"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, July 13, 2009

எதிர்மறைச் சிந்தனை

இன்றைய இளைஞர்கள் எதிர்மறையாகச் சிந்திக்கின்றார்கள்.

வாழ்க்கையைப் பற்றிய அவநம்பிக்கை வாதம் அவர்களிடம் அதிகமாக இருக்கிறது. எதையெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கின்ற மனப்பான்மை அவர்களிடம் அதிகமாக வளர்ந்து வருகிறது.

எதிர்மறைச் சிந்தனை நம்மை அழிவுப்பாதையை நோக்கி அழைத்துச் சென்றுவிடும்.
எந்த ஒரு முயற்சியிலும் சில குறைபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், அவற்றையும் மீறி நல்ல விசயங்களைப் பார்ப்பது என்பது நம்மைச் சுகமாக வைத்திருக்கின்ற ஒரு செய்தி.


எல்லாவற்றிலும் தேடிப்பிடித்தாவது குறையைச் சொல்வது என்பது நாளடைவில் நம் உடல்நலத்தைக் கூடப் பாதிக்கும்.காரணம், நம் மனதிற்கும் உடலுக்கும் மிகுந்த சம்பந்தம் இருக்கிறது.

மனம் சரியாக இல்லாவிட்டால் உடல் ஒத்துழைக்க மறுக்கின்றது.
மனதில் மகிழ்ச்சி இருந்தால், பசியைக்கூட மறந்துவிடுகிறோம்.


ஆனால், தொடர்ந்து எதிர்மறையாகச் சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் உடலில் அதிக அமிலம் சுரக்கின்றது.முகத்தில் சுருக்கம், உடல் தளர்வு ஏற்படுகிறது. எனவே நாம் வாழ்க்கையை நம்பிக்கையோடு பார்க்க வேண்டும்.

இன்னொரு மனப்பான்மை இருக்கின்றது.

எதைப் பார்த்தாலும் இதை விடச் சிறந்தது ஏற்கனவே எனக்குத் தெரியும் என்று சொல்லிக் காட்டுகிற மனப்பான்மை.

அடுத்தவர்களை மட்டம் தட்டுவதற்கான ஒரு உபாயமாக இருக்கிறது.

ஆனால், நம்மிடம் எவ்வளவோ குறைபாடுகள் இருக்கின்றன என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

பாரத பிரதமர் என்ன செய்ய வேண்டுமென்பதை ஒரு பள்ளி ஆசிரியர் (உதாரணத்திற்காகத்தான்) விலாவாரியாக சொல்கிறார்.ஆனால் அவர் பள்ளி ஆசிரியராக என்ன செய்ய வேண்டுமென்பதை மறந்துவிட்டுப் பாரத பிரதமருக்கு அறிவுரை கூறுகிறார் !

நிறையப் பேர் அடுத்தவர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.ஆனால் அவர்கள் கடமைகளை மட்டும் செளகரியமாக மறந்து போகிறார்கள்.எங்கேயாவது ஏதாவது பிசகு நடந்தால்கூட, அதைப் பெரிது படுத்துகிறார்கள்.

பூதக் கண்ணாடியால் பூங்கொத்துகளைப் பார்க்கிறார்கள்.
எங்கே குற்றம் நடக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
யாரை வேண்டுமானாலும் எளிதில் குறை சொல்லலாம் என்று நினைக்கிறார்கள்.


வாழ்க்கை என்பது நம்பிக்கை நிறைந்தது.
கூட்டை விட்டுப் பறக்கிற பறவைகள்கூட நம்பிக்கையோடுதான் பறக்கின்றன.
இன்று நாள் முழுவதும் நாம் சுகமாக இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றன


இளைஞர்கள் அனைவரும் புன்னகையோடு உலகத்தைப் பார்த்தால் நிச்சயமாக அவர்கள்மீது பூக்கள் சொரியும்.

