"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, June 12, 2009

அன்பும் புறச் சாதனங்களும்--அகத்தூய்மை

தினமும் குளிப்பதனால்தான்

ஹரியை அடைய முடியுமெனில்


நீரில் வாழும் விலங்குகள்


ஹரியை அடைந்துவிட்டனவா?




பழங்களையும், கிழங்குகளையும் உண்டால்தான்


ஹரியை அடைய முடியுமெனில்


வெளவால்களும், குரங்குகளும்,


ஹரியை அடைந்து விட்டனவா?




துளசிச் செடியை வணங்குவதால் தான்


ஹரியை அடைய முடியுமெனில்


நான் துளசித் தோட்டத்தையே வணங்குவேனே!




கல்லை வணங்குவதால் தான்


ஹரியை அடைய முடியுமெனில்


நான் மலையையே வணங்குவேனே!




இலைகளையும் தழையையும் தின்றால்தான்


ஹரியை அடைய முடியுமெனில் ஆடுகள்


ஹரியை அடைந்து விட்டனவா?




பாலை மட்டும் அருந்தினால் தான்


ஹரியை அடைய முடியுமெனில்


கன்றுகள் ஹரியை அடைந்துவிட்டனவா?




புறச் சாதனங்களால் அல்ல


உண்மையான அன்பினாலேயே


நந்தகோபனை அடைய இயலும்.




அன்னை மீராபாய்

*******************************************************************************
நன்றி—ஞானப்புதையல் – முனைவர் எம்.இராமலிங்கன் – பூர்ணா பதிப்பகம்
********************************************************************************
இறைநிலையை உணர மேற்கண்ட உடல்சுத்தம், சைவ உணவுமுறை,கோவில் வழிபாடு, போன்றவைகளெல்லாம் ஆரம்பநிலை வழிமுறைகளே. இதை உணர்ந்து செய்யலாம். இவை உங்களை கொஞ்சம் கொஞ்சமாக சரியான திசையில் நகர்த்திச் செல்லும்.

ஆனால் ’இதுவே ஆன்மீகவாழ்க்கை’ என நாம் இதிலேயே சிக்கிக் கொண்டு அன்பை உள்ளே உணராமல், உணர்ந்தது வெளியாகாமல், அதுவாகாமல் வாழ்வது பொருத்தமானது அல்ல. இதையே அன்னை வலியுறுத்துகின்றார்

9 comments:

  1. என் அப்பன் சிவவாக்கியன் கூறிய சிலவாக்கியம்..!


    செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
    செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
    உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
    அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ!

    வாயிலே குடித்தநீரை எச்சில் என்று சொல்கிறீர்;
    வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ?
    வாயில்எச்சில் போகஎன்று நீர்தனைக் குடிப்பீர்காள்
    வாயில்எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே!

    காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள்
    காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
    காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால்
    மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே.

    உண்டகல்லை எச்சில்என்று உள்ளெறிந்து போடுகிறீர்;
    கண்டஎச்சில் கையலோ பரமனுக்கும் வேறதோ?
    கண்டஎச்சில் கேளடா, கலந்தபாணி அப்பிலே
    கொண்டசுத்தம் ஏதடா? குறிப்பிலாத மூடரே!

    மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே
    மந்திரங்கள் கற்றுநீர் மரித்தபோது சொல்வீரோ?
    மந்திரங்கள் உம்முளே மதித்தநீரும் உம்முளே
    மந்திரங்கள் ஆவது மனத்தின்ஐந்து எழுத்துமே.

    ஓசைஉள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே
    வாசலில் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
    பூசைக்கு வைத்தகல்லில் பூவும்நீரும் சாத்துறீர்
    ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே?

    ReplyDelete
  2. வேறு ஒரு மார்க்கத்தை பின்பற்றி வந்த கல்லெறி நாயனார் கல்லை மட்டும் எறிந்து இறைவனடி சேர்ந்தார் என்று சொல்லுவார்களே...

