"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, September 9, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...2

அலுவலகத்தில் சில முக்கிய வேலைகளை செய்யவேண்டியவிதம் பற்றிக் குறிப்புகளை கொடுத்துவிட்டு, நான் செய்யவேண்டிய சில பணிகளையும் முடித்துவிட்டு, வீடு வந்து ’பயணத்திற்கு தயார் செய்ததில் ஏதேனும் விடுபட்டுப் போய்விட்டதா?’ என சரி பார்த்தேன். படுக்கையில் இரு மகள்களும் தூங்கிக்கொண்டிருக்க இனி பனிரெண்டு நாட்கள் பார்க்கமுடியாது என மனதுக்குள் சிரித்துக்கொண்டே நன்கு ஆசைதீரப் பார்த்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டேன் அப்போது இரவு மணி 11 இருக்கும்..



காலை எழுந்தவுடன் குளித்துவிட்டு பரபரப்பாக கிளம்பும்போது ”ஏனுங்க இத உங்க பெரியபொண்ணு, அப்பாகிட்ட கொடுத்திரும்மான்னு சொன்னா!” என்றவாறு மனைவி ஏதோ பேப்பரைக் கொடுக்க, சரி, ஏதாவது பரிசுப்பொருள்கள் வாங்கிவரச் சொல்லி இருப்பாள் என நினைத்துக்கொண்டு அதை வாங்கி சூட்கேஸின் சைடில் சொருகிக்கொண்டு மனைவியை இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இரயில் நிலையத்தில் இறக்கிவிடச் சொல்லி ஸ்கூட்டரில் கிளம்பினேன்.

இரயில் நிலையத்தில் உள்ளே சென்றதும், நான் ஏற வேண்டிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவையிலிருந்து வர இன்னும் இருபது நிமிடங்கள் ஆகும் என தகவல் தெரிந்தது. நேரம் சம்பந்தமான விசயங்களில் நான் சற்று எச்சரிக்கையாக இருப்பது வழக்கம். பள்ளிக்கு சென்றால் நம் கடிகாரத்தைவிட ஐந்து நிமிடம் வேகமாக இருக்கும். வங்கிகளுக்குச் சென்றாலோ ஒரு வங்கியில் சரியான நேரமும், வேறு வங்கிகளில் அவரவர் வசதிப்படி மூன்று முதல் ஏழுநிமிடம் வரை வித்தியாசம் காட்டும். அதே பழக்கத்தில் இரயில் நிலைய நேரத்தை சரிபார்க்க எண்ணி சுற்றும் முற்றும் பார்க்க, உடனே கண்ணில் பட்டது இரயில் நிலையக் கடிகாரம். மணி 12 என காட்டியதுடன் பராமரிப்பின் கீழ் இருக்கிறது என்ற வாசகத்துடன். :)


சரி பயணத்திற்கு துவக்கமாக நல்ல நிமித்தம் என நினைத்துக்கொண்டேன். தினமும் வருபவர்களுக்கு இது சாதரணவிசயம். அப்படி என் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது என்னது இந்திராகாந்தி போய்ச்சேர்ந்துட்டாங்களா என்கிற ரேஞ்சில்தான் ஆச்சரியப்பட்டார். :), பலபேருக்கு இது கவனத்திலேயே வராது. ஆனால் நான் குறிப்பாக அண்ணாந்து பார்த்ததினால் இப்படி எண்ணிக்கொண்டேன். பயணத்தில் சிரமங்கள் இருக்கலாம். அதற்கேற்றவாறு மனதைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

அந்த பெரியகடிகாரத்தில் பெரிய தொழில்நுட்பம் எல்லாம் கிடையாது. பின்னால் சிறிய எலக்ட்ரானிக் கருவிதான் அதிகபட்சமாக ரூ.500க்குள் இருக்கும். அதை முழுவதுமாக மாற்றினால் சரியாகிவிடும். இதற்கு அரசு நிர்வாகம் எப்படி தூங்கிக்கொண்டு இருக்கிறது. கேட்டால் விதிமுறைகளும் நடைமுறைகளும் என ஆயிரம் காரணங்கள் சொல்வார்கள்.

