"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, July 31, 2009

சமயத்தில் ஒத்துழையா - சிலேடை

கோவை வானொலிக்காக நடந்த நிகழ்ச்சியில் திருக்குறள்.பெ.இராமையா அவர்கள் பங்கேற்றபோது, அவரிடம் ஒரு புலவர், ”மின்சாரத்திற்கும் சம்சாரத்திற்கும் சிலேடையாக ஒரு வெண்பாவைப் பாடவேண்டும்” என்றார்.

”ப்ளிச்...” என்று ஆரம்பித்த சிலேடைப் பாடலின் முதல் வரி, அனைவரையும் சிரிப்புக் கடலில் ஆழ்த்தியது.


சமயத்தில் ஒத்துழையா
ஷாக்அடிக்கும் தொட்டால்
இமைசிமிட்டும் இன்பமதை
ஊட்டும்-நமை உயர்த்தும்
தன்சாரம் குன்றாத
தன்மையால் எஞ்ஞான்றும்
மின்சாரம் சம்சாரமே!


சமயத்தில் ஒத்துழையா...’ என்பதில் ‘மின்சாரம்,சம்சாரம் இரண்டுமே எந்த நேரத்தில் காலை வாரும் என்று சொல்ல முடியாது. எதிர்பாரத நேரத்தில் தகராறு செய்து நமக்கு அதிர்ச்சியை (tension) உண்டாக்கும்.

ஷாக் அடிக்கும் தொட்டால்...’ என்பது அடுத்த வரி, தகராறு செய்யும் சமயத்தில் இரண்டின் மீதும் கையை வைக்காதே. பட்...டென்று அடித்து விடும்.

இமைசிமிட்டும்...’ அதிக அழுத்தம் (ஹீவோல்ட்), குறை அழுத்தம் காரணமாக மின்சார விளக்குகள் ‘ப்ளிச்..’ என எரிவதும், மங்கலாக ஒளிர்வதும் இயற்கை.
அதுபோல் வீட்டுக்கு வரும் விருந்தினரைப் பொறுத்து சுறுசுறுப்பாய் இயங்குவதும், மந்தமாய் இருப்பதும் சம்சாரத்தின் இயற்கை.
அதாவது பிறந்த வீட்டுச் சொந்தங்களாகிய அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என்று வந்தால் சுறுசுறுப்பாய்ப் ‘ப்ளிச்’சென்று மின்னும். புகுந்த வீட்டுச் சொந்தங்களாகிய மாமியார்,நாத்தனார் என்று வந்துவிட்டால் மந்தமாகி விடும்’.

இன்பமதை ஊட்டும்..’ வீட்டில் மின்விசிறி சுழல, மின் அடுப்பு எரிய,குளிர்பெட்டி குளிர, விளக்குகள் ஒளிர, மின்சாதனப் பொருட்கள் இயங்க என எல்லாவற்றிற்கும் மின்சார ஓட்டம் சீராக இருந்தால் நமக்கு இன்பமான மனநிலை தரும். அதேபோல் ஒரு குடும்பத்தின் அத்தனை இன்பங்களுக்கும் காரணமாய் இருந்து நமக்கு இன்பத்தை தருவது சம்சாரமே.

நமை உயர்த்தும்...’ ஒரு வீட்டின் உயர்வுக்கும் நாட்டின் பொருளாதார உயர்வுக்கும் மின்சக்தி ஓர் அடிப்படைத் தேவை. அதேபோல் ஒரு குடும்பத்தின் உயர்வுக்கு சம்சாரம் ஓர் அடிப்படைத் தேவை

தன்சாரம் குன்றாத தன்மையால்’ நேரம் கருதியோ, ஆளைக் கருதியோ மின்சாரம் தன் ஆற்ற்லைக் குறைத்துக் கொள்வது கிடையாது.240 வோல்ட் மின்சக்தி என்றால் யார், எப்போது தொட்டாலும் ஒரே மாதிரிதான் மின் அதிர்ச்சி இருக்கும். அதேபோல் இல்லத்தில் எப்போதும் தன் மதிப்புக் குறையாமல் பார்த்துக் கொள்வது சம்சாரத்தின் இயல்பாக இருக்கும்.

