்பபிள்ளை ஆடிப்போய்விட்டார். ஏனெனில் அவர்,”சைவக் கடவுளுக்கு மட்டுமே இந்த ஈற்றடியை வைத்துப் பாடமுடியும்’என்ற முடிவில் இருந்தார். தன் சந்தேகத்தை வெளிப்படுத்தும் வண்ணம்,”வைணவக் கடவுளுக்கு எப்படி...இந்த ஈற்றடியை”....என்று இழுத்தார்.

உடனே ”நான் இரண்டு கடவுளுக்கும் பொதுவாகப் பாடிவிடுகிறேன். நீங்கள் உங்கள் விருப்பம் போல் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு

”ஆக்கம் அறிவுடைமை

ஆன்ற பொருளுடைமை

ஊக்கம் பெருமை

ஒழுக்கமொடு வீக்குபுகழ்

இத்தரையில் என்றும்

இனிதடைய வேகுக்கு/கரு

டத்து வசவரு டா !”

இந்த வெண்பாவைப் பாடினார்.

”ஆக்கம்,அறிவு,செல்வம்,ஊக்கம்,பெருமை,ஒழுக்கம்,புகழ் என்னும் இத்தனை நன்மைகளையும் எனக்கு அருள வேண்டும் !” என்று கடவுளிடம் வேண்டும் விதத்தில் இந்த வெண்பா அமைந்துள்ளது.

சரி, எந்தக் கடவுளிடம் வேண்டுவது?

சைவ நெறியைப் பின்பற்றுவோர் முருகனிடம் வேண்டுவதாக இந்தப் பாடலை எடுத்துக்கொள்ளலாம் . எப்படி?

“குக்குடத் துவச அருள் தா !”

’குக்குடம்’ என்றால் சேவல், ‘துவசம்’ என்றால் கொடி. சேவற்கொடியோனாகிய முருகனே அருள் தா !’ என்பதாக பொருள் வரும்.


அதே சமயம் ’குக்கு’ வை எடுத்துவிட்டு அந்த இடத்தில் ‘கரு’ என்ற சொல்லைச் சேர்த்துக் கொண்டால் வைணவக் கடவுளான திருமாலுக்கு உரிய பாடலாக மாறிவிடும். ’கருடன்’ என்றால் பருந்து. துவசம் என்றால் வாகனம் ‘கருடனை வாகனமாய் உடைய திருமாலே அருள் தா ! ’ என்பதாகவும் பொருள்தரும் என விளக்கினார்.

இந்த விளக்கத்தைக் கேட்டு அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

நன்றி 2002 ஏப்ரல் கவனகர் முழக்கம்

11 comments:

  1. கருடத் துவச அருள் தா !......

    ReplyDelete
  2. இந்த பதிவு ஐயா திரு. திருக்குறள் பெ.இராமையா அவர்களின் தமிழ் புலமையை எடுத்துரைப்பதோடு மட்டுமின்றி படிக்கும் போது தமிழின் சுவை அமுதமாய் இனிக்கிறது. வாழ்த்துக்கள். கவனகர் முழக்கம் இதழுக்கும் உங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  3. மிக ரசித்தேன்.நன்றி,நண்பரே.

    ReplyDelete
  4. படித்து அசந்தேன்

    ReplyDelete
  5. விஷ்ணு.,
    முனைவர்.இரா.குணசீலன் ,
    முக்கோணம்,
    ஷண்முகப்ரியன் ,
    Suresh

    பதிவுலகில் மனமகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. என் நோக்கமும் இதுதான்

    ReplyDelete
  6. 'aandra perumyi udaiya arutpavai
    eendu vazhangiyatharku valthu'-appa

    ReplyDelete
  7. 'aandra perumyi udaiya arutpavai
    eendu vazhangiyatharku valthu'-appa

    ReplyDelete
  8. நண்பரே,

    தொடக்கத்தில் இருந்த பதிவு எழுதும் விரைவு குறைகிறதே. வேலை அழுத்தத்தில் இருக்கிறீர்களோ ?

    ReplyDelete
  9. ரகுபதி அவர்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  10. \\நண்பரே,

    தொடக்கத்தில் இருந்த பதிவு எழுதும் விரைவு குறைகிறதே. வேலை அழுத்தத்தில் இருக்கிறீர்களோ ?\\

    ஆம் கோவியாரே, உடல்,மனம் இரண்டுக்குமே சற்று
    அதிக வேலை அழுத்தந்தான்.

    ஆன்மீகத்தில் உள்ளவற்றை வாழ்வில் அனுபவமாக
    உணரும்போது மனம் கொஞ்சம் கொஞ்சமாக பக்குவப்பட ஆரம்பிக்கிறது.
    அப்போது சுய அலசலுக்கும் நேரம் அதிகம் செலவிட
    வேண்டியுள்ளது
    ஆகவே இந்த தாமதம்.
    அக்கறையோடு விசாரித்தமைக்கு நன்றி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)