"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, May 30, 2016

கிரிவலமும் நாய்க்குட்டியும்

சித்ரா பெளர்ணமி அன்று சென்னிமலை கிரிவலம் குடும்பத்தோடு செல்லும் வாய்ப்பு அமைந்தது.  சுமார் 14 கி.மீ.. கிரிவலம் ஆரம்பித்த இரண்டாவது கி.மீல் சிறுகுன்று, அகலமான ரோடு,  நாங்கள் நடந்து செல்கையில் எங்களுக்கு எதிர் திசையில் மேடான பகுதியில் ஒரு வயதான தம்பதியினர் சைக்கிளில் சிலிண்டர் வைத்து ஓட்ட வலுவில்லாமல், தள்ளிகொண்டு சென்று கொண்டு இருந்தனர். குட்டி நாய் ஒன்று சற்றே தளர்ந்த நடையில் பின் தொடர்ந்து கொண்டிருந்தது.. கூட வந்த மகள்களிடம் ”அங்கே பாருங்க ..அவர்கள் வளர்த்தும் நாய்க்குட்டி போல இருக்கிறது; எவ்வளவு அக்கறையாக பின் தொடர்கிறது பாருங்கள்.  குட்டியாய் இருந்தாலும் பாசம் பாருங்கள்..” என்று சொல்லிக்கொண்டே நடக்கிறேன்... நாய்க்குட்டியின் அழகு ஈர்த்தது. என் மகள்கள் நாய்க்குட்டி கண்ணில் இருந்து மறையும் வரை திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தனர்..

அந்த இடத்தில்  ஒரே சமயத்தில் நான்கு வண்டிகள் வரும் அளவு ரோடு அகலம்… தொடர் போக்குவரத்தும் இருந்தது. பேசிக்கொண்டே நடக்கிறோம்.. 5 நிமிடம் நகர்ந்திருக்கும்.  காலுக்குள் ஏதோ புகுவது போன்ற உணர்வு குனிந்து பார்க்க அதே நாய்க்குட்டி..எங்களுக்கோ அதிர்ச்சி.. எங்களைத் தாண்டி செல்லும் எண்ணம் நாய்க்குட்டிக்கு இல்லை என்பது சட்டென புரிந்தது.. அது மட்டுமில்லை. இந்த நாய்க்குட்டி வளர்ப்பு நாய் அல்ல.. ஏதாவது உணவு கிடைக்குமா என்று அந்த வயதான தம்பதியினர் பின்னால் சுமார் ஒருகிமீக்கும் மேலாக தொடர்ந்து ஓடி வந்த  தெரு நாய்க்குட்டி.

இப்போது எங்கள் பின்னால்.. கையில் எடுத்து மார்போடு அணைத்து கொண்டு நடக்க ஆரம்பித்தோம்  மகள்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தார்கள், நாயைக்கண்டாலே எகிறிக்குதித்து ஓடும் அவர்களுக்கு மிகக் கிட்டத்தில் ஒரு நாய்க்குட்டி..தொட்டு இரசித்துக்கொண்டே “ எப்படி நாய்க்குட்டி நம்மைத் தேடிவந்து, கண்டுபிடித்து நம்முடனே வருகிறது “ என்ற கேள்வியும் எழுந்தது..  அதைப்பற்றி நாம் கொஞ்சம் முன்னாடி பேசிக்கொண்டும் சென்றோமல்லவா? அந்த ஃபிரீக்வன்சிதான் அதை  இழுத்திருக்கின்றது.. நம்மிடம் வந்துவிட்டது என்றேன்... ஆனால் 4 வழிப்பாதைக்கு சமமான ரோட்டில் அடிபடாமல் தாண்டிவந்து சுமார் 200 பேருக்கும் மேல் தாண்டி நம்மிடம் வந்து சேர்ந்தது. தற்செயல் என்றால் தற்செயல்தான்.. மற்றவர்களுக்கு களைப்படைந்த அந்த நாய்க்குட்டியை எடுத்து ஆதரிக்கத் தோன்றவில்லை..நமக்கு தோன்றுகிறது…அதனால் நம்மிடம் வந்து சேர்கிறது..இப்படி சரியான இடத்துக்கு வந்து சேர்வது என்பதுதான் இயற்கை விதி..


