"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, July 27, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி-11

மானசரோவரில் இருந்து கிளம்பி அந்த ஏரியை ஜீப்பிலேயே வலம் வந்தோம். தண்ணீர் கடல் அலைபோல வீசிக்கொண்டு இருக்க, தண்ணீரோ ஒரு துளி கூட கலங்கல் இல்லாமல் அடி ஆழம் வரை பார்க்கும் வண்ணம் இருந்தது. மறுகரையில் அனைத்து ஜீப்புகளும் நிறுத்தப்பட, கரையில் கிடந்த கற்களில் தனக்குகந்த மூர்த்தங்களை நண்பர்கள் பொறுக்கி எடுத்தனர். நான் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்துவிட்டேன்.  மானசரோவர் ஏரி இந்த இடம் அந்த இடம் என்று வேறுபாடு இல்லாது எல்லா இடத்திலும் அதன் சக்தியை எளிதில் உணர முடிந்தது.

அங்கிருந்து கிளம்பி டார்சன் முகாமுக்கு வரும் வழியில் நமக்கு கைலாயநாதர் காட்சி தருவதைப்பாருங்கள். மலையில் முகம் போன்ற அமைப்பு தெரியும்.!


டார்சனில் தங்குமிடம் இன்னும் வசதியாக இருந்தாலும் எங்களின் டிராவல்ஸ்காரர்கள் சுமாரான அறைகளையே ஏற்பாடு செய்திருந்தனர்:) இங்கு தொலைபேசி வசதி இருக்கிறது சூரிய பகவானின் புண்ணியத்தில்:) வீட்டிற்கு போன் பேசிவிட்டு வெளியே, ரோட்டுக்கு வந்தால் இருபது யுவான்-(150ரூபாய்)ல் வெந்நீர் குளியல் வாய்ப்பு கிடைத்தது. சரி கைலை நாதனை காண வந்த நமக்கு உடல்தூய்மைக்கு ஒரு வாய்ப்பு என நிறைவாக குளித்து வந்தேன்.

இங்கும் தேவையான பொருள்கள் வாங்கிக்கொள்ளலாம். கடைகள் நிறைய உண்டு. மாலை உணவு அருந்திக்கொண்டு இருந்தபோது திருக்கைலை யாத்திரை நாளைக்கு செல்வது ஒருநாள் மட்டுமே சாத்தியம், இரண்டாம் நாள் யாத்திரை செல்ல முடியாது.பனிப்பொழிவு அதிகம். குதிரைகளும், யாக்குகளுமே போகவில்லை. போனால் பார்ப்போம் என்று வழிகாட்டிகள் சொன்னார்கள்.

முதலிலிருந்தே வழிகாட்டிகள் நிறைவாகவே எங்களுக்கு உதவிகள் செய்து வந்தாலும் இந்த விசயத்தில் எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. அதுவும் அவர்கள் சகயாத்திரிகர்கள் அனைவரிடமும் இதே மாதிரி சொல்ல, இது உண்மையா அல்லது பொய்யா என்ற சந்தேகம் எனக்கும் மலேசியாவைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற நண்பருக்கும் வந்துவிட்டது.

முக்கியமான விசயம் பரிக்கிரமாவின் இரண்டாம்நாளும், மூன்றாம் நாளும் உணவு ஏற்பாடுகள் செய்வது என்பது குதிரைக்கொம்புதான்:) எல்லா பொருள்களும், பாத்திரங்கள் உள்பட யாக்குகளின் மேல்தான் கொண்டு செல்ல வேண்டும்.

இறைவனின் விருப்பம் ஒருநாள் யாத்திரை ஆயின் ஏற்றுக்கொள்வோம். ஆனால் பணம், சிரமம் இரண்டையும் கருத்தில் கொண்டு வழிகாட்டிகள் தவிர்க்க நினைத்தால்,அதை ஏற்றுக்கொள்ளமுடியாது என முடிவு செய்து வழிகாட்டி மற்றும் அமைப்பாளர்களிடம் இதை இப்போது ஏற்றுக்கொள்ள முடியாது. அங்கே சென்ற பின் நிலைமைக்கேற்றவாறு முடிவு செய்து கொள்ளலாம் என தகவல் தெரிவித்து விட்டோம்.

 காலையில் யாத்திரை சென்று ஒரே நாளில் திரும்பி வந்தால் அதன் பின்னர் டார்சனில் தங்குமிட கட்டணமாக இரண்டு நாளுக்கும் 100 யுவான்  அல்லது ஒருவேளை மூன்று நாள் யாத்திரை செல்லும் வாய்ப்பு இருந்தால் மலைமீது இரவு தங்க இரண்டு நாளைக்கு 160 யுவான்களும் வசூலித்தார்கள்.

மேலும் சுமைதூக்கிகள் தேவையெனில் 450 யுவான், இந்த சுமைதூக்கிகள் சீன அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் முன்னதாக பணம் கட்ட வேண்டும் என அதையும் வசூலித்துக்கொண்டார்கள். சுமைதூக்கிகளுக்கான பணம் மானசரோவரிலேயே வசூலிக்கப்பட்டுவிட்டது.:) குதிரையில் பயணம் செய்ய 1350 யுவான் (10000ரூபாய்), ஆனால் எதுவுமே போவதில்லை. கட்டிய பணம் எக்காரணம் கொண்டும் திரும்பக் கிடைக்காது எனவே அவர்களே வேண்டாம் எனச் சொல்லி விட்டனர். நான் போகிறமோ இல்லையோ சுமைதூக்கிக்கான பணத்தை கட்டி விட்டேன்.

வந்த 40 பேரில் 15 பேர் ”நாங்கள் யாத்திரைக்கு வரவில்லை” எனச் சொல்லி விட்டனர். இதில் நால்வர்  திரும்பி ஜாங்மூ செக்போஸ்டுக்கே சென்று விட்டனர். டார்சனில் குளிர் இன்னும் அதிகம். டிராவல்ஸ்காரர்கள் எங்கள் அனைவருக்கும் ஸ்லீப்பிங் பேக் காட்மண்டுவில் கொடுத்திருந்தனர். அதனுள் புகுந்து படுத்துக்கொண்டு ஜிப்பை இழுத்துவிட்டு தூங்க ஆரம்பித்தோம். குளிர் தாங்கியது.

யாத்திரை தொடரும்.
நிகழ்காலத்தில் சிவா

5 comments:

  1. ஒரே மூச்சாக அனைத்து நாள் பயணங்களையும் படித்து விட்டேன். கைலாயம் போக முடியுமோ இல்லையோ. போய்விட்டு வந்தவங்க சொல்றதை படிக்கவாவது முடியுதே. அப்புறம் என்ன ஆச்சு?

    ReplyDelete
  2. அருமையான பதிவு... நாங்களே கைலாய பயணம் செய்வதுபோல உணர்கிறோம்.

    பகிர்வுக்கு நன்றி...

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  3. சட்டு புட்டுன்னு அடுத்த பதிவை எழுதுங்கண்ணே...

    ReplyDelete
  4. அட்டகாசமான பயணம், த்ரில்லிங்காகவும் உள்ளது

    ReplyDelete
  5. ஒரே டென்ஷனா இருக்குது தம்பி, பரிக்கிராமா போனீங்களா இல்லியா? சீக்கிரம் சொல்லுங்க.

    பணத்தைத் தண்ணியா செலவளிக்கோணும் போல இருக்குது.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)