"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, June 10, 2017

பொழுதுபோக்கு - கடவுள் - ஓஷோ


பொழுது போக்கு

எத்தனை நாளைக்குத்தான் உணவுக்காகவும், குடும்பத்துக்காகவும் பாடுபட்டுக் கொண்டு இருப்பது ?

யாருக்குமே அலுப்புத் தோன்றத்தான் செய்யும்.  அப்படி அன்றாட வேலையில் அலுப்புத் தோன்றும்போது மாற்றாக இரண்டு வழி உண்டு.

ஒன்று சும்மா இருப்பது... சும்மாயிருப்பது என்பது தன்னோடேயே மட்டும் இருப்பது. அவரவர் உள்ஆழத்தில் இருப்பதை எதிர்கொள்வது. ஆனால் சும்மா இருப்பது என்பது உன்னை பயப்பட வைக்கின்றது.  முடிவில்லாத, பயத்தை தரக்கூடிய, புரிந்து கொள்ள இயலாத, பரந்திருக்கும் மனதின் அளவே பெரியதொரு நடுக்கத்தை தரக்கூடியதாக அமைந்துவிடுகிறது.

மற்றொன்று... ஏதோ ஒரு முட்டாள்தனமான காரியத்தில் இறங்கிவிடுவது.  அதற்குப் பொழுதுபோக்கு என்று பெயர் வைத்துவிடுவது. எல்லாப் பொழுதுகளும் உன்னிடமிருந்தே உன்னைத் தப்பித்திருக்கச் செய்யும் முயற்சிகள்தாம். பொழுதுபோக்கு என்பதே வேலையின் மற்றொரு பெயர்தான். உண்மையான வேலை உனக்கு இல்லாத நேரங்களில் பொழுது போக்கு என்ற போலி வேலையில் ஈடுபட்டு பொழுதைக் கழிக்கிறாய்.

ஞாயிற்றுக்கிழமைக்கு ஏங்குகிறாய்.. ஏதோ ஒன்றைச் செய்து நாளைக் கழிக்கிறாய். அதற்கு பொழுதுபோக்கு என்று பெயர் வைத்து விடுகிறாய். சம்பளமில்லாத வேலையின் பெயர்தான் பொழுதுபோக்கு.

உனக்கு ஓய்வெடுக்கத் தெரியாது. தளர்வாக இருக்கத் தெரியாது. இதற்கான சந்தர்ப்பங்களைத் தேடிப்பார். எப்போதெல்லாம் செய்வதற்கு ஒன்றுமில்லையோ, அப்போதெல்லாம் உன்னோடயே இருந்து பார்.



                                                  ********************



கடவுள் ஒரு முழுமை. முழுவதும் அவரே. இருப்பவரும் அவரே. நாம் அவருடைய பகுதிகள். பகுதிகள் முழுமையைப் பார்த்து பயந்திருப்பது ஏன் ?
முழுமைக்குத் தன் பகுதிகளின் மீது அக்கறை இருக்கின்றது.. பகுதிகள் இல்லாமல் முழுமை இருக்க முடியாது அல்லவா ?
அதனால்தான் முழுமை தன் பகுதிகளை அலட்சியப்படுத்த முடியாது.

இதைத் தெரிந்து கொள்ளும்போது முழுமையின்மீது விசுவாசம் பிறக்கின்றது. இதைத் தெரிந்து கொள்ளும்போது முழுமை தன்னை வசப்படுத்தி வைத்துக் கொள்ள, தன்னை ஒப்புக் கொடுக்கிறான். பயங்களை விட்டுத் தொலைக்கிறான். சரண் அடைகிறான். முழுமை இருப்பது சரணாகதியில், விசுவாசத்தில்...

ஓஷோ
தம்மபதம் I
                                                             



Friday, June 9, 2017

பிரார்த்தனை - தியானம் - ஓஷோ

பெளத்தம் பற்றி ஓஷோ குறிப்பிடும்பொழுது..

கிறிஸ்துவம், யூதம், இஸ்லாம் ஆகியவற்றிலிருந்து பெளத்தம் வேறானது.
இம்மூன்று சமயங்களும் ஏதோ ஒரு வகையில் உரையாடலை பற்றிக் கொண்டிருந்தன. உரையாடல் என்று வந்தாலே இருமையை, துவைதத்தை வலியுறுத்தல்தான்… 

பிரார்த்தனை என்றவுடன் உன்னிலும் வேறாக கடவுள் ஒருவர் இருக்கின்றார். நீ அவருடன் பேசுகிறாய் என்று பொருளாகி விடுகிறது. அந்த உரையாடல் எவ்வளவு அழகாக இருந்தாலும் அங்கு நிலவுவது பிரிவினைதான். பிளவுதான். பிரார்த்தனை என்பதே இன்னொருவரிடத்தில் முறையிடுவது.. உண்மையோ உண்மையில்லையோ யாரிடமாவது முறையிடுவதுதான்.