மேற்கூறிய காரணங்களால் மின்சாரமும் சம்சாரமும் ஒரே இயல்புடையவை
என பாடலை முடித்தார்.பதின்கவனகர் திரு.இராமையா பிள்ளை.

எப்படி..?

சுவையாக உள்ளதா சிலேடை..?!!!!!!

நன்றி: கவனகர் முழக்கம் தி.ஆ.2033 வைகாசி வெளியீடு

Wednesday, July 29, 2009

அன்னை தெரஸா

மெகா டிவியில் காலை 7.15 க்கு கவனகர் சொற்பொழிவில் கிடைத்த ஒரு தகவல். இதை பதிவேற்ற எண்ணம் இருந்தும் நேரமின்மையால் பொறுத்திருந்தேன். சாருநிவேதிதா அதை பதிவேற்றம் செய்திருக்கிறார். தன் கட்டுரைக்காக சொல்லி இருந்தாலும் எனக்கு பிடித்து இருந்ததால் அவருக்கு நன்றியைச் சொல்லி இங்கே...

கனக சுப்புரத்தினம் என்பவரின் ஆன்மீகச் சொற்பொழிவு. ஒரே ஒருநாள் அதைக் கேட்டேன். அதில் அவர் ஒரு சம்பவத்தைச் சொன்னார். மதர் தெரஸா கல்கத்தாவில் ஆசிரமத்தை ஆரம்பித்த புதிதில் அதற்குத் தேவையான பணச் செலவுக்காகத் தன்னுடன் சில குஷ்ட நோயாளிகளை அழைத்துக் கொண்டு தெருத் தெருவாகச் சென்று பெரிய கடைகளில் பிச்சை கேட்பாராம். ஒருநாள் ஒரு சேட்டுக் கடையில் கேட்கிறார். சேட்டு அன்றைய தினம் (இதை வியாபார நேரத்தில் தொந்தரவாக நினைத்து) மிகுந்த கோபத்தில் இருக்கிறார். ” வேறு இடம் பார் ” என்கிறார். தெரஸா தன்னுடைய ஆசிரமத்தைப் பற்றிச் சொல்லி உதவி கேட்கிறார். சேட்டுக்குக் கோபம் எல்லை மீறுகிறது.

“உன்னிடம் தருவதற்கு இப்போது எதுவும் கிடையாது. ”

“இருப்பதைத் தாருங்கள்; போதும். ”

“இதோ இதுதான் இருக்கிறது ” என்று சொல்லி தெரஸாவின் முகத்தில் காறி உமிழ்கிறார் சேட்.

உடனே தெரஸாஎனக்கு இது போதும்; இவர்களுக்கு ஏதாவது தாருங்கள்என்று மிக அமைதியாகச் சொல்கிறார்.

இதைக் கேட்டதும் சேட் ஆடிப் போய் விடுகிறார். அன்றைய தினத்திலிருந்து தங்கள் நிறுவனத்திலிருந்து ஆண்டு வருமானத்தில்,(இலாபத்தில்) பத்து சதவிகிதத்தை மதர் தெரஸாவின் ஆசிரமத்துக்கு இன்று வரை கொடுத்து வருகிறார்கள் சேட்டின் குடும்பத்தினர்.

மீண்டும் சந்திப்போம்

Tuesday, July 28, 2009

அருட்காப்பு


நண்பர் திரு.முக்கோணம் அவர்கள் எழுதியுள்ள சொற்களின் சக்தி இடுகையை படித்தவுடன் அதன் தொடர்ச்சியாக அதில் உள்ள நுட்பத்தை, வேதாத்திரி மகான் விளக்கிய வண்ணம் கொடுக்க விரும்பினேன். இதோ ஏன் அருட்காப்பு தேவை என்பதன் விளக்கம்.

அருட்காப்பு:

”எல்லாம் வல்ல அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைவதாக..”



வெளி உலகில் ஒரே புழுதிமயம்,புகைமயம்,புழுக்கம், இதனால் நம் உடல் ஒழுங்கு பாதிப்படைகிறது. அந்த பாதிப்பால் நம் மன அமைதி கெடுகிறது. மனஇறுக்கம் (TENSION) அதிகமாகிறது.

