"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, November 15, 2011

ஏற்றுக்கொள்வதா..? ஒத்துக்கொள்வதா....?

நாம்  எந்த ஒரு விசயமாக இருந்தாலும் ஓரளவிற்கு அதைப்பற்றி அறிந்தே வைத்திருக்கிறோம். அது அரசியலாகட்டும். ஆன்மீகம் ஆகட்டும். தொழில் சார்ந்த நடவடிக்கைகள் ஆகட்டும், உறவுகள் ஆகட்டும். நமக்கென ஒரு கருத்து நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது.

நம் கருத்துடன் ஒத்துபோகிறவர்கள் நமக்கு நண்பர்கள். நம் கருத்தை (முழுமையாக) எதிர்ப்பவர்களோடு நமக்கு ஒட்டுதல் வருவதில்லை என்பது யதார்த்தம். அதையை மீறி நட்பு எனில் அந்த கருத்து இருவருக்குமே அவ்வளவு முக்கியமானதில்லை  என்பதே உண்மை.

சரி ஏன் நம்மோடு மற்றவர்கள் ஒத்துவருவதில்லை. இதற்கு என்ன செய்யலாம். அவர்களை சரிப்படுத்தவா அல்லது அவர்களுக்கு ஏற்ப நாம் மாறலாமா என்றால் நம்மிடம் மாற்றம என்பது மட்டுமே சாத்தியம்:)

 முதலில் நண்பர் சொல்வதை உள்வாங்க வேண்டும். அவர் கருத்தினை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்வது என்றால் சரி என ஒத்துக்கொள்வது அல்ல.  அவருடைய மன்நிலையை புரிந்து கொள்வதுதான். அப்போதுதான் நமது முன்முடிவுகளின் அடிப்படையில் உடனடியான எதிர்வினை புரிவதை தவிர்ப்போம்.

அதோடு  நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.  முக்கியமாக சட்டென கோபம் வராது, அப்போதுதான் எனது கருத்தை எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படி, உங்களை காயப்படுத்தாது இதமாக என்னால் சொல்ல முடியும்.

மேலும் உங்களின் கருத்தை ஏற்றுக்கொண்டால்தான் அதை நான் ஒத்துக்கொள்வதா இல்லை மறுத்துப்பேசுவதா என முடிவு செய்ய இயலும். எனக்கு சாதிமீது பற்று அதிகம், கடவுள் மீது பற்று அதிகம், இப்படிப்பட்ட விசயங்களில் மற்றவர்கள் தாக்கிப்பேசினால், நான் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும் என்கிறீர்களா?


 நமக்கு உள்ளது போன்ற உரிமை அவருக்கும் இருக்கிறது. நம் கருத்து மறுக்கப்பட்டதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்பின் அவர் சொன்னது சரியாக இருந்தால் ஒத்துக்கொள்ளூங்கள் அல்லது மறுத்து வலுவான வாதங்களை வையுங்கள். பந்து உங்கள் கையில்..

பதிவுலக சர்ச்சைகளில் மட்டுமல்ல வாழ்க்கையில் சண்டை சச்சரவில்லாமல் வாழ இது ஒரு வழி:)  பதிவுலக சர்ச்சைகளிலும் கூட,......:)

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா
Post a Comment