"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

Saturday, January 16, 2016

யார் இந்த இளையராஜா ?

இளையராஜாவை கொண்டாட அவர் இசை அமைத்த பாடல்கள் போதும்.. .நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் சந்திக்கும் உணர்வுபூர்வமான கணங்கள் அது இன்பமோ துன்பமோ, கலவையாகவோ பொருத்தமாக நமது மனதை வருடும்விதமாக இசை அமைந்திருப்பது திண்ணம்.

எல்லோரும் அவரை கொண்டாடவேண்டும் என்று கட்டாயம் கிடையாது.. இளையராஜா ஆணவம் பிடித்தவர் என்பது ஒரு சாரர் கருத்து.. பீப் பாடல் பற்றி கருத்து கேட்ட நிருபரிடம் பதிலுக்கு அறிவிருக்கா என்ற கேட்ட வார்த்தையை அப்படியே பார்த்து முடிவு செய்வார்கள் இவர்கள். உண்மை வேறாக இருந்தாலும்..   அது என்ன உண்மை?

பொங்கல் திருநாளாம் 15.01.2016 வெள்ளி அன்று விஜய் தொலைக்காட்சியில் மாலை சிறப்பு பேட்டி.. அதைக் கேட்டவர்களும் இளையராஜாவின் சில பதில்கள் எதிர்கேள்விகளாகவும், சில நேரடியான பதில் தராமல் சுருக்கமாக முடித்ததும் ஆணவத்தின் வெளிப்பாடுதான் என்றுதான் சொன்னார்கள்.

இதில் எனக்கென சில கருத்துகள் இருப்பதால் பகிர்ந்து கொள்கிறேன்.

பொதுவிலும் சரி பேட்டிகளிலும் சரி இந்த சமூகம் இனிய வார்த்தை என்ற முகமூடியைக் கட்டாயம் கேட்கிறது.. அதற்கு பின்னால் என்ன விசயம் இருக்கிறது என கவனிப்பதே கிடையாது. விசயமே இல்லாமல் வார்த்தை ஜாலம் காட்டினால் போதுமானது.

இளையராஜா இதுவரை ஊடகங்களில் அதிகம் பேட்டிகளில் பங்கேற்றது கிடையாது. இயல்பில்  இளையராஜா தனிமைவிரும்பி..  தனிமை விரும்பிகள் மற்றவர்களோடு இயல்பாக எளிதில் உறவாட விரும்ப மாட்டார்.. 

இது அந்த சிறப்புப் பேட்டியில் ’எந்த இயக்குநரோடு நெருக்கம் அதிகம்?’ என்ற கேள்விக்கு யாரோடும் நெருக்கம் இல்லை.. துறை சார்ந்த பழக்கம் மட்டும் உண்டு என்று உண்மையைச் சொன்னதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

ஆரம்பத்தில் அன்னக்கிளி திரைப்படத்திற்குப் பின் பெரிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்திருக்க வாய்ப்பு குறைவு எனவே இயற்கையாகவே யாரிடமும் மண்டியிடவேண்டிய அவசியம் இல்லை.

ஒவ்வொரு நாளும் பாடலுக்கான சூழல்களைத் தொடர்ந்து கேட்பது.. பின்னர் அந்த சூழலை மனதுக்குள் உணர்வாகக் கொணர்ந்து பின் அதற்கான இசைக்கோர்வை அளிப்பது என முழுக்கவே பிறரைச் சாராது தன்னைச் சார்ந்தே இயங்கும் சூழல் அவருடையது.

 படைப்பாளனாக, பிறர் அடையாளம் காணப்படும் அளவிற்கு அவர் உயர தான் என்ற உணர்வு, பொதுமொழியில் சொல்வதானால் ஆணவம், உள்ளே அவருக்கு உந்து சக்தியாக விளங்கி இருக்கும். இது சாதித்தவர்களுக்குத் தெரியும்.. அல்லது சாதித்தவர்களை நோக்கினால் விளங்கும்.

தடைகள் பல வந்தபோதும் எதிர்த்து ஜெயிக்க இந்த ஆணவம் தேவை.. தன்னம்பிக்கையின் சீனியர்தான் இந்த ஆணவம்.

