"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label ஒட்டகம். நபிகள் நாயகம். Show all posts
Showing posts with label ஒட்டகம். நபிகள் நாயகம். Show all posts

Thursday, May 21, 2009

கடவுளை நம்புவோம் ஆனால் ஒட்டகத்தை கட்டி வைப்போம்.

உலக அமைதி, உலக நலம் பற்றிய சிந்தனைகளைக் கூறும் கவனகர்முழக்கம்(மாதஇதழுக்கு)
தமிழன், தமிழ்மொழி என்னும் குறுகிய பார்வை தேவையா?
(வாழ்க வளமுடன் ஜெயகோபால், திண்டுக்கல் அன்பரின் கேள்விக்கு பதில்)


நபிகள் நாயகம் பெருமானார் அவர்கள் ஏக இறைவனாகிய அல்லாமேல் தூய நம்பிக்கை வைக்கும் இஸ்லாமிய மார்க்கத்தை உபதேசம் செய்து வந்தார் என்பது நாம் அறிந்ததே.

அவரது மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட ஓர் அன்பர் ஒருநாள் நபி பெருமானைப் பார்க்க வந்தார்.
அவர்கல் உரையாடிக் கொண்டிருந்தபோது அந்த அன்பர் பெருமானாரைப் பார்த்து “தங்கள் மார்க்கத்தை அப்படியே ஏற்று அல்லா மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளேன் இப்போதெல்லாம் இரவில் என் ஒட்டகத்தைக்கட்டி வைப்பதுக்கூட இல்லை.
எல்லாவற்றையும் அல்லா பார்த்துக் கொள்வார் என்று நம்புகிறேன். என் நம்பிக்கை சரிதானே?” என்று பெருமையாக கூறினார்.

அப்போது பெருமானார் அவரைப் பார்த்து அமைதியாக “அன்புச் சகோதரரே, அல்லாவை நம்புங்கள். ஆனால் அருள்கூர்ந்துஉங்கள் ஒட்டகத்தைக் கட்டி வையுங்கள்” என்று கூறினாராம்.

உலக அமைதி, உலக நலம் என்பதெல்லாம் நம் இலட்சியங்கள். ஆனாலும் இன்றைய சூழ்நிலையில் தமிழ்மொழி தமிழினம் என்னும் ஒட்டகங்களை பாதுகாப்பாய்க் கட்டி வைப்பதில் தவறே இல்லை.


நன்றி: விநோதமான வினாக்கள், கவனகரின் விடிவுதரும் விடைகள் -- இராம.கனகசுப்புரத்தினம்.

*************************************************************************************************

என் பார்வையில்

எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொள்வான் என்றால் என்ன அர்த்தம்.?

இன்ப துன்ப உணர்வுகள், சமுதாயத் தொடர்பில் வரும் அனைத்தும் இறைவன் செயலே என்றுணர்ந்து எல்லாம் அவன் செயல் என்ற பக்குவப்பட்ட மனதோடு, நிறைவோடு இருப்பது ஆகும்.

இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை எனில் குழப்பமே மிஞ்சும்.

எல்லாம் இறைவன் செயல் என்றால் நம் இஷ்டப்படி செயல் செய்யலாமா? அல்லது ஒன்றுமே செய்யாமல் அவன் செயல் என இருந்துவிடலாமா? இது நமக்கு எதைத் தரும்? உருப்படாத சோம்பேறித் தனத்தைதான் தரும்,

இந்த மனம் ஒன்றும் சாதரணப் பட்டதல்ல. சொல்வதைஎல்லாம் நம்பிக்கொள்ள! அது வெளிநோக்கி அலைந்து கொண்டு இருக்கும்வரை

ஐம்புலனுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் வரை இந்த தத்துவங்களை எல்லாம் கொஞ்சம்கூட ஏற்றுக் கொள்ளாது.

மனதை திருத்த வேதாத்திரி மகான் சொன்னதுபோல் மனதைக் கொண்டுதான் முயலவேண்டும். எதிலும் உள்ளடங்கியுள்ள உண்மையினை உணர்ந்து அவைகளிடையே ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பை அறிந்து உள்நோக்கி மனம் தெளிவை அடையுமானால் அடங்க ஆரம்பிக்கும்.

அதன்பின் எல்லாமே அவன் செயல்தான் என்று உணர உணர நம் செயல்களில் முழுஈடுபாடு இருந்தாலும் புளியம்பழம் எப்படி ஓட்டுடன் ஒட்டாமல் ஆனால் ஒன்றாக இருக்கிறதோ அதுபோல் மனம் பாதிப்போ உளைச்சலோ அடையாது.

தனக்கும் பிறர்க்கும் நன்மை விளையும் வண்ணம் நம் கடமைகளை ஆற்றிக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் மனம் அதில் முழுமையாக ஈடுபட்டாலும், எவ்வித விளைவு வந்தாலும் எந்தவித சலனமில்லாமல் அமைதியாக இருக்கும்.

இதனால் நம்மிடம் எண்ணங்கள், ஆசைகள்,சினம்,கவலை, போன்றவைகள் தானாக முயற்சி இன்றி சரியாகிவிடும். இதுதான் தானாக நிகழ்வது என்பது.

இது ஆன்மீகத்தில் சிறு ஆரம்பநிலையே.

இம்மனநிலை வர, மனதைப் பழக்கவே,தொடர்ந்த தன்னம்பிக்கை தொடர்பான கட்டுரைகள், உரைகள்,தியானம் சம்பந்தமானவைகள்அனைத்தும்.

அனைத்தையும் உருவாக்கி காத்து நிற்கும் ஆற்றலுக்கு கட்டுப்பட்டு நம் கடமைகளை நாம் முழுமையாக ஆற்றி வாழ்வதே முழுமனிதவாழ்க்கை. இதுவே எல்லாம் அவன் செயல்.என உணர்ந்தாலும், நம் கடைமையான ஒட்டகத்தை கட்டி வைப்போம்.கட்டி வைக்காவிட்டால் காணாமல் போகலாம், வேறு ஏதெனும் நடக்கலாம். விளைவு சிக்கல், துன்பம் தான்.

கடைமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பதில் உள்ள மனநிலையும் இதுதான்

மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்
வாழ்த்துக்கள்