"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, February 22, 2013

விதி - மதி - விபத்து சொல்லும் பாடம் என்ன?

விதி வலியதா, மதி வலியதா என்றால் நிச்சயம் விதிதான் வலிது அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இங்கே விதி என்ற வார்த்தை தலைவிதியைக் குறிப்பது அல்ல. அதே சமயம் அதையும் உள்ளடக்கியதுதான். அப்ப முயற்சி என்பது என்ன? அது எப்படி வெற்றி பெறும் என்ற கேள்வி எழுகிறது?

மழைபெய்வதும் வெள்ளம் வருவதும் விதி.. இதை அணை கட்டி தேக்கி நாம் பயன்படுத்துகிறோமே. அது மதி..  மழை தொடர்ந்து பெய்வது விதி....குடையோ மழைக்கோட்டோ போட்டுக்கிட்டு வேலையப் பார்க்கிறது மதி. விதியை அனுசரித்து செயல் செய்து பலனடைவதுதான் மதி :) எதிராக அல்ல..

சரி.. ரொம்ப சூதானமா இருந்தும் மழை நின்னதுக்கு அப்புறம் பார்த்துப் பார்த்துப் போயும் கரண்டுஷாக் அடித்தோ, சாக்கடையில் தவறி விழுந்தோ விபத்தோ சாவோ நடப்பது மதியை மீறிய விதிதான்..இப்படியும் சொல்லலாம். விதியை வெல்ல முடியா மதி :)

ஆக மனதில் இருத்தி வைத்துக்கொள்ளுங்கள்.  மதி என்பது இயற்கைவிதியை அனுசரித்து நம்மால் செய்யப்படும் முயற்சிகள் .. அது வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் பல்வேறு காரணிகளால் நடக்கிறது... இருப்பினும் இந்த முயற்சிகள் விதியின் தீவிரத்தை அதிகப்படுத்தவோ, குறைவு படுத்தவோ செய்யும்.

நேர் மாறாக எந்தவித பெரிதான முயற்சிகள் இல்லாத போதும் வெற்றி தேடி வருவதும் அதே பல்வேறு காரணிகளால்தான்.. பல்வேறு காராணிகள் என்று வரும்போதே எதைச் சொல்வது எதை விடுவது என்ற சிக்கலும் கூடவே எழுகின்றது.

இந்தப் பீடிகை எதற்கு....சில புரிதல்கள் நமக்குள் ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான்,:)

மனித மனத்தைப் பொறுத்தவரை, அல்லது ஆன்மீகம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் இரண்டே இரண்டு வாய்ப்புகள் மட்டுமே சாத்தியம் என்பதில் தெளிவாகிக் கொள்ளுங்கள்.

ஒன்று மனம் என்பது தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியவைகளை மட்டுமே ஒத்துக்கொள்ளும். அனைத்தையும் இணைத்து பார்க்கும்போது நெருடல் இல்லாமல், இருந்தால் மட்டுமே திருப்தி அடையும்.

நான் சொல்லக்கூடியவற்றை இந்த மாதிரி உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதே முக்கியம். அது உண்மையா, பொய்யா, சாத்தியமா, சாத்தியமில்லாததா என்பதெல்லாம் தேவையில்லை என்பதுவும் உண்மை..:)

 மனம் என்கிற கருவி சமுதாயத்தில் நாம் தொடர்பு கொள்ளும்போது, நாம் பிறந்தபோது இருந்த மனம் போல் இருப்பதில்லை. நம் வயதிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ப நிறைய சேகரங்களுடன், முன்முடிவுகளுடன் வளர்ந்து இயங்க ஆரம்பிக்கிறது. சேகரங்கள், முன்முடிவுகள் ஏதுமின்றி உங்களால் மனதை விரும்பும்போது இயக்கமுடிந்தால் முதல்நிலை மனதிற்கு நேர் எதிரான மனமாக இந்த மனம் இருக்கும். இந்த இரண்டு விதமான மனநிலைதான் இவ்வுலகில் சாத்தியம்.  ஆனால் இந்த இரண்டாவதாகச் சொல்லப்பட்ட மனநிலை சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவே.  இம்மனநிலை கொண்டவரை யோகிகள், ஞானிகள் என்று சந்தேகமின்றி சொல்லலாம்.  இதற்கு சாதி, மதம், இனம், நாடு தடையில்லை. வழிமுறைகளும் முக்கியமல்ல.. இந்த விளைவைத் தருகிற எந்தச் செயல்முறையும் மிகச் சரியானதே....

கடந்த சில நாட்களுக்கு முன் தூரத்து உறவினர் ஒருவர் விபத்தொன்றில் மரணமடைந்துவிட்டார். இத்தனைக்கும் அவருக்குச் சொந்தமான வாடகைகாரை ஓட்டுவதுதான் தொழிலே.. அவ்வப்போது தண்ணியடிப்பதும் உண்டு. சுமார் 25 வருட ஓட்டுநர் அனுபவம் இருந்தும் அவர் கார் ஓட்டிக்கொண்டு வந்தபோது எதிரே வேனில் மோதி விபத்து...., மரணம் நிகழ்ந்துவிட்டது:(.

