"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, April 20, 2012

போடா வெண்ணை.....

நம்பிக்கை என்பதன் மீதுதான் நமது வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. உயிர் பயம் நமக்கு இல்லை என்று மார்தட்டினாலும்  கூடி வாழும் சமுதாய விலங்கு என்ற வார்த்தைக்கு பொருத்தமாக பாதுகாப்பை முன்னிறுத்தியே கூடி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். குழுவாய் இருக்கிறோம் என்ற உணர்வே தைரியமாய் நம்மை வாழ வைக்கிறது.

பாதுகாப்பு என்ற அம்சத்தை உள்ளடக்கியே என் மதம், என் சாதி, என் கட்சி, என் இனம், என் நாடு என்று இணைந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதில் தவறேதும் இல்லை. ஆனால் இதன்பொருட்டு பிறரை இம்சை பண்ணும்போதுதான் இவையெல்லாம் அவசியமா என தோன்றுகிறது.  என் மதம், என் சாதி, என் இனம், என் கட்சி என இவற்றை நான் நிறுவ முனையும்போது பிறரை தொந்தரவு செய்யாமல் இருக்க முடிவதில்லை.


கூடவே பணம் சம்பாதிக்க வேண்டும், புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற வேகம்,  சாதியை, மதத்தை அரணாக,காரணியாகக் கொண்டு இயங்கவைக்கிறது. இதில் ஒன்றுதான் சாதியை, மதத்தை உயர்த்திப்பிடித்தல்.

இந்த பூமி நம்மைப்போல் எத்தனைபேரைப் பார்த்துக்கொண்டு சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ உயிரினங்களை ஆக்கி அழித்துக்கொண்டும் இருக்கிறது. என்ன, நாம் தான் சற்று ஆறு அறிவு இருக்கிறது எனச் சொல்லிக்கொண்டு, துள்ளிகொண்டு இருக்கிறோம்.
நான் வாழும்பூமியை வாழத்தகுதியற்றதாக தெரிந்தோ தெரியாமலோ மாற்றிக்கொண்டு இருக்கிறோம்.

இயற்கையின் படைப்பு ஐம்பூதங்களினால் ஆன இயற்கையான பொருட்களும் உயிர்களும்தான் :) மனிதனின் படைப்பே இனம், நாடு, கட்சி, சாதி, மதம் இவையெல்லாம். விலங்குகளுக்கு இவையெல்லாம் இல்லை. கொடுத்து வைத்தவைகள். மனிதகுலத்தை அழிக்க வேறு உயிரினங்கள் வேண்டியதில்லை. மனிதனை அழிக்க சகமனிதனே போதும் என்கிற சூழல்தான் தற்போது நிலவிக்கொண்டு இருக்கிறது..

கண்முன்னே நம்மைப்போல் இருக்கும் சகமனிதனைப் பார்த்து எனக்கு வலிப்பதுபோல் இவனுக்கும் வலிக்கும், இவன் பேச்சினால் எனக்கு மனம் வலிப்பதுபோல் இவனுக்கும் நான் பேசினால் வலிக்கும் என்ற உணர்வு நமக்குள் எப்போது  வருமோ அப்போதுதான் அவனை காயப்படுத்தாமல் பேசமுடியும் அல்லது செயல் செய்ய முடியும். இது ஒன்றே விதைபோல., இதை நம்மால் கடைபிடிக்கமுடியுமானால் நிச்சயம் மாபெரும் மாற்றங்களை நம்மால் ஏற்படுத்த முடியும்.

சரி. இன்னொருவர் பேசினால் நான் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும். அப்படி பொறுத்துக்கொண்டே இருந்தால் எதிராளிக்கு கொண்டாட்டம்தானே., அவனை எப்படி அடக்குவது...இங்கேதான் சற்று ஆன்மீக சிந்தனையை துணைக்கு அழைக்க வேண்டியதாய் இருக்கிறது. பிறரின் பேச்சு நமது உடலை பாதிப்பதில்லை. மனதைப் பாதிக்கும். மனதில் உள்ளே இருக்கும் நான்  என்ற உணர்வை பாதிக்கும். நாம் சேர்த்துவைத்து இருக்கும் நம்மைப் பற்றிய பிம்பம்  என்று சொல்லப்படும் ஆணவம் திமிறி எழும். என்னை இவன் பேசறதா., என சீற்றத்துடன், ஆஙகாரத்துடன், கோபமாக வெளிப்படும்.

புரியுது. பேசாமல் விட்டுவிட்டால் நம்மளவில் அமைதியே... பேசியவன் கதி?  ...எல்லாம் வல்ல இறைநியதி சும்மா இருக்காது. வங்கியில் வாங்கியது கடனாக இருந்தால் வட்டிச்சுமை.. வங்கியில் போட்டது டெபாசிட்டாக இருந்தால் வரவு....நம்மைப் பேசியவன் கஷ்டப்படவேண்டும் என்பதல்ல நமது ஆசை.....செய்தவன் பலனை அனுபவிப்பான் என நாம் நிம்மதியாக இருக்கவே இந்த சிந்தனை.... இது எப்போது நமக்குள் வருகிறதோ அப்போது நம் வாழ்வில் மகிழ்ச்சி மணம் வீசும். இணையத்திலும் கூட :)) அதை அனுபவிக்க முயற்சி செய்து பாருங்களேன்.

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா

4 comments:

  1. நல்ல அறிவுரைகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. ****பிறரின் பேச்சு நமது உடலை பாதிப்பதில்லை. மனதைப் பாதிக்கும். மனதில் உள்ளே இருக்கும் நான் என்ற உணர்வை பாதிக்கும். நாம் சேர்த்துவைத்து இருக்கும் நம்மைப் பற்றிய பிம்பம் என்று சொல்லப்படும் ஆணவம் திமிறி எழும். என்னை இவன் பேசறதா., என சீற்றத்துடன், ஆஙகாரத்துடன், கோபமாக வெளிப்படும்.****

    பதிவின் மூலாதாரமே இந்த வரிகள்தானே... எவனொருவன் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறானோ அவன் நிச்சயம் வாழ்வில் நிம்மதி பெறுவான். இது எனது அனுபவத்தில் கிடைக்க உண்மை.. உயர்வான , பலருக்கும் பயனுள்ள பதிவை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  3. அருமையான கருத்துக்கள். நம் கோபதாபங்களுக்கு நம் ஆணவமே முக்கியகாரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)