இப்படி பேசிக்கொண்டே நடந்ததில் அருகில் இருந்த சிற்றூர் வந்துவிட்டது.. கடையில்  பிஸ்கட் பாக்கெட் வாங்கி,  அதற்கு கையில் வைத்துக்கொண்டே,  இன்னொரு கையில் உடைத்து வைக்க ஆவலுடன் உண்டது. பிஸ்கட் வாங்க நிற்கையில்  அங்கே இருந்த கிராமத்து நாய்கள் இரண்டு இந்தக்குட்டியை பார்த்துவிட்டு உறுமத் தொடங்கின..  மறைத்தும் பலனில்லை.. அந்த எல்லையை விட்டு நகர்ந்தபின் அவைகள் அடங்கின.

பிஸ்கட் சாப்பிட்டு முடித்த பின்னும் இறக்கி விடவே இல்லை.. ஏதாவது இடத்தில் இறக்கிவிட்டு வேறு நாய்கள் இதை கடித்த விட வாய்ப்புகள் அதிகம். செல்லும் வழியில் நீர்மோர் வழங்கப்பட ., ஒரு டம்ளர் வாங்கி கையில் வைத்துக்கொண்டே மீண்டும் நடந்தோம். கிராமத்தை விட்டு விலகி ஓரிரு வீடுகள் அமைந்திருந்த இடத்தை அடைந்தபோது, நாய்க்குட்டியை இறக்கிவிட்டு நீர்மோரை டம்ளரோடு வைக்க.. அரைடம்ளருக்கு மேல் குடித்துவிட்டு உற்சாகமாய் உடலை குலுக்கியபடி ஓட ஆரம்பித்தது.

வீட்டுக்கு எடுத்துச்செல்ல மகள்கள் ஆவலாக இருந்தாலும் தொடர் பராமரிப்பில் இருக்கும் சிரமங்களை உணர்ந்து அங்கேயே விட்டு விட்டு கூட்டத்தில் கலந்தோம்.. அந்த நாய்க்குட்டி எங்களைத் தேடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தது.

FRACTION DEMANDS, TOTALITY SUPPLIES என்பது இயற்கை நியதி..
தேவை உண்மையாய் இருக்கும்பட்சத்தில் இயற்கை அதை எவ்வழியிலேனும் தந்தே தீரும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு அத்தாட்சி

Saturday, January 16, 2016

யார் இந்த இளையராஜா ?

இளையராஜாவை கொண்டாட அவர் இசை அமைத்த பாடல்கள் போதும்.. .நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் சந்திக்கும் உணர்வுபூர்வமான கணங்கள் அது இன்பமோ துன்பமோ, கலவையாகவோ பொருத்தமாக நமது மனதை வருடும்விதமாக இசை அமைந்திருப்பது திண்ணம்.

எல்லோரும் அவரை கொண்டாடவேண்டும் என்று கட்டாயம் கிடையாது.. இளையராஜா ஆணவம் பிடித்தவர் என்பது ஒரு சாரர் கருத்து.. பீப் பாடல் பற்றி கருத்து கேட்ட நிருபரிடம் பதிலுக்கு அறிவிருக்கா என்ற கேட்ட வார்த்தையை அப்படியே பார்த்து முடிவு செய்வார்கள் இவர்கள். உண்மை வேறாக இருந்தாலும்..   அது என்ன உண்மை?

பொங்கல் திருநாளாம் 15.01.2016 வெள்ளி அன்று விஜய் தொலைக்காட்சியில் மாலை சிறப்பு பேட்டி.. அதைக் கேட்டவர்களும் இளையராஜாவின் சில பதில்கள் எதிர்கேள்விகளாகவும், சில நேரடியான பதில் தராமல் சுருக்கமாக முடித்ததும் ஆணவத்தின் வெளிப்பாடுதான் என்றுதான் சொன்னார்கள்.

இதில் எனக்கென சில கருத்துகள் இருப்பதால் பகிர்ந்து கொள்கிறேன்.

பொதுவிலும் சரி பேட்டிகளிலும் சரி இந்த சமூகம் இனிய வார்த்தை என்ற முகமூடியைக் கட்டாயம் கேட்கிறது.. அதற்கு பின்னால் என்ன விசயம் இருக்கிறது என கவனிப்பதே கிடையாது. விசயமே இல்லாமல் வார்த்தை ஜாலம் காட்டினால் போதுமானது.