அங்கே என்ன நடந்ததோ தெரியவில்லை.. இவரது மரணம் இவரது அலட்சியத்தால், எங்கோ நேர்ந்த சிறு தவறால் விபத்து எனில் மதியின் தோல்வியே... ஆனால் அந்த மதியை அந்த நேரத்தில் துவளச் செய்வது விதியின் வேலைதான் :(

சரி நாம் இதை நேரில் பார்க்கவில்லை எனினும் அவர் மிகச் சரியாக வாகனத்தை செலுத்தி இருந்தாலும் எதிரே வந்த வேன் டிரைவரின் அலட்சியத்தால், தவறால் விபத்து ஏற்பட்டு இவர் மரணித்து இருந்தால் அது விதி..மதியை மீறிய விதி...இது ஏன்?


இவையெல்லாம் ஏன் இப்படி நடக்கின்றது. ஏதாவது ஒரு லாஜிக் வேண்டுமே.. தர்க்க ரீதியான காரணம் ஏதும் இருக்கிறதோ இல்லையோ நம் மனதிற்கு தேவையாக இருக்கிறது. நம்மை, நம் வாழ்வை ஒழுங்குபடுத்த இந்த காரணங்கள் உதவுமா?

இந்த துக்கநிகழ்வில் கலந்து கொண்டு இருக்கையில் கண்முன்னே நடந்த இன்னோர் விபத்து இன்னும் பல கேள்விகளை எழுப்பியது......






Sunday, February 17, 2013

விபாஸ்ஸனா தியான முகாம் - மதுரை

விபாஸ்ஸனா என்றால் என்ன ?

விபாஸ்ஸனா என்பதில் ஒரு ஒழுக்கமான வாழ்வை வாழ்வது மொத்தமும் அடங்கும். இதை எந்த மதம், எந்த இனம், எதிர்க்கக்கூடும் ? இப்படிப்பட்ட ஒழுக்கமான வாழ்வை வாழ உங்களுக்குத் தேவை வலிமையான மனம்.. இதற்கு யார் மறுப்புத் தெரிவிக்கக்கூடும்.?

உங்கள் மனம் தூய்மையாக இருக்க வேண்டும். அதன் விளைவாய் ஒழுக்கம், மன ஒருமைப்பாடு, தூய்மையாக்கும் ஞானம், தெள்ளறிவு இவை நம்மிடம் வந்தடைய வேண்டும். மனதளவில் ஆரோக்கியமானவராகவும், அமைதியான, சலனமின்றி மனநிலை அமைந்து இருக்க,  பழக வேண்டியது விபாஸ்ஸனா தியான முறை..
 

தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இந்த முகாம் இருக்கின்ற குறையை நீக்கி, தென் தமிழகத்தில் மதுரை அருகே திண்டுக்கல் செட்டியபட்டியில் அமைந்துள்ள விபாஸ்ஸனா தியான முகாமை ஆர்வமுடையவர்கள் பயன்படுத்திக் கொள்வீர்க்ளாக :)

வருடம் முழுவதும் நிகழ்ச்சி அட்டவணை இருக்கிறது. வசதியான நாட்களைத் தேர்ந்தெடுங்கள். இணையம், பேச்சு எதுவும் இல்லாத  10 நாட்கள் அடிப்படை தியான முகாமில் கலந்து கொள்ளுங்கள். மனம் என்பது என்ன? அதன் செயல்பாடுகள் என்ன என்பதை வெறும் வார்த்தை ஜாலங்கள் இன்றி அனுபவமாக உணருங்கள். வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இது என் வேண்டுகோள் :)

இருப்பிடம், நிகழ்வுகள் குறித்த அட்டவணை மற்றும் கூடுதல் விவரங்கள் அறிய இதை சொடுக்கவும்.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய இதைச் சொடுக்கவும்.

நிகழ்காலத்தில் சிவா

Tuesday, January 29, 2013

ஜெயதேவ் தனக்குத்தானே வச்சுக்கிட்ட ஆப்பு

நண்பர் ஜெயதேவ் இடுகையை அவரது அறிவியல் சார்ந்த இடுகைகளுக்காக படிப்பேன்., நேற்றைய இடுகையில் சில அடிப்படைகள் தவறு என நினைத்ததால் என் ஆட்சேபணையை விரிவாக பொங்கலாக வைக்கிறேன் :)

 இனி சிகப்பு எழுத்தில் இருப்பவை ஜெயதேவ் இடுகையில் வாசித்தது. ஆட்சேபணையான பகுதிகளை மட்டும் இங்கே பகிர்ந்து இருக்கிறேன். எனது கருத்துகள் கருப்பு எழுத்தில் :)

//தனிப்பட்ட முறையில் நாமும் ஒரு ஆன்மீகப் பாதையில் செல்வதால் நாம் செல்லும் வழி தான் உயர்ந்தது மற்றவர்கள் எல்லோரும் போலி என்று நாம் திரித்து கூற முயல்வதாக சில அன்பர்கள் நினைக்கலாம், ஆகையால் ஆத்திக அன்பர்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளத் தக்க சான்றுகள் மூலமாகவே நாம் போலிகளைத் தோலுரித்துக் காட்ட இருக்கிறோம். //
ஆத்தீக அன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சான்றுகள்னு.. அனைவருக்கும் நான் தான் ரெப்சரண்டேட்டிவ்னு சொல்றத பார்த்தா ஏதாவது தடை போட்டுருவாரோன்னு பயந்துகிட்டேதான் எழுதறேன்:)

//தன்னையுணர்ந்த ஒரு குருவிடம் சரணடைந்து அவரை வழிகாட்டியாக ஏற்பது தான் ஆன்மீகத்தின் அறிச்சுவடியாகும். நாம் இந்த முடிவை பகவத் கீதையின் படி எட்டியுள்ளோம். //இந்த கண்ணாடியப் போட்டுட்டு பார்த்தா அப்படித்தானே தெரியும். நீங்க போலிகளா சொன்ன அத்தனை பேரும் பகவத் கீதையின் வழியே வாழ்றவங்களா? கீதய சொல்றதுக்கும், கீதையின்படி வாழ்றதுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கு.

