"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, March 23, 2009

டென்சன் இல்லாமல் வாழ.....

மன இறுக்கம் (TENSION) இல்லாமல் வாழ வழி என்ன?


உலகில் நல்ல மணமுள்ள பொருள்களும் உண்டு; கெட்ட நாற்றமடிக்கும், அழுகிய பொருள்களும் உண்டு.

அதுபோல் மனதினுள் வரும், ஏற்படும் எண்ணங்களுள் ஊக்கமும் இன்பமும் தரும் எண்ணங்களும் உண்டு. AFFECTIONATE THOUGHTS. பலவீனமும் துன்பமும் தரும் எண்ணங்களும் உண்டு INFECTIONATE THOUGHTS.

வீட்டினுள் செத்த எலி நாற்றமடிக்கிறது என்றால், அதை நாலுபேரிடம் காட்டிப் புலம்புவதாலோ, நினைத்து நினைத்து வருத்தப்படுவதாலோ, அதன்மீது வாசமுள்ள ‘செண்ட்’ அடிப்பதாலோ நாற்றம் போகாது; சிக்கல் போகாது. எலியை தூக்கிப் போட்டு விட்டு, இடத்தைக் கழுவிவிட்டால் தானாக நாற்றம் போய்விடும். இதுதான் சரியான வழி.

அதுபோல் மனத்துள் வரும் ஒவ்வாத எண்ணங்களை ALERGIC THOUGHTS இனங்கண்டு, எதுவாய் இருந்தாலும் இரக்கமின்றி, தயக்கமின்றி எடுத்து வெளியே எறியுங்கள். இறுக்கம் குறையும்; தானாக மன அமைதி வாய்க்கும்.

நன்றி. கவனகர் முழக்கம்.மே-2002

Saturday, March 21, 2009

கேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா

தினத்தந்தி--கேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா

படித்துப் பாருங்கள். படம் வரைந்தபோது அவரின் மனோநிலையை உணர முடிகிறதா என்று பாருங்கள்..

கடமையை, செயலை எப்படி செய்யவேண்டுமோ அப்படி முழுஈடுபாட்டோடு செய்தார்.

எதிர்பாராமல் செய்ததற்கு கிடைத்த பலனையும் பாருங்கள்.கிடைத்த பின்னும் அதே மனநிலையில் இருப்பதையும் பாருங்கள்.

இதுதான் கீதை சொல்வது.

ஓவியருக்கு பணம் கொடுத்தவரின் மனநிலையையும் உணருங்கள். அவர் இப்போதுதான்
செயலை செய்திருக்கிறார், நிச்சயம் பலன் கிடைக்கும்.

மனம் மட்டும் தரமும்,தகுதியும் ஆனால் வாழ்வில் கிடைக்கும் பலன்கள் அதிசயத்தக்கது.

மனதை மேம்படுத்துவோம், பாரம் குறைந்து பலன் அடைவோம்

Thursday, March 19, 2009

நான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே

நமக்கு தெரிந்த விசயந்தான்,

0,1,2,3,4,5,6,7,8.............+ + + +
சைபருக்கு அடுத்த மதிப்பு கூடிக்கொண்டே போகும்

..........-5,-4,-3,-2,-1,0
சைபருக்கு முன்மதிப்பு குறைந்து கொண்டே போகும்.

சரி ஒரு சின்ன விளையாட்டு

-5,-4,-3,-2,-1,0,1,2,3,4,5 இதுதான் எண்வரிசை, நிரந்தர அமைப்பு, உண்மையானது.

மேலே சைபர் இல்லாமல் பத்து எண்கள் இருக்கிறாதா? உங்களை பொறுத்தவரை இதன் மதிப்பில் எந்த மாற்றமும் இல்லையே?

சரி நான் தான் சைபர், இப்ப நான் கடைசியில் வந்து நின்று கொள்கிறேன்.
எண்களின் மதிப்பு என்னைப் பொறுத்தவரை -10,-9,-8,-7,-6,-5,-4,-3,-2,-1,0.