ஆனால் பெளத்தமோ தியான மதம். மெளனமே இதன் வழி.  தியானத்தில் முறையீடே கிடையாது, ஒருவர் மெளனத்தில் வீழ்ந்துவிடுவது.. ஒன்றுமில்லாமல் அப்படியே காணமல் போய்விடுவது. ஒருவர் இல்லாமல் போய்விடும்போது எஞ்சி நிற்பது தியானம் மட்டுமே.

                                *********************

புத்தர் தியானத்தை மட்டுமே வலியுறுத்துகிறார். அது கடவுள்தன்மையின் ஒரு பக்கம் மட்டுமே. 

முகம்மது நபி தொழுகை, இசை, பாடல் இவற்றினை வலியுறுத்தினார். குரானைப்போல் வேறு எந்த வேதநூலிலும் அந்த அளவு இசையைக் காணமுடியாது.

உலகில் மூன்று வகையான சமயங்கள் மட்டுமே உண்டு. 

இஸ்லாம், இந்து, கிறிஸ்துவம், யூதம், இவை இசைச் சமயங்கள். 

இரண்டாவதாக பெளத்தம், தாவோயிசம் போன்றவை தியான சமயங்கள். 

சமணமோ கணிதச் சமயம். மகாவீரர் சார்புடைமைக் கோட்பாடு பற்றிப் பேசிய முதல் மனிதர். அதன்பின் இருபத்தி ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் ஐன்ஸ்டீனால் அறிவியல் பூர்வமாக அதை நிரூபிக்க முடிந்தது.

இந்த மூன்று அம்சங்களும் சேர்ந்த முழுமையானதொரு சமயத்தையே நான் (ஓஷோ ) வழங்க  முயல்கிறேன்.

ஓஷோ
தம்மபதம் I

Tuesday, January 31, 2017

சிறுபுல்லும் பிரபஞ்சமும் -- ஓஷோ

'தம்ம' என்ற சொல் பல பொருள் தரும். இயற்கைச் சட்டம் அல்லது விதி என்ற ஒரு பொருளும் உண்டு. விதி என்பது  பிரபஞ்சத்தையே ஒன்றிணைத்து வைத்திருக்கும் மேலான விதி.. கண்ணுக்குப் புலப்படாத விதி., புதிரான விதி., ஆனால் சர்வ நிச்சயமாய் இருக்கும் விதி.

இல்லாவிட்டால் பிரபஞ்சம் சிதறுண்டு போகும். எல்லையற்ற, விசாலமான பிரபஞ்சம் எவ்வளவு இணக்கமாக, அமைதியாக, ஆற்றலுடன் ஒத்திசைவாக இயங்கிக்கொண்டு இருக்கிறது என்பதை உணருங்கள். எல்லாவற்றையும், எல்லாவற்றோடும் இணைக்கும் ஆதார சக்திப் பிரவாகம் ஒன்று இருக்கின்றது என்பதற்கு, இந்த ஒத்திசைவான இயக்கமே சான்று.

எல்லாவற்றையும் இணைக்கும் பாலமாக அமைந்திருப்பது அந்தச் சக்திப் பிரவாகம். நாம் தீவுகள் அல்ல. ஒரு சிறு புல்லின் இலையும் மாபெரும் நட்சத்திரத்தோடு பந்தப்பட்டிருக்கின்றது. ஒரு சிறு புல்லின் இலையைச் சிதைத்தாலும் மதிப்புமிக்க பிரபஞ்சப் பகுதி ஒன்றைச் சிதைத்ததாகவே ஆகிவிடும்.


*********************************************************************************
சொற்கள் சக்தியற்றவை. பகுதி உண்மையைத்தான் சொற்கள் உணர்த்தும். முழுமையாக உணர்த்த வல்லது மெளனமே.
அர்த்தம் என்னுடனேயே தங்கிவிட சொல் மட்டுமே உங்களை அடைகிறது. அந்தச் சொல்லுக்கு உங்கள் அர்த்தத்தையே நீங்கள் தருகிறீர்கள்.அதில் உங்கள் அர்த்தமே இருக்கும். என் அர்த்தம் இருக்காது

வார்த்தைகளை புரிந்து கொள்வது மிகச் சிரமம்.
அதைவிட உங்களுக்கு புரியவில்லை எனப் புரிந்துகொள்வது மிகவும் சிரமம். இந்த இரண்டுமே ஏறத்தாழ சாத்தியமில்லை. அதனால் இருக்கும் ஒரே சாத்தியக்கூறு தவறாகப் புரிந்து கொள்வதுதான்.


********************************************************************************************************************************** 

காலம் என்பது மனிதனின் கண்டுபிடிப்பு.  இருப்பதென்னவோ எப்பொழுதும் இப்பொழுதுதான். இயற்கைக்கு இறந்தகாலமும் தெரியாது. எதிர்காலமும் தெரியாது. இயற்கை அறிந்ததெல்லாம் நிகழ்காலம் மட்டுமே.

ஓஷோ
தம்மபதம் 1
கண்ணதாசன் பதிப்பகம்