"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, September 9, 2013

பொதிகை மலை பயணத்தொடர் பகுதி - 8

மழை மீண்டும் ஆரம்பித்தது...அடுத்த வந்த அன்பர்களுக்கு வழிவிட்டு இறங்க ஆரம்பித்தோம். ஏறும்போது இருந்ததை விட பாதைகளில் நீர் வரத்து அதிகம் இருந்தது. பாறைகளில் வழுக்கும் தன்மை இல்லாததால் தைரியமாக இறங்க ஆரம்பித்தோம். படத்தில் சற்று கவனமாகப் பார்த்தால் மட்டுமே மஞ்சள் கோடு அடையாளம் தெரியும்... இப்போது தான் கேமிராவை வெளியே எடுத்து ஒருவிதமாக மழையில் நனையாமல் சமாளித்து புகைப்படம் எடுத்தேன்.
குத்து மதிப்பாகவே இறங்க ஆரம்பித்தோம். சுற்றிலும் திசைதெரியாத வகையில் மேகம், மழைத்துளி என கலந்து கட்டி இருக்க...ஏறும்போது ஞாபகத்தில் வைத்த சில அடையாளங்கள், பாறைகள், மரங்கள் என இறங்கி வந்தோம். சன்னமாக இருந்த அருவிகள் நுரைத்துக்கொண்டு பொங்கிப் பிரவாகமாய் வந்து கொண்டிருந்தது... பார்க்க பார்க்க எங்களை மறந்தோம் :) இறங்கவே மனசில்லாமல் இறங்கினோம்.

இரண்டு  மலைகளுக்கு இடையில் அமைந்த சற்றே சமதளமான பாறைப்பகுதி...  இதை கடந்து வருகையில் நீர் வரத்து சற்று அதிகமாக இருந்தது.. நாங்கள் சென்ற மார்ச் முதல்வாரம் தான் மழைக்காலம் ஆரம்பமாம்.. முன்னதாக வந்திருந்தால் இந்த மழையை பார்த்திருக்க முடியாது என கீழே வந்த பின் தகவல் கிடைத்தது.  மேலிருந்து கீழ்நோக்கிப் பாய்ந்த அருவி..

அதே இடத்தில் அருவி தலைகுப்புறப் பாய்ந்து செல்லும் காட்சி கீழே... மேலே இருக்கும் பாதையை கடந்து வந்த போது நீரின் அளவு அதிகமாகி இருந்தால் நினைத்துப் பார்க்கக்கூட நேரமின்றி சிவலோகம்தான் :)இதன் வீடியோ ஒன்று...மேலே...


பொதிகை மலை உச்சியில் இருந்து முந்தையநாள் இரவு தங்கிய அதிரமலை முகாமுக்கு பக்கமாக வந்துவிட்டோம் என்பதற்கான மரங்கள் அடர்ந்த பகுதி நீரோட்டத்துடன்...


அடுத்த பகுதியில் நிறைவு பெறும் :)
நிகழ்காலத்தில் சிவா

Post a Comment