ஓய்விற்கு நேரமில்லாமல் குடும்பத்தோடு செலவிட நேரம் போதாமல்
 இசைப் படைப்பு உலகத்தில் வாழ்ந்திருக்கிறார். இந்த ஏக்கம் மனதில் இருந்திருக்கலாம். எதற்கு ஏங்கினாரோ அது கிடைக்காதபோது மனம் வெறுப்பும் சலிப்பும் அடையும் போது பரம்பரையில் எங்கோ இருந்து தொடர்ந்து வந்த ஜீன், ஆன்மீகப்பாதையை அடையாளம் காட்டும்.. .ஆன்மீகம் எனில் வெறும் சிலைவழிபாடு என்பதல்ல என அறிக.  
.
முதலில் நான் ஒரு கருவியே.. படைப்பாளன் இல்லை. இறையே அனைத்தும் என்பதை புரிதலாக மனம் ஏற்றுக்கொள்வதே ஆயிரத்தில் ஒருவருக்குச் சாத்தியமா என்பதே எனக்கு ஐயம்..  இளையராஜா போதுமான அளவு  புகழ் பணம் வந்தபின்னும் ’நான் நாயினும் கடையேன்’ எனச் சொல்தல் அந்த புரிதலை அவர் தன்வயமாக்கி உணர்வாகிய அடுத்த கட்டத்தில் பயணித்துக்கொண்டு இருக்கிறார் என்பதற்கான அறிகுறி

அடையாளத்தை தொலைத்தல் என்பது ஆன்மிகத்தின் முக்கியமான செயல்பாடு.. 1000 வது படமான தாரை தப்பட்டை பாலா கேட்டுக்கொண்டதற்காகவே அடையாளப்படுத்தப்பட்டது. இல்லையெனில் கடந்து போயிருக்கும் என்றார் பேட்டியில்

அன்னை தெரசா அன்புடன் கொடுத்த ஜெபமாலை தன் இசைகுழு உறுப்பினருக்கு பிரிவின் காரணமாய் கொடுத்து அனுப்பி தனக்கென வைத்துக்கொள்ளாத தன்மை..  அதுபோலவே காஞ்சிபெரியவர் கொடுத்த ஜெபமாலைகளையும் பரிசாகக் கொடுத்த தன்மை......மற்றும் தான் இசை அமைத்த பழைய பாடல்களைப் பற்றி நினைவு கொள்ளாமை, தன் குழந்தைகள் மூவரையும் சமமாக பாவிக்கும் தன்மை .. இது போன்ற ஞானப்பாதையில் பயணிப்போருக்கான குணங்களைக்கொண்டிருக்கிறார் இளையராஜா.

மனம் என்பது எதிர்மறை. அது தன்னை இழக்கச் சம்மதிக்காது.. தன்னை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள எதிர்மறை குணங்கள் தேவை என்பதால் ஆணவத்தை இழக்கச் சம்மதிக்காது.. ஆனால் ஆணவத்தை இழந்துவிட்டதாக வேடமிட்டு நம்மையே ஏமாற்றிக் கொண்டு இருக்கும்.  வாய்ப்பு கிடைக்கும்போது தன்னை வெளிப்படுத்தி உயிர்ப்போடு இருந்துகொள்ளும்..  இச்சூழல் ஆன்மிகப்பாதையில் உள்ள இயல்பான மேடுபள்ளங்கள். இது போன்ற எண்ணற்ற சூழல்கள் வரத்தான் செய்யும்.. உள்ளே பக்குவமாக பக்குவமாக இது மாறும் ……முழுமையடையும். இளையராஜாவிடம் பீப் பாடல் பற்றி கேட்டபோது நடந்தது இதற்குச் சான்று..

ஆன்மீகத்தில் மனதின் சூழ்ச்சிகளில் சிக்காது விடுபட்டு பயணிக்க நினைக்கும் யார் ஒருவருக்கும் (இளையராஜா,) அந்நிலை அடையும் வரையில் எந்த சூழலோ மனிதர்களோ தன் உள்அமைதியை குலைத்துவிடக்கூடும் என்ற சூழலில் சிறு பதட்டம் ஏற்படவே செய்யும். அல்லது ஆன்மீகம் என்றால் வெறும் சிலை வழிபாடு மட்டுமே என நினைக்கும் சமூகத்தின்மீது கொண்ட அக்கறையின் வெளிப்பாடகவும் இருந்திருக்கலாம்.

வார்த்தைகளை கவனிக்கும் நாம் அதன் உள்ளே பொதிந்திருக்கும் ஓராயிரம் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள சற்று ஏற்புத்தன்மை வேண்டும்.

ராஜா இசைஞானி மட்டுமல்ல.. ஞானியாவதற்குத் தகுதியான குணங்களை தன்னுள் வளர்த்துக்கொண்டும் இருப்பவர்.  அவரை புரிந்து கொள்ள முயல்வோம்.