இளையராஜா இதுவரை ஊடகங்களில் அதிகம் பேட்டிகளில் பங்கேற்றது கிடையாது. இயல்பில்  இளையராஜா தனிமைவிரும்பி..  தனிமை விரும்பிகள் மற்றவர்களோடு இயல்பாக எளிதில் உறவாட விரும்ப மாட்டார்.. 

இது அந்த சிறப்புப் பேட்டியில் ’எந்த இயக்குநரோடு நெருக்கம் அதிகம்?’ என்ற கேள்விக்கு யாரோடும் நெருக்கம் இல்லை.. துறை சார்ந்த பழக்கம் மட்டும் உண்டு என்று உண்மையைச் சொன்னதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

ஆரம்பத்தில் அன்னக்கிளி திரைப்படத்திற்குப் பின் பெரிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்திருக்க வாய்ப்பு குறைவு எனவே இயற்கையாகவே யாரிடமும் மண்டியிடவேண்டிய அவசியம் இல்லை.

ஒவ்வொரு நாளும் பாடலுக்கான சூழல்களைத் தொடர்ந்து கேட்பது.. பின்னர் அந்த சூழலை மனதுக்குள் உணர்வாகக் கொணர்ந்து பின் அதற்கான இசைக்கோர்வை அளிப்பது என முழுக்கவே பிறரைச் சாராது தன்னைச் சார்ந்தே இயங்கும் சூழல் அவருடையது.

 படைப்பாளனாக, பிறர் அடையாளம் காணப்படும் அளவிற்கு அவர் உயர தான் என்ற உணர்வு, பொதுமொழியில் சொல்வதானால் ஆணவம், உள்ளே அவருக்கு உந்து சக்தியாக விளங்கி இருக்கும். இது சாதித்தவர்களுக்குத் தெரியும்.. அல்லது சாதித்தவர்களை நோக்கினால் விளங்கும்.

தடைகள் பல வந்தபோதும் எதிர்த்து ஜெயிக்க இந்த ஆணவம் தேவை.. தன்னம்பிக்கையின் சீனியர்தான் இந்த ஆணவம்.

ஓய்விற்கு நேரமில்லாமல் குடும்பத்தோடு செலவிட நேரம் போதாமல்
 இசைப் படைப்பு உலகத்தில் வாழ்ந்திருக்கிறார். இந்த ஏக்கம் மனதில் இருந்திருக்கலாம். எதற்கு ஏங்கினாரோ அது கிடைக்காதபோது மனம் வெறுப்பும் சலிப்பும் அடையும் போது பரம்பரையில் எங்கோ இருந்து தொடர்ந்து வந்த ஜீன், ஆன்மீகப்பாதையை அடையாளம் காட்டும்.. .ஆன்மீகம் எனில் வெறும் சிலைவழிபாடு என்பதல்ல என அறிக.  
.
முதலில் நான் ஒரு கருவியே.. படைப்பாளன் இல்லை. இறையே அனைத்தும் என்பதை புரிதலாக மனம் ஏற்றுக்கொள்வதே ஆயிரத்தில் ஒருவருக்குச் சாத்தியமா என்பதே எனக்கு ஐயம்..  இளையராஜா போதுமான அளவு  புகழ் பணம் வந்தபின்னும் ’நான் நாயினும் கடையேன்’ எனச் சொல்தல் அந்த புரிதலை அவர் தன்வயமாக்கி உணர்வாகிய அடுத்த கட்டத்தில் பயணித்துக்கொண்டு இருக்கிறார் என்பதற்கான அறிகுறி

அடையாளத்தை தொலைத்தல் என்பது ஆன்மிகத்தின் முக்கியமான செயல்பாடு.. 1000 வது படமான தாரை தப்பட்டை பாலா கேட்டுக்கொண்டதற்காகவே அடையாளப்படுத்தப்பட்டது. இல்லையெனில் கடந்து போயிருக்கும் என்றார் பேட்டியில்

