"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, April 21, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 3

இந்தத் தொடரை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏன் எழுந்தது?  என யோசித்த போது  எனக்குத் தெரிந்தவற்றை எல்லோருக்கும் சொல்லிக் கொடுப்பதற்காகவா?..என்றால் கண்டிப்பாக இல்லை.   ஒரு ஆசிரியரின் மனப்பான்மையோடு நான் எழுதவில்லை.

மாறாக ஒரே வகுப்பில் இரண்டு, வருடம் பாஸாகாமல் தொடர்ந்து படிப்பவன் புதிதாக வருபவர்களுக்கு தன் அனுபவத்தை சொல்வது அவர்கள் சறுக்காமல் செல்ல உதவும் என்கிற வகையில்தான்:)  பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மைதான். பாடத்தைபற்றியும் படிப்போம். சில சமயம் ஆசிரியர்களைப் பற்றியும் படிப்போம்.:)

நமது அன்றாடவாழ்வில் ஆன்மீகம் சம்பந்தமான நடவடிக்கைகளில்  ஏதாவது ஒருவிதத்தில் எல்லோரும் சம்பந்தப்பட்டே இருக்கிறோம். ஆனால் அவற்றை புரிந்தோ புரியாமலோ செய்து கொண்டு இருக்கிறோம். பிறர் இதை எதிர்த்து கேள்வி அல்லது விளக்கம் கேட்கும்போது பதில் தெரியாமல் குழம்புகிறோம். அல்லது நமக்குத் தெரிந்ததை சொல்கிறோம்.

எதனால் இவ்வாறு தடுமாறுகிறோம்? எப்படி இதை சரி செய்யலாம் என்பது குறித்து கருத்து பகிர்தலே எனது நோக்கம்.

ஆக ஒவ்வொருவரும் தன்னளவில் சரி என மனதிற்குப்பட்டதையே செய்கிறோம். நமது செயல்கள் பற்றி எத்தனை எதிர்கேள்விகள் வந்தாலும் நிறைவாக புரிதலுடன் பதில் சொல்ல இயலும் என்கிற நிலை வந்தால்தான் நமது வாழ்க்கை எல்லாவிதத்திலும் மேம்பாடு அடையும். ஆன்மீகத்தில் இது அறிவார்த்தமாக அல்லாது அனுபவமாக இருக்கவேண்டும் என்பதே இந்தத் தொடரின் மையக்கருத்து.

எதிர்ப்பின்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனப்பார்த்தோம். இந்த எதிர்ப்பின்மை என்பது உண்மையில் எந்த விசயங்கள் ஆனாலும் அதன் முழுப்பரிமாணத்தை நாம் உணர்ந்து கொள்ள உதவும். உணர்வதோடு அதை எப்படி நம் வாழ்வில் பயன்படுத்துவது என்பதையும் கற்றுக்கொள்ள உதவும்.

தாங்கள் அயரன் செய்த  பனியன்களின் எண்ணிக்கை 6000 என மூன்று பணியாட்கள் கணக்கு எடுத்தனர். அந்த ஆர்டரின் மொத்த எண்ணிக்கையோ 5000 மட்டுமே. எப்படி அதிகம் வந்தது? என குழப்பம். வேலை செய்தவர்களில் ஒருவர் பழைய ஆள். மற்ற இருவரோ புதியவ்ர்கள். அவர்கள் அதிகமாக கணக்கு எழுதிவிட்டனர் என்பது இவரின் வாதம். நான் அதிக பனியன்களின் கூலியை பிடிப்பேன். பிடித்தால் மூவருக்கும் இழப்பு. புதியவர்கள் இவ்வாறு கணக்கு எழுதுவது இந்தத் தொழிலில் சாதாரணம்.

