"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, July 4, 2012

கருணையே கடவுள்தன்மை



அன்புக்கும் கருணைக்கும் உள்ள தொடர்பு என்னவென்றால் அன்பின் முதிர்ச்சி நிலை கருணை. அன்பு உயர்ந்தது என்றால் கருணை மகத்தானது. கருணை நிரம்பி வழிபவர்கள் அனைவரும் கடவுட்தன்மை நிரம்பி வழிபவர்கள் என்பதே உண்மை.

அன்பு உறவுகளை உண்டாக்கும் உந்துதலில் உதயமாவது. கருணையோ முன்பின் அறியாத உயிர்கள் மீதும் பரவலாக விரவி நிற்பது. எல்லா உறவுகளுமே நாளடைவில் நீர்த்துப் போகிற தன்மையுடையவை. உறவுகளின் இருப்பில் எப்போதும் எதிர்பார்ப்பு உட்கார்ந்திருக்கும். ஆளுமை, பொறாமை, அபகரிக்கும் எண்ணம் என்று அனைத்தும் உறவுகளால் ஏற்படும். சண்டையும் சச்சரவும் உறவுகளால் உண்டாகும். இந்த உறவுகள் கடமைகளைத் தாங்கியவை.



கருணையோ எந்த தொடர்பும் இல்லாமல் ஏற்படுகின்ற உணர்வு.

அன்பு என்பது உணர்ச்சி,
கருணை என்பது உணர்வு

எல்லாவற்றின் மீதும் எந்த காரணமும் இன்றி ஏற்படும் அதிர்வலையே கருணை. அந்த நிமிடத்தில் ஏற்படும், மூளையில்  சுமந்து செல்லத் தேவையில்லாத பண்பு கருணை ..!

மலர்களுக்காக வருந்துவது அன்பு, முட்களுக்காகவும் கசிவது கருணை. அன்பு என்பது மேம்போக்காக ஏற்படுவது,. கருணை மையத்தில் நிகழ்வது.உண்மையான அன்பே கருணைக்கு அடிப்படை, தன்முனைப்பு தகர்ந்துபோகிற போதுதான் அது சாத்தியம். கருணை பாசாங்குகள் அற்றது.

கருணை எல்லா பிரிவினைகளையும், கோடுகளையும் தாண்டிப் பாயும் பேராற்றல் படைத்தது. எந்த பின்புலமும் இல்லாமல் அந்த நொடியில் நிகழ்வது. அடுத்த நொடியிலேயே அது செய்த உதவியை மறந்துவிட்டு முன்னேறிச் செல்வது. கடவுளுக்கு ஒரு வடிவம் தரமுடியுமானால் அது கருணையாக மட்டுமே இருக்கமுடியும்.

காந்தியடிகள் தன்னைச் சுட்டவனுக்குக் கூடத் தீங்கிழைக்கக் கூடாது என நினைத்தார். முத்தநாதன் சிவனடியார் வேடமிட்ட காரணத்தினாலேயே அவன் கொலை செய்ய வந்திருக்கிறான் என அறிந்தும் மெய்ப்பொருள் நாயனார் வாளாவிருந்தார்.இந்த கருணை பலவீனத்தால் ஏற்படுவதல்ல. வலிமையால் ஆற்றலால் உண்டாவது. வலிமையால் வருகிற கருணையே அடுத்தவர்களுக்கு அபயம் அளிக்கும் அடைக்கல விருட்சமாக ஆக முடியும்.

அடுத்தவர்களும் நாமும் வேறுவேறல்ல என்கிற அடிப்படைக் கருத்தே கருணைக்கு ஊற்று. இதுதான் கருணை ஆன்மீகத்திற்கான அடித்தளமாவதற்கு முக்கியக் காரணம், அது நான் என்னும் எண்ணத்தை அறவே வேரறுப்பதுதான். அடுத்தவர்களிடம் குறை காண்பவர்களால் கருணையுடன் வாழ முடியாது.

கருணை என்பதை புரிதலில் முதலில் கொண்டுவரவேண்டும். அப்போதுதான் அதுவே நமது வாழ்க்கையாகும்.

குறிப்பு: வாழ்க்கையே ஒரு வழிபாடு என்கிற இறையன்பு எழுதிய நூலில் இருந்து ஒரு சுருக்கப்பட்ட அத்தியாயம். நேரமிருந்தால் ஓரிருமுறை திரும்பப் படித்து உள்வாங்குங்கள் தோழமைகளே....

2 comments:

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)