நன்றியுடன்:இறையன்பு எழுதிய - ஏழாவது அறிவு – நூலில் இருந்து

Thursday, July 2, 2009

முடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்

சென்ற வாரத்தில் புதன்கிழமை அன்று காலை எழுந்தவுடன் முடிதிருத்தி்க் கொள்ளும் பொருட்டு சலூனுக்கு சென்றேன்.

பல வருடங்களாக வழக்கமாக முடி திருத்தும் நண்பர் அவர்., காலை 7.00 மணி ஆதலால் கூட்டம் ஏதும் இல்லை.

முடிதிருத்தும் பணி தொடங்கியது. சுமார் இருபது நிமிடத்தில் பணி முடியும் பொழுது, வழக்கமான செயலாக, கையை உயர்த்தச் சொல்லி அக்குள் பகுதியை சுத்தப்படுத்த தொடங்கினார்.

அப்போது அவர் கேட்ட கேள்வி. ”உங்ககிட்ட கேட்கவேண்டும் என நினைத்தேன், குளித்து விட்டு வந்தீர்களா?” என்றார்.

”இல்லை, எழுந்தவுடன் வந்துவிட்டேன்., ஏன்?” என்றேன்

”பலபேருக்கு கையை உயர்த்தினாலே துர்நாற்றம் வீசும், ’கப்’அடிக்கும், வீச்சத்துடன், முடியில் முடிச்சு,முடிச்சாக அழுக்கு பிரிக்க முடியாதபடி ஒட்டி கிடக்கும், உங்களிடத்தில் அப்படி எதுவுமே அடிக்கவில்லை, குளிக்கவுமில்லை, என்கிறீர்களே? எப்படி?“ என்றார் ஆச்சரியத்துடன் அவர்.

சரி,அவருக்கு புரிகிற மாதிரி, எனக்குத் தெரிந்த காரணத்தைச் சொல்லவேண்டும்.

மெள்ள ஆரம்பித்தேன்.,

“அது வேறொன்றுமில்லை. அக்குள் பகுதியில் அழுக்கு சேர வியர்வைதான் காரணம், வாசம் அடிக்க காரணமும் வியர்வையே.

வியர்வை என்பது உடலில் உள்ள கழிவுப்பொருளை வெளியேற்ற உதவுவது. வியர்வை சுத்தமாக இருந்தால் இது போன்று உடலும் சுத்தமாக இருக்கும்“ என்றேன்

அவர் உற்சாகமானார், அதோடு என்னை விடுவதாக இல்லை.

”வியர்வைன்னாலே அழுக்கை வெளிக் கொண்டு வருவதுதானே, அதுல அழுக்கு இல்லாம எப்படி?” என்றார்.

வியர்வை சுத்தமாக இருக்க வேண்டுமானால் நம்ம உடலில் கழிவுகள் எந்த ரூபத்திலும் தேங்கக்கூடாது., முக்கியமாக சளி, துளி கூட இருக்கக்கூடாது சளிதான் அனைத்து கிருமிகளுக்கும் வைட்டமின் மாத்திரை மாதிரி. கிருமிகள் உடலில் வளர ஆதாரமாக இருக்கும். உடல் இயங்குவதில் ஏற்படும் சாதரண கழிவுகளைக் கூட முழுமையாக வெளியேற்ற சளி இடைஞ்சலாகவே இருக்கும்”. என்றேன்.

அது மட்டுமல்ல, மது,புகைப் பழக்கங்களும், முறையற்ற உணவுப் பழக்கங்களும் உடலில் கழிவுகளைச் சேர்த்துக் கொண்டேதான் இருக்கும். இதனால் உடல் உள்உறுப்புகள் வெளியே தெரியாமல் உள்ளே இயக்கக் குறைபாடு அடையும். அது நமக்கு தெரியவரும்போது திரும்ப சரிசெய்ய இயலாத அல்லது சரி செய்யெ கடுமையாக வைத்தியம் பார்க்க வேண்டிய நிலையில் நாம் இருப்போம்.

சளியினால் ஏற்படும் இது நமக்கு தேவைதானா?“ என்றேன்.