    // துளசிச் செடியை வணங்குவதால் //

    அன்னையின் கருத்துக்கு மறுமொழி இருக்க முடியாது என்றாலும் எனக்குள் எழும் வினா

    தம்பி என்ற முறையில் இருக்கும் மனிதனை பார்க்கும் பொழுது எற்படுகின்ற அன்பு/பாசம் நடை பாதையில் செல்கின்ற மனிதன் மீது இருப்பதில்லை அது போல எத்தனையோ பொருள்கள் பூமியில் இருந்தாலும் ஒரு சில பொருள்களை இறைவனாக உருவகபடுத்தி பார்க்கும் பொழுது அந்த பொருளின் மீது கண்டிப்பாக அன்பு இருக்குமல்லவா?

    ReplyDelete
  3. //இறைநிலையை உணர மேற்கண்ட உடல்சுத்தம், சைவ உணவுமுறை,கோவில் வழிபாடு, போன்றவைகளெல்லாம் ஆரம்பநிலை வழிமுறைகளே. இதை உணர்ந்து செய்யலாம். இவை உங்களை கொஞ்சம் கொஞ்சமாக சரியான திசையில் நகர்த்திச் செல்லும்.//

    ஸ்வாமி ஓம்காரின் 'உணவு' குறித்த இன்றைய பதிவுக்கு மாற்றுக் கருத்தா இது ?

    ReplyDelete
  4. ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கு,
    சிவவாக்கியர் கூறிய சில வாக்கியம் அவர் அதிரடியான அனுபவமாக உணர்ந்ததன் வெளிப்பாடு,

    அதை கருத்துக்கு பொருத்தமாக இங்கே குறிப்பிட்டதில் மகிழ்ச்சியடைகிறேன்

    ReplyDelete
  5. விஷ்ணு

    சில பொருட்களை இறைவனாக உருவகப்படுத்திப் பார்ப்பதோடு நில்லாமல், அனைத்தையுமே இறைவனாக பார்ப்பதுதான் அன்பு,

    அன்பு மனதால் தேவையானபோது வரும் உணர்வாக இல்லாமல் மனம் முழுமையாக அன்பு உருவாக, அன்பு மயமாக மாறவே இந்த முயற்சிகள்

    ReplyDelete
  6. கோவியாரே

    தற்செயலாக அமைந்துவிட்டது.

    இடைவெளியை நிரப்பியதாக வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்

    ReplyDelete
  7. இறைநிலையை உணர மேற்கண்ட உடல்சுத்தம், சைவ உணவுமுறை,கோவில் வழிபாடு, போன்றவைகளெல்லாம் ஆரம்பநிலை வழிமுறைகளே.//

    இந்த ஆரம்ப வழிமுறையில் இருக்கும் நேயர்களை அதற்கு மேல் வளர விடாமல் பார்த்துக் கொள்வதில் நம் ‘ஆன்மீகப்’ பெரியவர்களுக்கு முழுப் பங்கும் உண்டு,சிவா.

    பக்தர்களை வாடிக்கையாளர்களாக ஆக்கி விடும் ஆன்மீக வணிகர்கள்தான் உலகெங்கும்.

    ReplyDelete
  8. ஷண்முகப்ரியன் said...

    \\இந்த ஆரம்ப வழிமுறையில் இருக்கும் நேயர்களை அதற்கு மேல் வளர விடாமல் பார்த்துக் கொள்வதில் நம் ‘ஆன்மீகப்’ பெரியவர்களுக்கு முழுப் பங்கும் உண்டு,சிவா.\\

    சத்தியமான உண்மை, அதை எல்லோரும் உணர்ந்து விட்டால் நன்மையே

    ReplyDelete
  9. அன்பின் சிவா

    அன்பினை உணர்ந்து - அன்பினை வெளிப்படுத்தி - அன்பாகவே வாழ்வது தான் உண்மையான் வாழ்க்கை - வைர வரிகள் - அன்பே சிவம்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)