"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, July 22, 2009

பொன்னை வைக்கும் இடத்தில்...

கல்வி என்பது வெறும் நூல்களில் இருந்து மட்டுமே அறியப்படுவது இல்லை.

பள்ளிக்கூடங்களில் மட்டுமே கற்பிக்கப்படுவதும் இல்லை.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் நம்மைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.


வெறும் நூல்களால் மட்டுமே அறிவாளிகள் உருவாவது என்றால், வீட்டிலே
(புத்தக அலமாரியில்) குடியிருக்கும் சிலந்திகள் நம்மைவிட ஞானிகளாக இருக்கும்.


பழங்காலத்தில் குருகுல முறை ஒன்றுண்டு. கற்க வேண்டுமென்றால் குருவிடம் சென்றுதான் கற்க வேண்டும்.குருவுடனேயே தங்கி இருக்கவேண்டும். குருவுடனேயே வாழ வேண்டும்.

குரு கற்றுத் தருவனவற்றிற்கும், அவர் வாழ்க்கைக்கும் இடைவெளி இருந்தால் அது சீடனுக்கு வெகு எளிதில் தெரிந்துவிடும்.

அப்படிப்பட்ட குருவை ஒருக்காலும் அவனால் மதித்து மரியாதை செலுத்த முடியாது.

குருவின் வாழ்க்கை அவனுக்குள் மெளனமாகச் சில மாற்றங்களை ஏற்படுத்தும். அவரின் அன்பு, அவரின் உணர்வு, அவரின் பரிவு ஆகிய ஒவ்வொன்றும் அவனிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குருவிடம் பணிவிடைகள் செய்யும்போது, அவனுடைய தான் என்கிற எண்ணத்தைக் கொஞ்சங்கொஞ்சமாக அவன் உதிர்க்க ஆரம்பிக்கின்றான்.

தன்னிடம் ஏற்கனவே நிறைத்து வைத்திருந்தவற்றைக் காலி செய்யக் கற்றுக்கொள்கிறான்.

ஏற்கனவே நிரம்பியதில் எதையும் ஊற்ற முடியாது.அவன் வெறும் பலகை ஆனபிறகு, குரு எழுத ஆரம்பிக்கிறார்.


பைபிளில் ஒரு வாசகம் வருகிறது.

’பன்றிக்கு முன் முத்துக்களைப் போட்டால், அவை அந்த முத்துக்களைக் காலால் நசுக்கிவிட்டு நம்மைத் தாக்க வரும்’ என்று!

இதற்கு பதில் சொல்லும்போது, பன்றிகளைக் குறை கூறுவதுபோல் விளக்கத்தைத் தருவது பலரது வழக்கம்.

ஆனால் சென் துறவி ஒருவர் விளக்குகையில், பன்றியின் முன் முத்துக்களைப் போடக்கூடாது என்று சொல்வது பன்றிகளைக் குறை கூறுவதாகப் பொருள் அல்ல

பன்றிகளுக்கு முன் எதைப் போடவேண்டுமென்று தெரியாமல் இருப்பது
நமது தவறு ஆகும். இதை உணரவேண்டும்.

நமக்கு வேண்டுமானால் முத்துக்கள் விலை உயர்ந்தவையாக இருக்கலாம்.உண்மையில் முத்துக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. அந்த மதிப்பை நாம்தான் அவற்றுக்கு உண்டாக்குகிறோம்.

ஒருவேளை காகங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்திருந்தால் நாம் அவற்றை இன்னும் அதிகமாக நேசித்திருப்போம்.

முத்தும் அபரிமிதமாகக் கிடைத்திருந்தால் அதற்கு நம்மிடம் மரியாதை இருந்திருக்காது.

ஆக, பன்றிகளுக்கு எது தேவையாக உள்ளதோ அதைத்தான் அவற்றிற்கு முன்னால் போடவேண்டும்.பன்றிகளைப் பற்றி நாம் பல தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் பன்றிகள் மிகவும் புத்திசாலியான பிராணிகள்.