சரி மீண்டும் நடுவில் நிற்காமல் முதலில் சென்று நின்று கொள்கிறேன்.
எண்களின் மதிப்பு என்னைப் பொறுத்தவரை 0,1,2,3,4,5,6,7,8,9,10

நன்றாக புரிந்து கொள்ளுங்கள். உங்கள் எண்வரிசை, மாற்றமுடியாத உண்மை. சத்தியம்.

உங்களின் 0 வை நான் நிற்கும் இடத்தைப் பொறுத்து நான் எப்படி மதிக்கிறேன்,பார்க்கிறேன் தெரியுமா? முதலில் நிற்பதால் 5 ஆகவும், கடைசியில் நிற்பதால் மைனஸ் -5 ஆகவும் பார்க்கிறேன், என்னைப் பொறுத்தவரை இடம் மாற மாற மதிப்பும் கூடியோ, குறைந்தோ போகும்., உண்மையில் மாறுவதில்லை.

பல சமயங்களில், வீட்டிலும், அலுவலகத்திலும், நாட்டிலும், எழுத்திலும்,நடப்பவற்றை இப்படி மாறி நின்று நாம் பார்ப்பதால்தான் பிரச்சனைகளே உருவாகிறது. ஜீரோவாக நின்று பார்த்தால் நாம் என்ன செய்யவேண்டும் என்பது புரியும்.


புரியலை இல்லையா.....

சரி இந்தப் பதிவு

3 மிகமிக நல்லபதிவு
2 மிக நல்லபதிவு
1 நல்லபதிவு
0 பதிவு 0
-1 மொக்கை
-2 படுமொக்கை
-3 சூரமொக்கை

இதில் ஏதோஒன்றை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.

உண்மையில் இந்த பதிவு, ஒரு பதிவு அவ்வளவுதான். ஜீரோ . இதுதான் உண்மை

ஆனால் படிக்கிற ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாத் தோன்றுகிறது. இது தவறுமல்ல, அதே சமயம் உண்மையும் அல்ல.


இதே மாதிரி எல்லாபிரச்சினைகளையும் அணுகி பாருங்கள், அதனுடைய எல்லா கோணங்களும் தெரியும், சாதக பாதகங்கள் புரியும். சரியான படி முடிவெடுக்கலாம்

நான் இதை முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன், பலன் கிடைக்கிறது. நீங்களும் முயற்சித்து பார்த்து எந்த பலன் கிடைத்தாலும் பின்னூட்டத்தில்தெரிவியுங்கள். ஒருவேளை நான் புரிந்துகொண்டுள்ளது தவறாக இருந்தால் அதை புரிந்து கொண்டு மாற்றிக்கொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்

Tuesday, March 17, 2009

கடமையை செய்....... பலனை அனுபவிக்காதே

பதிவுலக நண்பர் கோவியாரின் தகவலின் பேரில் தோழர் சூர்யன் அவர்களின்
"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே சாதிக் கொழுப்பெடுத்த தத்துவம்”
பதிவைப் படித்ததால் பதிலுக்கு இந்த பதிவு.

நமக்கு எளிமையாகத்தான் யோசிக்க வரும்.

நாலு வர்ணங்களும் ஆதியில் முழுக்க முழுக்க தொழிலின் அடிப்படையில் தான் உருவாக்கி, குறிப்பிடப்பட்டது. இந்த தொழில் செய்வோர் இந்த வர்ணத்தினர் என நிர்வாக வசதிக்காக மனிதனால் உருவாக்கப்பட்டது.

ஆனால் காலப்போக்கில், பின்னர் வந்த மக்கள் கூட்டம் பிறப்பின் அடிப்படையில் சாதியாக, வர்ணமாக அறிந்தோ, அறியாமலோ மாற்றிவிட்டது. அதையே நாமும் பிடித்துக்கொண்டு இருக்காமல், சாதி மத இன வேறுபாடுகள் இன்றி, மனிதனை மனிதனாகவே மதித்து அவனுடைய இன்பத்திற்கு உதவியும், துன்பத்தை நீக்கவும் நம்மால் இயன்ற அளவு உதவி செயல்பட வேண்டும் என்பதே என் முந்தய இரு பதிவுகளின் நோக்கம்.