//அப்படியானால், நமக்கு குருவாக இருப்பவரும் இதே மாதிரி சரணடைந்து நடப்பவராக இருந்திருக்க வேண்டும், அதாவது அவரும் ஒரு ஆன்மீக குருவிடம் இருந்து கற்றவராக இருக்க வேண்டும். இப்படியே குரு-சீடர் என்று சங்கிலியாக பின்னோக்கிச் சென்றால் அது பகவத் கீதையை முதலில் போதித்த ஸ்ரீ கிருஷ்ணரிடம் சென்று முடியும். //

இங்கே ஒருத்தருக்கு குரு இருக்கணும்னுதானே சொல்லி இருக்கீங்க ..இங்க எங்க நீங்க பலதடவ சொல்ற குரு பரம்பரை வருது.?

//யார் வேண்டுமானாலும் கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொள்ளலாம், ஆதாரம் என்ன? //இறைவன் எப்போது, எங்கே தோன்றுவான், அவன் என்னென்ன பணிகளைச் செய்வான் என்பதை ஸ்ரீமத் பாகவதம் முன்னரே கூறுகிறது. அதன்படி, பூமியில் 5000 வருடங்களுக்கு முன்னர் துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டிய பின்னர் தான் வந்த வேலை முடிந்ததும் தனது லோகமான கோலோக விருந்தாவனத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடைய அடுத்த அவதாரம் புத்தர். அவருக்குப் பின்னர் கல்கி கலியுகத்தின் இறுதியில் தோன்றுவார். கலியுகம் 4,32,000 வருடங்கள், அதில் 5000 வருடங்கள் முடிந்துள்ளன, இன்னமும் மீதமுள்ள 4,27,000 வருடங்கள் முடிந்த பின்னரே கல்கி தோன்றுவார். //

இந்த கணக்கெல்லாம் நான் எப்பவோ படிச்சதுதான். கடந்து போய்விடுவேன். இதுக்கெல்லாம் என்ன ஆதாரம்? (நீங்க கேட்ட கேள்விதான்: ) கிருஷ்ணர் என்னிக்கு பூமியில் பிறந்தாரோ அப்பவே மனுசந்தான் :) அவர் வாழ்ந்த வாழ்க்கைதான் கடவுளா அவரை கொண்டாட வச்சுது.

//3. கடவுளுக்கு வடிவம் கிடையாது, பிரம்மம் என்ற ஒன்று இருக்கு, அதற்க்கு எந்தப் பண்பும் கிடையாது, நாம் முக்தியடைந்தால் அந்த பிரம்மத்துடன் ஐக்கியமாகி, பிரம்மமும் நாமும் ஒன்றோடு ஒன்றாக ஆகிவிடுவோம், என்பவர்கள் போலிகள்:// நானோ, நீயோ இங்கே கூடியுள்ள அரசர்களோ யாரும் இல்லாமல் இருந்த ஒரு காலம் இதுவரை இல்லை, எதிர்காலத்திலும் ஒருபோதும் நாம் இல்லாமல் போகப் போவதுமில்லை.//ஆங்கிலத்தில் I [நான்-I st Person], You [நீ-அர்ஜுனன் IInd Person], they [அவர்கள்-அரசர்கள் Third Person], என்று மூன்று நிலைகளிலும் கடந்த காலத்திலும் இனி வரும் காலத்திலும் நாம் இருப்போம், ஒருபோதும் இல்லாமல் போக மாட்டோம் என்று பகவான் கூறுகிறார்.//

இதப்படிச்ச உடன் கொஞ்சம் கூட புரியாம நீங்க எழுதுனதான் அடுத்த வரிகள் \\இதை படித்த பின்னர் கூட எந்த முட்டாளாவது கடவுளுடன் ஐக்கியமாய் போவோம் என்று போதிப்பானா? அவ்வாறு போதிப்பவன் போலி.\\ 
கட்டுரையின் உச்சபட்ச தடுமாற்றம் இதுதான் ஜெயதேவ்..:)

பிரம்மம் தனி, நான் தனி, அதனோடு முக்தி அடைந்து ஐக்கியமாகி விடுவோம்னு சொன்னது தவறுன்னா என்ன அர்த்தம்னா.. பிரம்மமும் நீயும் வேறவேறன்னு சொல்லாத எல்லாமே ஒன்னுதான்.. அதுதான் அப்பவும் இருந்துது, இப்பவும் இருக்குது. இனியும் இருக்கும் அத்தனையையும் ஒன்றாகப்பார்க்கிற விசயத்தை புரிஞ்சிக்கிறத விட்டுட்டு, புரிஞ்சுக்க முடியாம திணறகிற அவங்கள போலின்னு சொல்றதும், முட்டள்னு சொல்றதும் எப்படி சரியாகும்?.. இது வக்கிரம்தான் :)


