"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, January 20, 2010

காயில் மாற்றிய கதை....

தொழிற்சாலையில் ஆர்டருக்கான ஆயத்த ஆடைகள் உற்பத்தி நடைபெற்றுக்கொண்டு இருந்தது. மணி முற்பகல் 11.30. சட்டென ஒரு புறத்தில் அமைந்த தையல் இயந்திரங்களுக்கான 'ஸ்டார்ட்டர்' மின் கட்டுப்பாட்டுக் கருவி 'டப்' என சத்தத்துடன் பழுதானது.

அருகில் இருந்த பொன்னுச்சாமி சட்டென அங்கே சென்று தனக்கு தெரிந்த அனுபவ அறிவைக் கொண்டு மின்சாதனத்தை சோதிக்க அதில் உள்ள ’காயில்’ புகைந்துவிட்டது. அதை மாற்றினால்தான் மீண்டும் இயந்திரங்கள் இயங்கும். என தெரிந்தது.

உற்பத்தி தடைபட்டதோடு அடுத்து எவ்வளவு நேரத்தில் ரெடியாகும் என்று தெரியாத நிலை. ஆஸ்தான மின் பழுது நீக்குபவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச அவர்கள் அடுத்த பத்து நிமிடத்தில் வந்து விட்டனர்.

’காயிலை’ கழட்டி கையில் கொடுத்து புதியதாக வாங்கி வரச் சொல்ல இன்னொரு பணியாளரை அழைத்து அருகில் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மின்சாதன பொருள்கள் விற்கும் கடையில் அதை புதிதாக வாங்கி வரப் பணித்தார் பொன்னுச்சாமி

அங்கே அந்த கடையில் ’காயில்’இல்லை, தொழிற்சாலை அமைந்த இடம் சற்று நகரத்தை விட்டு தள்ளி இருக்கிறது. இப்போது வேறு எங்கு கிடைக்கும் என விசாரித்தில் வடக்குபுறமாக மூன்று கிலோமீட்டர் சென்றால் அங்கு உள்ள சிற்றூரில் கிடைக்கும் அல்லது தெற்குபுறமாக சென்றால் ஐந்து கிலோமீட்டர் சென்று நகரை அடைந்தால் நிச்சயம் கிடைக்கும் என்று தகவல் சொன்னார்கள்.

நேரமாக, நேரமாக பொன்னுச்சாமிக்கு வேகமாக செயல்படவேண்டும் என உணர்ந்தார். இல்லையெனில் உற்பத்தி தடைபடும். மேலும் சம்பள இழப்பும் நேரும். அந்த பணியாளரை வடக்கு நோக்கி சென்று வாங்கிவ்ரப் பணித்தார். அங்கு இல்லையென்றால் திரும்ப வந்த வழியே அங்கிருந்து எட்டு கி.மீ வந்து டவுனை அடைய வேண்டும். இன்னும் நேரமாக வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை இருந்தால் நேரம் மிச்சம். உற்பத்தி பாதிக்காது. ரிஸ்க் எடுத்தார்.

பணியாளர் வடக்கே சென்று அங்கு கடைகளில் விசாரிக்கத் துவங்க ’அங்கு இல்லை’ என்ற பதிலே கிடைத்தது. பொன்னுச்சாமிக்கு இயல்பாகவே காலதாமதம் என்றால் பிடிக்காது. ஏற்கனவே முக்கால் மணி நேரம் வீணாகி விட்டிருந்தது. இனி அந்த பணியாளர் திரும்பவந்து டவுன் சென்றால் கூடுதலாக இன்னும் அரைமணியிலிருந்து ஒருமணிநேரம் வீணாகும்.

பொன்னுச்சாமிக்கு இருப்புக்கொள்ளவில்லை. சட்டென ஒரு யோசனை. பணியாளர் அங்கே முயற்சித்து கிடைக்க வில்லை எனில் உடனடியாக டவுனில் வேறுநபரை நியமித்து வாங்கிவிட்டால் பயணநேரம் அரைமணி மிச்சமாகும்.

பொன்னுச்சாமியின் வீடு டவுனில் இருந்தது. அருகிலேயே பெரிய மின்சாதன பொருள்கள் விற்கும் கடையும் இருந்தது. இந்த மதிய நேரத்தில் மனைவி வீட்டு வேலை முடித்துவிட்டு ஓய்வாக இருக்க வாய்ப்பு உண்டு. வீட்டு வேலை செய்ய வசதியான (நைட்டி) உடையில் இருந்தால் அப்படியே வீட்டைவிட்டு வெளியே வருவதை வெறுப்பவள்.


சரி ஆபத்திற்கு பாவமில்லை என மனைவியை உடைமாற்றி தயாராக இருக்கச் சொன்னால் ஒருவேளை அவசரமாக கடைக்குபோய் பொருளை வாங்கி வரச் செளகரியமாக இருக்கும் என முடிவு செய்தார்.