கீதையின் கருத்துக்களின் எந்த முரண்பாட்டையும் நான் காணவில்லை. கீதையை புரிந்து கொள்வதில் தவறு இருக்கலாம். அது படிப்பவரின் மனோநிலையைப் பொறுத்தது.

மாற்று மதத்தினரை, சாதியினரை இழித்தும், பழித்தும் பேசுவதால் என்னபலன்? அவர்களின் வெறுப்பை, பதிலடியை ஏன் நாம் சம்பாதிக்க வேண்டும்?இரு தரப்பினருக்கும் என்ன கிடைக்கப்போகிறது? இது அவசியமே இல்லை.

விசயத்திற்கு வருகிறேன்.

\\யாதார்த்தத்திலும் இந்த தத்துவம் சாத்தியமில்லை. ஏனேனில் பலனை எதிர்பாராமல் கடமையை செய்வது சாத்தியமில்லை என்பதுதான் உண்மை.

இந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் செயல்கள் அனைத்தும் ஏதோ ஒரு விளைவை ஏற்படுத்துகின்றன. அந்த விளைவுகள் மூலம் கிடைக்கும் அனுபவம் அதே செயலை இன்னும் முன்னேறிய வடிவில் அடுத்த முறை செய்ய வைக்கின்றன. இதுதான் பரிணாம வளர்ச்சியின் ஒரு இயல்பு ஆகும். இதன்படி எந்த ஒரு வினையும், மனிதர்கள் செய்யும் வேலையும் அந்த வினையின், வேலையின் பலனை அனுபவிக்காமல், எதிர்பாராமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது. பலனை எதிர்பார்த்து கடமையைச் செய்தால்தான் அது நடந்தேறும். அடுத்த கட்டமாக வளர்ச்சியுறும். விரும்பினாலும், விரும்பாவிடிலும் இப்படித்தான் பிரபஞ்சம் இயங்குகிறது, இப்படித்தான் நமது சிந்தனை முறை இயங்குகிறது.\\-- இது சூரியனின் கருத்து.

கடமையை செய், பலனை எதிர்பாராதே என்றுதான் கீதையில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதையே இக்காலத்திற்கேற்றவாறு நான் புரிந்துகொண்டவாறு சொல்லி இருக்கிறேன்.

இதில் கடமையை செய், பலனை அனுபவிக்காதே என்றா குறிப்பிட்டு இருக்கிறோம்? நண்பரின் பதிவில் இந்த தொனிதான் இருக்கிறது.

ஒன்றை எதிர்பாராமல் இருப்பது------ஒன்றை அனுபவிக்காமல் இருப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது நண்பரே...

எதை செய்தாலும் அதற்கு நிச்சயம் விளைவு உண்டு. அதை அனுபவித்துதான் ஆக வேண்டும். இல்லையென்று நான் சொல்லவே இல்லை. உதாரணமாக என் முந்தய பதிவுக்கு பலனாக உங்கள் பதிவை நான் அனுபவிக்கிறேன், அதேபோல் தங்களின் பதிவுக்கு பலனாக என் பதிவை தாங்கள் அனுபவிக்கிறீர்கள்.

ஆனால் எதிர்பாராமல் இருப்பது என்பது, என் முந்தய பதிவை எழுதியபோது தமிழ் மணம் மகுடத்தில் இடம்பிடிக்க வேண்டும் என எதிர்பார்த்து எழுதுவில்லை. விளக்கத்தை தெரிவிப்பதை என் கடமையாகவே செய்தேன்.