4. போகும் பக்தர்களுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருப்பவன் போலி: பலபேருக்கும் மருத்துவரே கடவுளாகத் தெரிகையில் வைத்தியம் பார்ப்பவன் குரு அல்ல என்ற முடிவு சிரிப்புதான் வருகிறது. தேவையானவர்களுக்குத் தேவையானதைத் தருபவர்தான் உண்மையான குரு. ஒருவன் ஞானத்தெளிவடைய தடையாய் இருக்கும் வாழ்க்கைச் சிக்கல்களை உடைத்தெறியும் ஆற்றல் குருவுக்கு இருக்கும். உடல்நலத்தைத் எல்லோருக்கும் வாரிவழங்கும் மந்திரவாதி அல்ல அவர். ஆன்மீகப்பாதையில் தீவிரமாய் பயணிக்கும் ஒருவனது உடல்நிலை பாதிப்பை அதன் வேரை  அடையாளம் கண்டு ஒரு கையசைப்பில் அல்லது ஒரு வார்த்தையில் பக்தனது மனதில் அடிஆழம் வரை ஊடுருவி திருப்பத்தை உண்டு பண்ணும் நிலையை நீங்கள் சாதரண வைத்திய முறையாக பார்ப்பது வாசிப்பனுபவம் மட்டுமே உங்களுக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துகிறது. (இப்படிப்பட்ட குரு இங்கொன்றும் அங்கொன்றுமாக தேவைக்கேற்ப தோன்றுவார்கள். இதில் பரம்பரைக்கெல்லாம் வேலை கிடையாது )

//, அங்கே போகிறவர்களுக்கு கையை தூக்கு, காலைத் தூக்கு, நெற்றியில் விரலால் அமுக்கு என்று வைத்தியம் பார்ப்பவராக இருக்கக் கூடாது. வைத்தியம் பார்ப்பது தவறல்ல, வைத்தியத்தைப் பார்க்க நிறைய மருத்துவ மனைகள் இருக்கின்றன. ஆன்மீகவாதி ஆன்மாவைக் காப்பாற்றுபவராக இருக்க வேண்டும், அழிந்து போகும் உடலை அல்ல.//

ஆன்மாவைக் காப்பாத்தினா மனுசனுக்கு என்ன பிரயோசனம்னு தெரியல..உடம்புங்கிறது என்ன? உயிர்னா என்ன ? மனசுன்னா என்ன? இதெல்லாம் தாண்டி ஆன்மான்னா என்ன இதுகளுக்கெல்லாம் இருக்கிற இணைப்பு என்ன? . உடம்ப நோய் இல்லாம காப்பத்தறதுக்கு சொல்ற எதுவுமே ஆன்மீகத்தான். அது ஆன்மாவுக்கு நாம செய்ற உபகாரம். அதச் சொல்லித்தர்றவன் குருதான். ஆன்மா அப்படின்னு ஒன்னு இருந்தா அதுஎங்க இருக்கும் உடம்பில் உயிர் ஓடிட்டு இருக்கற வரைக்கும் தானே..இதுக்கு மருத்துவ அடிப்படையப் பத்தி பேசணும். வேணாம் விட்டர்றேன் :)

5. மேஜிக் வித்தைகளைச் செய்பவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல: ஆனா இன்னிக்கு தமிழ்நாட்டுல சென்னைக்கு கிருஷ்ணாநீர் வர்றது இந்த மனுசனாலதான்யா சாத்தியமாச்சு.. இந்த ஒன்னுக்காக சாய்பாபாவ தாராளமா கடவுள்னு சொல்லலாமே.....குருன்னும் சொல்லலாமே

//திருவண்ணாமலை 'கு'மணன் [குமனாஷ்ரமம் புகழ்..]- [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு பரம்பரை இல்லை. செத்த பின்னர் ஆஷ்ரம சொத்துக்கள் தம்பி மகனுக்கே போய்ச் சேர வேண்டும் என்று உயில் எழுதிய பற்றற்றவர். ] \\
ஏன் தன்னோட பரம்பரைக்கு போகனும்னு செஞ்சதா வச்சுக்குங்க.. பொருளை எப்படி கையாளனுமோ அப்படித்தான் கையாளனும். நான் யார்னு யோசின்னு ஞானப்பாதைக்கான வாசலை சமீபகாலத்துல எளிமையாச் சுட்டிக் காட்டியவர்தானே ரமணர். இவரையா போலிங்கறீங்க :)

வடலூர் காரர் [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு பரம்பரை இல்லை ]

இவருக்கு என்ன குறைச்சல் கிருஷ்ணர கும்பிட்டு இருக்கனுமோ.. உருவ வழிபாட்டின் அடிப்படையை மக்கள் மறந்து சடங்காக மாற்றியபோது ஜோதி வழிபாட்டின் மூலம் அதை உலகுக்கு உணர்த்தியவர். உயிர்க் கொலையை தவிர்க்க வலியுறுத்தின இவரு போலியா... :)

செக்ஸ் பண்ணிகிட்டே கடவுள்கிட்ட போகச் சொன்ன சீஷோ [ஈனம் மானம் எதுவுமே இல்லாத மோசடிப் பேர்வழி ]

பேரச் சொல்லி எழுதக்கூட தைரியமில்லாத நீங்க ஈனத்தைப் பத்தியும், மானத்தைப் பத்தியும் பேசறது எனக்கே வெட்கமா இருக்கு:).. செக்ஸ்னா என்னென்னு தெரியனும் வெறுமனே உடல் உறவு மட்டுமே செக்ஸ்னு நினைக்கிற பொதுமனப்பான்மையும், கடவுள்னா விழிப்புணர்வுதான்னு புரிஞ்சு அதை அனுபவிக்காத தன்மை., இதையெல்லாம் மாற்ற பாடுபட்டவர் ஓசோ. இதெல்லாம் சும்மா நாலு வார்த்தைல எழுதற விசயமல்ல. சும்மா அடிச்சு விடாதீங்க ஜெயதேவ்..