”சரிங்க அப்படி நாம் உள்ளே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை எப்படி தெரிஞ்சிக்கிறது?” என்றார் அவர்.

”எப்பொழுது சிறுநீர் கழித்தாலும் அது எந்த அளவிற்கு வாசமோ/நாற்றமோ அடிக்கிறது என கவனிக்க வேண்டும்

எப்பொழுது மலம் கழித்தாலும் அது எந்த அளவிற்கு வாசமோ/நாற்றமோ அடிக்கிறது என கவனிக்க வேண்டும்

எப்போழுது சளி பிடித்தாலும் அது எந்த அளவிற்கு வாசமோ/நாற்றமோ அடிக்கிறது என கவனிக்க வேண்டும்

அவ்வளவுதான்”
என்றேன்

”வாசமடிக்கிற பாத்ரூமை சுத்தம் செய்யாமல் இருப்பதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.
நீங்கள் சொல்வதை பார்த்தால் பாத்ரூமைப் பார்க்காதே, நம்மைப் பார் என்று சொல்கிறீர்களே!” என்றார்.

”ஆமாம். நம் உடல் உள்ளே சுத்தமாக இருந்தால் அதிலிருந்து வெளியாகும் எந்த கழிவுமே துர்நாற்றம் அடிக்காது. அதற்குண்டான இயல்பான வாசமே இருக்கும். இதை உணர்ந்து, தொடர்ந்து கழிவுகளின் வாசனையை கவனித்து வர வேண்டும், இதுகுறித்து குடும்ப உறவுகளோ, நண்பர்களோ சுட்டிக்காட்டினால் கூட அக்கறையோடு கேட்டு செயல்படவேண்டும்”. என்றேன்.

”உடல் நாற்றம் அடிக்காமல் இருக்க உணவுப்பாதையான வாய் முதல் மலம் வெளியேறும் பகுதி வரை சுத்தமாக இருக்கவேண்டும். இதுவே சுத்தமான உடல் அமைய அடிப்படை“ என்றேன்.

”சரி இதற்கு என்ன செய்ய வேண்டும்,, நீங்க என்ன செய்றீங்க?” என்றார்.,

மிக எளிமையான சில விசயங்கள்தாம் காலை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு சிறிது எண்ணெய் கொப்பளித்தல், இது தொண்டையில் தேங்கியுள்ள உள்ள சளிக் கிருமிகள் அனைத்தையும் நீக்க...

பல்பொடி கொண்டு விரலால் பல்துலக்குதல், பின்னர் பிரஸ் கொண்டும் தேவையானால் பல் துலக்குதல்.

முடித்தபின் தண்ணீர் ஐந்து அல்லது ஆறு மிளகை கடிக்காமல் தண்ணீருடன் சேர்த்து விழுங்குதல், கூடவே போதுமான வரை தண்ணீர் அருந்துதல் இது குடலில் உள்ள சளிப்படலத்தை வெளியேற்ற உதவும்..

பின்னர் மலம் கழித்தபின்பு, குடல் தூய்மை”
என்றேன்.

“அப்படின்னா?” என்றார்.

பல்விளக்கியபின் வாய்கொப்பளிக்கிறோம் அல்லவா? அதுபோல் மலம் கழித்தபின் மலக்குடலை இயற்கைஎனிமா மூலம் சாதரண தண்ணீரை உள்செலுத்தி சுத்தப்படுத்துதல் அவ்வளவுதான்”


”இவற்றை தொடர்ச்சியாக நான் செய்து வருகிறேன். இவையெல்லாம் உடல் உள்ளும், புறமும் சுத்தமாக மாற சில எளிய வழிமுறைகள் ஆகும்.