ஆனால் நடந்தது என்ன? தமிழ்மணம் மகுடத்தில் வாசகர் பரிந்துரையாக இரு நாட்களாக இடம் பிடித்துவிட்டது. இதுதான் எதிர்பாராமல் எழுதியதன் பலன். புரிகிறதா நண்பரே. இத்தனைக்கும் அடியேன் புதிய பதிவர்தான்.

வலையுலக நண்பர்களுக்கு நன்றிகள்.பதிவரைப் பார்க்காமல் பதிவின் உள்ளடக்கத்தை கவனித்து பாராட்டியதற்க்கு.

சாதரணமாக எதிர்பார்த்தால் சில பின்னூட்டங்களும், சற்று அதிக எண்ணிக்கையில் பதிவர் வருகையுமே கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைத்த பலனோ மிகப் பெரியது.

’கடமையை செய், பலனை எதிர்பாராதே’ என்பதற்கு, பலனை எதிர்பார்க்காமல் சரியானபடி செயல்பட்டால், கிடைக்கவேண்டிய பலனைவிட அதிகமாக கிடைக்கும் என்பதற்க்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்.

எதிலும் சல்லடைபோல் நல்லதை விட்டு அல்லதைப் பிடிக்காதீர்கள்.

மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்

Sunday, March 15, 2009

கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!!" - கீதாச்சாரம்---தொடர்ச்சி

கோவியாரின் ஆன்மீகம் தொடர்பான கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!!" - கீதாச்சாரம் கட்டுரை விமர்சனத்தின் தொடர்ச்சி

\\கீதை கர்மயோக பிரிவில் வருவது, செயல் தொடர்பான ஆலோசனை வழங்குவதே அந்த செய்யுளின் பொருள். வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் உனது செயலை ஆற்று என்பதே இதன் பொருள். மாறாக எதையும் செய்யாது இரு என்று சொல்லவில்லை. இந்த செய்யுள் ஊக்க மருந்து தான். எதிர்மறை பொருளில் புரிந்து கொள்வது பிழையே.\\

கீதை சொல்வதை நாம் புரிந்து கொள்வதில், நமக்கு கிடைக்கும் நன்மைகளை அளவுகோலாக வைத்துப் பாருங்கள். தோல்விகளைப் பற்றி கவலைப்படாதே என்பதல்ல பொருள். ’தோல்விக்கே இடமில்லாமல்,குழம்பாமல் சரியாக செயலாற்று’ என்பதுதான் பொருள்

\\பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை மட்டுமே, அதை எதிர்பார்பாக மாற்றி கிடைக்கும் என்று உறுதியாக இருந்து கொண்டு, இறுதி செயலில் எற்படும் தடை போன்ற புறகாரணிகள் உங்களால் முன்கூட்டியே தீர்மாணித்து தவர்க்க முடியும் என்றால் உங்கள் எதிர்ப்பார்ப்பு தகுந்த பலனைத் தரலாம். இலக்கின் கடைநிலை சிதைவதற்கு எப்போதும் புறக்காரணிகளே காரணமாக அமைந்துவிடுகின்றன, அவற்றை முன்கூட்டியே அறியும் தீர்க்க தரிசனம் நம்மிடமில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா ?\\

இலக்கின் கடைநிலை சிதைவதற்க்கு ஒரு போதும் புறக்காரணிகள் காரணமாக அமைவதில்லை. எந்த ஒரு புறக்காரணமும் தானாக த்குந்த காரணமின்றி வருவதில்லை. நம் பரம்பரையாகவோ, நம் செயல்களால் சேர்த்துவைத்தவைகளே புறக்காரணமாக வரும்.
இதை அறிய எந்த தீர்க்கதரிசனமும் தேவையில்லை. அமைதியாகவும், ஆழமாகவும் சிந்திக்கும் ஆற்றல் மனதிற்கு வாய்த்தால் போதும்.

உதாரணமாக ஓட்டப் பந்தய வீரன் தான் பங்கேற்க்கும் பந்தயத்தில் முதலிடத்தில் வர வேண்டும் என்ற திடமான முடிவோடு தன் கடமையைச் செய்தால் கண்டிப்பாக முதலிடம் பெறுவான்.பலனை எதிர்பார்த்தபடி அடைவான்.