//அமெரிக்காவில் ஒரு மீட்டிங்கில் பேசி அதை வச்சே காலத்தை ஒட்டிய தலப்பாக் கட்டு, அவருடைய ஹம்சா குரு [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு உண்டு, ஆனால் அந்த குருவுக்கு வேறு யாரும் குரு இல்லை, அதாவது குரு பரம்பரை இல்லை ] //
சகோதர சகோதரிகளே என்ற ஒற்றை வார்த்தைல இந்தியாவின், தமிழகத்தின் பாரம்பரியத்த வெளி உலகிற்கு புரியவைத்த நல்ல மனுசன் இவரு..ஒற்றை வார்த்தையில் உலகை கட்டிப்போட்டவன் தெரிஞ்சவர்தான் குரு. இவ்ரைப் போலி என்றால் ...:)

//பாழுங் கலை "Art of Killing" தாடிக் காரன் [கையைத் தூக்கு காலைத் தூக்கு, மூக்கை அமுக்கு, மூச்சை இழு, விடு அதுதான் ஆன்மிகம் என்றவர்,//
வாழுங்கலை ரவிசங்கர் மூச்சை அடிப்படையா வச்சு தன்னோட பயிற்சிய வடிவமைச்சிருக்காரு. மூச்சுக்கும் உடம்புக்கும் மனசுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள சம்பந்தம் என்னங்கிறது அனுபவிச்சவங்களுத்தான் தெரியும் ஜெயதேவ் இந்த உண்மை தெரியாத நீங்க இவர போலிங்கிறதுல ஆச்சரியமில்லை உடம்ப மருத்துவமனைக்கு கொண்டு போய் சித்திரவதைப்படுத்தாம இருக்க மூச்சுதான் முக்கியம். அதுதான் சாதி மதம் நாடுன்னு எதுக்குள்ளும் சிக்காத பொது சமாச்சாரம் எனக்குத் தெரிஞ்சு மூச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து சொல்றது இவரு ஒருத்தருதான். இவரு சகசமா அரசியல் பிரச்சினைகளுக்கு கருத்து சொல்வாரு. அது தப்பா…

//எல்லோரும் கடவுள் என்னும் போலி, நச்சுப் பாம்பு தற்போது ரஞ்சிதானந்தாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இவரோட குரு அமேரிக்கா புண்ணிய பூமின்னு அங்கே போய் செத்து பின்னர் பிணம் 20 நாள் னாராம இருந்ததாக சான்றிதழ் பெற்றவர். பயோகிராபி எழுதியவர் ]உடல் நாறமா இருக்கிறதோட அருமை அத மதிக்கிறவங்களுத்தான் தெரியும். சான்றிதழ் வாங்கிட்டது சாதிச்சதுனாலதானே :)

இலங்கையில் இருந்து வந்து திருச்சி விராமலையில் மடம் போட்டு பெண்களைக் கற்பழித்த நடிகர் செந்திலின் ஜெராக்ஸ் [பயங்கரமான கிரிமினல், பாலியல் ரீதியாக தண்டனை பெற்றவர் ]
இந்த ஆளுவேணா பாலியல் ரீதியான சில பயிற்சிகளை செய்து விந்து நீண்டநேரம் வெளிப்படாமல் செய்தார். இதுவும் ஆன்மீகத்தின் ஒரு அங்கம் தான், என்ன சரியான வழில பயன்படுத்தாம பொம்பளைய மடக்கிறதுல பயன்படுத்தினதால தப்பான மனுசனாயிட்டான். இந்தஆள் போலிதான்:)

ஷங்கர் ராமனைப் போட்டுத் தள்ளியதில் குற்றம் சாட்டப் பட்டுள்ள காஞ்சிபுரத்தான் [பாலியல் ரீதியாக எழுத்தாளரால் குற்றம் சாட்டப் பட்டவர் ] இந்த ஆள் நீங்க வலியுறுத்தறா மாதிரி குருபரம்பரையைச் சேர்ந்தவர்தான், எனக்குப்பிடிச்ச குருபரம்பரை இல்லைன்னு நீங்க சொன்னாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை. லட்சணம் என்னென்னு நீங்களே பரர்த்துகுங்க., மனிசனா பொறந்தா செக்ஸ் இல்லாம இருக்கிறது எனக்குத் தெரிந்தவரை சாத்தியமில்லை. இவரும் அதுல சிக்கிட்டாரு..அதுக்காக போலிங்கிறது ரொம்ப ஓவரு :) ....மனுசன்னு சொல்லுங்கஒத்துக்கிறேன்.

