"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, January 31, 2011

சதுரகிரி மலைப் பயணம். பகுதி 2

சதுரகிரி பயணத்தை வணிகரீதியாக நடத்தி வரும் நண்பர் ஒருவர் 24 டிசம்பர் அன்று பயண ஏற்பாட்டினை தெரிவித்தார்.  இரவு 11.30 க்கு திருப்பூரில் இருந்து வேனில் கிளம்பினோம். 14 பேரில் பாதி வயதான பெண்கள், மீதி ஆண்களுமாக கிளம்பினோம். வேன் டிரைவர் அந்த வேனுக்கு புதியவர் ஆதலால் பொறுப்பாக மெதுவாக ஓட்டிச் சென்று, போகும் வழியில் இரவு விருதுநகர் இரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து வந்த இரண்டு பெண்களையும் பயணத்தில் இணைத்துக்கொண்டு காலை 6 மணி அளவில் திருவில்லிப்புத்தூர் சென்று சேர்ந்தார். முன்னதாக கிருஷ்ணன்கோவில் பிரிவில் நாங்கள் பிரிந்து தாணிப்பாறை போயிருக்கவேண்டும்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் போகக் காரணம் கோவில் அருகில் இருக்கும் மடத்தில் காலைக்கடன்களை முடிக்கவும், குளிக்கவும், மகளிருக்கு வசதியாக இருக்கும் என்பதற்ககவும் காலைச் சிற்றுண்டி அருந்தவுமே. தனிப்பட்ட பிரயாணம் வருபவர்கள் தங்கள் வசதிப்படி செய்துகொள்ளலாம்.

அங்கு கோவிலுக்கு உள்ளே சென்றால் சுமார் இரண்டு மணி நேரம் தேவை என்பதால் கோபுர தரிசனத்துடன் திரும்பிவிட்டோம். காலை ஏழரை மணிவாக்கில் குளித்து தயாரானோம். திரு(ஸ்ரீ)வில்லிப்புத்தூரில் பால்கோவா இனிப்பு பிரசித்தம்:)  சிலர் வாங்கிக்கொள்ள, அங்கேயே சிறு ஓட்டலில் காலை உணவை முடித்துக்கொண்டு கிளம்பினோம். கிருஷ்ணன்கோவில் பிரிவில் திரும்பி வத்ரா யிருப்பு வழியாக தாணிப்பறை என்கிற சதுரகிரி மலையின் அடிவாரம் வந்து சேர்ந்தோம். நேரம் காலை  9.30 மணி....

இங்கு வந்து சேர்ந்தவுடனே முதல்வேலையாக நாங்கள் கொண்டு வந்த போர்வை, மற்றும் உடைகள் முதலியவற்றை அவரவர் பைகளுடன் ஒன்று சேர்த்தனர். அவற்றை மேலே எடுத்துச்செல்ல சுமைதூக்கிகளாக அங்கு இருக்கும் கிராமவாசிகளிடன் மொத்தமாக ஒப்படைத்து கூலி பேசினார்கள். சுமைதூக்குவோர் ஒருவர் சராசரியாக முப்பது கிலோ எடை வரை தூக்குவார்கள். அதற்கு 200 முதல் 250 வரை ரூபாய் கொடுக்கவேண்டும் எங்கள் வேனில் வந்தவர்களின் சுமைகள், மற்றும் சமையற்பொருள்கள் மூன்றுபேருக்கு தலைச்சுமை ஆயிற்று. பணம் மற்றும் மதிப்புள்ள பொருள்களை எங்கள் வசம் எடுத்துக்கொண்டு மற்றவற்றை அவர்களிடம் கொடுத்துவிட்டோம்.

அடிவாரத்தில் அனைவரும் ஒன்று கூடி சந்தனமகாலிங்கத்துக்கு அரோகரா, சுந்தரமகாலிங்கத்திற்கு அரோகரா என்ற சரணத்தை சொல்லிக்கொண்டே நடக்க ஆரம்பித்தோம்.  நடந்த கொஞ்ச நேரத்தில் வந்தது கருப்பண்ணசுவாமி கோவில்....