அன்னை தெரசா அன்புடன் கொடுத்த ஜெபமாலை தன் இசைகுழு உறுப்பினருக்கு பிரிவின் காரணமாய் கொடுத்து அனுப்பி தனக்கென வைத்துக்கொள்ளாத தன்மை..  அதுபோலவே காஞ்சிபெரியவர் கொடுத்த ஜெபமாலைகளையும் பரிசாகக் கொடுத்த தன்மை......மற்றும் தான் இசை அமைத்த பழைய பாடல்களைப் பற்றி நினைவு கொள்ளாமை, தன் குழந்தைகள் மூவரையும் சமமாக பாவிக்கும் தன்மை .. இது போன்ற ஞானப்பாதையில் பயணிப்போருக்கான குணங்களைக்கொண்டிருக்கிறார் இளையராஜா.

மனம் என்பது எதிர்மறை. அது தன்னை இழக்கச் சம்மதிக்காது.. தன்னை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள எதிர்மறை குணங்கள் தேவை என்பதால் ஆணவத்தை இழக்கச் சம்மதிக்காது.. ஆனால் ஆணவத்தை இழந்துவிட்டதாக வேடமிட்டு நம்மையே ஏமாற்றிக் கொண்டு இருக்கும்.  வாய்ப்பு கிடைக்கும்போது தன்னை வெளிப்படுத்தி உயிர்ப்போடு இருந்துகொள்ளும்..  இச்சூழல் ஆன்மிகப்பாதையில் உள்ள இயல்பான மேடுபள்ளங்கள். இது போன்ற எண்ணற்ற சூழல்கள் வரத்தான் செய்யும்.. உள்ளே பக்குவமாக பக்குவமாக இது மாறும் ……முழுமையடையும். இளையராஜாவிடம் பீப் பாடல் பற்றி கேட்டபோது நடந்தது இதற்குச் சான்று..

ஆன்மீகத்தில் மனதின் சூழ்ச்சிகளில் சிக்காது விடுபட்டு பயணிக்க நினைக்கும் யார் ஒருவருக்கும் (இளையராஜா,) அந்நிலை அடையும் வரையில் எந்த சூழலோ மனிதர்களோ தன் உள்அமைதியை குலைத்துவிடக்கூடும் என்ற சூழலில் சிறு பதட்டம் ஏற்படவே செய்யும். அல்லது ஆன்மீகம் என்றால் வெறும் சிலை வழிபாடு மட்டுமே என நினைக்கும் சமூகத்தின்மீது கொண்ட அக்கறையின் வெளிப்பாடகவும் இருந்திருக்கலாம்.

வார்த்தைகளை கவனிக்கும் நாம் அதன் உள்ளே பொதிந்திருக்கும் ஓராயிரம் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள சற்று ஏற்புத்தன்மை வேண்டும்.

ராஜா இசைஞானி மட்டுமல்ல.. ஞானியாவதற்குத் தகுதியான குணங்களை தன்னுள் வளர்த்துக்கொண்டும் இருப்பவர்.  அவரை புரிந்து கொள்ள முயல்வோம்.


Wednesday, December 10, 2014

கறையை நீக்குவதில் கவனம் தேவை!


 விலையுயர்ந்த துணிகளை வாங்குபவர்களுக்கு, அதை பராமரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். பட்டுப் புடவைகளை உடுத்திக் களைந்த பின், வியர்வை, ஈரம் உலரும் வரை நிழலில் காய வைக்க வேண்டும். பின், 'அயர்ன்' செய்யாமல் அப்படியே மடித்து, மர அலமாரியில் வைத்து விட வேண்டும்.மறுமுறை தேவைப்படும் போது, அந்த சமயத்தில் எடுத்து, 'அயர்ன்' செய்து உடுத்திக் கொள்ளலாம். ஏனெனில், நீண்ட காலத்துக்கு, பட்டுப் புடவை, 'அயர்ன்' மடிப்பில் இருக்கும் போது, அந்த மடிப்பில் நுாலும், ஜரியும் சேதமடைந்து, புடவை கிழிந்து விடும்.