இதை பின்பற்றினால் அன்றாட வாழ்க்கையில் மருத்துவரை அடிக்கடி அணுக வேண்டியதில்லை” என்றேன்

”நல்ல விசயமாக இருக்கே!” என்றார்

”நம்மால் பிறருக்கு எந்த தொந்தரவும் இருக்க கூடாது. சமுதாயத்திற்கும் நாம் பாரமாக இருக்கக் கூடாது இதை நினைவில் வைத்துக் கொண்டால் போதும். நல்ல விசயங்களில் நாட்டம் வரும்.” என்று சொல்லி விடைபெற்றேன்.,

என்ன நண்பர்களே, இனி நீங்களும் உங்கள் கழிவுகளின் வாசனையை கவனிப்பீர்கள்தானே, உங்கள் நன்மைக்காக முயற்சித்துப் பாருங்களேன்

சந்திப்போம், சிந்திப்போம்

Monday, June 29, 2009

திருப்பூர் பதிவர் சந்திப்பு 14.06.2009

திருப்பூர் பதிவர் சந்திப்பு கடந்த 14.06.2009 நடைபெற்று கொண்டிருந்தபோது சிறு காலதாமதத்திற்கு பின்னரே நான் கலந்து கொள்ள முடிந்தது.,

‘நிகழ்காலத்தில்’ என என்னை அறிமுகப் படுத்திக் கொண்டபோது., சற்றே யார் என புரியாமல் இருந்த நண்பர்கள் ’அறிவே தெய்வம்’ என்றவுடன் சிரிப்புடன் இயல்பான நிலைக்கு வந்தார்கள்.,

வெயிலான் பரிசல் தலைமையில் நடந்த பதிவர் சந்திப்பு குறித்து ஏற்கனவே பரிசல் எழுதி விட்டதால் படங்கள் இங்கே




(ஈரவெங்காயம், நிகழ்காலத்தில், செந்தில்நாதன்,செல்வம், பரிசல், வெயிலான்,சிறப்பு விருந்தினர் வடகரைவேலன், க்ர்பால்)

அது என்னவோ திருப்பூரில் உள்ள பதிவர்களின் உள்ளூர் சந்திப்பு என்பதால் உரையாடல் பல தலைப்புகளுக்கு சென்றும் மீண்டும் தொழில் பற்றியதாகவே அமைந்துவிட்டது.

தொழிலின் தன்மை, அதன் காரணமாய் முதலாளிகளின் நடவடிக்கைகள், தொழிலாளிகளின் நடவடிக்கைகள் , அதன் காரணமாய் அமையும் தாமதமாக சரக்கு அனுப்புதல், மற்ற தொழில்களுக்கும், திருப்பூரின் தொழில் தன்மைக்கும் உள்ள வேறுபாடுகள் என வடகரை வேலன் அண்ணாச்சியும், ராமனும் நன்கு அலசினர்.

கடைசியாக கிர்பால் அவர்களின் கேமாராவினால் புகைப்படம் எடுக்கப்பட்டது.

இடம்,தேநீர்,வடை,போண்டா அனைத்தும் ராமன் அவர்கள் ஏற்பாடு. அதற்கு நன்றிகள் பல.





நான், நடுவில் நண்பர் வெயிலான் , வலதுபுறம் இருப்பது ராமன்

Thursday, June 25, 2009

கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை

கோட்ஜாக் நகரின் ரப்பிமெண்டல் என்ற அருளாளர் கோயிலுக்குச் சென்றபோது, ஒரு கிராமத்தான் மிக ஆழ்ந்து, கண்ணீர் மல்க, பிரார்த்தனை செய்வதைக் கண்டார். அவன் படிக்காதவன், ஹீப்ரு மொழியை படித்தறியாதவன் என்று அவருக்குத் தெரியும். ஆனாலும் எதைச்சொல்லி இவ்வளவு ஆழ்ந்து பிரார்த்திக்கிறான் என்று அறிய அவர் ஆவல் கொண்டார்.

