"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, June 10, 2017

அந்த உணர்வு உங்களைப் பற்றிக்கொள்ள.. ஓஷோ

அந்த உணர்வு உங்களைப் பற்றிக் கொள்ள அனுமதியுங்கள். அப்போது அது என்னவென்று புரிந்துவிடும். ஆனால் அதற்கு மாறாகவே நீங்கள் செயல்படுகிறீர்கள். அதை நீங்கள் ‘பற்றிக்’ கொள்ளவே முயல்கிறீர்கள். மனம் அப்படித்தான் விரும்புகிறது. இதைத்தான் மனம் ‘புரிந்து கொள்ளுதல்’ என்று உங்களுக்குச் சொல்கிறது. எதையாவது ஒன்றைப் பற்றாத வரை மனம் நிறைவடைவதே இல்லை.

எதுவும் செய்யாமல் , சாதரண மெளனத்துடன் உடலளவிலோ, உணர்வுபூர்வமாகவோ, அறிவுபூர்வமாகவோ எதுவும் செய்யாமல் , சும்மா அப்படியே முழு அமைதியுடன் இருக்க முடிகிறதா ? முடிந்தால் அது உங்களைப் பிடித்துக் கொள்ளும்.  அதை அறிவதற்கான ஒரே வழி, அது உங்களைப் பிடித்துக் கொள்ள அனுமதிப்பது மட்டுமே.

பறவைகளின் பாடல் கேட்கும்போது, காற்று மரங்களிடையே வீசும்போது, நீரோடையில் தண்ணீர் சலசலத்து ஓடும்போது உங்களை அந்த உணர்வு பற்றிக் கொள்ள அனுமதித்தால் போதும், சட்டென எங்கிருந்தோ உண்மை வெளியாகிவிடும். உங்களுக்குள் தம்மம் தோன்றிவிடும்.

வைகறை விண்மீன் மறைவதைப் பார்த்தபடி மரத்தடியில் அமர்ந்திருக்கும் போதுதான் புத்தர் ஞானம் பெற்றார்.
புத்தருக்கு ஞானம் கிட்டியது மரத்தடியில்...
மகாவீரருக்கு ஞானம் கிட்டியது வனத்தில் சும்மா உட்கார்ந்திருந்த போது...
முகம்மதுவிற்கு ஞானம் பிறந்தது மலையொன்றின் உச்சியில்...

அதிகாலையில் எழுந்துபோய் உதிக்கும் சூரியனைப் பார். நடு இரவில் உட்கார்ந்து வானத்து நட்சத்திரங்களைப் பார்.. நிலவினைப் பார். மரங்களையும் பாறைகளையும்  நண்பனாக்கிக் கொள். ஆற்றருகே அமர்ந்து அதன் கலகலப்பைக் கேள்.  அப்படிச் செய்யும்போது இயற்கை உன்னைத் தன் வசப்படுத்த விடு. இயற்கையை மனதால் உன் உரிமையாக்க நினைக்காதே.  உன்னை அதன் வசப்பட அனுமதித்துவிடு.

அது உன்னை வசப்படுத்தட்டும்.  விடு... அதை ஆடி அனுபவி..  பாடி அனுபவி. அதனோடு இரண்டாகக் கலந்துவிடு.அதுதான் அதை அறிந்துகொள்ளும் ஒரே வழி.

ஓஷோ
தம்மபதம் I

பொழுதுபோக்கு - கடவுள் - ஓஷோ


பொழுது போக்கு

எத்தனை நாளைக்குத்தான் உணவுக்காகவும், குடும்பத்துக்காகவும் பாடுபட்டுக் கொண்டு இருப்பது ?

யாருக்குமே அலுப்புத் தோன்றத்தான் செய்யும்.  அப்படி அன்றாட வேலையில் அலுப்புத் தோன்றும்போது மாற்றாக இரண்டு வழி உண்டு.

ஒன்று சும்மா இருப்பது... சும்மாயிருப்பது என்பது தன்னோடேயே மட்டும் இருப்பது. அவரவர் உள்ஆழத்தில் இருப்பதை எதிர்கொள்வது. ஆனால் சும்மா இருப்பது என்பது உன்னை பயப்பட வைக்கின்றது.  முடிவில்லாத, பயத்தை தரக்கூடிய, புரிந்து கொள்ள இயலாத, பரந்திருக்கும் மனதின் அளவே பெரியதொரு நடுக்கத்தை தரக்கூடியதாக அமைந்துவிடுகிறது.

மற்றொன்று... ஏதோ ஒரு முட்டாள்தனமான காரியத்தில் இறங்கிவிடுவது.  அதற்குப் பொழுதுபோக்கு என்று பெயர் வைத்துவிடுவது. எல்லாப் பொழுதுகளும் உன்னிடமிருந்தே உன்னைத் தப்பித்திருக்கச் செய்யும் முயற்சிகள்தாம். பொழுதுபோக்கு என்பதே வேலையின் மற்றொரு பெயர்தான். உண்மையான வேலை உனக்கு இல்லாத நேரங்களில் பொழுது போக்கு என்ற போலி வேலையில் ஈடுபட்டு பொழுதைக் கழிக்கிறாய்.

ஞாயிற்றுக்கிழமைக்கு ஏங்குகிறாய்.. ஏதோ ஒன்றைச் செய்து நாளைக் கழிக்கிறாய். அதற்கு பொழுதுபோக்கு என்று பெயர் வைத்து விடுகிறாய். சம்பளமில்லாத வேலையின் பெயர்தான் பொழுதுபோக்கு.

உனக்கு ஓய்வெடுக்கத் தெரியாது. தளர்வாக இருக்கத் தெரியாது. இதற்கான சந்தர்ப்பங்களைத் தேடிப்பார். எப்போதெல்லாம் செய்வதற்கு ஒன்றுமில்லையோ, அப்போதெல்லாம் உன்னோடயே இருந்து பார்.



                                                  ********************



கடவுள் ஒரு முழுமை. முழுவதும் அவரே. இருப்பவரும் அவரே. நாம் அவருடைய பகுதிகள். பகுதிகள் முழுமையைப் பார்த்து பயந்திருப்பது ஏன் ?
முழுமைக்குத் தன் பகுதிகளின் மீது அக்கறை இருக்கின்றது.. பகுதிகள் இல்லாமல் முழுமை இருக்க முடியாது அல்லவா ?
அதனால்தான் முழுமை தன் பகுதிகளை அலட்சியப்படுத்த முடியாது.

இதைத் தெரிந்து கொள்ளும்போது முழுமையின்மீது விசுவாசம் பிறக்கின்றது. இதைத் தெரிந்து கொள்ளும்போது முழுமை தன்னை வசப்படுத்தி வைத்துக் கொள்ள, தன்னை ஒப்புக் கொடுக்கிறான். பயங்களை விட்டுத் தொலைக்கிறான். சரண் அடைகிறான். முழுமை இருப்பது சரணாகதியில், விசுவாசத்தில்...

ஓஷோ
தம்மபதம் I