இரயில் வர கோவையிலிருந்து வந்த நண்பர்கள் கைகாட்ட, ஏற்கனவே அமைப்பாளரால் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் ஏறி உட்கார்ந்தேன். நண்பர்களோடு பேசிக்கொண்டே வேண்டுமென்றே காலை உணவை தவிர்த்துவிட்டேன். மதியம் 3.00 மணிக்கு செல்லவேண்டிய இரயில் 15 நிமிடம் முன்னதாக சென்னை செண்ட்ரல் போய்ச் சேர்ந்தது.

பயணத்திட்டப்படி சென்னையிலிருந்து அனைவரும் ஒன்றுகூடி இரவு தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் 10.00 மணிக்கு கிளம்புவதாக திட்டம். அதுவரைக்கும் இரயில்நிலையத்தில் காத்திருப்பது என்பது பொறுமையைச் சோதிப்பது மட்டுமில்லால், சிரமமும் கூட. டெல்லிக்கு இரவு நெடுந்தூரப்பயணம் செய்யவேண்டியதால் ஓய்வு முக்கியம் என்பதால் ஓட்டலில் அறை எடுத்துத் தங்க முடிவு செய்து இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.

அருகிலேயே இடதுபுறம் ரோடு நெடுகிலும் தங்கும் விடுதிகள்தான். அறை வாடகை 300 என பேசி இருவர் சேர்ந்து அறையைப் பதிவு செய்தோம். பின்னர் மதிய உணவை முடித்துவிட்டு, இரயில் பயணத்தில் எந்நெரமும் கேன்வாஸ் சூ அணிந்து கொள்வது சிரமம் என்பதால் சாதரண சிலிப்பர் காலணிகள் வாங்கி வைத்துக்கொண்டோம்.

சற்று கண்ணயர்ந்தபின் மாலை குளித்துவிட்டு, இன்னும் பாக்கி இருக்கும் இரண்டுமணி நேரத்தை பயனாக கழிக்க எண்ணி வேறு ஏதேனும் வாங்கவேண்டுமா என பெட்டியைக் குடைந்து சரி பார்த்தேன். செல்போன் சார்ஜர் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தது தெரிந்தது.

ஆஹா நல்லவேளை பார்த்தோம் என்றவாறே அருகில் உள்ள கடையில் சார்ஜர் வாங்கி வந்தேன். அறைக்கு வந்தபின் இன்னும் நேரம் மீதி இருந்தது. சூட்கேசின் சைடு கவருக்குள் சார்ஜரை வைக்கும்போது கையில் எதோ பேப்பர் தட்டுப்பட, வெளியே எடுத்தேன்.

அட.. ஊரிலிருந்து அவசரமாக கிளம்புகையில் பெரியமகள் என்னிடம் கொடுக்கச் சொன்னதாக என் மனைவி கொடுத்த மடிக்கப்பட்ட பேப்பர்...

பயணம் தொடரும்...

நிகழ்காலத்தில் சிவா

6 comments:

  1. சுவைபட சொல்லி கொண்டு வருகிறீர்கள்... அருமை!

    ReplyDelete
  2. ஏங்க பொண்ணு கொடுத்த கடிதத்தை மறந்துவிட்டு தேவையில்லாமல் ரயில் நிலையக்கடிகாரம் பற்றிக் கவலைப்படும் உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்

    ReplyDelete
  3. தொடர்கின்றேன்.......

    கடிகாரம் போட்ட படம் அற்புதம்,

    எத்தனையோ பழைய நினைவுகள் உங்கள் பயணத் தொடர் போல ஓடிக் கொண்டுருக்கிறது,

    மாறாத அந்த கடிகாரம் மட்டுமே,

    ஆனால் எத்தனை எத்தனை மாற்றங்கள்,

    ReplyDelete
  4. கூடவே வந்துக்கிட்டு இருக்கோம்.

    மகள் வாழ்த்துசெய்தி எழுதிக் கொடுத்துருப்பாங்க ஒரு ஊகம்.

    ReplyDelete
  5. @ வானவன் யோகி
    @ துளசி கோபால்

    சரியாக ஊகித்தமைக்கும் கூடவே வருவதற்கும் நன்றிகள் பல :)

    ReplyDelete
  6. @ Chitra தொடர்ந்த வருகைக்கு வாழ்த்துகள்

    ஜோதிஜி இந்த பயணத்தொடர் உங்களின் மறக்கமுடியாத பல நினைவுகளை தூண்டுவதில் மகிழ்ச்சி..

    அவை நல்லனவாக இருக்கட்டும்:)

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)