"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Sunday, October 22, 2017

தானியங்கித்தனத்திலிருந்து விடுபடுதல் - ஓஷோ


நீ தானியங்கி இயந்திரம் ஆகிவிட்டாய். கார் ஓட்டுகிறாய் கூடவே நண்பனோடு பேசிக்கொண்டு இருக்கிறாய், கூடவே சிகரெட்டும் பிடிக்கிறாய், கூடவே ஆயிரத்தொரு எண்ணங்களை நினைத்தும் பார்த்துக்கொள்கிறாய். இந்த உன்னுடைய இயந்திரத்தனத்தை விட்டொழிக்க வேண்டி இருக்கின்றது

ஆயிரக்கணக்கான எண்ணங்கள் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்து, உன்னுடைய கவனத்தை ஈர்க்க, தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு உன்னை அலைக்கழிக்கின்றன.

ஒரு உள்நாட்டுப்போரே நடந்து கொண்டிருக்கின்றது. தமக்குள் முடிவில்லாது போரிட்டுக்கொண்டு இருக்கும் எண்ணங்கள் , நீ அவற்றை பூர்த்தி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரும்  எண்ணங்கள்.

இந்தக் களேபரத்தைத் தான் மனம் என்கிறாய். மனம் என்றாலே குழப்பம்தான்.

ஆனால் மனம் என்றாலே குழப்பம்தான் என்று தெரிந்து கொள்ளும்போது, உன்னை உன் மனத்தோடு அடையாளப்படுத்திப் பார்த்துக் கொள்ளாதபோது உனக்கு எப்போதும் தோல்வி இருக்காது.

உன்னுடைய இயந்திரத்தனத்தை விட்டொழிக்க வேண்டி இருக்கின்றது. . தானியங்கித்தனத்திலிருந்து விடுபட வேண்டி இருக்கின்றது

எதனாலும் பாதிக்கப்படாத மனநிலை, விழிப்போடு இருத்தல், பிரக்ஞை உணர்வோடு இருத்தல், சாட்சியாக இருத்தல், உள்ளடக்கம் ஏதுமில்லா உணர்வுடன் இருத்தல். இந்த நிலைதான் தியானம். இது தானியங்கித்தனத்திலிருந்து விடுபட்டு முழுபிரக்ஞை தரும்.

ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா






Tuesday, August 22, 2017

குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய உணவு முறை


பிறந்தது முதல், 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய உணவு முறை குறித்து கூறும், டயட்டீஷியன் ஷைனி சந்திரன்:

பிறந்த குழந்தைக்கு, முதல் ஆறு மாதம் வரை, கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்; தாய்ப்பால் தான் மிகச் சிறந்த ஊட்டச்சத்து உணவு.
மருத்துவர்கள் பரிந்துரைத்தால் அன்றி, வேறு உணவு தேவையில்லை.

சுகப்பிரசவம் அல்லது சிசேரியனில் குழந்தை பெற்ற பெண்கள், குழந்தை பிறந்தவுடன் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

ஆறு முதல், 12 மாதங்களில், குழந்தையின் எடை, பிறந்த போது இருந்ததை விட, இரண்டு மடங்கு கூடியிருக்கும். அதனால், 600 - 700 கலோரி வரை ஊட்டச்சத்து மிக்க உணவு, குழந்தைக்கு தேவை. தாய்ப்பால் மூலம், 400 - 500 கலோரி மட்டுமே கிடைக்கும் என்பதால், வேறு துணை உணவுகளும் கொடுக்க வேண்டியது அவசியம்.காய்கறி, நெய் சேர்த்து நன்கு மசிக்கப்பட்ட சாதம், வேக வைத்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, வாழைப் பழம், பிஸ்கட், பப்பாளி, மாம்பழக் கூழ், சப்போட்டா என, சிறிது சிறிதாக சத்துணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதாக இருந்தால், ஒரு நாளைக்கு மூன்று வேளையும், தாய்ப்பால் கொடுக்காவிட்டால், ஒரு நாளைக்கு ஐந்து வேளையும், இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்.குழந்தைக்கு தேவையான போது, 12 - 24 மாதங்கள் வரை தாய்ப்பால் புகட்டலாம். அனைத்து உணவுகளையும், புதுவிதமான ரெசிபிகளாக குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். அரிசி கஞ்சி, இட்லி, தோசை, உப்புமா, டோக் ளா, கடலை மாவு பர்பி, வெஜிடபிள் கட்லெட், பிரெட் துண்டுகளுடன் சீஸ் ஆம்லெட் என, வித்தியாசமாக தயாரித்து
கொடுக்கலாம்.இரண்டு வயதுக்கு மேல், தினமும் மூன்று வேளை உணவு கொடுக்கலாம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வாழைப்பழ மில்க் ஷேக், சப்போட்டா பழக்கூழ் போன்ற சத்துணவுகளையும் கொடுக்கலாம். 2 முதல், 5 வயது வரை, ஒரு குழந்தையைப் போல் மற்ற குழந்தைக்கு வளர்ச்சி இருக்காது.