ஆனால் அவனே ஓட்டப்பந்தய நுணுக்கங்களை மிகச் சரியாக கற்றுத் தேர்ந்து,மிகத் துல்லியமாக ஓடிப்பழகி,பந்தயத்தில் பங்கேற்கும்பொழுது,நான் முதலாவதாக ஓடுகிறேனா? என்று சைடில் பார்க்காமல்,அல்லது பலனை எதிர்பார்க்காமல் ஓடினால் நிச்சயம் அவன் அந்த போட்டியில் முந்தய உலக சாதனையை முறியடிப்பான். முதலிடமும் கிடைக்கும், போனசாக உலக சாதனையும் கிடைக்கும்.
இதுதான் பலனை எதிர்பார்க்காது கடைமையை மட்டும் செய்தல். இதனால் அதிகபலன் உறுதியாக கிடைக்கும்.

ஒருவேளை புறக்காரணங்களினால் அவன் காலில் சுளுக்கு ஏற்படலாம். அடுத்தவன் குறுக்கே வந்து விழலாம். இது அவனைப் பொருத்தவரை தோல்வியில் முடியும். புறக்காரணங்களுக்கும் நம் செயல்களுக்கும் நிச்சயமாக தொடர்பு உள்ளது. எந்த தகுதி வாய்ந்த வீரனையாவது குறுக்குவழியில் ஒதுக்கி வந்திருப்பான். அதன் தாக்கம்தான் புறக்காரணமாக அமைகிறது.-----—இதன் மறுபக்கமாக இரண்டாவதாக வரவேண்டியவன் முதலாக வந்திருப்பான். அவனைப் பொறுத்தவரை புறக்காரணம் ஒன்றினால் அவனுடய போட்டியாளன் விலக்கப்பட்டது நன்மைதானே. இதற்கும் அவன் முன் செய்த செயல் ஒன்று காரணமாக இருக்கலாம். ஏதேனும் ஒரு ஜூனியருக்கு சில டிப்ஸ், உடைகள் கொடுத்திருக்கலாம். அதனால்கூட முதலில் வந்திருக்கலாம். இங்கு அவன் பலனை எதிர்பாராமல் கடமையை செய்ததாகவே நான் உணர்கிறேன்.

\\’இலக்கின் கடைநிலை சிதைவதற்கு எப்போதும் புறக்காரணிகளே காரணமாக அமைந்துவிடுகின்றன’\\ என்று ஏன் ஒரு தலைப் பட்சமாக சொல்கிறீர்கள்.? இரண்டாவது நபருக்கு முழுக்க நன்மைதானே விளைந்திருக்கிறது. ஆக செயல்திருத்தம் வந்தால் புறக்காரணங்கள் நன்மையே தர வைக்கமுடியும். இதை உணர்ந்து செயல்படுவதே கடமை.

\\kannabiran, RAVI SHANKAR (KRS) 9 \\உண்மையான பொருள் என்னான்னா
கடமையைச் செய்து கொண்டிருக்கும் போது, பலனை எதிர்பாராதே! எதிர்பார்த்து எதிர்பார்த்து காரியம் ஆற்றாதே - என்பது தான்! ஒரு செயல் செய்யும் முன் உள்ள திட்டமிடலில், பலனை எதிர்பார்த்து திட்டம் வகுக்கிறோம்! ஆனா அந்தச் செயலைச் செய்யும் போது...செய்து கொண்டிருக்கும் போதே, பலன் வந்துருமா, வந்துருமா-ன்னு எதிர்பார்த்து எதிர்பார்த்து செஞ்சிக்கிட்டு இருந்தா காரியம் தான் சிதறும்!

அதான் முடிவு எப்படி இருக்குமோன்னு யோசிக்காது, செயலை மட்டும் செய்-ன்னு சொல்லப்பட்டது!\\

KRS பாதியளவு சரியாகவே சொல்லி இருக்கிறார். நன்றி
கோவி.கண்ணனைப் போல் வேறு எங்கும் திசை திருப்பாமல் சொன்னதற்க்கு.

