"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, September 13, 2013

பொதிகை மலைத் தொடர் பகுதி -நிறைவு


அதிரமலை முகாமிற்கு இறங்கிவந்து சேர்ந்தபோது நேரம் மதியம் 1.30. மலை உச்சிக்கு ஏறி இறங்க சுமார் 5 மணி நேரம் ஆகி இருந்தது.

அன்று இரவே ஊர் திரும்ப இரயில் பயணத்திற்கான முன்பதிவு செய்திருந்தோம். அதனால் அவசரமாக உணவருந்திவிட்டு அடிவாரம் செல்ல கிளம்பினோம்.

அங்கிருந்த வனத்துறை அதிகாரியோ ”கிளம்புறதுனா சீக்கிரம் கிளம்புங்க.. இரண்டு மணிக்கு மேல் கீழே இறங்க அனுமதிக்க மாட்டோம்..நாளைதான் கிளம்ப முடியும்”.என்றார்.. அட்டைகள் நிறைய ஊர்ந்து கொண்டிருக்க...தாண்டிக் குதித்துச் சென்றோம்...:)அடிவாரம் சென்று சேர மணி இரவு 7 ஆகலாம்’ என கணக்கிட்டபடி சற்று வேகமாகவே இறங்க ஆரம்பித்தோம். முந்தய நாள் காலை 8 மணிக்கு ஆரம்பித்த நடை மதியம் 2.மணிக்கு முடிந்தாலும், அன்றய இரவு நல்ல தூக்கம் இல்லாததால் உடல் சோர்வடைய ஆரம்பித்தது. தொடர்ந்து அடுத்த நாளும் காலை 7 .45 க்கு ஆரம்பித்து தொடர்ந்த நடையால் கால்கள் ஓய்வுக்கு கெஞ்ச ஆரம்பித்தன..ஆனால் வெயில் அடித்ததால், கண்ணுக்கு குளிர்ச்சியாக சுற்றிலும் இயற்கை காட்சிகள் விருந்தளித்து கொண்டே இருந்தன.மெதுவாக நடந்தாலும் இடையில் ஓய்வுக்கென நேரம் ஒதுக்க வேண்டாம் என முடிவு செய்து சற்று பொறுமையாக நடந்தோம்... ஆரம்பத்தில் சற்று வேகமாக இறங்க ஆரம்பித்தாலும் கடந்த இரண்டு நாட்களாக மழைநீருக்குள்ளேயே கால்கள் நனைந்து இருந்ததால் இறங்கும்போது நகக்கண்கள் எல்லாம் வலியெடுக்க ஆரம்பித்தது.

கவனமாக, காலில் அணிந்திருந்த ஷீ வை உடன் வந்த நண்பர் கழற்றிப்பார்த்து வந்தும்., அதையும் மீறி சாக்ஸ்க்குள், பாதத்தில் இரண்டு அட்டைகள் நன்கு கடித்துப் பெருத்து குடித்தனம் நடத்திக்கொண்டு இருந்தது. அவர் பாதிவழியில் வந்தபின் அவற்றை கண்டுபிடித்து அதற்கு மோட்சம் கொடுத்தார் :)
வழியில் நாங்கள் கடந்து வந்த சிற்றருவி ஒன்று இப்போது சுமார் ஒரு அடித்தண்ணீர் அதிகமாகி கொட்டிக்கொண்டு இருந்தது.. சற்று உட்புறமாக நடந்து பதட்டமில்லாமல் அந்த இடத்தை கடந்தோம். கீழே பார்க்கும் படம் மேலே ஏறும்போது எடுத்தது ..(நீர்வரத்து குறைவாக இருந்தது.)


 

வரும்போது அதே இடத்தில் எடுத்த படம் கீழே... கொட்டிக்கொண்டு இருக்கும் நீரின் அளவைப் பாருங்கள்.