எனவே, எந்த குழந்தையுடனும் உங்கள் குழந்தையின் வளர்ச்சியை ஒப்பிட்டு வருத்தப்பட வேண்டாம். 2 வயதில் சராசரியாக ஒரு குழந்தை, 2.5 கிலோ எடை அதிகரித்தும், 12 செ.மீ., உயரத்துடனும் இருக்கும். 3 - 5 வயதுக்குள், 2 கிலோ எடை அதிகரித்தும், 6 - 8 செ.மீ., வரை உயரம் அதிகரித்தும் இருக்கும். ஆறு முதல், 12 வயது வரை, குழந்தைகளின் வளர்ச்சி சீராக இருக்கும். பதின் பருவத்துக்கு முந்தைய கால கட்டம் என்பதால், குழந்தையின் எடை, 3 - 3.5 கிலோ அதிகரித்தும், உயரம், 6 செ.மீ., அதிகரித்தும் இருக்கும்.

சத்து மாவு லட்டு, தேங்காய் பர்பி, நிலக்கடலை உருண்டை, சன்னா சுண்டல், ராகி அடை, காய்கறிகள் சேர்த்த ஸ்டப்டு ரொட்டி, பேரீச்சம் பழம், பாதாம் பருப்பு சேர்த்த ஸ்நாக்ஸ் பார், எள்ளுருண்டை, வறுத்த நிலக்கடலை, அவல், பழ ஸ்மூத்தி போன்றவை சிறந்த உணவு!

குழந்தையின் விருப்பம், உங்களின் வசதிக்கேற்ப வீட்டிலேயே செய்து கொடுக்கும் போது, ஊட்டச்சத்தும் கெடாது; துாய்மைக்கும் உத்தரவாதம் கிடைக்கும்.

நன்றி தினமலர்


Wednesday, July 5, 2017

பெண்களுக்கான மேல்உள் ஆடை - கவனிக்கவேண்டியவை

அழகு மட்டுமல்ல; ஆரோக்கியத்திற்கும்நல்லது!


உள்ளாடை தேர்வில், பெண்களுக்கான விழிப்புணர்வு தகவல்களை கூறும், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர், டாக்டர் மகேஸ்வரி:

 உள்ளாடை என்பது உடை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. உடலுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம், அதன் தேர்வில் அடங்கியிருக்கிறது. மேலும், அது ஒரு தன்னம்பிக்கை காரணியும் கூட.

ஒவ்வொரு பெண்ணும் வாழ்நாளில், தன் மார்பக அளவில், ஆறுமுறை மாற்றங்களைச் சந்திக்கிறாள். பதின்வயதுகளில் ஆரம்பிக்கும் மார்பக வளர்ச்சி, அதன் இறுதி ஆண்டுகளில் முழுமையான வளர்ச்சியை எட்டியிருக்கும். கர்ப்ப காலத்தின் போது அதிகரிக்கும் மார்பக அளவு, குழந்தை பிறந்த பின், பால் சுரப்பிகளின் காரணமாக மேலும் அதிகரிக்கும்.

தாய்ப் பாலுாட்டுவதை நிறுத்திய பின், பழைய நிலைக்குத் திரும்பும் மார்பகத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கும். அடுத்ததாக, மெனோபாஸ் காலத்திலும் மார்பக அளவில் மாற்றம் ஏற்படும். வயதான காலத்தில் மார்பகம் சுருங்கும்.