வீட்டிற்கு போன் செய்தார். போனை எடுத்த மனைவியிடம் ”ஆமா நீ நைட்டில இருக்கியா? இல்லை சேலைல இருக்கியா?”

”தேனுங்கோ என்ன விசயம்?”

இல்ல, அவசரமா எலக்ட்ரிகல் கடைக்கு போக வேண்டியதா இருக்கும். கொஞ்சம் சீக்கிரமா ரெடியாகு !”

”இதோ இரண்டு நிமிசத்துல ரெடியாகிடறோனுங்கோ” என்று போனை வைத்தார் அவரது மனைவி.

கிட்டத்தட்ட மொத்தமாக ஒருமணிநேரம் ஆயிற்று. பணியாளருக்கு போன் செய்ய, ஒருவழியாக கிடைத்து விட்டதாக அவர் கூறி விரைவாக தொழிற்சாலைக்கு வந்து கொண்டு இருப்பதாக தகவல் சொன்னார். வந்து அதைப் பொருத்த அரைமணிநேரம் ஆக ஒருவழியாய் இரண்டு மணிநேரத்திற்குள் இயல்புநிலை திரும்பியது.

பொன்னுச்சாமி சற்று நிம்மதியோடு மதிய உணவுக்காக வீடு திரும்பினார். வீடு வந்த போது மனைவி தேவையானால் வெளியே கிளம்பத் தயாராக இருக்க, பொறுமையாக உணவு எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். அப்படியே தொழிற்சாலையில் உற்பத்தியில் ஏற்பட்ட பிரச்சினைகளை விவரித்தார்.

அக்கறையுடன் கேட்ட அவரது மனைவி புன்னகை செய்ய ”ஏன் சிரிக்கிற?” என்றார்

”அது வேறொண்ணுமில்லீங்க. திடீர்னு போனு பண்ணி நைட்டில இருக்கிறயா, இல்லை சேலையில இருக்கிரயான்னு கேட்டீங்களா எனக்கு ஒரு மாதிரியா ஆயிப்போச்சுங்கோ..” என்று நாணத்துடன் தலை கவிழ, பொன்னுச்சாமிக்கு சோறு உள்ளே இறங்கவில்லை.

10 comments:

  1. நேரான உரையாடல் போல உள்ளது... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. 'நேரத்தைக் கையாளுதல்' என்கிற கல்வியை அழகாக கதை போலச் சொல்லியிருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள், நண்பரே!

    ReplyDelete
  3. அன்பின் சிவசு

    இதுதான் ரிஸ்க் எடுக்கும் ( ரஸ்க் சாப்படுவது போல ) திறமை சிறந்தது என்பதை வலியுறுத்தும் இடுகை.

    மாற்றாக - மனைவியைத் தயார் செய்ய - அவரோ வேறு பணிக்குத் தயாராக - நல்ல நகைச்சுவை

    நல்வாழ்த்துகள் சிவசு

    ReplyDelete
  4. திரு.அண்ணாமலையான் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றியும் வாழ்த்துகளும்..

    ReplyDelete
  5. \\ஜீவி said...

    'நேரத்தைக் கையாளுதல்' என்கிற கல்வியை அழகாக கதை போலச் சொல்லியிருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள், நண்பரே!\\

    ஆமாம் கூடவே நாம் ஒன்று நினைக்க, மற்றவர் வேறு மாதிரி நினைக்கவும் வாய்ப்புகளையும் சுட்டி இருக்கிறேன் :)))))

    ReplyDelete
  6. \\cheena (சீனா) said...
    அன்பின் சிவசு

    இதுதான் ரிஸ்க் எடுக்கும் ( ரஸ்க் சாப்படுவது போல ) திறமை சிறந்தது என்பதை வலியுறுத்தும் இடுகை.

    மாற்றாக - மனைவியைத் தயார் செய்ய - அவரோ வேறு பணிக்குத் தயாராக - நல்ல நகைச்சுவை

    நல்வாழ்த்துகள் சிவசு\\

    ரொம்ப சரியாக இடுகையை புரிந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி திரு.சீனா அவர்களே...

    ReplyDelete
  7. நேரம் பற்றி மிகவும் சுவாரஸ்யமாக எழுதப்பட்டு இருக்கிறது, அதனுடன் கூடிய நகைச்சுவை மிகவும் அருமை.

    ReplyDelete
  8. //பொன்னுச்சாமிக்கு சோறு உள்ளே இறங்கவில்லை. //

    ம்ம்ம் நல்லாயிருக்கு நண்பரே

    ReplyDelete
  9. அருமையான எழுத்து நடை, நேரில் பேசுவது போலவே உள்ளது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. முழுமையாக உங்கள் திறமை இதில் தெரிந்தது. முடித்த போது வியந்து விட்டேன்.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)