வீடியோ அந்த இடத்தில் எடுத்தது.. படத்தைவிட வீடியோ நன்கு புரிய வைக்கும் :)

அந்த இடத்தில் இருந்த வனத்துறை முகாம் ஊழியர், யாரும் கூப்பிடாமலேயே வந்து சிலருக்கு உதவினார்.
போகும்போது வழியில் தாண்டிவந்த அருவி கொஞ்சம் அதிகமான பளிங்கு போன்ற தெளிந்த நீரோடு....குளிக்கும் ஆர்வம் இருப்பினும் நேரம் கருதி தொடர்ந்தோம்.. மூன்று நாள் பயணத்திட்டமாக இருந்திருந்தால் காலை 10 மணிக்கு சாவகாசமாக கிளம்பி.. விரும்பியவாறு நீராடி வந்திருக்கலாம் :)
மலை ஏறும்போது சுற்றிலும் உள்ள மலைகள், தூரத்தே தெரியும் பெப்பார அணை நீர் போன்றவை கீழே வீடியோவில்

ஒருவழியாக அடிவாரம் வந்து சேர்ந்த போது மணி இரவு  7.15  இரயில் 10.30க்கு எப்படிப் பிடிப்போம் என்ற கவலை ஒட்டிக்கொண்டது... அகத்தியர் மனது வைத்தால் எதுவும் சாத்தியம் என்ற நம்பிக்கை இருந்தாலும் ஓரத்தில் ஒருவேளை தவறிவிட்டால் என்ன பண்ணுவது என்ற எண்ணம் ஓடியது :)

அலைபேசி டவர் இல்லை.... முகாமில் போனாகாடு ஊரில் கடைசிபஸ் போயிருக்கும் என்றும் அதே சமயம் ’விதுரா’ நகரில் இருந்து ஒரே ஒரு வாடகை இன்னோவா வாகனம் வர வாய்ப்பு இருக்கிறது. என தொலைபேசி எண்ணையும் கொடுத்தார். காரை அழைக்க முயற்சித்தால் டவர் கிடையாது...நாங்கள் சென்ற குழுவில் ஐந்துபேர்.. இன்னும் ஒருவர் வரவேண்டியது பாக்கி இருந்தது..அதனால் 7.15 க்கு இரண்டு நண்பர்கள் முன்னதாக சென்றனர். நானும் இன்னொருவரும் கடைசியாக வந்த நண்பருக்காக காத்திருந்தோம்...

இந்த சூழ்நிலையை அமைதியாக என்னால் எதிர்கொள்ள இயலவில்லை.. மனதில் பரபரப்பு கூடிவிட்டது. நேரமோ பறந்து கொண்டிருந்தது..இரயிலைப் பிடிக்கும் வாய்ப்பு குறைந்து கொண்டே வந்தது தெரிந்தது.

நண்பர் வந்துசேர 7.35 க்கு இருட்டில் டார்ச் லைட் உதவியுடன் நடக்கத் தொடங்கினோம். கும்மிருட்டு...பாதையில் சர்வ சாதரணமாக குட்டைப்பூரான்கள் நிறைய எறும்பு ஊர்வது போல் ஊர்ந்து கொண்டிருந்தன..கவனமாகச் சென்று கொண்டிருந்தோம்.. கூடவே கரூர் செல்ல வேண்டிய நண்பர்கள் நான்கு பேர் எங்களுடன் சேர்ந்து கொண்டனர். அவர்களுக்கான இரயில் இரவு 8 மணிக்கு... அதைப் பிடிக்க வாய்ப்பே இல்லை இருப்பினும் இரயில் நிலையம் சென்று முடிவு செய்து கொள்ளலாம்/அல்லது பஸ்ஸில் செல்லலாம் என முடிவு செய்து எங்களுடன் வந்தனர்.

கொஞ்சம் தொலைவில் நண்பர்கள் எங்களைபெயர் சொல்லி அழைத்த சப்தம் கேட்டது.. வேகமாக அவர்கள் அருகே சென்ற போது சப்தமிடாமல் பார்க்கச் சொல்லி அருகில் இருந்த ஒரு புதரை காண்பிக்க.. கோதுமை நாகன் போன்ற பாம்பு ஒன்று இருந்தது..பெரும்பான்மையான பாம்புகள் விஷமற்றவை.. ஆனால் இது கடித்தால் அவ்வளவுதான்.:) நண்பர்களின் கால்களுக்கு ஊடாக சென்றது..அதனால் எதற்கும் எச்சரிக்கையாக அனைவரும் ஒன்றாகவே செல்வோம் என்றனர். புல்லட் சங்கரை நினைத்துக்கொண்டேன்.. அவராக இருந்தால் அதையும் பிடித்துக்கொண்டு வந்திருப்பாரே :)

”7.20 க்கு ஒரு இடத்தில் செல்போன் டவர் கிடைத்தது. சொல்லிவிட்டோம். கார் 8 மணிக்கு போனாகாடு நிறுத்தத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையான செய்தியையும் சொன்னார்கள். அங்கிருந்து திருவனந்தபுரம் சுமார் 60 கிமீ இருக்கும். நிதானமாக நாங்கள் போனாகாடு பேருந்து நிறுத்ததை அடைந்த போது மணி 8.15

பஸ்நிறுத்தத்தில் எந்த செல்போனும் வேலை செய்யவில்லை.. டவர் கிடையாது.கார் வருமா வராதா என்றும் தெரியாது.. நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் ஒரே ஒரு வீடு....அவர்கள் மட்டுமே உறங்கக்கூடிய அளவு சிறிய இடம் சுற்றிலும் கும்மிருட்டு.. கார் வரவில்லை என்றால் அங்கேயே விடியும்வரை குளிரில் உட்காருவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை.