இந்தபிரச்சினையில் எதிர்ப்பின்மையைத்தான் முதலில் கையாண்டேன். முதலில் புதியவர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்ற பொது எண்ணத்தை கைவிட்டேன், அதிக கூலி சுமார் ரூ.1000 தான் வரும். இது எனக்கு பெரிய இழப்பு இல்லை. அவர்களை எச்சரித்து பணத்தை கொடுத்துவிடலாம் எனவும் முடிவு செய்துவிட்டேன். ஆக என்னளவில் மனம் நடுநிலையில் இருந்தது. பணம் போகிறதே என்ற எண்ணமோ, வேலையாட்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற வெறுப்புணர்வோ இல்லை. அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என தள்ளி வைத்தேன். அடுத்த நாள் வந்து அவர்கள் கணக்கை நான் வாங்கி சரிபார்த்தேன்.எழுதியது சரியாகவும், கூட்டுதலில் மட்டும் பிழை இருந்தது சரியாக 1000 பனியன்கள் வித்தியாசம். பிரச்சினை தீர்ந்தது.:)

அதிகம் என கருதப்பட்ட பனியன்களுக்கான கூலியை நான் பிடித்தம் செய்து, அதனால் சங்கடம் ஏற்பட்டு பணியாட்கள் விலகி இருந்தால் அவர்களுக்கும் இழப்பு, எனக்கும் சிரமம்.

இது சாதரண நிகழ்வாக இருந்தாலும் இதை என் புத்திசாலித்தனம் , அனுபவம் என பொதுவாக சொல்லலாம். ஆனால் நான் இதை எப்படி பார்க்கிறேன்.?

இதைத்தாண்டி மனம் மேம்பட்டுக்கொண்டு  இருந்தால்தான், புத்திசாலித்தனம் அனுபவம் என்பதெல்லாம் நமது உச்சகட்ட திறமையாக இல்லாமல், ஆரம்ப கட்ட இயல்பாக, இது என் புத்திசாலித்தனம் என்கிற உணர்வே இல்லாத சாதாரண இயல்பாக மாறிக்கொண்டிருப்பதன் ஆரம்பம் என நினைக்கிறேன்.


என்ன சொல்ல வருகிறேன் என்றால் மற்றவர்களால் பாராட்டப்படும் குணங்கள், இயல்புகள் நமக்குஏற்பட்டாலும் அவர்கள் பொருட்படுத்துகிற அளவிற்கு நாம் பொருட்படுத்த மாட்டோம். இயல்பினும் இயல்பாக மாறி விடும். 

ஆன்மீகத்தில் ஆணவம் அழிக்க வேண்டும் என்பார்கள். இடுகையை மீண்டும் ஒரு முறை படித்துப்பாருங்கள். எதிர்ப்பின்மை மனதளவில் தீவிரமடைய, தீவிரமடைய ஆணவம் குறையத் தொடங்கிவிடும். நான் என்கிற தன்முனைப்பு குறையத் தொடங்கும். என்கிற செய்தி தெளிவாகும்.

(தொடரும்)


4 comments:

  1. வாழ்வியலை சரியாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். தொடருங்கள்.

    ReplyDelete
  2. ஆன்மீகத்தில் ஆணவம் அழிக்க வேண்டும் என்பார்கள்

    .......good message.

    ReplyDelete
  3. சிவா நன்றி

    சித்ரா நன்றி
    தொடர்ந்த வருகைக்கும் கருத்துரைப்பதற்கும் மிக்க மகிழ்ச்சி..ஊக்கமும் தருகிறது உங்கள் வார்த்தைகள்...


    ஆனந்தி பார்த்தேன் படித்தேன். உங்களின் ஆர்வத்திற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

    வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நாம் கற்றுக் கொண்டதை பகிர்ந்து கொள்வது போது இரண்டு விளைவுகள் உருவாகுகின்றது.

    நாம் எந்த அளவிற்கு அந்த குறிப்பிட்ட விசயத்தில் தேர்ச்சி அடைந்துள்ளோம் என்பதை உணர்த்தும். நாம் குறிப்பிடும் விசயங்களைப் பற்றி ஆக்க பூர்வமாக விவாதிப்பவர்கள் மூலம் நாம் அடைந்துள்ள பாதை எந்த தூரம் என்பதையும் நமக்கு உணர்த்தும். மொத்ததில் நம்முடைய ந்யூரான்களின் உள்ள வெளிச்சத்தை நம் எழுத்துக்கள் நமக்கு மட்டுமல்ல நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் உணர்த்தும் வல்லமை உடையது.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)