"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, November 8, 2017

தளர்வாய் இருப்பது எப்படி ? ஓஷோ

தளர்வாக இரு. உடல் இறுக்கத்தைத் தளர்த்து. உன் நடவடிக்கையில் ஒரு சாவகாசம் இருக்கட்டும். நடக்கும்போது இலகுவாக நட.
சாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிடு. கேட்கும்போது பரபரப்பின்றி கேள்:

ஒவ்வொரு செயலையும் நிதானப்படுத்து. அவசரப்படாதே.

இறுக்கம் என்றாலே அவசரம், பயம், சந்தேகம் என்றுதான் பொருள்.

ஆபத்துக்குப் பயந்த முன்னேற்பாடுதான் இறுக்கம்.

அடுத்த நாளை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாததால்தான், இறுக்கம் வந்து சேர்கிறது. இறுக்கம் என்றாலே கடந்தகாலத்தை சரியாக நீ வாழவில்லை என்று பொருள். எந்த ஒரு அனுபவத்தையும் வாழ்ந்து கழித்திருந்தால் அதன் மிச்சம் மீதி ஏதும் இருக்காது

முழுக்க வாழ்ந்திருந்தால் அது கரைந்து போயிருக்கும். உனக்கு
வாழ்வில் உணர்வுபூர்வமான ஈடுபாடு இருந்ததே இல்லை. தூக்கத்தில் நடப்பவனைப் போல், வாழ்வுக்குள் நகர்ந்து போய்க்கொண்டு இருக்கின்றாய்.

உன்னுடைய வெளிவட்டத்தில் இருந்து, இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்ள வேண்டும். இதில், முதலில் செய்ய வேண்டியது, உடலைத் தளர்த்திக் கொள்வதுதான். அடிக்கடி உன் உடலை கவனித்துப் பார்

கண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக உன் உடலைக் கவனி. கழுத்து தலை அல்லது கால் என ஏதாவது ஒரு இடத்தில் இறுக்கம் இருக்கிறதா என்று பார். அப்படி இருப்பின் அதை முழு உணர்வோடு கவனி. ஆசுவாசப்படுத்திக் கொள். அந்தப் பகுதிக்கு உன் கவனத்தை கொண்டு போய், ’தளர்வாக இரு’  என்று அதனிடம் சொன்னால் போதும்.

 உன்னை கவனித்துக் கொள்ள நான் இருக்கிறேன், ஆசுவாசப் படுத்திக்கொள் என உரையாடு. மெதுவாக இந்த நுணுக்கம் பிடிபட்டுவிடும்.. உடல் இறுக்கம் நீங்கிப் போவதை உணரலாம்.

அடுத்து
இன்னும் ஆழமாக,

மனதிடம் இறுக்கம் நீங்கி இளகி வரச் சொல். உடல் கேட்பதைப்போல் மனம் எளிதில் அடங்கி கேட்டுக்கொள்ளாது.  சிறிது கால அவகாசம்  பிடிக்கும். நேரடியாக மனதோடு ஆரம்பித்தால் தோற்றுப்போய்விடுவாய்.
உடலில் ஆரம்பித்து மனதிடம் இறுக்கம் தளர, மெதுவாக ஆசுவாசப்படுத்து.

அடுத்து நெஞ்சம், மனதைவிட உணர்வுகள்பாற்பட்ட நெஞ்சம் நுண்மையானதும் சிக்கலானதாகவும் இருக்கும்.

 உடல் தளர்வடைந்துவிட்டது, மனம் தளர்வடைந்துவிட்டது அடுத்து
நெஞ்சை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆரம்பி. உடலோடு சாத்தியமானது , மனதோடும் சாத்தியமானது, நெஞ்சோடும் சாத்தியம்தான் என்ற உணர்வுடன் செயல்படு.  உடலையும், மனதையும் தளர வைத்த அனுபவத்தை நெஞ்சத்துக்கும் பயன்படுத்து. 

 உடல் மனம் நெஞ்சம் இவற்றை ஊடுருவி   இருப்பின் (உயிருருவின் உட்புரி) மையத்திற்கு போக முடியும். அதையும் உன்னால் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். இது நிகழும்போது மிக நிறைவானதொரு மகிழ்ச்சியை அடைகிறாய். அதுதான் முழுமையான பரவசம், ஏற்புடைமையின் உச்சம், வாழ்வின் ஆனந்த நடனம்.

ஓஷோ
தம்மபதம்



No comments:

Post a Comment

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)