நாம் இருக்கும் அறைக்குள் தூசி நுழையாமல், புகை வராமல், புழுக்கம் இல்லாமல் குளிர்வசதி (AIR CONDITION) செய்து கொண்டால் இந்தத் தொல்லைகளிலிருந்து நம்மளவில் விடுதலை பெறுகிறோம்.

அதேபோல் சமுதாய அமைப்பில் உள்ள சீர்கேடுகளால் பாதிக்கப்பெற்ற மக்கள், இறுகிய முகத்துடன், குழப்பமான எண்ணங்களுடன், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது எரிச்சலுடன், பொறாமையுடன், புழுக்கத்துடன் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்களுடைய எதிர்மறை எண்ண அலைகளின் தாக்குதலால் (THOUGHT POLUTION) நம்மை அறியாமலே நாம் மனப்பாதிப்பை அடைகிறோம்.

அந்தப்
பாதிப்பிலிருந்து நம்மளவில் நாம் விடுதலை பெறவேண்டியேஅருட்காப்புஎன்னும் AIR CONDITION மனவளக்கலை பயின்றவர்கள் ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றி போட்டுக் கொள்ளவேண்டும் என நான் சொல்லி வருகிறேன்.

அதே வேளையில் நம் செய்தியை உணராத, சமுதாயத்தின் மற்ற சகோதரர்கள் மத்தியில் உள்ள புழுதி,புகை,புழுக்கம் முதலிய புறக்குற்ற்ங்களையும், பொறாமை, சினம், குழப்பம் போன்ற அகக் குற்றங்களையும் நீக்கும் முயற்சியாக வாழ்த்து, தியானம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

நகரம், நாடு எனத் தொடங்கி, முடிவில் உலகமே அருட்காப்பு பெற்ற அமைதி உலகமாக மாற வேண்டும் என்பதுதான் எம் இலட்சியம்.

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !.

நன்றி-- வேதாத்திரி மகான்

Thursday, July 23, 2009

''சுவாரஸ்ய வலைப்பதிவு விருது''



32 கேள்வி பதில் வந்தபோது பதிவுலக நண்பர்களைப்பற்றிய ஓர் அறிமுகமாக இருந்தது. நண்பர்களை அறிந்து கொள்ள முடிந்தது. கூடுதல் விவரங்கள் கிடைத்தன.

ஆனால் இப்போது சுவாரஸ்ய வலைப்பதிவு விருது நண்பர் கதிர் மூலமாக எனக்கு கிடைத்துள்ளது. இந்த விருது செந்தழல்ரவி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட போது,அப்போதிருந்த பதிவுலக சூழ்நிலைக்கு சரியான மாற்றாக இருந்தது.முதலில் கதிர்,செந்தழல் ரவி இருவருக்கும் நன்றிகள்.

இதில் உள்ள முக்கியத்துவம், நமது பதிவு சுவாரஸ்யமாக இருப்பதாக, விருது வழங்கிய நண்பர் நமக்கு தந்திருக்கிறார். இது பலபேருக்கு சென்று சேரவேண்டும் என எண்ணி வழங்குகிறார்.


காரணம் இதுவாக இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை இந்த விருது வழங்கக் காரணம் அன்பு, அன்பு,அன்பு இதைத் தவிர வேறொன்றும் இல்லை.

பிறருக்கு விருது வழங்குவதும் கொண்டாட்டம், அவர்களை மகிழ்ச்சியடைய செய்வதால் அவர்களோடும் கொண்டாட்டம். இதை நான் பெரிதும் விரும்புகிறேன்

திருப்பி, நாம் விருது வழங்க வேண்டியது ஆறு பேருக்கு என்பதால் விரைவில் வலையுலகம் முழுதும் பரவும். அதாவது அன்பு பரவும்.

எனக்கு பிடித்த சுவாரஸ்யமான பதிவர்களில் சிலர் நான் தினமும் படிப்பவர்கள் என்கிற தலைப்பில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இதற்கு தகுதியானவர்களே. இந்த எண்ணிக்கை இன்னும் கூடும்.

ஆகவே நானும் அன்பை வாரி வழங்க விரும்புகிறேன். பிடித்தவர், பிடிக்காதவர்,.. வேண்டியவர், வேண்டாதவர்.., என அனைவரிடத்திலும் என் அன்பை பகிர்ந்து கொள்கிறேன்.

