"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, December 30, 2010

பயணம் - கேதர்நாத்க்கு. நிறைவு

11.08.2010 அன்று நன்கு ஓய்வுக்குப் பின் எங்களுடன் வந்த பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் சமையல் குழுவினருக்கு எங்களுடைய பங்களிப்பாக இயன்ற நன்கொடைகளை கொடுத்தோம் அமைப்பாளர்கள் என்னதான் சேவைக்கட்டணம் பேசி இருந்தாலும், அவர்களின் உழைப்பு நம்ம ஊரைப்போல் காசுக்காக என இல்லாமல் ஒவ்வொரு கணமும் முகம் சுளிக்காமல் எங்கள் முழுமையான பாதுகாப்புக்கும், பயணத்திற்கும் உத்தரவாதம் தந்தார்கள். மகிழ்ச்சியுடன் எங்கள் அன்பை ஏற்றுக் கொண்டனர்.

மதியம் இரண்டரை மணிக்கு கிளம்பி மூன்றரை மணிக்கு ஹரித்துவார் சென்றடைந்தோம். அங்கு பவன் தாம் என்ற கண்ணாடி அலங்காரங்கள் நிறைந்த கோவிலைச் சுற்றிப்பார்த்தோம். பக்கச்சுவர்கள், கூரை மற்றும் சுவர்களில் கண்ணாடிகளினால் சித்திரங்கள் என கோவில் முழுவதும் கலர்கலராக காட்சியளித்தது.

வைஷ்ணவதேவி கோவிலின் மாதிரியைப்போன்றே ஒரு கோவிலைப்பார்த்தோம். வசதியான கட்டிடத்தில் திறமையான செட்டிங்குகளுடன் பார்த்து அனுபவிக்கும்படியாக இருந்தது. மணி ஐந்தை நெருங்கியது.


கங்கை நதிக்கரையில் மாலை நடக்க விருக்கும் கங்கா ஆரத்தியை தரிசிக்கவும் பூஜையில் விருப்பப்பட்டவர்கள் கலந்து கொள்ளவும் ஏற்கனவே திட்டமிட்டிருந்ததால் அங்கு சென்றோம்.
கூட்டம் சேர்ந்து கொண்டு இருந்தது.
கங்கா ஆரத்தியை பற்றி நமது வலையுலக இளவல் ஏற்கனவே விரிவாக எழுதி இருக்கிறார்கங்கா ஆரத்தி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ரிஷிகேசில் தங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்தோம். மறுநாள் அதிகாலை ரிஷிகேசில் கிளம்பி ஹரித்துவார் இரயில் நிலையம் 6 மணிக்கு வந்து, அங்கிருந்து இரயிலில் பயணம் செய்து மதியம் இரண்டரை மணிக்கு டில்லி வந்து சேர்ந்தோம்.

வரும் வழியில் எங்கும் எங்கும் விவசாயம்தான். அதற்கான தொழிலாளர்கள் எங்கு இருக்கிறார்கள் என மீண்டும் மீண்டும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை!!


முன்னதாக 10.08.10 அன்றே நண்பரிடம் சொல்லி, ஸ்பைஸ்ஜெட் ஏர்வேஸ்-ல் டில்லியிலிருந்து கோவைக்கு  12.10.10 அன்று நானும் இன்னொரு நண்பரும் டிக்கெட் முன்பதிவு செய்ததால் விரைந்தோம்.

 விமானம் 3 மணி நேரம் தாமதம்.:))இரவு கோவை வந்து இல்லம் திரும்பினோம்

இந்த பயணம் என்ன நோக்கத்தில் மேற்கொண்டேன் என்ன கிடைத்தது என என்னால் உள்ளது உள்ளபடி சொல்லத் தெரியவில்லை. பக்தி மார்க்கத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் சென்றதாக நிச்சயம் சொல்லமுடியாது. ஆனால் மனவிரிவு கிடைக்கவேண்டும். இங்கேயே தொழில், குடும்பம் என பலவித சூழ்நிலைகளை விழிப்புணர்வின்றி கையாண்டு வரும் துன்பங்களை அடையும் மனம்,  இப்படி வெளியே சென்று வரும்போது இவ்வுலகம் பரந்துவிரிந்தது எனப் படித்ததை அனுபவத்தில் கொஞ்சமேனும் உணர வைத்தால் அது இலேசாகிறது. எதற்கு இந்த மனதில் தேவையற்றவை நிரம்பிக்கிடக்கிறது?. பார்த்து, ரசித்து, அனுபவித்து வாழ இயற்கை எங்கும் அழகினை நிரப்பி வைத்திருக்கிறதே!

இயற்கையின் படைப்பில் நாம் ஒரு புள்ளியைவிட சிறியவர்களே. ஏன் இந்த மனதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டுமோ அப்படி வைத்து கொள்ளாமல் ஏன் சிரமப்பட வேண்டும் என்ற உள்நோக்குப்பார்வையை இன்னும் தீவிரப்படுத்தியது என்பது மட்டும் உண்மை:)))

இதை செயலுக்கு கொண்டு வருவதை இந்த பயணம் இயல்பாக்கி உள்ளது என்பதை உணர்ந்தேன்.

இனி மேற்கொண்டும் எந்த வித இலட்சியமும் இல்லாமல் பயணங்கள் பல மேற்கொள்ள வேண்டும் என ஆவல். பயணத்தை பயணமாக அனுபவிக்கவேண்டும். எங்கு என்ன எனக்கு கிடைக்கிறதோ, அது அனுபவமோ, அதிசயமோ, அப்படியே உள்வாங்கும் திறனோடு நான் இருக்கவேண்டும் என்ற ஆவலோடு நிறைவு செய்கிறேன்

இதுவரை என்னுடன் பயணித்த சக பதிவர்களான உங்களை வணங்கி மகிழ்கிறேன். இந்தப்பயணக்குறிப்பில் ஏதேனும் ஒரு செய்தியேனும் உங்களுக்கு பயனாக இருக்குமேயானால் என் அனுபவத்தை பகிர்ந்ததன் நிறைவை அடைகிறேன்........


வாழ்த்துகளுடன்

நிகழ்காலத்தில் சிவா
Post a Comment