"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Sunday, March 24, 2013

விபத்து - விதியின் சதியா

காத்துக்கொண்டிருக்கையில் கண்முன்னே இன்னொரு விபத்து...நான் இருந்த இடமோ நகரத்தின் நடுவில் பழமையின் மிச்சமீதி அடையாளங்களை வைத்து இருக்கும் கிராமம். நகரத்தின் முக்கிய சாலையில் இருந்து பிரிந்து முக்கால் கிலோமீட்டர் வந்து அதன் பின்னர் 20 அடிச் சாலையில் சற்று உள்ளே செல்ல வேண்டும்.

 நகராட்சி பகுதி ஆனதினால் அந்த சாலை காங்கிரீட் சாலையாக, மாற்றம் பெற்றிருந்து. அந்த சாலை முடிவடைந்த இடம் ஊரின் மையப்பகுதி. நான்கு வீதிகள்  சந்திக்கும் இடமாக அமைந்திருந்தது. அந்த இடம் இரண்டு மூன்று லாரிகள் சாதரணமாக நிற்கும் அளவிற்கு இடம் அகலமாகவே இருந்தது.


ஆனாலும் கூட அப்படி இடம் இருப்பது  தெரியாத அளவில் நெருக்கமாக வீடுகள். அந்த இடத்தில் நுழைந்த பின்தான் அதன் விஸ்தீரணம் தெரியும். .. சின்ன சதுரமாக வலதுபுறம் தெரிவது மளிகைக்கடை. அங்கே வயதான பாட்டியுடன் மூன்று வயது ஆண்குழந்தை ஒன்று 10 ரூ மதிப்பிள்ள சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியோடு பாட்டியின் கையைப் பிடித்து படி இறங்கியது. படி இறங்கியதுதான் தாமதம் தனது வீட்டுக்கு செல்லும் ஆர்வத்துடன்  பாட்டியின் கையை உதறிவிட்டு,  மேற்குப்புறத்திலிருந்து தென் கிழக்கு வீதிக்காக உற்சாகத்துடன் ஓடத் துவங்கியது.

வடக்கிலிருந்து தெற்கு நோக்கி தென் மேற்குசாலைக்காக சின்ன யானையான டாடா ஏஸ் சரக்கு வாகனம் ஒன்று அதேசமயம் சாதரண வேகத்துடன் வந்தது.
அந்த வாகனம் உள்ளே நுழையவும் ஓட்டுநரின் பார்வையில் காலி மைதானம் மட்டுமே கண்ணுக்கு தெரிந்து இருக்கும். சட்டென வலதுபுறத்தில் குழந்தை வர ஆரம்பித்ததை கவனிக்க வாய்ப்புகள் இல்லை. குழந்தையின் ஓட்டத்தை விட சற்று அதிகமான வேகம் 20 கிமீ வேகம்தான் வேன் வந்திருக்கும்.

வேனும் குழந்தையும் முக்கோணப்புள்ளியில் சந்தித்துக்கொள்ள குழந்தை வேனின் சைடில் மோதி  வேனுக்குக் கீழ் உள்புறமாக முன் சக்கரத்துக்கு முன்னதாகச் சென்று விழுந்தது. வேன் டிரைவர் ஏதோ மோதிவிட்டது என்று உணர்ந்து பிரேக் அடித்த அதே தருணம் வண்டி நகர்ந்து குழந்தை மீது ஏறி நின்றது.

டயருக்கு முன்னதாக குழந்தை விழுந்தவுடன் அதற்குப்பின் நடப்பதை முன்னதாகவே மனம் யூகித்துக்கொள்ள,  நடப்பதை காணும் சக்தி இல்லாததால் என் கண்கள் தானாக மூடிக்கொண்டன. இது பயமோ, கிறுகிறுப்போ இல்லை. ஒன்றும் செய்ய இயலாத நிலையில் மனம் தன்னை தற்காத்துக்கொள்ள இயங்கியதாகத் தோன்றியது.

வலுக்கட்டாயமாக கண்விழித்துப் பார்த்து  எந்தவிதத்தில் உதவி செய்யமுடியும் என்று தெரியாத நிலையில் வேனில் அருகில் ஓடினேன். எல்லாம் முடிந்தது. விஸ்வரூபம் படத்தில் வர்ற மாதிரி இரத்தம் கடகடவென தரையில் விரவி பாய்ந்தது. எந்த வித அசைவும் இன்றி குழந்தை கீழே சிக்கிக்கிடந்த கோணம், அதன் முடிவை, மரணத்தை  தெளிவாகச் சொல்லிவிட்டது. டிரைவர்  நடந்தை புரிந்து கொள்ள முடியாமல் நிற்க.. சத்தம் கேட்டு அருகில் வந்த சிலருடன் சேர்ந்து வேனின் முன் பக்கத்தை தூக்கினோம்.