வேண்டியவரிடத்தில் அன்பு காட்டுவது என்பதை நாயும் செய்யும்., மனிதன் நீ, அன்பு மயமாய் அ
னைவரிடமும் இரு என்கிற சாது அப்பாதுரையின் வாக்குக்கேற்ப, அனைவரிடமும், குறிப்பாக வலையுலகத்தில் அனைவரிடத்திலும் நாம் அனைவரும் நட்பு பாராட்டுவோம்., என்கிற செய்தியை அனைவருக்கும் சொல்லி அடுத்த கட்டமாக, விருது வழங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைப்படி






பாலகுமாரன் பேசுகிறார் தனக்குள்ளே பேசும்,பார்க்கும் வகையில் அமையும் இவரது எழுத்துக்களை படியுங்கள். இவரது ஆன்மீக கதைகள் எனக்கு விருப்பமான ஒன்று.

பூ வனம் தத்துவ கருத்துகள் நிறைய உண்டு எளிமையான உரையாடலாய்.

வெயிலான் திருப்பூர் பதிவர்கள் சங்க தலைவர். பிரபலபதிவர்களால் அறியப்பெற்றவர்.புதியவர்களுக்காக

சாஸ்திரம் பற்றிய திரட்டு ஸ்வாமி ஓம்கார், ஞானமார்க்கம் குறித்து தெளிவான கருத்துக்களோடு செயல்படுபவர்

தமிழில் டாக்டர் ஷாலினி ,உளநல மருத்துவர்,

நெஞ்சின் அலைகள் பிரபஞ்ச அறிவியலை அற்புதமாக தருபவர்.

விருதினை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் ஆறு பேருக்கு விருதினை வழங்க வேண்டும், மேலும்! இந்த விருதினை தங்கள் வலைதளத்தில் போட்டு வைக்கவேண்டும்

ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கு மட்டும் இதிலிருந்து [விதியிலிருந்து:)] விதிவிலக்கு.
அவருக்கு அன்பை மட்டும் வழங்கி விருதை நானே வைத்துக் கொள்கிறேன்.


நிகழ்காலத்தில் இருப்போம், அன்பு மயமாய் இருப்போம்.

வாழ்த்துக்கள்

Wednesday, July 22, 2009

பொன்னை வைக்கும் இடத்தில்...

கல்வி என்பது வெறும் நூல்களில் இருந்து மட்டுமே அறியப்படுவது இல்லை.

பள்ளிக்கூடங்களில் மட்டுமே கற்பிக்கப்படுவதும் இல்லை.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் நம்மைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.


வெறும் நூல்களால் மட்டுமே அறிவாளிகள் உருவாவது என்றால், வீட்டிலே
(புத்தக அலமாரியில்) குடியிருக்கும் சிலந்திகள் நம்மைவிட ஞானிகளாக இருக்கும்.


பழங்காலத்தில் குருகுல முறை ஒன்றுண்டு. கற்க வேண்டுமென்றால் குருவிடம் சென்றுதான் கற்க வேண்டும்.குருவுடனேயே தங்கி இருக்கவேண்டும். குருவுடனேயே வாழ வேண்டும்.

குரு கற்றுத் தருவனவற்றிற்கும், அவர் வாழ்க்கைக்கும் இடைவெளி இருந்தால் அது சீடனுக்கு வெகு எளிதில் தெரிந்துவிடும்.

அப்படிப்பட்ட குருவை ஒருக்காலும் அவனால் மதித்து மரியாதை செலுத்த முடியாது.

குருவின் வாழ்க்கை அவனுக்குள் மெளனமாகச் சில மாற்றங்களை ஏற்படுத்தும். அவரின் அன்பு, அவரின் உணர்வு, அவரின் பரிவு ஆகிய ஒவ்வொன்றும் அவனிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குருவிடம் பணிவிடைகள் செய்யும்போது, அவனுடைய தான் என்கிற எண்ணத்தைக் கொஞ்சங்கொஞ்சமாக அவன் உதிர்க்க ஆரம்பிக்கின்றான்.

தன்னிடம் ஏற்கனவே நிறைத்து வைத்திருந்தவற்றைக் காலி செய்யக் கற்றுக்கொள்கிறான்.