//கமலஹாசனின் வசூல்ராஜா புகழ் கட்டிப் பிடி வைத்தியம் பண்ணும் கேரளாக் காரி//
ஒரு பொம்ப்ள எல்லோரையும் கட்டிப்பிடிகிறான்னா அதுல ஒரே செய்தி மட்டும்தான்., என் அன்பை வெளிப்படுத்துகிறேன்,. அவ்வளவுதான்.. அன்பு ஒன்னுக்குத்தான் உலகமே அடிமை… எங்கே 1000 ஆம்பிளைகளை நீங்க கட்டிப்பிடிச்சு காமிங்க பார்ப்போம்.... அதனால்தான் அங்கே பணம் குவியுது, அன்பால நெகிழ்ந்தவர்கள் தருகிற நன்கொடைகளினால்...இந்தம்மாவை போலின்னா அன்பு பத்திக்கூட புரிதல் உங்களுக்கு இல்லையோன்னு சந்தேகப்படறேன் .:)
//நம்மை கதவைத் திறந்து ஆனந்தத்தை வரவழைக்கச் சொல்லிவிட்டு, அவன் கதவைப பூட்டிக் கொண்டு ரஞ்சிதானந்தம் பார்த்தவன்[குருவோ, குரு பரம்பரையோ இல்லாதவர், எல்லோரும் கடவுள் என்பவர். இவரது பக்தர்கள் இவரை கடவுள் என்று சொன்னாலும் நடவடிக்கை எடுக்காதவர்]

செக்ஸ் நாட்டம் அதிகமாகாத வரைக்கும் மத்ததுல கவனம் இருக்கும். அதிகமாச்சு, வாய்ப்பும் அமைஞ்சது., பயன்படுத்திக்கிட்டாரு மனுசன். ரஞ்சிதா சம்மதத்தோடதானே எல்லாமே நடந்துச்சு.. பேச்சு ஒன்னு, செயல் ஒன்னுங்கிற குறைதான் இவருகிட்ட தப்பு ..இவரு உண்மையா இருந்து போலியா மாறிட்டாரு

//செவ்வாடைத் தொண்டர்களை கொண்ட கீழ்மருவத்தூர்க்காரன் [முழுக்க முழுக்க கற்பனையாக ஒரு கடவுளை உருவாக்கி, ஆயிரம் கோடிகளில் சொத்து சேர்த்தவர், அதற்க்கு தனது பெண்டாட்டி பிள்ளை குட்டிகளை காவலுக்கு போட்டிருப்பவர் ]

இங்க பக்கத்து ஊருதான், இந்த ஆள் செஞ்சது ஒன்னெ ஒன்னுதான் பெண்கள் கருவறைக்குள் சென்று வழிபாடு பூசைகள் செய்யலாம். சமூகத்தில் ஆன்மீகத்தில் பக்தி வழிபாட்டில் கருவறைக்குள் பெண்களை அனுமதிக்காதன் அம்சத்தை ஆராயாமல்.மேலோட்டமாக நடத்திய புரட்சிதான் கிளிக் ஆகி இன்னிக்கு இந்த ரேஞ்ச்..இதில எங்க இவரு போலி.. வெளிப்படையாத்தான் இருக்காரு மனுசன்..பின்னால போற மக்கள்தான் பாவம்:)

//நாலு லட்சம் வருஷத்துக்கு ஆப்புறம் வரவேண்டிய கல்கி இப்பவே ஆணும் பெண்ணுமா வந்துட்டோம் என்று சொல்லித் திரியும் புருஷன் பெண்டாட்டி பொறம்போக்குகள் .....[இவர்கள் கல்கி அல்ல, தாங்கள் அவரதாரம் என்கிறார்கள். கல்கி ஒருத்தார் மட்டுமே அதுவும் ஆண் எப்படி புருஷன், பெண்டாட்டி இருவரும் கல்கியாக இருக்க முடியும்? அதுவும் 4,27,000 வருடங்கள் கழிந்த பின்னரே வர முடியும், இதுவும் ஒரு கற்பனைதான். இதய உல்டா பண்ணித்தானே இந்தகுருப் காலம் தள்ளுது. இந்த போலிக்கு மூலகாரணமே கல்கி மேட்டர்தான்.

முரளீதரன் [ரொம்ப மோசமானவர் இல்லை, ஆனால் தலப்பாக்கட்டு போன்றவர்களை மேற்கோள் காட்டுவதால் இவருக்கு விஷயம் தெரியவில்லை] இவர யாரும் கடவுள்னும் சொல்லலை, குருன்னும் சொல்லலை. அப்புறம் ஏன் கோபம். ஆமா இவரு மேல என்ன பாசம் :)

ககி சவம் [அனுபவத்தை வைத்து புருடா விட்டுக் கொண்டு திரிபவர், குரு , குரு பரம்பரை எதுவும் இல்லாதவர்]
 

இவர் தன்னம்பிக்கை சார்ந்த விசயங்களை சொல்லிக்கொண்டு இருக்கிறவர். சில விசயங்களை வித்தியாசமா சொல்லி, பார்த்து, உண்மை தெரியும்னு சொல்லி தொழில் முறை பேச்சாளரா இருக்கிறாரு, இவர ஏன் போலின்னு சொல்றீங்க :) பாவம் விட்டுருங்க :))