அதேபோல், ஆண்களின் டி-ஷர்ட், உள் பனியன் வகைகளை அடித்து துவைப்பது, முறுக்கிப் பிழிவது கூடாது. நிறம் மங்கிய வெள்ளை நிறத் துணிகள், வேட்டி போன்றவற்றில் அதன் நிறம் பளிச்சிட, கறை போக்குவதற்கான, 'லிக்விட்'களை நீரில் கலந்து, அதிகபட்சம், 10 நிமிடங்கள் ஊற வைத்து அலசினால் போதும். கூடுதல் வெண்மை வேண்டும் என, அதிக நேரம் வைத்தால் துணி தான் சேதமாகும்.

குழந்தைகளுக்கான உடைகளுக்கு அதிகப்படியான சோப்பு பவுடர், சோப்பை பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக, அவர்களின் உள்ளாடைகளில் படிந்திருக்கும் சோப்பின் காரம், அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, அசவுகரியத்தையும் கொடுக்கும்.துணிகளில் படிந்த கறையை எடுக்க, நெயில்பாலிஷ் அசிட்டோன் எனப்படும் கெமிக்கலை, அந்த இடத்தில் சில துளிகள் விட்டு, காட்டனால் மெதுவாக தேய்த்து எடுக்க, கறை நீங்கி விடும் அல்லது அசிட்டோன் சேர்க்கப்பட்டுள்ள நெயில் பாலிஷ் ரிமூவரையும் இதற்கு பயன்படுத்தலாம்.

 ஐஸ்கிரீம், பால், சாக்லேட், கிரேவி, லிப்ஸ்டிக் கறையை எடுக்க, துணியை, வாஷிங் பவுடர் கரைசலில் ஊற வைத்து, டிடர்ஜன்ட் சோப்பை அந்த இடத்தில் மட்டும் கவனம் கொடுத்து தேய்த்தால் போதுமானது.

எண்ணெய் கறை படிந்த ஆடைகளை, முக பவுடரை மிதமான சூட்டில் நீரில் கலக்கி, அந்த துளிகளை கறையில் விட்டு பிரஷ் செய்தால், கறை காணாமல் போய்விடும்.

ரத்தம், துரு, சூப், கிரேவி போன்றவை கறையாக படிந்திருந்தால், சில துளிகள் ஹைட்ரஜன் பெராக்சைடை அதில் விட்டு மெதுவாக தேய்த்தால் போய் விடும்.

ஆடைகளை ஊற வைக்கும் போது, அதிகளவு டிடர்ஜன்ட் பவுடர் சேர்ப்பதையும், அதிக நேரம் ஊற வைப்பதையும் தவிர்க்க வேண்டும். இதனால், எத்தனை முறை அலசினாலும், சோப்பின் ரசாயனம் துணியில் தங்கி விடும். காய வைத்து எடுத்தாலும், வெண்மை கோடுகள் இருக்கும்.எல்லா வகை ஆடைகளையும், உள்பக்கம் வெளியில் தெரியுமாறு உலர்த்தினால், நிறமும், ஆயுளும் பாதுகாக்கப்படும்

நன்றி தினமலர்

Saturday, February 15, 2014

அர்விந்த் கெஜ்ரிவால் போராளியா ? பிரதமராகத் தகுதியானவரா?

ஜனலோக்பால் மசோதா தோல்வி என பத்திரிக்கைகள் அலற..படித்துப்பார்த்த போதுதான் தெரிந்தது..ஜனலோக்பால் தாக்கல் செய்யப்பட்டு, விவாதமோ ஓட்டெடுப்போ நடந்து தோல்வி அடையவில்லை.

டில்லியைப் பொருத்தவரை எந்த மசோதாவாக இருந்தாலும், அது மாநில கவர்னருக்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலோடுதான்  நிறைவேற்றப்படுகிறது. இதையே துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தியும் அதையும் மீறி தாக்கல் செய்ய நினைத்து அதில்தான் தோல்வி அடைந்தார் கெஜ்ரி..கடைபிடிக்கவேண்டிய நெறிமுறை,மரபு,விதிகளுக்கேற்ப நடக்காததுதான் தோல்விக்குக் காரணம்..


இது ஒரு முதல்வருக்கு அழகல்ல..அனுப்பி, மறுக்கப்பட்டிருந்தால் இவருக்கு வலு கூடி இருக்கும். அதைக் கூடச் செய்யாமல் என் விருப்பபடி செய்வேன் அது நடக்காவிட்டால் ராஜினாமா செய்வேன் என முன்னதாக சொன்னதும் மூடத்தனம்.

முன்னதாக, அர்விந்த் கெஜ்ரிவால் டில்லியில் இத்தனை சீட் பிடிப்போம் என்றே  நினைத்துப் பார்க்காத நிலையில் மக்களின் ஆர்வத்தினால் வெற்றி பெற்றார்.. இவர் மற்ற துறைகளில் வல்லுநராக இருக்கலாம். ஆனால் அரசியலில் கத்துக்குட்டிதான்.. அவர் வெற்றி பெற்ற சமயத்தில் இந்த கருத்தை தெரிவித்தால் எதிர்மறை விமர்சனமாகவே கருதப்படும் என்பதால், எதையும் முன்கூட்டியே திட்டவட்டமாகச் சொல்லக்கூடாது என்பதாலும், பொறுமை காத்தேன்.

போதுமான பெரும்பான்மை இல்லை என்ற போதிலும் ஆட்சி அமைக்க முயற்சித்ததிலேயே இவரது பாதை சரியல்ல என்பது தெளிவானது. தகுதி இல்லாத ஒருத்தர் , தன்னைவிட அதிக தகுதி உடையவரை தாண்டிச் சென்று பயன் அடைவது என்பது லஞ்சத்தின மறைமுக வடிவம்தான்.

ஊழலை ஒழிப்பதாகச் சொல்லிக்கொண்டு இந்த டில்லியில் கடந்த ஆண்டுகளில் நாட்டையே ஊழல் என்ற போர்வைக்குள் மூடி வைத்த பெருமைக்குச் சொந்தமுடைய காங்கிரசோடு கூட்டணி என்பதே ஜீரணிக்க முடியாத ஒன்று.

சரி ஏதோ தேர்தல் வரை தாக்குப் பிடிக்குமென்று நினைத்த கெஜ்ரி அரசு  தனக்குத் தானே வேட்டு வைத்துக் கொண்டது

மசோதா தாக்கல் செய்வதற்கே தன்விருப்பப்படி நடக்கவேண்டும் என்று மூன்று வயது குழந்தையை விட மோசமாக அடம் பிடித்ததோடு மட்டுமில்லாமல்,  அப்படி நிறைவேறாவிட்டால் ராஜினாமா செய்வேன் என முன்கூட்டியே சொன்னது முதிர்ச்சி இல்லாத நிலையை படம் போட்டுக் காட்டுகிறது.

அரசியல் என்பது சாக்கடை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.கூடவே அது ஒரு பணமுதலீடு இல்லா தொழில்.இதற்கு மூலதனம் வாய் பேசத் தெரியனும்.எந்த லாஜிக்கும் இல்லாம பேசத் தெரியனும். ... எனக்குத் தெரிந்து இந்தத் திறமை இன்றும் கூட குறையாமல் உற்சாகம் கொப்பளிக்க கொண்டு இருக்கிற எனக்குத் தெரிந்த ஒரு நபர் கலைஞர்தான்..இது உண்மையிலேயே பாராட்டுதான்..

கெஜ்ரி எதிர்பாராமல் தனக்குக் கிடைத்த வாய்ப்பை  சரியாக பயன்படுத்தத் தெரியாத முட்டாளாகப் போய்விட்டார். கிடைத்த வாய்ப்பை மரபு மற்றும் விதிகளுக்கு ஏற்ப செயல்பட்டு புத்திசாலித்தனமாக அணுகி, படிப்படையாக தான் நினைத்தது போல் அரசு நிர்வாகத்தைச் சீர்திருத்தி இருக்க வேண்டும்..

பெரும்பான்மை இல்லாத ஆட்சியில் முதல்வராக இருப்பதைவிட ராஜினாமா மேல் என சில நண்பர்கள் எழுதி இருந்ததை பார்த்தேன்,,  இது முதல்வராக பதவி ஏற்கும்போது தெரியலையா..பெரும்பான்மை என்ன ஆட்சி அமைத்ததற்கு பின்னரா குறைந்தது? என்ன சாதிக்கமுடியும் என்ன சாதிக்க முடியாதுன்னு தெரியாம எதற்காக ஆட்சிபீடத்தில் ஏறீனீங்க

மூச்சுக்கு முன்னூறுதரம் மைனாரிட்டி அரசுன்னு ஜெ திட்டினாலும் அந்த அரசை எப்படி ஆட்சிக்காலம்  முழுவதும் ஓட்டறதுன்னு கலைஞர்கிட்ட பாடம் கேட்டிருந்தாக் கூட தப்பிச்சிருக்கலாமே

அரசியல், நிர்வாகம் இரண்டிலுமே எந்தவித முன் அனுபவம் இல்லாத இவர் ஆட்சிக்கு வந்த உட்கார்ந்தபின் தான் நெருப்பின் மீது உட்கார்ந்த அனுபவம் கிடைத்து இருக்கிறது. சமாளிக்கும் பக்குவம் இன்றி விட்டால்போதும் என்ற மனநிலையில் இராஜினாமா செய்திருக்கிறார்

சத்தமில்லாமல் காரியங்கள் செய்து விளைவுகளை உறுதி செய்தபின் மீடியாவில் பரபரப்பாக வந்திருந்தால் பாராட்டலாம்.. நினைத்தவுடன் செய்வது என்பதும் அதை உடனே மீடியாவில் சொல்வது என்பதும் இன்னும் அரசியலின்,  நிர்வாகத்தின்,.பாலபாடம்கூட தெரியாத இந்த கெஜ்ரியின் ராஜினாமாவை  வரவேற்கிறேன்..

இது ஓட்டுப்போட்ட மக்களுக்கு புத்தியில் உரைக்கக் கூடிய விசயம்..மெஜாரிட்டி இல்லாமல் வாக்களித்தால் என்ன நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பொதுத் தேர்தலுக்கு முன், நடத்திக் காட்டி விட்டார் கெஜ்ரி..வரும் பாரளுமன்ற தேர்தலில் எந்தக்கட்சியாக இருந்தாலும் சரி அது மெஜாரிட்டியாக வர வேண்டியதின் அவசியத்தை, மக்களுக்கு நன்கு உணர்த்திக் காட்டிய நிகழ்வே இது..

காங்கிரசு டில்லி அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கி, கெட்ட பெயர் சம்பாதிக்காமல் இருக்க, நேரடியாகவே பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல் அவராகவே விலகி உதவிதான் செய்திருக்கிறார்.

இனி இவரது எதிர்காலமும், இவரது ஆம் ஆத்மியின் எதிர்காலமும் வளமானதாக நிச்சயம் இருக்காது..பிரதமர் ஆகும் வாய்ப்பு இருக்கிறதாக நண்பர்கள் சொல்வதைக் கேட்டால் சிரிப்பும் வேதனையும் மிஞ்சுகிறது.

காணமல் போனவர்கள் பட்டியலில் கெஜ்ரியின் பெயர், நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பின்னர் இடம் பெறும் என்பதே உண்மை..

Tuesday, December 31, 2013

கை குழந்தைக்கான சத்தான உணவுகள் !


கூட்டு குடும்பமாக வாழ்ந்த காலம் மாறி, தனி குடித்தனமாக குறுகிவிட்ட சூழ்நிலையில், குழந்தை வளர்ப்பு பற்றி தெரிந்து கொள்ள, பெற்றோர் மிக சிரமப்படுகின்றனர். 

குழந்தை பிறந்த ஆறு மாதம் வரை, தாய்ப்பாலே போதும். அதன் பின், உடல் வளர்ச்சிக்கு தேவையான கலோரிகள், தாய்ப்பாலில் அதிகம் இல்லாததால், அதற்கு இணையான உணவுகளை, கஞ்சி வடிவில் நன்கு குழைத்து தருவது அவசியம்.

பச்சரிசியை, "மிக்சி'யில் குருணை போல உடைத்து, வெயிலில் காய வைத்து, வறுத்து, பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் சேமியுங்கள். ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு, மூன்று ஸ்பூன் பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து, குழைய வேக வைத்த பின், தேங்காய் எண்ணெய், மூன்று சொட்டு சேர்த்து, நன்கு பிசைந்து, நம் கையாலேயே ஊட்டலாம்.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பல்வேறு சொட்டு மருந்துகள், தேங்காய் எண்ணெயில் உள்ள சத்துக்கள் தான், உடலுக்கு வளம் சேர்க்கும். தேன்வாழை, ரஸ்தாளி, மலை வாழை போன்றவற்றின் விதைகளை நீக்கி, கைகளால் நன்கு மசித்து கொடுத்தால், உடல் எடை அதிகரிக்கும்.

ஏழாம் மாதத்தில் இருந்து கேரட், உருளைகிழங்குகளை நன்கு வேக வைத்து, தோல் நீக்கி, மிளகு, சிறிதளவு உப்பு சேர்த்து, நன்கு மசித்து தர வேண்டும். 

ஒன்பதாம் மாதத்திலிருந்து, அதிக நார்சத்துள்ள கீரை உணவுகளை, நன்கு வேகவைத்து, அதை கடைந்து, உப்பு, சீரகம், மிளகு சேர்த்து கொடுக்கலாம்.

பெற்றோர், தன் குழந்தைக்கு ஈறு வளர்ந்திருக்கிறதா என, கண்காணிக்க வேண்டும். ஈறு வளர்ந்து விட்டால், அதன் பின், நாம் சாப்பிடும் உணவுகளையே குழந்தைக்கும், கொடுக்க ஆரம்பிக்கலாம்.

எட்டு மாதங்கள் வரை அதிக காரம், இனிப்பு, புளிப்பு உள்ள எந்த பதார்த்தத்தையும் தரக்கூடாது. ஏனெனில், தரப்படும் சுவைக்கு ஏற்ப, அச்சுவைக்கு அடிமையாகி, வேறு எந்த உணவையும், உண்ண விரும்ப மாட்டார்கள். 

இதை பின்பற்றினாலே, குழந்தைகள் போதுமான உடல் எடையுடன், ஆரோக்கியமாக இருப்பர்.

ஆறு மாத குழந்தைகளுக்கு, உணவளிக்கும் முறைகளை சொன்னவர் சித்த மருத்துவர், கு.சிவராமன்: தினமலர்

Saturday, October 12, 2013

ஆயுதபூஜை -- நன்றித் திருநாள்                 
 உயிருள்ள, உயிரற்ற எதையும் நேசிக்க வேண்டும். அதுதான் வாழ்வின் முதல்பாடம்.

அவற்றை வாழ்த்த வேண்டும் என்பது இரண்டாவது பாடம்.

நம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்ள வேண்டும். இது மூன்றாவதுபாடம்.

பயன்படுத்தும் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்ல வேண்டும். அப்போதுதான் நமக்கு உதவுபவைகளுக்கும், நமக்கும் இடையே உணர்வுக் கலப்பு ஏற்படும். அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளும், இயற்கை ரகசியங்களும் அப்போது புரியும். இது நான்காவது பாடம்.

ஆயுதபூஜை நாம் பயன்படுத்தும் கருவிகளுக்கு நன்றி சொல்வதற்காகவே கொண்டாடுகிறோம். யார் நன்றி சொல்கிறார்களோ அவர்கள் மனது நிறைவாக இருக்கும். கருவிகளை இன்னும் பக்குவமாக பயன்படுத்துவோம். இன்னும் நல்ல முறையில் வைத்திருப்போம்

கவனித்துப்பாருங்கள். இப்படி கருவிகளோடு மனப்பூர்வமான/ஆத்மார்த்தமான/உயிர்த் தொடர்பு இருக்கையில் கருவிகள் பலநாள் நம்மிடம் தொலைந்து போகாமல் இருக்கும். அதிகநாள் உழைக்கும். இதை நினைவுகூறும் நாளாக இந்த ஆயுதபூஜை நாள் அமையட்டும். அனைத்துப் பொருள்களையும் துடைத்து சுத்தம் செய்து வணங்கி, நன்றி சொல்லி தினமும் பணியை ஆரம்பிப்பது வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். செய்வோம்.

என் உடல்நலத்திற்காக நன்றி
எனது அன்பிற்காக நன்றி
எனது மகிழ்ச்சிக்காக நன்றி
எனது செல்வத்திற்காக நன்றி
எனது வேலைக்காக நன்றி
என் இசைவான குடும்பத்திற்காக நன்றி
எனது உறவினர்களுக்காக நன்றி