ஏற்கனவே நிரம்பியதில் எதையும் ஊற்ற முடியாது.அவன் வெறும் பலகை ஆனபிறகு, குரு எழுத ஆரம்பிக்கிறார்.


பைபிளில் ஒரு வாசகம் வருகிறது.

’பன்றிக்கு முன் முத்துக்களைப் போட்டால், அவை அந்த முத்துக்களைக் காலால் நசுக்கிவிட்டு நம்மைத் தாக்க வரும்’ என்று!

இதற்கு பதில் சொல்லும்போது, பன்றிகளைக் குறை கூறுவதுபோல் விளக்கத்தைத் தருவது பலரது வழக்கம்.

ஆனால் சென் துறவி ஒருவர் விளக்குகையில், பன்றியின் முன் முத்துக்களைப் போடக்கூடாது என்று சொல்வது பன்றிகளைக் குறை கூறுவதாகப் பொருள் அல்ல

பன்றிகளுக்கு முன் எதைப் போடவேண்டுமென்று தெரியாமல் இருப்பது
நமது தவறு ஆகும். இதை உணரவேண்டும்.

நமக்கு வேண்டுமானால் முத்துக்கள் விலை உயர்ந்தவையாக இருக்கலாம்.உண்மையில் முத்துக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. அந்த மதிப்பை நாம்தான் அவற்றுக்கு உண்டாக்குகிறோம்.

ஒருவேளை காகங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்திருந்தால் நாம் அவற்றை இன்னும் அதிகமாக நேசித்திருப்போம்.

முத்தும் அபரிமிதமாகக் கிடைத்திருந்தால் அதற்கு நம்மிடம் மரியாதை இருந்திருக்காது.

ஆக, பன்றிகளுக்கு எது தேவையாக உள்ளதோ அதைத்தான் அவற்றிற்கு முன்னால் போடவேண்டும்.பன்றிகளைப் பற்றி நாம் பல தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் பன்றிகள் மிகவும் புத்திசாலியான பிராணிகள்.

அதைப்போலவே குருவினுடைய பணி, அந்த மாணவனிடம் எந்த அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்கிற நுட்பத்தின் அடிப்படையில் ஏற்படுவது.

ஒவ்வொரு சீடனுக்கும் ஒரு அணுகுமுறையைக் குரு வைத்திருக்கிறார்.


அந்த அணுகுமுறை இன்னொருவருக்குப் பயன்படாது.


குருவிற்கும் ஆசிரியருக்கும் இருக்கின்ற வேறுபாடு, அவர்கள் அணுகுமுறையினால் ஏற்படுவது.


ஆசிரியர் எல்லா மாணவர்களுக்குமாகச் சொல்லித் தருகிறார்.


குரு தனித்தனி சீடர்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கின்றார்.



நன்றியுடன்
:இறையன்பு எழுதிய - ஏழாவது அறிவு – நூலில் இருந்து

Monday, July 20, 2009

இரு இறக்கைகள்

இரு சகோதரர்கள் இணைந்து நடத்தும் நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய நகைக்கான பில்லைப் பார்த்து அதிர்ந்து போனார்.

கூட்டலில் தவறு. மொத்தத் தொகை ரூ.10,000/= அதிகமாகக் குறிக்கப்பட்டிருந்தது. நகை வாங்கியவர் மிகுந்த கோபத்தோடு மூத்த சகோதரரிடம் அந்தச் சீட்டை நீட்டினார்.

சீட்டைப் பார்த்தவுடன் நிலைமையை புரிந்து கொண்ட மூத்தவர், தன் தம்பியை விட்டுக் கொடுக்காமல் வாடிக்கையாளரை திருப்திப்படுத்த விரும்பினார்.

”அது ஒண்ணுமில்ல சார், தம்பி அப்பாகிட்ட தங்கம்,வெள்ளி பற்றி கத்துகிட்டான், கணக்கு மட்டும் நாந்தான் சொல்லிக் கொடுத்தேன்”என்றார்.

நல்ல வாடிக்கையாளர், தன் சகோதரர் இருவருமே காயம்படாமல் அந்த இடத்தின் இறுக்கம் அகன்றது.

குறிக்கோளை அடைய….

