"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Sunday, April 7, 2019

கர்ப்பிணிகள் பயப்பட தேவையில்லை!

கர்ப்பகால உடல் வீக்கம் குறித்து கூறும், மகப்பேறு மருத்துவர், கீதா ஹரிப்ரியா: 

கர்ப்ப காலத்தின் ஐந்தாவது மாதத்திலிருந்து, சில பெண்களுக்கு, கை, முகம், பாதம் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படலாம்; இது இயல்பானது. இதனால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமோ என, கர்ப்பிணிகள் பயப்பட தேவையில்லை.சீரான நடைப்பயிற்சி மற்றும் சரிவிகித உணவுகளின் மூலமே, இதை, சரி செய்து விடலாம். 

கர்ப்பிணிகளின் உடலின் தன்மையை பொறுத்து, வீக்கத்துக்கான காரணங்களும், தீர்வுகளும் வேறுபடும். பொதுவாக, கர்ப்ப காலத்தில், உடலின் ரத்த ஓட்டம் மற்றும் நீர்ச்சத்து, வழக்கத்தைவிட, 50 சதவிகிதம் அதிகமாக இருக்கும். இது, உடல் உறுப்புகள் வீக்கமடைய, காரணமாக அமையலாம்.

கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் எடை அதிகரிக்கும்போது, கர்ப்பப் பை விரிவடையும். அதனால், அதன் அருகில் உள்ள ரத்தக்குழாய் அழுத்தத்துக்கு உள்ளாகி, ரத்த ஓட்டம் சீரின்றி இருக்கும். ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது, சருமத்தின் அடியில் நீர் கோர்த்து, வீக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டாகலாம். 

அதிகப்படியான ரத்த அழுத்தம் காரணமாகவும், வீக்கம் ஏற்படலாம்.கர்ப்பிணிகளின் ரத்தத்தில் அதிகரிக்கும் உப்பு சத்தும், வீக்கத்தை ஏற்படுத்தலாம். அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்பது, கை, கால்களை அசைக்காமல் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பதாலும், வீக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு, உடலில் ஏற்படும் புரதம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகளும், வீக்கத்துக்கு காரணமாகின்றன.ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம், மெதுவான நடைப்பயிற்சி அவசியம். இறுக்கமான ஆடை மற்றும் காலணிகளை தவிர்க்கலாம். உடலை விட, கால்களை சற்று உயர்த்தி வைத்து கொண்டால், ரத்த ஓட்ட சீரின்மையால் கால்களில் ஏற்படும் வீக்கம் குறையும். 

தொடர் வீக்கம் இருந்தால், மருத்துவ ஆலோசனைபடி, ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்யலாம்.புரதச்சத்து நிறைந்த மீன், முட்டை, நட்ஸ், பயறு வகைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்ளலாம். கருவாடு, உப்புக்கண்டம், அப்பளம், ஊறுகாய், வற்றல் போன்ற வற்றை தவிர்க்க வேண்டும். பொட்டாசியம் நிறைந்த உணவுகளான வாழைப்பழம், கீரைகள், சர்க்கரை வள்ளிக் கிழங்கை சேர்த்து கொள்ளலாம்.பால், தண்ணீர், பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை, பருக வேண்டும். சீரான இடைவெளியில் சிறுநீர் வெளியேற்றமும் அவசியம். இதய கோளாறு, சிறுநீரக பிரச்னை உள்ளோர், கர்ப்ப காலத்தின் துவக்கத்திலிருந்தே, மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

நன்றி தினமலர் 07/04/2019

No comments:

Post a Comment

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)