//வேலூர் தங்கக் கோவில் காரர் [தான்தோன்றி சாமியார், குரு , குரு பரம்பரை எதுவும் இல்லாதவர், தத்துவ ரீதியாக போலி, போலியோ போலி......] //

இவரு திடீர் சாமி.. எவரோட பணமோ இவருகிட்ட விளையாடுது.. சுற்றுலாத்தளம் மாதிரி ஒரு கோவில் டில்லில அக்சார்தம் மாதிரி தென்னகத்தில் ஒரு கோவில் கட்டிய சாதனைக்கு பினாமி சொந்தக்காரர்தான்,, இதுல எங்க போலி வந்துது. டம்மின்னு சொல்லுங்க ஒத்துக்கலாம். போலிங்கிறதுக்கு அர்த்தமே வேற.. மேலும் கோவிலோட பிரபலம் இந்த சாமிக்கு இல்லவே இல்லை.

ஈசா கிழவர் [மொக்கைச் சாமியார், எந்த அடிப்படையும் இல்லாதவர், வேணுமின்னா மரம் நடட்டும், வேறு எதற்கும் பிரயோசனமில்லாதவர்] இந்த ஆள் மொக்கைதான்.,ஓசோவையும் நடப்பு ஆன்மிகத்தையும் கலந்து அடிக்கிறாரு. வாஸ்தவம்தான். என்ன பண்றது ருசியான பிரியாணியா இருக்கிறதுனால கூட்டம் அம்முது:) அதுக்காக போலிங்க வேண்டியதில்லை. விசயம் கம்மின்னு சொன்னா ஒத்துக்கிறேன் :) ஒரு தடவ ஈசா போயிப் பாருங்க..இந்த மொக்கை எம்புட்டு செலவு செஞ்சிருக்கின்னு...

கேரளாவின் ஐயோ..... அப்பா.......... [சாஸ்திரத்தில் சொல்லப் படாத வழிபாட்டு முறை]. எத்தனையோ அக்கிரமங்களை நம்ம மனுச சாமிகள் பண்ணினாலும் ஒரு முறை அந்த பெருவழில கூட்டமில்லாத மழை நாட்கள்ல போய்ட்டு வந்து அனுபவத்து சொல்லுங்க.. போறதுக்கு ஒரு காரணம் அய்யப்பன். அவர ஏன் போலிங்கிறீங்க.. அவரு பேரச் சொல்லி திரியற நம்மாளுங்களைச் சொல்லுங்க.. கொஞ்சம் நிசம் இருக்கும்.

முடிவா குரு பரம்பரை அவசியம் வேணும்கிற ஜெயதேவ் வாதம் கிணற்றுத் தவளையின் பார்வை மட்டுமே. ஆன்மீகம் குறித்தான விரிவான பார்வை இன்றி வெறுமனே விமர்சிக்கிற தன்மையை ஆட்சேபித்து எதிர்ப்பை பதிவு செய்கிறேன். இந்த விளக்கம் இணைய நண்பர்களுக்கு நேர்எதிர்கருத்தையும் படிக்கிற வாய்ப்பைத் தரும் என்பதற்காகவே பதிகிறேன்.

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா

Saturday, January 26, 2013

டாலர் நகரம் - புத்தக வெளியீட்டுவிழா குறித்து

நண்பர்கள் பலரும் தேவியர் இல்லம் ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருப்பூர் வந்த வண்ணம் இருக்கின்றனர்.  அதில் சிலருக்கு விழா நடக்கும் இடம் அழைப்பிதழில் இருந்தாலும் குறிப்பான அடையாளம் இருந்தால் நல்லது, நாளை ஞாயிறு காலை நேரடியாக வந்துவிட வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்ததன் பேரில் இணைப்பு கொடுத்து இருக்கிறேன்,


விழா நிகழும் இடம் திருப்பூர் டிஆர்ஜி ஹோட்டல் பல்லடம் ரோடு, பழைய பஸ் நிலையத்திலிருந்து தெற்கே பல்லடம் ரோட்டில் சுமார் 700 மீட்டர் தூரத்தில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது.

 11.092603, 77.346939

View Larger Map கிளிக் பண்ணுங்க..

விழா நாளை காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 1.30 மணிக்கு நிறைவு பெறும்.



நாளை நேரில் சந்திப்போம் நண்பர்களே..
நிகழ்காலத்தில் சிவா
9790036233

Tuesday, January 22, 2013

டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழா - திருப்பூர்

திருப்பூர் வந்தோரை வாழவைக்கும் நகரம். பனியன் தொழில் ஏற்றுமதித்துறையில் சாதித்துக்கொண்டிருந்த நகரம். சினிமாத்துறைக்கு ஈடாக பல்வேறு உபதொழில்களை தன்னகத்தே கொண்டு பலரையும் உயரவைக்கும் நகரம்.

சிலரை குப்புறத் தள்ளியும் வேடிக்கை பார்த்திருக்கும். அது நகரத்தின் குற்றமல்ல.. வீழ்ச்சியின் பின்னணியில் இருக்கும் சங்கதிகளை ஆராய்ந்தால் தெளிவாகத் தெரியும்.