நகைச்சுவை உணர்வும், நட்பைக் காப்பாற்றும் குணமும் கூடுதல் இறக்கைகள் ஆகும்.

நன்றி:
அடுத்த ஆயிரம் நாட்கள்’ நூலில் இருந்து

Monday, July 13, 2009

எதிர்மறைச் சிந்தனை

இன்றைய இளைஞர்கள் எதிர்மறையாகச் சிந்திக்கின்றார்கள்.

வாழ்க்கையைப் பற்றிய அவநம்பிக்கை வாதம் அவர்களிடம் அதிகமாக இருக்கிறது. எதையெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கின்ற மனப்பான்மை அவர்களிடம் அதிகமாக வளர்ந்து வருகிறது.

எதிர்மறைச் சிந்தனை நம்மை அழிவுப்பாதையை நோக்கி அழைத்துச் சென்றுவிடும்.
எந்த ஒரு முயற்சியிலும் சில குறைபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், அவற்றையும் மீறி நல்ல விசயங்களைப் பார்ப்பது என்பது நம்மைச் சுகமாக வைத்திருக்கின்ற ஒரு செய்தி.


எல்லாவற்றிலும் தேடிப்பிடித்தாவது குறையைச் சொல்வது என்பது நாளடைவில் நம் உடல்நலத்தைக் கூடப் பாதிக்கும்.காரணம், நம் மனதிற்கும் உடலுக்கும் மிகுந்த சம்பந்தம் இருக்கிறது.

மனம் சரியாக இல்லாவிட்டால் உடல் ஒத்துழைக்க மறுக்கின்றது.
மனதில் மகிழ்ச்சி இருந்தால், பசியைக்கூட மறந்துவிடுகிறோம்.


ஆனால், தொடர்ந்து எதிர்மறையாகச் சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் உடலில் அதிக அமிலம் சுரக்கின்றது.முகத்தில் சுருக்கம், உடல் தளர்வு ஏற்படுகிறது. எனவே நாம் வாழ்க்கையை நம்பிக்கையோடு பார்க்க வேண்டும்.

இன்னொரு மனப்பான்மை இருக்கின்றது.

எதைப் பார்த்தாலும் இதை விடச் சிறந்தது ஏற்கனவே எனக்குத் தெரியும் என்று சொல்லிக் காட்டுகிற மனப்பான்மை.

அடுத்தவர்களை மட்டம் தட்டுவதற்கான ஒரு உபாயமாக இருக்கிறது.

ஆனால், நம்மிடம் எவ்வளவோ குறைபாடுகள் இருக்கின்றன என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

பாரத பிரதமர் என்ன செய்ய வேண்டுமென்பதை ஒரு பள்ளி ஆசிரியர் (உதாரணத்திற்காகத்தான்) விலாவாரியாக சொல்கிறார்.ஆனால் அவர் பள்ளி ஆசிரியராக என்ன செய்ய வேண்டுமென்பதை மறந்துவிட்டுப் பாரத பிரதமருக்கு அறிவுரை கூறுகிறார் !

நிறையப் பேர் அடுத்தவர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.ஆனால் அவர்கள் கடமைகளை மட்டும் செளகரியமாக மறந்து போகிறார்கள்.எங்கேயாவது ஏதாவது பிசகு நடந்தால்கூட, அதைப் பெரிது படுத்துகிறார்கள்.

பூதக் கண்ணாடியால் பூங்கொத்துகளைப் பார்க்கிறார்கள்.
எங்கே குற்றம் நடக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
யாரை வேண்டுமானாலும் எளிதில் குறை சொல்லலாம் என்று நினைக்கிறார்கள்.


வாழ்க்கை என்பது நம்பிக்கை நிறைந்தது.
கூட்டை விட்டுப் பறக்கிற பறவைகள்கூட நம்பிக்கையோடுதான் பறக்கின்றன.
இன்று நாள் முழுவதும் நாம் சுகமாக இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றன


இளைஞர்கள் அனைவரும் புன்னகையோடு உலகத்தைப் பார்த்தால் நிச்சயமாக அவர்கள்மீது பூக்கள் சொரியும்.