யாரோ குழந்தையை எடுத்துக்கொண்டு ஓட..மெளனமாக விலகினேன். அடுத்த 20 நிமிடத்தில் சிகிச்சைக்கு வாய்ப்பில்லை.என மரணம் உறுதி செய்யப்பட மனதில் பல கேள்விகள் எழ, அந்த விபத்தை நேரில் பார்த்ததன் தாக்கம், அதிர்வு சற்று மனதைப் பாதிக்க அந்த இடத்திலிருந்து வெளியேறினேன். இயல்புக்கு வர சில மணி நேரங்கள் ஆனது...

7 comments:

  1. வாழ்க்கையின் ஓட்டத்தில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை அறியாதவர்கள்தான் மனிதர்கள்...

    முழுமையாக வாசித்து காட்சிப்படுத்தி உங்களின் உணர்வினை புரிந்து கொண்டேன். எல்லாம் வல்ல இறை அந்த சிறு குழந்தையின் ஆன்மா புரிதலோடு சாந்தியடைய உதவட்டும்....

    கனத்துப் போன மனதோடு முடிக்கிறேன்... :-((((

    ReplyDelete
    Replies
    1. நான் இயல்புக்கு வந்தபின் இரண்டுநாட்கள் இதேவிதமான பிரார்த்தனை உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது.

      Delete
  2. பரிதாபத்திற்குரிய நிகழ்வு. இந்த விபத்தில் யாரைக் குற்றம் சொல்ல முடியும்? விதியையா அல்லது மதியையா?

    ReplyDelete
    Replies
    1. மேலோட்டமாகப் பார்த்தால் மதிதான்.. அந்த பாட்டி இன்னும் கவனமாக குழந்தையின் கையை இறுகப் பிடித்திருக்கலாம். அந்த வேன் இன்னும் மெதுவாக வந்திருக்கலாம். இப்படி நடந்திருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என்பது போல தோன்றினால் இது உண்மை அல்ல..:(

      நடந்துவிட்டது. இப்படியெல்லாம் நடக்கவேண்டும் என்பது விதி.. இப்படியெல்லாம் நடக்கவேண்டும் என்பதற்கான விதிமுறைகள் என்ன? ஏன் ? இதை நிர்ணயிப்பதில் நம் பங்கு என்ன என்பதில்தான் சூட்சமம் இருக்கிறது.

      விதிக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன ? விரிவாக அடுத்த இடுகையில் சொல்ல முயற்சிக்கிறேன் அண்ணா...

      Delete
  3. சென்னையில்... இருசக்கர வாகனத்தில் நான் பயணம் செய்து கொண்டிருந்த போது, கண்ணெதிரே... தண்ணீர் டேங்கர் லாரியை ஓவர் டேக் செய்த பஸ்-லாரியின் மிக அருகில்... படியில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு மாணவனை லாரியின் இரும்பி கம்பி இழுத்து, அவனை உருட்டி, புரட்டி... அதே இடத்தில் மரணம்... பின்னால் பார்த்துக் கொண்டே வந்த நான், பிரேக் அடுத்து நின்றது அந்த மாணவனின் அருகில்... எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது... மரணம்... அந்த சமயம் என்னால் கத்த கூட முடியாமல், வண்டியை அப்படியே போட்டு விட்டு பஸ்ஸை விரட்ட, சாலையில் உள்ள அனைவரும் பின் தொடர... அதற்குள் பஸ் நின்று, டிரைவர் ஓடி விட்டான்... என்னால் அன்று முழுவதும் அலுவலகத்தில் சரியாக பேச கூட முடியவில்லை....

    இதைப் படிக்கும் போது... மறக்க முடியாத நினைவு...

    விதியோ, சதியோ, மதியோ... காற்று போனால் அவ்வளவு தான்...

    ReplyDelete
  4. படித்ததும் மனம் கனக்கின்றது.

    ReplyDelete
  5. படிக்கவே மனசு தாங்கலியே................

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)