இப்படி, பெண்களின் வாழ்நாள் முழுக்க மார்பக அளவு மாறியபடி இருக்கும். ஆனால், பலர் அதற்கேற்றவாறு, தங்களின் பிரேசியர் அளவை மாற்றுவதில்லை. இந்த அலட்சியம் களையப்பட வேண்டும்.

பொதுவாக, பெண்கள் பிரேசியர் வாங்கும்போது, 32, 34, 36 என, உடற்சுற்றளவின் அடிப்படையிலேயே அதை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், அதன், கப் அளவே மார்பகத்தின் அளவைக் குறிப்பது. அது, 'ஏ, பி, சி' என, மூன்று அளவுகளில் கிடைக்கிறது.உதாரணமாக, 34ஏ என்பது, உடலில் சுற்றளவு மற்றும் அதையொத்த பெரிய கப் சைஸ் கொண்டது. 34பி, சராசரி கப் சைசும், 34சி, சிறிய கப் சைசும் கொண்டது. எனவே, உடல் சுற்றளவு மட்டுமின்றி, கப் சைசையும் கேட்டு வாங்க வேண்டியது அவசியம்.

அதிக இறுக்கமான அல்லது தளர்வான பிரேசியர் அணிவதை தவிர்க்க வேண்டும். இறுக்கமாக அணியும் போது வலி, அரிப்பு, எரிச்சல், பட்டைகள் அழுத்துவதால் ஏற்படும் புண் என்று பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, மார்பகத்துக்குச் சரியான வகையில் சப்போர்ட் கொடுக்கும் உள்ளாடைத் தேர்வு அவசியம்.

பாலுாட்டும் நேரத்தில் உள்ளாடை அணிய வேண்டாம், அணியக் கூடாது போன்ற மூடநம்பிக்கைகள் உள்ளன. உண்மையில், அப்போது மார்பகத்தில் உண்டாகும் வலி, கட்டிகள், பால் கட்டும் பிரச்னைகளை தவிர்க்க, கட்டாயம் பிரேசியர் அணிய வேண்டும்.

குழந்தை பிறப்புக்கு பின் சில பெண்கள், பிரேசியர் அணியும் பழக்கத்துக்கு விடை கொடுத்து விடுகின்றனர்; அது மிகத் தவறு. அழகு மட்டுமல்ல, இது ஆரோக்கியமும் சம்பந்தப்பட்டது. மார்பகத்தின் கீழ்ப் பகுதியில் வியர்வை தங்கி அரிப்பு, புண் ஏற்படுவதைத் தவிர்க்கவும், செல்களின் தொய்வைக் குறைக்கவும், பெண்களுக்கு உள்ளாடை மிக அவசியமாகிறது.

சிந்தெடிக் ரகங்கள் தவிர்த்து, காட்டன் பிரேசியரையே பயன்படுத்த வேண்டும். வெயிலில் அதிகம் செல்வோர், புறஊதாக் கதிர்களை உள்ளிழுக்கும் அடர் நிறங்கள் தவிர்த்து, வெளிர் நிறங்களில் உள்ளாடையைத் தேர்ந்தெடுக்கலாம்.

உடல் எடை அதிகமானால், மெலிந்தால் அதற்கேற்ப பிரா அளவையும் மாற்றிப் பயன்படுத்த வேண்டும். மேலும், ஒரு பிரேசியரை ஆறு முதல் ஒன்பது மாதம் வரை பயன்படுத்தலாம். எலாஸ்டிக் லுாசாகி, ஹூக் உடைந்த, துணி நைந்து போனவற்றை பயன்படுத்த வேண்டாம்.

நன்றி
தினமலர்
05/07/2017


Wednesday, June 28, 2017

'டயாபர்' அணிவிப்பதால் ஏற்படும் தீமைகள் தெரியுமா ?


