"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label விருந்து. Show all posts
Showing posts with label விருந்து. Show all posts

Monday, March 30, 2009

வந்துட்டீங்க…. சாப்பிட்டுவிட்டுதான் போகனும்

ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு தூரத்து உறவினரின் பெண் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுத்து அழைக்க உதவியாக, உடன் சென்றோம். ஒவ்வொரு வீடாக அழைப்பு, பத்திரிக்கை கொடுத்துக்கொண்டே வந்தோம்

ஒருவீட்டில் காபி,
அடுத்தவீட்டில் டீ,
அடுத்தவீட்டில் சுவீட்,காரம், காபி,
அதற்கடுத்த வீட்டில் பிஸ்கட்,காபி,
அதற்கடுத்த வீட்டில் தண்ணீர் மட்டும்
என வரிசையாக சாப்பிட வேண்டியதாகிவிட்டது.

இது போன்ற நிகழ்வுகளில் அன்றைய அடுத்தவேளை உணவை தியாகம் செய்து வயிற்றை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது என் வழக்கம்.

கடைசியாக சென்ற வீட்டில் எங்களுக்கு உணவு செய்ய சொல்லி சிக்னல் கொடுத்து விட்டார் எங்களுடன் வந்த உறவினர். எங்களை உபசரிப்பதாக நினைத்துக்கொண்டு. மணியோ ஏழுதான் ஆகிறது.

அந்த வீட்டுக்காரர் கோதுமை ரவை உப்புமா செய்யத் தொடங்கிவிட்டார். அன்போடு வேண்டாம் என்று மறுத்தும் கேட்கவில்லை. கெஞ்சியும் கேட்கவில்லை. கூடவந்த மேலும் இரு உறவினருக்கோ காலதாமதம் ஆகிக்கொண்டே இருப்பதால் கடுப்பாகிவிட்டனர். அவர்களின் மனநிலையைப் பற்றி சிறிது கூட சிந்திக்கவில்லை.

உப்புமாவிற்கு தயிர் பற்றாக்குறை, நன்கு புளித்த தயிரில் போதுமான அளவு தண்ணீர் விட்டு ஒரு வழியாக சமாளித்துவிட்டார்

சூழ்நிலைகள் தர்ம சங்கடமாக இருந்தபோதும் நாம்தான் ஜீரோ ஆயிற்றே. அமைதியாக ஏற்றுக்கொண்டு சாப்பிட்டு விட்டேன்.

சிந்தனை விரிந்தது.

என் வீட்டில் யார் பத்திரிக்கை கொண்டு, அழைப்பு சொல்ல வந்தாலும், தண்ணீர் மட்டுமே முதலில் தரவேண்டும் என்பது என் இல்லத்து அரசிக்கு நான் இட்டுள்ள அன்புக்கட்டளை. இதில் ’அவன் வீட்டுக்கு போய் பச்சத் தண்ணி கூட தரவில்லை’ என வருபவர்கள் சொல்லிவிடக் கூடாது என்பதும் அடக்கம்.

அதன் பின்னர் அவர்களிடம் என்ன வேண்டும், எனக் கேட்டு, அவர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் உணவோ, டீயோ தரவேண்டும். அதுவும் ஒருமுறைக்கு மேல் கேட்கக்கூடாது.

உறவினர்கள் தன் அன்பை காட்டுவதாக எண்ணிக்கொண்டு, அவர்களும் திடீர் விருந்தாளிகளை சமாளிக்க சிரமப்பட்டுக் கொண்டு, வருபவர்களின் சூழ்நிலை அறியாமல், உபசரிப்பதை விடுத்து, சிரமப்படுத்தாமல் ”அவர்கள் இன்னும் பல இடங்களுக்கு போகவேண்டியது இருக்கும்.” என்பதை கருத்திற்கொண்டு அன்பாக நாலுவார்த்தை விசாரித்து அனுப்புலாம் அல்லவா?

இதிலும் சில வீடுகளில் சாப்பிட்டே ஆக வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஏற்கனவே சிறு பிணக்கு ஏதேனும் இருக்கலாம். நாம் பத்திரிக்கை கொடுக்கச் செல்லும் பொழுது சாப்பிட்டால் சமாதானமும், சாப்பிடாவிட்டால் பெரும் பிணக்காக மாறும் நிலை இருக்கலாம். இதனால் பெரும்பான்மையாக மற்ற இடங்களில் தண்ணீரே சாப்பிட்டால்தான் சவுகரியமாக இருக்கும். வயதானவர்கள் உடல்நிலையும் இதில் முக்கியம். விசேசத்தின் போது மருத்துவமனைக்கு செல்லும் நிலை தவிர்க்கலாம்.

இப்ப சொல்லுங்க , நீங்க யார்? கேட்காமலே தண்ணீர் மட்டும் தருபவரா?
வருபவரை காபி,டீ,டிபன்,சாப்பாடு சாப்பிட வற்புறுத்துபவரா?