பிரார்த்தனை நேரம் முடிந்தவுடன் அவனைப் பார்த்துக்கேட்டார். அந்த கிராமத்தான் சொன்னான்:

‘ஐயா, நான் படிப்பறிவுஇல்லாதவன். அதனால் வேதத்தில் உள்ள பிரார்த்தனைகள் ஒன்றும் எனக்குத் தெரியாது. எனவே ‘அ’ விலிருந்து ஆரம்பித்து எல்லா எழுத்துக்களையும் திருப்பித் திருப்பிச் சொல்லி, கடவுளை அவருக்கு உகந்த சரியான பிரார்த்தனைக்குரிய வார்த்தைகளை அதிலிருந்து அமைக்கச் சொல்லி வேண்டுகிறேன். எனது அறியாமைக்காக இரங்கச் சொல்லி பிரார்த்திக்கிறேன்’

ரப்பிமெண்டல் திகைத்தார். அக்கிராமத்தானின் களங்கமற்ற திடநம்பிக்கை அவருக்குக் கண்ணீரை வரவழைத்தது.

‘ஆகா, உன்னுடைய பிரார்த்தனையே, என்னுடைய பிரார்த்தனையை விட மிகச் சிறந்தது. ஏனெனில் இதயத்தின் ஆழத்திலிருந்து, நீ மிகுந்த நம்பிக்கையுடன் இதைச் சொல்கிறாய். ஆண்டவன் எனது பிரார்த்தனையைவிடவும், உன்னுடைய பிரார்த்தனையை நிச்சயம் கேட்பார்’.

(இஸ்ரேல் நாட்டுக்கதை)

*******************************************************************************
நன்றி—ஞானப்புதையல் – முனைவர் எம்.இராமலிங்கன் – பூர்ணா பதிப்பகம்
*******************************************************************************

Friday, June 12, 2009

அன்பும் புறச் சாதனங்களும்--அகத்தூய்மை

தினமும் குளிப்பதனால்தான்

ஹரியை அடைய முடியுமெனில்


நீரில் வாழும் விலங்குகள்


ஹரியை அடைந்துவிட்டனவா?




பழங்களையும், கிழங்குகளையும் உண்டால்தான்


ஹரியை அடைய முடியுமெனில்


வெளவால்களும், குரங்குகளும்,


ஹரியை அடைந்து விட்டனவா?




துளசிச் செடியை வணங்குவதால் தான்


ஹரியை அடைய முடியுமெனில்


நான் துளசித் தோட்டத்தையே வணங்குவேனே!




கல்லை வணங்குவதால் தான்


ஹரியை அடைய முடியுமெனில்


நான் மலையையே வணங்குவேனே!




இலைகளையும் தழையையும் தின்றால்தான்


ஹரியை அடைய முடியுமெனில் ஆடுகள்


ஹரியை அடைந்து விட்டனவா?




பாலை மட்டும் அருந்தினால் தான்


ஹரியை அடைய முடியுமெனில்


கன்றுகள் ஹரியை அடைந்துவிட்டனவா?




புறச் சாதனங்களால் அல்ல


உண்மையான அன்பினாலேயே


நந்தகோபனை அடைய இயலும்.




அன்னை மீராபாய்

*******************************************************************************
நன்றி—ஞானப்புதையல் – முனைவர் எம்.இராமலிங்கன் – பூர்ணா பதிப்பகம்
********************************************************************************
இறைநிலையை உணர மேற்கண்ட உடல்சுத்தம், சைவ உணவுமுறை,கோவில் வழிபாடு, போன்றவைகளெல்லாம் ஆரம்பநிலை வழிமுறைகளே. இதை உணர்ந்து செய்யலாம். இவை உங்களை கொஞ்சம் கொஞ்சமாக சரியான திசையில் நகர்த்திச் செல்லும்.

ஆனால் ’இதுவே ஆன்மீகவாழ்க்கை’ என நாம் இதிலேயே சிக்கிக் கொண்டு அன்பை உள்ளே உணராமல், உணர்ந்தது வெளியாகாமல், அதுவாகாமல் வாழ்வது பொருத்தமானது அல்ல. இதையே அன்னை வலியுறுத்துகின்றார்

Tuesday, June 9, 2009

கடவுள் நல்லவரா கெட்டவரா

காட்சி ஒன்று

தருமி மாதிரி ஏழையான ஒரு தீவிர கடவுள் பக்தன் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறான். அளவு கடந்த வறுமை,

வாழ்வில் வளம் பெற எல்லா வழிகளிலும் முயற்சித்தும் இதுவரை எந்த பலனும் இல்லை. எந்நேரமும் இறைவனை நினைந்தபடி இருக்கும் அவன், இறைனிடமே கேட்க முடிவு செய்கிறான்.