முயல் போன்ற ஓட்டம் இங்கே வேலைக்கு ஆகாது. குதிரை போன்று ஓடிக்கொண்டு இருக்க வேண்டும். எதற்கும் வளைந்து கொடுக்கும் தன்மை., பொறுமையிலும் பொறுமை என்பதெல்லாம் இத்தொழில் செய்வோருக்கும் இருக்க வேண்டிய அடிப்படைக்குணங்கள்.

வடமாநிலங்களில் இருந்து வந்து உழைக்கத் தயாராக இருப்பவர்கள் கூட எனக்கு இன்ன சம்பளம் வேண்டும் கேட்டு வாங்கும் நிலை இங்கே உண்டு. கொடுப்பதை வாங்கிக்கொள் என்கிற அடிமைத்தனம் இங்கே அறவே இல்லை. அதேசமயம் உழைப்பதிலும், புத்திக்கூர்மையிலும் நுட்பங்கள் அவசியம் தேவை என்பதே இங்கே முன்னேற ஆசைப்படுபவர்களின் அடிப்படைத் தகுதி.

அப்படி தனது உழைப்பால் இன்று குறிப்பிடத்தக்க இடத்தில் இருக்கும் திருப்பூர் நண்பர் ஜோதிஜி அவர்கள்  அனுபவத்தை ஆர்வமுள்ளவர்களுக்கு  பயன் தரும் விதத்தில் 4தமிழ்மீடியா நிறுவனம் நூலாக பதிப்பித்திருக்கிறார்கள்.



விழாவிற்கு  26 ம் தேதி திருப்பூர் வருபவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். தங்குமிடம் பற்றிய விவரங்கள் தருகிறேன். என் அலைபேசி எண் 9790036233

 விழாவில் கலந்து கொள்வதில் சிரமம் இருப்பவர்களுக்கு டாலர்நகரம் புத்தகம் திருப்பூர் 2013 புத்தக கண்காட்சியில் கிடைக்கும்


Monday, January 14, 2013

எண்ணெய் தேய்த்துக் குளிங்க!

கடுமையான வேலை, டென்ஷனுக்குப் பின், நம்ம உடம்பை ரிலாக்ஸ் பண்றதுக்கு ஒரு சிறந்த தீர்வு, எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கறது தான்.

 எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, வெயில் காயணும்; தண்ணீர் காயணும்; சீயக்காய் சுடுதண்ணியில கரைச்சு வெதுவெதுப்பா இருக்கணும்.சூரிய வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடியே, எண்ணெய் குளியல் எடுக்கக் கூடாது. சூடு எண்ணெயின் வீரியத்தால், உடம்பின் உட்புற குழாய்களில் உள்ள, அழுக்குகள் நெகிழும்.

சுடுதண்ணீரை உடம்பில் ஊத்தும் போது, அது கரைந்து, மலம், சிறுநீர், வியர்வை மூலமா, வெளியேறத் தொடங்கும்.இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெயுடன், மிளகு, சீரகம் போட்டு பொரித்து, அந்த மிளகு, சீரகத்தை, அப்படியே வாயில் போட்டு மென்று, எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்கும்போதே தேய்க்கணும்.

 இரும்புடன் எண்ணெய் சேரும் போது, நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை அதிகரிக்கும். உச்சி முதல் பாதம் வரை, எண்ணெயை ஊற வைத்து, 20 நிமிடம் வரை, மசாஜ் பண்ணலாம். அதிகபட்சம், 45 நிமடங்கள் வரை, எண்ணெய் ஊறலாம்.எண்ணெய் தேய்க்கும் போது, மேலிருந்து கீழாக தேய்ப்பதே சரியான முறை. சில பேருக்கு வயிற்றில், வாயுத் தொல்லை இருக்கும். அவர்கள் வலது பகுதியில் இருந்து, இடது பகுதிக்கு உருட்டி உருட்டி, தேய்க்க சரியாகும்.

இடுப்பு வலி இருந்தால், விளக்கெண்ணெய் சூடு பண்ணி, அந்த பகுதியில் தேய்த்துக் குளிக்கலாம். மலச் சிக்கலும் போகும்.தலையில் நல்லெண்ணெயை அரக்கித் தேய்க்கும் போது, மூளை நரம்புகள் வலுப் பெறும். மூளையில் உள்ள ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி கிளாண்ட் சரியாய் இயங்கும். பிட்யூட்டரி சீராய் இயங்க, உடம்பில் அத்தனை சுரப்பிகளும் சீராகும்.

ஆனால், முடி கொட்டுறவர்கள் தலையை அரக்கித் தேய்க்க கூடாது. அது முடி உதிர்தலை மேலும் அதிகரிக்கும். அவங்க எண்ணெயை பஞ்சில் முக்கி உச்சந்தலையில் வைக்க, எண்ணெயோட வீரியம் அப்படியே தலையில் இறங்கும். அதுவே அவர்களுக்கு போதுமானது.

மாதவிடய் காலங்களில், உடம்பில் ஏகப்பட்ட ஹார்மோன்ஸ் மாற்றங்கள் இருக்கும். அன்று, எண்ணெய் குளியல் கூடவே கூடாது. எப்போதும் குளித்த பிறகு, தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது. அப்படி தடவினால், கை, கால் வலி வர வாய்ப்புண்டு.

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஆயூர்வேத கல்லூரி டீன், ஆயுர்வேத டாக்டர் சுவாமிநாதன் தினமலர் 13/01/2013 நாளிதழில் சொல்லியது நன்றியுடன்