நன்றியுடன்:இறையன்பு எழுதிய - ஏழாவது அறிவு – நூலில் இருந்து

Thursday, July 2, 2009

முடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்

சென்ற வாரத்தில் புதன்கிழமை அன்று காலை எழுந்தவுடன் முடிதிருத்தி்க் கொள்ளும் பொருட்டு சலூனுக்கு சென்றேன்.

பல வருடங்களாக வழக்கமாக முடி திருத்தும் நண்பர் அவர்., காலை 7.00 மணி ஆதலால் கூட்டம் ஏதும் இல்லை.

முடிதிருத்தும் பணி தொடங்கியது. சுமார் இருபது நிமிடத்தில் பணி முடியும் பொழுது, வழக்கமான செயலாக, கையை உயர்த்தச் சொல்லி அக்குள் பகுதியை சுத்தப்படுத்த தொடங்கினார்.

அப்போது அவர் கேட்ட கேள்வி. ”உங்ககிட்ட கேட்கவேண்டும் என நினைத்தேன், குளித்து விட்டு வந்தீர்களா?” என்றார்.

”இல்லை, எழுந்தவுடன் வந்துவிட்டேன்., ஏன்?” என்றேன்

”பலபேருக்கு கையை உயர்த்தினாலே துர்நாற்றம் வீசும், ’கப்’அடிக்கும், வீச்சத்துடன், முடியில் முடிச்சு,முடிச்சாக அழுக்கு பிரிக்க முடியாதபடி ஒட்டி கிடக்கும், உங்களிடத்தில் அப்படி எதுவுமே அடிக்கவில்லை, குளிக்கவுமில்லை, என்கிறீர்களே? எப்படி?“ என்றார் ஆச்சரியத்துடன் அவர்.

சரி,அவருக்கு புரிகிற மாதிரி, எனக்குத் தெரிந்த காரணத்தைச் சொல்லவேண்டும்.

மெள்ள ஆரம்பித்தேன்.,

“அது வேறொன்றுமில்லை. அக்குள் பகுதியில் அழுக்கு சேர வியர்வைதான் காரணம், வாசம் அடிக்க காரணமும் வியர்வையே.

வியர்வை என்பது உடலில் உள்ள கழிவுப்பொருளை வெளியேற்ற உதவுவது. வியர்வை சுத்தமாக இருந்தால் இது போன்று உடலும் சுத்தமாக இருக்கும்“ என்றேன்

அவர் உற்சாகமானார், அதோடு என்னை விடுவதாக இல்லை.

”வியர்வைன்னாலே அழுக்கை வெளிக் கொண்டு வருவதுதானே, அதுல அழுக்கு இல்லாம எப்படி?” என்றார்.

வியர்வை சுத்தமாக இருக்க வேண்டுமானால் நம்ம உடலில் கழிவுகள் எந்த ரூபத்திலும் தேங்கக்கூடாது., முக்கியமாக சளி, துளி கூட இருக்கக்கூடாது சளிதான் அனைத்து கிருமிகளுக்கும் வைட்டமின் மாத்திரை மாதிரி. கிருமிகள் உடலில் வளர ஆதாரமாக இருக்கும். உடல் இயங்குவதில் ஏற்படும் சாதரண கழிவுகளைக் கூட முழுமையாக வெளியேற்ற சளி இடைஞ்சலாகவே இருக்கும்”. என்றேன்.

அது மட்டுமல்ல, மது,புகைப் பழக்கங்களும், முறையற்ற உணவுப் பழக்கங்களும் உடலில் கழிவுகளைச் சேர்த்துக் கொண்டேதான் இருக்கும். இதனால் உடல் உள்உறுப்புகள் வெளியே தெரியாமல் உள்ளே இயக்கக் குறைபாடு அடையும். அது நமக்கு தெரியவரும்போது திரும்ப சரிசெய்ய இயலாத அல்லது சரி செய்யெ கடுமையாக வைத்தியம் பார்க்க வேண்டிய நிலையில் நாம் இருப்போம்.

சளியினால் ஏற்படும் இது நமக்கு தேவைதானா?“ என்றேன்.

”சரிங்க அப்படி நாம் உள்ளே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை எப்படி தெரிஞ்சிக்கிறது?” என்றார் அவர்.