'டயாபர்' அணிவிப்பதால் ஏற்படும் தீமைகளை பட்டியலிடுகிறார், குழந்தைகள் நல மருத்துவர் கங்கா

பெண் குழந்தைகளுக்கு டயாபர் அணிவிக்கும்போது, அது பிறப்புறுப்பைத் தொட்டுக் கொண்டே இருக்கும். இதனால், அந்த இடத்தில் தோலில் அழற்சி - 'டெர்மெடைட்டிஸ்' ஏற்படும். சிறுநீரில் உள்ள யூரியா போன்ற வேறு உப்புகள், குழந்தையின் தோலில் தடிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, பூஞ்சைத் தொற்று - 'டேண்டிடா' ஏற்படுத்தும்.
காற்றோட்டம் இல்லாத ஈரமான இடங்களில் பூஞ்சைத் தொற்று எளிதில் ஏற்படும். பிறப்புறுப்பின் உள்ளே கிருமிகள் சென்று, யூரினரி இன்பெக் ஷனை ஏற்படுத்தக் கூடும். பெண் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு அதிகம்.

அதேபோல், ஆண் குழந்தைகளுக்கு டயாபர் அணிவிக்கும்போது, அது விரை பையில் பட்டு, அதிகச் சூட்டை உண்டாக்கும். இந்தச் சூடு அவர்களுக்கு நல்லதல்ல. இதனால், அணுக்கள் பாதிக்கப்படும்; விந்தணு உற்பத்தியாவது குறைகிறது. இந்தப் பாதிப்பு குழந்தையாக இருக்கும்போது தெரியாது; வளர்ந்து பெரியவர்களான பின் தான் தெரியவரும்.

ஜெல் டெக்னாலஜி உள்ள டயாபரில் உள்ள ரசாயனப் பொருட்கள், குழந்தையின் மென்மையான தோலுடன் வினைபுரிந்து, அதிகமான அழற்சியை ஏற்படுத்தும். மேலும், தளர்வான டயாபர்களே சிறந்தவை. பிளாஸ்டிக் இழைகள் கலந்த, இறுக்கி பிடிக்கும் டயாபர், அரிப்பு, வறட்சி மற்றும் தோல் சிவந்து போதல், புண் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, இதை தவிர்ப்பது நல்லது.

இரவு நேரங்களில் டயாபர் அணிவிக்கும்போது, குழந்தைகள் சிறுநீர், மலம் கழித்தால் அம்மாவுக்கு தெரியாது. ஆனால், குழந்தை அசவுகரியமாக உணரும். கழிவில் உள்ள பாக்டீரியாக்களால் அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டு, சிறிது நேரத்திலேயே அந்தக் குழந்தை அழ ஆரம்பிக்கும்.

வெளியூர் மற்றும் விசேஷங்களுக்கு செல்லும்போது, டயாபர் அணிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இச்சூழ்நிலைகளில், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, கண்டிப்பாக டயாபரை மாற்ற வேண்டும். அத்துடன், டயாபரைக் கழற்றியவுடனேயே அடுத்ததை அணிவிக்கக் கூடாது. அரை மணி நேரம் காற்றுப் பட விட்டு, பின்னர் போடவும். சிறுநீரோ, மலமோ குழந்தை போகவில்லை என்பதற்காக, பயன்படுத்தியதையே திரும்பப் போடக் கூடாது.

ஒன்றரை வயது தாண்டிய குழந்தைகளுக்கு, டயாபரைத் தவிர்த்து, 'டாய்லெட் டிரெயினிங்' கொடுக்க வேண்டும். தொடர்ந்து டயாபர் போடும் குழந்தைகளுக்கு, இந்தப் பயிற்சி அளிப்பது தாமதமாகும்.
டயாபர் போடும்போது, சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால், தடிப்பு ஏற்படுவது குறையும் என்பது தவறு. சிறுநீரில் உள்ள யூரியா மற்றும் மற்ற உப்புக்கள், எண்ணெயுடன் வினைபுரிந்து மேலும் பாதிப்பை அதிகரிக்கும்.

டயாபருக்கு மேல் பேன்டீசையும் அணிவிப்பது முற்றிலும் தவறு. இதனால் காற்றோட்டம் சுத்தமாகக் கிடைக்காது. தொடர்ந்து இவ்வாறு அணிவிக்கும்போது, குழந்தைகளின் இரண்டு தொடைகளும் விலகி, அவர்கள் நடையில் மாற்றம் ஏற்படும்.

