"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, April 30, 2013

நம்மை பிணைக்கும் மாயச் சங்கிலி


சுமார் இருபது வருடங்களாக எனது வீட்டுக்கு அருகில் உள்ள நண்பர் ஒருவரை கவனித்து வந்திருக்கிறேன். அவர் சுய தொழில் செய்வதில் கைதேர்ந்தவர். தன்னிடம் முதலீடு அதிகம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது ஏதாவது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதித்துவிடுவார். வாங்கிய கடனை, கொடுத்துவர்களுக்கு தேவைப்படும்போது தரமாட்டார். வட்டியை மட்டும் கொடுத்து பேசிச் சமாளித்துவிடுவார். தனது தொழிலின் பணத்தேவை பூர்த்தியான பின்னர்தான் மீதியை கொடுப்பார். கணக்கு வழக்கில் வாய்ப்பு கிடைத்தால் வேலையக் காண்பித்துவிடுவார்.

தனதுதொழில்களுக்கு ஒத்தாசையாக பிறரை கொண்டுவந்துவிடுவதிலும், அல்லது சிரமமான காரியங்களை அதன் பாசிட்டிவ் பகுதிகளை மட்டும் சொல்லி மெருகேற்றி செய்ய வைத்து பயன் அடைந்துவிடுவார்.

நான் பள்ளிப்பருவகாலத்திலிருந்தே அவரை கவனித்து வந்ததால் அவரின் வலை விரிப்புகளுக்கு சிக்காமல் கடந்துவிட்டேன். அவரிடம் பணம் கொடுத்தவர்கள் திருப்தியாக விலகமாட்டர்கள். ஏதேனும் ஒரு சங்கடத்துடன் விலகுவார்கள்.

அவருக்கு இரு மகன்கள். அதிலும் அவரது மனைவிக்கு சற்று கர்வமும் கூட.. இரண்டு பெண்குழந்தை பெற்றவர்களைப் பார்த்தால் ”பாவம் இரண்டும் புள்ளையாப் போச்சு” என்பார். இந்த குடும்பம் பலதொழில்கள் செய்து இறுதியில் துணிக்கடை வைத்து செட்டில் ஆகிவிட்டார்கள். இரண்டு மகன்களுக்கும் தனித்தனிக்கடை.

காலச்சக்கரம் உருண்டோடியது, இரண்டு நாட்களுக்கு முன்னர் பெரியவன் திருமணமாகி தன் பெண்குழந்தையை வீட்டுக்கு அழைத்துவந்தார். அன்று இரவு சின்னமகன் வீடுதிரும்பும்போது விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம். எனக்கு மிகவும் மனவருத்தத்தை அளித்த செய்தி.

சற்று வேகமாக வந்ததால் நடந்த விபத்து. ஹெல்மெட் போட்டிருந்ததால் சின்னமகன் உயிர் தப்பினார். விபத்தில் சிக்கிய சின்ன மகனை மருத்துவமனையில் சேர்க்கப்ப்ட்டு சிகிச்சைஅளிக்கப்படுகிறது. உடனடியாக இருபதுஇலட்சம் பணம் கட்டியாக வேண்டியது ஆகிவிட்டது. தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

வழக்கம் போல் மனம் இதிலிருந்து வெளியே வந்து பிரச்சினையை தனக்கு பிடித்தமான கோணத்தில் அலச ஆரம்பித்துவிட்டது.

காசு காசு என்று அலைந்தவரை, அப்படிச் சேர்த்த காசை எப்படி பறிக்க வேண்டும் என்பது விதிக்குத் தெரியுமோ. இந்த விதி துல்லியமான கணக்கீடாக அமையும் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். வேகமாக வந்ததல் நடந்த தற்செயல் விபத்துக்கு இந்த சாயம் பூசுகிறேன் என்பதல்ல.. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் உள்ள பிணைப்பை உறுதி செய்து கொள்ளும் சம்பவம் இது. இந்த பிணைப்புதான் நாமாறியா மாயச் சங்கிலி :)

இந்த துல்லியமான கணக்கீட்டுக்கு பலிகடாவாக சின்ன மகன் அமையக்காரணம் என்ன?

போனபிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் என்றால் அது உண்மையாகக்கூட இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த பிறவியில் செய்வதற்கு இந்த பிறவியிலேயே பலன் கிடைக்கும்போது போன பிறவிக்கு இப்போது பலனை அனுபவிப்பது வலிக்கின்றதே...

எந்தவகையிலாவது பிறருக்கு துன்பம் விளைவித்தவன் இப்போது அதே துன்பத்தை அனுபவித்தால் அர்த்தம் உண்டு. விபத்தில் சிக்கும் அந்த உயிர் துடிப்பதை நினைத்தாலே மனம் கலங்குகின்றது. எது எப்படி இருப்பினும் செய்கின்ற செயல்கள் நம்மையும் தொடர்ந்து நமது வாரிசுகளையும் நாம் அறியாமல் பாதிக்கும் என்பது மறுக்கவே முடியாத உண்மை. இந்த தெளிவுக்காகவே இதைப்பகிர்ந்தேன்.

நான் யாரையாவது மனதளவில் உடலளவில் துன்புறுத்தி இருக்கின்றேனா என்பதில் கவனமாக இருக்கிறேன். பணம் என்னளவில் இழப்பானாலும் சரி..பிறருக்கு என்னால் இழப்பு என்று தவறு நேராவண்ணம் இன்று வரை காத்து வருகிறேன்.

செய்யும் செயல்கள், பேசும் வார்த்தைகள், எண்ணும் எண்ணம் இவற்றில் கவனமாக இருப்போம். நமது விதியை நிர்ணயிப்போம்