”எப்பொழுது சிறுநீர் கழித்தாலும் அது எந்த அளவிற்கு வாசமோ/நாற்றமோ அடிக்கிறது என கவனிக்க வேண்டும்

எப்பொழுது மலம் கழித்தாலும் அது எந்த அளவிற்கு வாசமோ/நாற்றமோ அடிக்கிறது என கவனிக்க வேண்டும்

எப்போழுது சளி பிடித்தாலும் அது எந்த அளவிற்கு வாசமோ/நாற்றமோ அடிக்கிறது என கவனிக்க வேண்டும்

அவ்வளவுதான்”
என்றேன்

”வாசமடிக்கிற பாத்ரூமை சுத்தம் செய்யாமல் இருப்பதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.
நீங்கள் சொல்வதை பார்த்தால் பாத்ரூமைப் பார்க்காதே, நம்மைப் பார் என்று சொல்கிறீர்களே!” என்றார்.

”ஆமாம். நம் உடல் உள்ளே சுத்தமாக இருந்தால் அதிலிருந்து வெளியாகும் எந்த கழிவுமே துர்நாற்றம் அடிக்காது. அதற்குண்டான இயல்பான வாசமே இருக்கும். இதை உணர்ந்து, தொடர்ந்து கழிவுகளின் வாசனையை கவனித்து வர வேண்டும், இதுகுறித்து குடும்ப உறவுகளோ, நண்பர்களோ சுட்டிக்காட்டினால் கூட அக்கறையோடு கேட்டு செயல்படவேண்டும்”. என்றேன்.

”உடல் நாற்றம் அடிக்காமல் இருக்க உணவுப்பாதையான வாய் முதல் மலம் வெளியேறும் பகுதி வரை சுத்தமாக இருக்கவேண்டும். இதுவே சுத்தமான உடல் அமைய அடிப்படை“ என்றேன்.

”சரி இதற்கு என்ன செய்ய வேண்டும்,, நீங்க என்ன செய்றீங்க?” என்றார்.,

மிக எளிமையான சில விசயங்கள்தாம் காலை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு சிறிது எண்ணெய் கொப்பளித்தல், இது தொண்டையில் தேங்கியுள்ள உள்ள சளிக் கிருமிகள் அனைத்தையும் நீக்க...

பல்பொடி கொண்டு விரலால் பல்துலக்குதல், பின்னர் பிரஸ் கொண்டும் தேவையானால் பல் துலக்குதல்.

முடித்தபின் தண்ணீர் ஐந்து அல்லது ஆறு மிளகை கடிக்காமல் தண்ணீருடன் சேர்த்து விழுங்குதல், கூடவே போதுமான வரை தண்ணீர் அருந்துதல் இது குடலில் உள்ள சளிப்படலத்தை வெளியேற்ற உதவும்..

பின்னர் மலம் கழித்தபின்பு, குடல் தூய்மை”
என்றேன்.

“அப்படின்னா?” என்றார்.

பல்விளக்கியபின் வாய்கொப்பளிக்கிறோம் அல்லவா? அதுபோல் மலம் கழித்தபின் மலக்குடலை இயற்கைஎனிமா மூலம் சாதரண தண்ணீரை உள்செலுத்தி சுத்தப்படுத்துதல் அவ்வளவுதான்”


”இவற்றை தொடர்ச்சியாக நான் செய்து வருகிறேன். இவையெல்லாம் உடல் உள்ளும், புறமும் சுத்தமாக மாற சில எளிய வழிமுறைகள் ஆகும்.

இதை பின்பற்றினால் அன்றாட வாழ்க்கையில் மருத்துவரை அடிக்கடி அணுக வேண்டியதில்லை” என்றேன்

”நல்ல விசயமாக இருக்கே!” என்றார்

”நம்மால் பிறருக்கு எந்த தொந்தரவும் இருக்க கூடாது. சமுதாயத்திற்கும் நாம் பாரமாக இருக்கக் கூடாது இதை நினைவில் வைத்துக் கொண்டால் போதும். நல்ல விசயங்களில் நாட்டம் வரும்.” என்று சொல்லி விடைபெற்றேன்.,

என்ன நண்பர்களே, இனி நீங்களும் உங்கள் கழிவுகளின் வாசனையை கவனிப்பீர்கள்தானே, உங்கள் நன்மைக்காக முயற்சித்துப் பாருங்களேன்

சந்திப்போம், சிந்திப்போம்