நன்றி
தினமலர்
28/06/2017


Tuesday, June 27, 2017

கர்ம வினைகள் பற்றி.... ஓஷோ


உன் பெற்றோரை, உன் ஆசிரியர்களை, அரசியல்வாதிகளை, சாமியார்களை, இப்படி சமூகத்தில் பலரையும், வெகுவாக நம்பிக் கொண்டிருந்து விட்டாய்.  அவர்கள் சொன்னதை எல்லாம் மூட்டை கட்டி உன்னுள் அடுக்கி வைத்துக் கொண்டே இருந்துவிட்டாய்.

ஏழ்மையுடன் இருக்கிறாய். காந்தி ஏழைகளைத் தரித்திர நாராயணர்கள் என்றார். ஏழைகள் கடவுள்களாம். ஏழ்மை தெய்வீகமாம். இது உண்மையென்றால் ஏழையாக இருக்க யார்தான் விரும்பமாட்டார்கள் ?

இந்த வியாக்யானத்தை சமணர்கள், பெளத்தர்கள் போன்றோர் கடவுளை நம்பாதவர்கள் என்பதால், அவர்களுக்கு தரமுடியாது அல்லவா ? அவர்களுக்காகவே கர்மா கோட்பாடு வந்தது

உன்னுடைய முற்பிறவிகளில் பாவங்கள் செய்துவிட்டாய். அதனால் இந்தப் பிறவியில் ஏழையாக இருக்கிறாய்., துன்பங்கள் அனுபவிக்கிறாய். முற்பிறவியில் பாவங்கள் செய்திருப்பதால் அதை இந்தப் பிறவியில் கழித்துவிட வேண்டும். அதனால் வறுமை, துன்பம் அனுபவி. எதிர்த்தால் இன்னும் புதிய கர்மவினைகளைப் புரிந்து அடுத்த பிறவிக்கு வழிவகுக்கிறாய். மனதார துன்பப்பட்டு கர்மாவைக் கழித்துவிடு.

இப்படிச் சொல்லிச் சொல்லி மனிதர்களை மாடுகளாகவும், எருமைகளாகவும் ஆக்கிவிட்டார்கள். குற்ற உணர்ச்சி கொள்ள வைத்து, எந்த  எதிர்ப்பும் இன்றி துயரத்துடனும், துன்பத்துடனும் திருப்தி அடைந்துவிடுகிறார்கள்.

நான் சொல்வதை வெறுமனே நம்பாதே. நம்புகிறவர்களை உருவாக்குவதல்ல என் வேலை.  முகம்மதுவை, கிறிஸ்துவை, புத்தரை நம்பிக்கொண்டிருந்த நீ என்னையும் நம்ப ஆரம்பித்துவிடாதே. என்மீது நம்பிக்கை வை என்று நான் சொல்லவில்லை. எல்லா நம்பிக்கைகளையும் ஓரம்கட்டிவிட்டு நீயாக உனக்குள் பார் என்கிறேன்.  பரிசோதனைகளை மேற்கொள். தியானி, அனுபவங்களை உணர்ந்துபார். சாத்திரங்களை நம்பாமல் உன் அனுபவங்களை நம்ப ஆரம்பித்து விடுவாய்  அனுபவங்கள் உன்னுடையது ஆகும்வரை எந்தப்புரிதலாலும் பயன் இல்லை.

உனக்கு எதுவெல்லாம் தேவையோ, அதுவெல்லாம் உன்னிடம் ஏற்கனவே உள்ளது.  உள்ளே திரும்பிப் பார்க்க வேண்டியது மட்டுமே பாக்கி. நாம் கடவுளின் ஒரு பகுதி. கடவுள் நம்மில் ஒரு பகுதி. நீ உள்ளே திரும்பிக் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே காத்திருக்கிறது.

ஆனந்தம் அன்பு பரவசம் என்று வற்றாத பொக்கிசம் உள்ளே இருப்பதை காண்பாய்.
.
ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா





Monday, June 26, 2017

கேள்வியும் பதில்களும் - ஓஷோ

முந்தய பதிவில், கேள்வி எப்போதுமே சரிதான்.. பதில்கள்தாம் தவறுக்கு உட்பட்டவை என்று பார்த்தோம். வாழ்க்கை அனுபவத்தில் பல வருடங்களுக்கு முன் சரியாக இருந்தது. தற்போது, எனக்குள் எழுகின்ற கேள்விகள் அனைத்தும் தேவையில்லாதவை என உணர்கிறேன்.

