"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, May 25, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 7

மே மாதம் முழுவதுமே சட்டசபைத்தேர்தல் முடிவினை எதிர்ப்பார்த்தும், கணிப்புகளும், கருத்துகளுமாக அனைவருமே பரபரப்பாக இருந்தனர் என்றால் அது மிகையில்லை. ஆக பரபரப்புகள் இப்போதைக்கு ஓய்ந்து விட்டது. நாம் அன்றாட அலுவல்களில், வாழ்வில் இன்னும் கவனம் செலுத்த வேண்டிய நிதர்சனத்திற்கு வந்துவிட்டோம்.

ஆன்மீகப்பாதையில் சென்று கொண்டிருக்கும் நமக்கு, அதில் நாம் எங்கே இருக்கிறோம் என்பது பல சமயங்களில் தெரிவதில்லை அல்லது சரியான இடத்தில் இருப்பதாக எண்ணுகிறோம். இதை நாம் சரி பார்த்துக் கொண்டால்தான் இன்னும் போகவேண்டியது இருக்கிறதா அல்லது பொருத்தமான இடத்திற்கு வந்துவிட்டோமா என உறுதி செய்து கொண்டு செயல்படமுடியும்.


சரி, இந்த தியானம், தவம் போன்ற முயற்சிகள் நமக்கு ஏன் தேவை? இது கட்டாயமா? என்றால் இல்லைதான். தன்னை உணர்தல், தான் பண்படுதல், தனக்கும் பிறர்க்கும் பயனாகுதல் என கனிந்து, வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் முழுமையாக இருத்தலுக்காகவே இந்த முயற்சிகள் அனைத்தும்.... இது எந்த முயற்சியும் இன்றி உங்களுக்கு வாய்க்குமானால் உங்களை வணங்குகிறேன். நீங்களே ஞானி.,

பெரும்பான்மையானவர்களுக்கு இந்த இயல்புகள் முயற்சி இன்றி வருவதில்லை. ஏன் இப்படி இருக்கிறோம்? அதற்கான காரணங்களை அறிந்து, அவற்றை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்கிற முயற்சியாக சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.இனி..

மதிமயக்கம்.தியானத்தில் இருக்கும்போது மனம் தன்னைக் கவனித்துக்கொண்டு இருக்கிறதா? அல்லது தன்னைக்கவனிப்பது போல் பாவனை செய்து கொண்டு இருக்கிறதா என்பதை பிரித்து உணர்வது கடினம். இதை உணர முடிந்தால் அதற்குப்பெயர்தான் விழிப்புணர்வு.தியானத்தில் அமர்ந்து இருக்கும்போது முதுகு நிமிர்ந்து இருப்பது மிகவும் முக்கியம். இது உங்கள் மனதை மனதே ஏமாற்றும் முயற்சிகளில் இருந்து காக்கும்.

தியான பயிற்சியில் தலைகவிழ்ந்து வெகுநேரம் அமர்ந்து இருந்துவிட்டு, இன்றைய தியானம் அற்புதம் என்கிற நண்பர்களை அறிவேன். இது அவர்கள் மீது குறை கூறுவது அல்ல. மனம் உள்ளே அற்புதமான திரைப்படத்தை ஓட்டிக்கொண்டு இருந்திருக்கிறது என்பதை பிரித்து உணர முடியாத நிலையில், பொய் உணர்வான நிலையில்,தவறாகப் புரிந்து கொண்டு மதிமயங்கிய நிலையிலேயே இருப்பது ஆன்மிகப்பாதையில் அவர்களின் வளர்ச்சிக்கு தடைதான். இந்த மதிமயக்கம் நம்மிடத்திலே இருக்கிறதா என மறுபரிசீலனை செய்து கொள்வோம்.:)

உயர்நிலையிலிருந்து வழுவி விடுதல்: தொடர்ந்த பயிற்சிகளினால் என்ன ஏது என்று தெரியாமல் இருந்த மனம், ஓரளவிற்கு அடங்கி ஆட்டம் போடாமல் இருக்கும். ஆனால் நாள்பட நாள்பட மனம் அடங்க மறுத்து எதிர்க்கும். கட்டுப்பட மறுக்கும். இதனால் தியானத்தில் அமர்ந்தாலே மனம் குவியாது போய்விடும் அல்லது சாட்சி பாவனையாய் இரு என்றால், வரும் எண்ணத்தில் ஏதோ ஒன்றின் பின்னால் வால்பிடித்துக் கொண்டே போய்விடும், இது நாம் பெற்ற உயர்நிலையிலிருந்து வழுவி விடுதல் - பின் தங்குதல் என்றும் சொல்லலாம். இதற்கு பலகாரணிகள் இருந்தாலும் இது முக்கிய காரணம் ஆகும்.

மனம் தன் ஆதிக்கத்தை என்றுமே இழக்க விரும்பாது,எனக்கு இதுவே போதும் வேறு ஒன்றும் வேண்டாம் என்கிற பொய்யான (நிறைவான) உணர்வைத் தோற்றுவிக்கும்:). இதை உணராததும் முக்கியத்தடைதான். இதை சரி செய்தால் மற்ற காரணங்கள் எல்லாம் சாதாரணமானது என்பது உங்கள் அனுபவத்தில் தெரிய வரும்.

இதற்கு வேண்டியது பொறுமையும் தொடர்ந்த பயிற்சியும்தான்....

ஆன்மீகப்பயிற்சிகளில் இன்னும் தீவிரமாக ஈடுபடவும், தெளிவுகளை அடையவும் வேண்டிய அறிவை , தருணத்தை உள்ளே இயங்கும் இறை உங்களுக்கு உணர்த்தும். இதை நீங்கள் அனுபவத்தில் உணர்வீர்கள்.

இத்துடன் இந்தப்பகுதியை தற்காலிகமாக நிறைவு செய்து வேறொரு தருணத்தில் மீண்டும் தொடர்வோம். இந்த இடைவெளி இதுவரை நாம் பார்த்ததை அனுபவத்தில் கொண்டு வருவதற்காக பயனாகட்டும்...

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா

3 comments:

  1. //சரி, இந்த தியானம், தவம் போன்ற முயற்சிகள் நமக்கு ஏன் தேவை? இது கட்டாயமா? என்றால் இல்லைதான். தன்னை உணர்தல், தான் பண்படுதல், தனக்கும் பிறர்க்கும் பயனாகுதல் என கனிந்து, வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் முழுமையாக இருத்தலுக்காகவே இந்த முயற்சிகள் அனைத்தும்.... இது எந்த முயற்சியும் இன்றி உங்களுக்கு வாய்க்குமானால் உங்களை வணங்குகிறேன். நீங்களே ஞானி.,//
    அற்புதமான வரிகள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உண்மையான தன்னை உணர மறுப்பதும் ஒரு காரணம் ஆகும். இது போன்ற ஒப்புக் கொள்ளும் தன்மை ஞானிகளிடம்தான் இருக்கும்.

    ReplyDelete
  3. எதுவெல்லாம் ஆன்மீகம்- நிறைய விஷயங்களை அலசியிருக்கிறீர்கள். மேலும் தொடர்வதற்கு முன், கொஞ்சம் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் எழுத்துக்களையும் படியுங்கள். பாரதியார் விளக்கம் அளித்துள்ள பகவத் கீதையும் படித்துவிட்டு அழகான அடுத்த பதிவையும் கொடுங்கள்

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)