மீண்டும் சந்திப்போம்,சிந்திப்போம்

கோவி,SP.VR. SUBBIAH,TBCD இவர்களுக்கு வந்த சங்கடங்கள்

கோவியாரின் ஆன்மீகம் தொடர்பான கட்டுரைகளில்

கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!!" - கீதாச்சாரம்

என்ற பதிவைப் படிக்க நேர்ந்தது. சில கருத்து இடைவெளிகள் இருப்பதாக மனதிற்கு தோன்றியது அதாவது பலவிஷயங்களில் அவர் சரியாக இருந்தாலும், சில இடங்களில் மட்டும் எடுத்துச் சொல்லியவிதம், கோணம் பொருந்தவில்லை. இதை நான் மேலோட்டமாகவே அணுகி இருக்கிறேன்.

//எந்த ஒரு இலக்கு நோக்கிய பயணத்திலும் அதற்கான கடமையான செயலை செய். பலனை எதிர்பாராதே. எதிர்ப்பார்ப்பு ஏமாற்றம் தந்தால் அதை தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லாமல் போய்விட வாய்புகள் உண்டு பலனை எதிர்பாராமல் செய்யும் இலக்கு நோகிய பயணத்தில் இலக்கை அடைந்தால் மகிழ்ச்சி, இல்லை என்றாலும் முயற்சித்தோம் என்ற மன நிறைவு கிடைக்கும்" - என்பதை மேற்கண்ட கீதை வரிகளினால் புரிந்து கொண்டேன்.//----இது கோவியாரின் புரிதல்.

கடமையை செய், பலனை எதிர்பாராதே.. என்ற வரிக்கு நேரடியாக அர்த்தம் சொல்வதை விட்டுவிட்டு எதிர்பார்க்காமல் இருந்த பின்னர் ஏமாற்றம் வந்தால் நடப்பவற்றை, அப்போது மனதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லிஇருக்கிறார்.

SP.VR. SUBBIAH--//‘கடமையைச் செய் !உன் விருப்பப்படி பலனை எதிர்பாராதே' என்பது சரியாக இருக்கும் என்று சிற்றறிவு சொல்கிறது.//

--’உன்’ என்ற வார்த்தைக்குப் பதில் வேறு எந்த வார்த்தையை போடுவது என நம்மை குழப்பிவிட்டார்.

TBCD--//திட்டமிட்ட செயல் என்பது பலன் எப்போது கிடைக்கும் என்பதை அறிந்து செயல்படுவதே ஆகும். வருவது வரட்டும் என்று வியாபாரம் செய்ய முடியாது..//.

-----அறிந்தே செயல்படுங்கள்..இவரை ’கடமையை செய்,பலனை எதிர்பாராதே’ என்கிற வாக்கியத்தில். அறியாமல் செயல்படுங்கள் என்ற பொருள் கொள்ளச் செய்தது எந்த வார்த்தை..?

கோவி அண்ணன் பின்னூட்ட விளக்கங்களில் இருந்து.....
//’கோவி……//முதலில் எதெல்லாம் கடமை? அதுக்கு என்ன வரையறை? //

கடமை என்பது நாம் தேர்ந்தெடுத்துக் கொண்ட செயலில் / இலக்கில் நாம் ஆற்றவேண்டிய பங்கு. நம்மீது உள்ள பொறுப்புகள், நாம் செய்யவேண்டியவை என்று தீர்மானித்துக் கொள்பவை ஆகியவற்றில் நாம் செயாலற்றுவதற்கு முனைவதே கடமை’.//

(கோவி கருத்தில் உணர்த்தப்படாதது----செயலாற்றுமுன் முழுமையாக உணர்வது,புரிந்து கொள்வதும் கடமையின் முக்கியமான பகுதி இதை விட்டுவிட்டதால்தான் குழப்பமே.)