என்ன ஆகும் எனத் தெரியாத நிமிடங்கள் மிகநீளமாய் தொடர்ந்து கொண்டே இருந்தது. தூரத்தில் ஓரிரு வாகனங்கள் வெளிச்சம் காட்டி அருகில் வந்தபோது எங்களுக்கான வாகனம் அல்ல என்பது தெரிந்ததும் ஏமாற்றமாகவும் பதட்டமாகவும் உணர்ந்தோம்... 8.45 க்கு வெளிச்சம் தெரிந்தது எங்களுக்கான கார்வந்தேவிட்டது.. சுமார் 60 கிமீ இருக்கும் திருவனந்தபுரம் இரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.. சுமார் 30 40 கிமீ வரை ஏற்ற இறக்கமான வளைந்து நெளிந்தசாலை... டிரைவர் தமிழ் அன்பர்.. அதுமட்டுமல்ல .. சில காலம் திருப்பூரில் வேலையும் பார்த்திருக்கிறார்.

முடிந்தவரை  போய்விடுவோம் என காரை பறக்க விட்டார்.. கூட கரூர் நண்பர்கள் நான்குபேர் என பயணம் நீள....நடந்த அசதி.. வளைந்த சாலைகள்.. என சிலருக்கு தலைசுற்றல், வர குறைவான வேகத்திலேயே கார் சென்றது.
நல்லவிதமாக 10.15 க்கு கொண்டு சேர்த்தார்... இறங்கி அவசரமாக ஓடி இரயிலில் ஏறிவிட்டோம்.. அனைவரும் ஏறிவிட்டனரா என சரிபார்த்தபோது இருவரைக் காணவில்லை.. அதிகம் இரயில் பயணித்திராத நண்பர்கள் அதே இரயிலில் அடுத்த முனையில் இருந்து கொண்டே எங்கே இருக்கிறோம் என புரியவில்லை என சொல்ல...அவர்களையும் இழுத்து இரயிலில் ஏறும்போது மணி 10.28  .. 10.30 க்கு இரயில் பாலக்காடு நோக்கி கிளம்பியது.....

மூன்று நாள் திட்டமிட்டு பொதிகைமலை யாத்திரை போய் இருக்கவேண்டியது. .. ஆனால் எங்களின் பயணத்தை இரண்டு நாளாக குறைத்துத் திட்டமிடவைத்த, முதல் அத்தியாயத்தில் சொன்னேனே அந்த வனத்துறை ஆபீசர் ...வனத்துறை ஆபீசரே அல்ல..அகத்தியர்தான் என்று நான் குறிப்பிட்டது சரிதானே...:)

அந்த இரயில்பயணம் பாலக்காட்டுடன் நிறைவு பெற்றது.பின்னர் பேருந்து மூலம் திருப்பூர்..மறக்கவே முடியாத அனுபவங்களுடன் ஊர் திரும்பினோம்..

கூடவே பயணித்த அனைவருக்கும் நன்றிகள்

நிகழ்காலத்தில் சிவா


4 comments:

இராஜராஜேஸ்வரி said...

.மறக்கவே முடியாத பயணம்

AMG said...

மிக அற்புதம். இது என் கனவு யாத்திரை. அகத்தியரே உங்களது வலைத்தளத்தை எனக்கு காண்பித்து அவரை தரிசிக்க எனக்கு ஒரு வழியை காண்பித்திருப்பதாகவே நான் நம்புகிறேன். வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் அகத்தியர் மலைக்கு செல்ல விரும்புகிறேன். உதவிட‌ முடியுமா என உங்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

AMG
கோவை

mani vel said...

நல்ல தகவல்கள்...! தெளிவாக சொன்னதற்கு நன்றி...

mani vel said...

நல்ல தகவல்கள்...! தெளிவாக சொன்னதற்கு நன்றி...