இது நேர்த்திக்கடனாக வேண்டியவர்கள் அனைவரும் கிடாய் வெட்டி சாமி கும்பிடும் இடமாகும். அங்கேயே கிடாய், கோழி என சமைத்து சாப்பிட இடம் இருக்க மக்களுக்கு கொண்டாட்டம்தான். இன்னும் சற்று தூரம் சென்றால் சிறு அருவி ஒன்று இருப்பது இன்னும் வசதி. :))

ஆக தாணிப்பாறை என்கிற மலை அடிவாரம் கிராமத்தில் உள்ள சிறுதெய்வ வழிபாடு நடக்கும் இடமாக இருந்தது. எனக்கு அந்த இடம் சற்று பொருந்தா உணர்வைத் தோற்றுவிக்க புகைப்படம் எடுப்பதையும் தவிர்த்து தாண்டிச் சென்றேன். தொடர்ந்து நடக்க சுமார் அரை கிமீ தூரத்தில் இடதுபுறம் அருவி.

பதினைந்து அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டு இருக்க, அதைத் தாண்டி நடந்தோம். எங்களுக்கு முன்னதாக சுமைதூக்கிகள் சென்றனர். மலைஏற பொதுவாக சிரமமாக இருக்கும். அதிலும் சுமையுடன் ஏறுவது கடினம். இதில் பெண்களின் பங்களிப்பைப் பாருங்களேன்.

 பயணம் தொடரும்.
நிகழ்காலத்தில் சிவா

10 comments:

 1. மலைஏற பொதுவாக சிரமமாக இருக்கும். அதிலும் சுமையுடன் ஏறுவது கடினம். இதில் பெண்களின் பங்களிப்பைப் பாருங்களேன்.


  ...Indeed a challenge!
  Amazing!

  ReplyDelete
 2. நன்றாக இருக்கிறது பயணம்.. தொடருங்கள்.. தொடருகிறோம்..

  ReplyDelete
 3. அண்ணே,

  நம்ம ஊருக்கெல்லாம் போய்ட்டு வந்திருக்கீங்க. நல்லது.

  நம்ம சேர்தளத்துலேயே சதுரகிரி சித்தர் ஒருத்தர் இருக்காரே! சொல்லியிருந்தீங்கனா, கூட்டீட்டுப் போயிருப்பாரே. :)

  பேரரசா எங்கிருந்தாலும் வரவும்.

  ReplyDelete
 4. மலையேறி சாமி கும்புடுவது என்பதை விட இது போன்ற பயணத்தில் தான் நம் உடலின் வலிமையும் மன வலிமையும் நமக்குத் தெரியும்.

  பக்கதில் உள்ள சிவன் மலையில் படி வழியாக ஏறி இருக்கும் போது நம் உடல் ஆரோக்கியம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்கின்றது.

  இந்த எழுத்து நடை ஒன்னாப்பு புள்ளைக்கு கூட புரியும்.

  ReplyDelete
 5. சதுரகிரி மலை... தொடர்கிறோம்.

  ReplyDelete
 6. நீங்க எதிர்பார்ப்பு இல்லாமல் சதுரகிரி போயிருந்தாலும் சதுரகிரி குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு அதிகம் இருப்பதால் உங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
 7. அருவியின் படம் அருமை.

  ReplyDelete
 8. அன்பு நண்பர் சிவாவுக்கு,
  தங்களின் சதுரகிரி பயணக் கட்டுரையை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அருமையாக உள்ளது. படித்தவுடன் அங்கு செல்லத் தூண்டும் வகையில் எழுதி வருகிறீர்கள்.
  வைஷ்ணோதேவி மற்றும் அமர்நாத் பயணம் சென்று இருக்கிறீர்களா? நான் கடந்த ஆண்டு ஜூலையில் போய்வந்தேன். அந்த அனுபவங்களை எனது வலைப் பதிவில் வெளியிட்டு உள்ளேன்.
  http://vedantavaibhavam.blogspot.com/2010/12/12-6.html
  என்னும் லிங்கில் சென்று பார்த்தால் முழு பதிவுகளை படிக்கலாம்.
  நன்றி.

  அஷ்வின்ஜி
  பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

  ReplyDelete
 9. அஷ்விஜி தங்களின் வருகைக்கு நன்றி..

  இன்னும் போகவில்லை. தங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்தே வருகிறேன்.

  ReplyDelete
 10. @ சித்ரா.,
  @ தர்ஷி.,
  @ ஜோதிஜி..
  @ தல வெயிலான்.,சீக்கிரம் பேசிர்றேன்.
  @ மாதேவி
  @ விருட்சம்
  @ இராஜேஸ்வரி

  நண்பர்களின் வருகைக்கும் கருத்துகள் சொல்லி என்னை ஊக்கபடுத்தியமைக்கும் நன்றிகள் பல..

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)