பிறரது கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் நேருகின்றபோது எந்தப் பிரச்சினையும் இல்லை. மறைமுகமாக ஒரு பிரச்சினை உண்டு.. பலவிதமான பதில்கள் முந்திக்கொண்டு நிற்கும். மனம் சார்ந்த கேள்விகள் என இங்கே குறிப்பிடுவது அவசியம்.

எனக்குள் எழும் கேள்விகளே தேவையில்லை என்றபொழுது ஏற்கனவே எனக்குள்  இருக்கின்ற பதில்கள் பலவும் இல்லாது போக வேண்டியவையே..

ஆம். கற்றவை அனைத்தும் பயன்பட்ட காலம் போய், கழித்துவிடவேண்டிய தருணம் வந்துவிட்டது.

இனி ஓஷோவின் வார்த்தைகளைப் பார்ப்போம்.
                                                                           ----


மனதில் பதில்கள், பதில்கள் என்று பலவும் இருக்கின்றன.  இது முடிவில்லாது தொடரும். ஆனால் உண்மையில் பதில் என்பது ஒன்றே ஒன்றுதான்.
அந்த பதில் எல்லா கேள்விகளையும் கரைத்துவிடும்.

 கேள்விகளின் சித்திரவதை இருந்து கொண்டேதான் இருக்கும். மனதில் பதில்கள் இருக்கும்வரை புதிய கேள்விகள் வந்து கொண்டுதான் இருக்கும். மன வேர் இருக்கும்வரை கேள்விகள் கிளைத்து, புதிய தளிர்கள் அரும்பிக் கொண்டேதான் இருக்கும்.

மனதின் பிணைப்பை அறுக்கும்போது, அதன் வேர்களை வெட்டுகிறாய்.
மனதோடு ஆன அடையாளங்களை விட்டு ஒதுக்கும்போது, எதனோடும் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் பரிசுத்தமாக, ஒரு சாட்சியாகப் பார்த்துக் கொண்டு, கவனித்துக்கொண்டு இருக்கும்போது எல்லோரிடத்திலும் கேள்விகள் கரைந்து போகின்றன.

இப்போது மிஞ்சி இருப்பது ஒரே ஒரு பதில்தான். அதுவே ஆழ்ந்த நிர்ச்சலனம்.

ஒருவேளை  கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் தெரிவது போல் நினைக்கிறாயா ? அது ஒரு பிரமை. இந்த மனம் பிரமைகளைத் தோற்றுவிப்பதில் வெகு சமர்த்து. இந்த மனம் பசப்பக் கூடியது. அறிவு என்ற பெயரில் உன்னை ஏமாற்றிவிடும். எல்லாவற்றிலும் உன்னை ஏமாற்றக் கூடியது.  ஏற்கனவே ஞானியாகி விட்டாய். புத்தனாகிவிட்டாய் என்று கூட உன்னை நம்ப வைத்து ஏமாற்றி விடும். எச்சரிக்கையாக இரு.

மனதைக் கூர்ந்து கவனி. அப்படி கவனிப்பதில் கேள்விகள் மறைந்து போகின்றன. அவ்வளவே. பதில்கள் கிடைத்துவிடுகின்றன என்று நான் சொல்லவில்லை.

பதில்கள் என்ற தகவல்களை நூல்கள், பல்கலைக்கழகம், ( இணையம் ) என எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம். விபரம் தெரிந்தவராக ஆகிவிடலாம். ஆனால் என் பணியோ '' நீ கற்றுக்கொண்டதை விட்டுவிட வைப்பதுதான்” இப்போது உன்னிடம் பதில்கள் இருப்பது இல்லை. இயல்பாகச் செயல்படுகிறாய். ஏற்கனவே இருக்கின்ற முடிவுகளைச் சார்ந்தோ, கடந்த காலம் சார்ந்தோ இல்லாமல் இயல்பாய் நீரூற்று கிளம்புவது போல் உன் செயல்கள் அமைகின்றன.



ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா