"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, January 7, 2019

மன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி ?

சுவர் கடிகாரமும் சுத்தியலும் (மன உரையாடலுக்கான சிறந்த எடுத்துக்காட்டு)
ஒருவர் தன் வீட்டு சுவரில் மாட்டுவதற்காக ஒரு சுவர் கடிகாரம் வாங்கினார். சுவரில் மாட்ட ஆணி அடிக்க சுத்தியலைத் தேடினார் கிடைக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் வாங்கலாம் என்று நினைத்தார். ஆனால் இரவு நேரமாச்சே சரி காலையில் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..
காலைல பக்கத்து வீட்டுக்கு கிளம்பும் போது "ச்சே காலங்கார்த்தால இரவல் கேக்க வந்துட்டானே" னு நெனச்சுட்டா என்ன செய்வது. சரி அப்புறம் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..
இப்படியே ஒவ்வொரு நாளும் "விளக்கு வைக்குற நேரத்துல சுத்தியல் கேட்டு வந்துட்டான் பார்"
"வெள்ளிக் கிழமை அதுவுமா இரவல் கேக்கறானே"
பக்கத்து வீட்டுக்காரன் இப்படி எதையாவது சொல்லி விட்டால் அவமானமாகி விடுமே என்ற தயக்கத்திலேயே பல நாட்கள சுத்தியலைக் கேக்காமல் விட்டு விட்டார் அந்த நபர்.
மாட்டப்படாத கடிகாரம் அவர் கண்ணில் பட்டுக்கொண்டே அவரை வெறுப்பேத்தியது..
ஒரு நாள் விருட்டுனு பக்கத்து வீட்டுக்கு போய் "யோவ் போய்யா நீயும் வேணாம், உன் சுத்தியும் வேணாம் நீயே வெச்சுக்கோ"னு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்... பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒண்ணுமே புரியல..
இந்த கதை மாதிரி தான் அடுத்தவரிடம் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசாமல் நாமாகவே அவர் இப்படி சொல்லுவாரோ அப்படி சொல்லுவாரோ என்று நம் மனதுக்குள்ளாக அவரிடம் எதிர்மறையாக பேசி கொள்கிறோம்.. இதற்கு பெயர் மன உரையாடல்கள் (Mind Conversations).
நெருக்கமான இருவருக்குள் பிரச்சனைகள் வருவதற்கு இந்த மன உரையாடல்கள் முக்கிய காரணமாக அமைகிறது..ஒருவரை பற்றி அவரிடம் நாம் நேரடியாக பேசும் வார்த்தைகள் மட்டுமன்றி அவரை பற்றி நம் மனதுக்குள் நிகழும் மன உரையாடல்களும் அவருக்கும் நமக்குமிடையேயான புரிந்துணர்வை நிர்ணயிக்கிறது..
உங்களுக்கும் வேறொருவருக்கும் இடையேயான உறவுமுறையில் சரியான புரிந்துணர்வு இல்லையெனில் அவரை பற்றி உங்களுக்குள் நிகழும் மன உரையாடலை கவனியுங்கள்.. நேரில் பேசும்போது எவ்வளவு அன்பாக நீங்கள் பேசியிருந்தாலும், அவரை பற்றி உங்கள் மனதில் நிகழும் உறையாடலில் நீங்கள் அவரை பற்றி குறை கூறினால், நிச்சயம் உங்களுக்கிடையேயான புரிந்துணர்வு பாதிக்கும்..
ஏற்கனவே புரிந்துணர்வில் பாதிப்படைந்த ஒருவரைப் பற்றி உங்கள் மனதில் நேர்மறையான உரையாடலை நீங்கள் கற்பனை செய்தால் உங்கள் உறவுமுறை முன்பை விடவும் அதிக பலம் பெறும்..
மன உரையாடல்களை கவனியுங்கள், உறவுகளுக்கிடையேயான புரிந்துணர்வை பலப்படுத்துங்கள்..
உற்சாகத்துடனும் நன்றியுணர்வுடனும் 🌻ஸ்ரீனி🌻

facebook பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி நண்பர் திரு.ஸ்ரீனி அவர்களுக்கு

No comments:

Post a Comment

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)