அதைப்போலவே குருவினுடைய பணி, அந்த மாணவனிடம் எந்த அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்கிற நுட்பத்தின் அடிப்படையில் ஏற்படுவது.

ஒவ்வொரு சீடனுக்கும் ஒரு அணுகுமுறையைக் குரு வைத்திருக்கிறார்.


அந்த அணுகுமுறை இன்னொருவருக்குப் பயன்படாது.


குருவிற்கும் ஆசிரியருக்கும் இருக்கின்ற வேறுபாடு, அவர்கள் அணுகுமுறையினால் ஏற்படுவது.


ஆசிரியர் எல்லா மாணவர்களுக்குமாகச் சொல்லித் தருகிறார்.


குரு தனித்தனி சீடர்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கின்றார்.நன்றியுடன்
:இறையன்பு எழுதிய - ஏழாவது அறிவு – நூலில் இருந்து

9 comments:

 1. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்

  “அகநாழிகை“
  பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 2. நல்ல நூல்களை வாசிக்கும்போது அதில் சில கருத்துகள் நம் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.

  அவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு மகிழ்கிறேன்

  கருத்துக்கு நன்றி ”அக நாழிகை”

  ReplyDelete
 3. நல்ல சிந்தனைகள் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்பவர்கள் மாற்றிக் கொள்ளலாம்

  ReplyDelete
 4. //
  உண்மையில் பன்றிகள் மிகவும் புத்திசாலியான பிராணிகள்.
  //
  அப்படியா? தகவலுக்கு நன்றி.

  பன்றிக் கறி, உடம்புக்கு நல்லது. குளிர்ச்சி என்பதால் வெயில் பிரதேசங்களில் இருக்கும் மனிதர்கள் கோழி, மாட்டிறைச்சி தவிர்த்து, அதனை உண்பது நல்லது என்பது தான் எனக்குத் தெரியும். ;-)

  ReplyDelete
 5. \\கோவி.கண்ணன் said...

  நல்ல சிந்தனைகள் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்பவர்கள் மாற்றிக் கொள்ளலாம்\\

  கழுதை முதுகெலும்புக்கு பயிற்சி கொடுப்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்:)

  ReplyDelete
 6. Joe said...

  //
  உண்மையில் பன்றிகள் மிகவும் புத்திசாலியான பிராணிகள்.
  //
  அப்படியா? தகவலுக்கு நன்றி.

  பன்றிக் கறி, உடம்புக்கு நல்லது. குளிர்ச்சி என்பதால் வெயில் பிரதேசங்களில் இருக்கும் மனிதர்கள் கோழி, மாட்டிறைச்சி தவிர்த்து, அதனை உண்பது நல்லது என்பது தான் எனக்குத் தெரியும். ;-)\\

  அதில் எந்த அளவு உண்மை என்பதில் எனக்கு சந்தேகமே நண்பரே.,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 7. அன்பின் சிவா

  நல்ல சிந்தனைகள் கழுதைக்குத் தெரியுமா - தெரியும் - கழுதையின் எண்ணத்தில் அவை நல்ல சிந்தனைகளாக இருந்தால் - கோவியின் பார்வைக்கு

  நல்லதொரு இடுகை - நண்பா - சில செய்திகள் அவ்வப்பொழுது நம் காதுகளில் கண்களில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

  இறையன்பின் புததகங்கள் அனைவரும் படிக்க வேண்டும்

  நல்வாழ்த்துகள் சிவா

  ReplyDelete
 8. ஆசிரியர் எல்லா மாணவர்களுக்குமாகச் சொல்லித் தருகிறார்.


  குரு தனித்தனி சீடர்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கின்றார்.

  அருமையான விளக்கம் - சிவா

  புத்தக அலமாரிகளில் இருக்கும் சிலந்திகள் பல நூலுடன் இருப்பதால் நம்மை விட அறிவாளியாக இருக்க முடியும் - நூல்களினால் மட்டுமே அறிவாளியாக முடியும் என்றால்

  நல்ல சிந்தனை

  ReplyDelete
 9. cheena (சீனா) said...

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
  தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றிகள் பல

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)