’//எதைச் செய்தாலும் வெற்றியை மட்டுமே இலக்காக்கக் கொண்டு செய்யாமல் இலக்குக்கு தேவையான கடமையை சரியாக செய்யுங்கள் என்று சொல்வதாகத்தான் புரிந்து கொள்கிறேன்.’// --கோவி

மேலோட்டமாகவோ, தவறாகவோ புரிந்துகொண்டு அதை உணராமல், என்ன புரிந்ததோ அதை சரியாக செய்யவேண்டும் என கொள்வதா?...

’//எந்த ஒரு செயல் வெற்றி அடைவதற்கும் அது சரியாக செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்பது முதன்மையான விசயங்கள் மட்டுமே, அதில் வெற்றி என்பது புறகாரணிகளையும் உள்ளடக்கியது.

நீங்கள் நாளை செய்ய வேண்டியதை இன்றே கூட தொடங்கிவிட்டீர்கள், விடியும் போது அதன் தேவையே கூட இல்லாமல் போக வாய்ப்புண்டு, அது போன்ற நேரங்களில் செய்ததெல்லாம் வீன் ? என்று அலுத்துக் கொள்ளாமல் இருக்க என்ன செய்வீர்கள் ? எல்லாம் விதி என்று தானே சமாதனமடைவீர்கள் அல்லது முதிர்ச்சியுடன் செய்யவேண்டியதை சரியான நேரத்தில் தான் செய்தேன், ஏனோ அதன் தேவை இல்லாமல் போய்விட்டது என்று சமாதனம் அடைவீர்கள்.//.--கோவி

திரும்பவும் வேதாளம் முருங்கைமரத்தில்...

உதாரணத்த்ற்க்கு தயிர் புரைஊற்றுவது ஒரு நிகழ்வு கோவி அவர்களின் பாணியில் நம் கடமை, நம் பங்கு நன்கு காயவைத்து சிறிது தயிர்சேர்த்து புரை ஊற்றுவது. அதன்பின் பூனை வந்து குடித்துவிடுவது, காரணம் தெரியாமல் கெட்டுப்போவது என்ற புறக்காரணிகளால் இந்நிகழ்வு நடக்காமல் போகலாம்.இதற்கு மனதை தயார்படுத்தி, சமாதானம் அடையுங்கள் என்கிறார்.

இவர் தன் பங்கையே முதலில் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்கிறேன்.

பாலைவாங்கியவுடன் அதன் தரத்தை சரியாக பரிசோதித்து நல்லபால் என்பதை உறுதி செய்து, நன்கு சுண்டக் காய்ச்சி, வெதுவெதுப்பான சூட்டுக்கு வரும்வரை பொறுத்திருந்து, அளவாக தயிர்கலந்து புரைஊற்றி, அதன்பின் அடுக்களையின் இதமான சூட்டில் வைத்து, பாதுகாப்பாக மூடிவைக்கவேண்டும் என்ற தன் கடமையை முழுமையாக இவர் உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம் நல்ல தரமான தயிர் கிடைக்கும்.

இந்த தன்மைதான் கடமையை உணர்வது.முதலில் உணர்ந்து, பின் அதன் வழிமுழுமையாக கடமை செய்வது அவசியம். அதாவது செயலைக்கு முன்னதாக சரியாக எதையும் விட்டுவிடாது புரிதலே முக்கியம்.

இதில் விதி எங்கிருந்து வந்தது.....? எதற்காக மனதை சமாதானப்படுத்திக் கொள்ளவேண்டும்..? நம் இயலாமைக்காகவா..?

சரியாக கடமையைச் செய்தால் சரியான பலன் மிக நிச்சயமாக கிடைத்தே தீரும்.இதுதான் விதி என்பது. இந்த பலனை எதிர்பார்க்கவேண்டியதே இல்லை. கிடைத்தே தீரும். இதுதான் கடமையை செய், பலனை எதிர்பாராதே என்பது.


பதிவு தொடரும்.......