ஒரு கோடி ரூபாய் பணம் வேண்டும்,அப்பொழுதான் தான் என் கஷ்டமெல்லாம் தீர்ந்து மகிழ்ச்சியாக வாழமுடியும். இதைப் பெறவேண்டி அன்றைய தினம் எந்த வேலைக்கும் செல்லாது பிரார்த்தனை செய்கிறான். இரவும் பிரார்த்தனை செய்துகொண்டே தூங்கி விடுகிறான். விடியற்காலையில் சப்தம் கேட்டு தூக்கத்திலிருந்து கண்விழித்துப் பார்க்கிறான்.

எதிரே பட்டுத்துணியில் கட்டப்பட்ட ஒரு மூட்டை, என்னவென்று அவிழ்த்துப் பார்க்கிறான் உள்ளே பணம் கட்டுக்கட்டாக, சரியாக ஒரு கோடி ரூபாய், இறைவனின் கருணையை எண்ணி வியந்து, மகிழ்கிறான்.

******************************************************************************************
காட்சி இரண்டு

கடவுள் தன் இருப்பிடம் திரும்பிக்கொண்டிருக்கின்றார், பின்னால் ஒரு பெரிய மூட்டை, எதிரே வந்த எமதர்மன் வணங்கி, என்ன இது என்றும் இல்லாத வழக்கமாய் பெரிய மூட்டையுடன் திரும்பிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டார்,

அதற்கு கடவுள், ”அது வேறொன்றுமில்லை, என் பக்தன் ஒருவனுக்கு கொடுக்க பணம் கொண்டு சென்றேன். அவன் ஒரு கோடி வேண்டும் எனக் கேட்டான். கொடுத்துவிட்டு திரும்பிக் கொண்டு இருக்கிறேன்.

நான் அவனுக்கு கொடுக்க நினைத்து கொண்டு சென்றதோ நூறு கோடி, பக்தன் கேட்டதை கொடுக்க வேண்டியது என் கடமை ஆதலால் வேறு வழியில்லாமல் கேட்ட ஒரு கோடியை கொடுத்துவிட்டு மீதி 99 கோடியை திருப்பிக் கொண்டுவந்துவிட்டேன்” என்றார்,

*****************************************************************************************
முதல் காட்சியில் ஏதேனும் தவறு இருக்கிறதா? எல்லாம் நிறைவாகத்தானே நடந்தது.

ஆனால் இரண்டாவது காட்சியை படித்தவுடன் முதல் காட்சியில் மறைந்த இருந்த தவறு புரிகிறதா?



இதிலிருந்து என்ன தெரிகிறது? செயலுக்கு விளைவாக சரியானதை இறைநியதி நமக்கு வழங்கியே தீரும். நமக்கு வருவதை, நடப்பதை மனதின் சமநிலை மாறாமல், மன விரிவோடு ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.

என்ன செய்தோம், என்ன கிடைத்தது எனப் பார்த்து செயலை ஒழுங்கு செய்வோம்,

எதிர்பார்ப்பு இன்றி சரியான முறையில் செயல்களை செய்யப் பழகிக்கொள்ளுங்கள், வரவேண்டியது தானாய் வரும். எதிர்பார்ப்பதைவிட பலமடங்கு அதிகமாய்.நிச்சயம் வரும்.

எதிர்பார்த்தால் நமக்கு வருவதை நாமே தடை செய்துவிடுகிறோம், பல சமயம் ஏமாற்றமும் அடைகிறோம்.

சிந்திப்போம், சந்திப்போம்

டிஸ்கி: நண்பர் ஓம்காரி்ன் இடுகைக்கும் இதற்கும் தொடர்பு உண்டு